25 02 2015 அன்று காலையில், “தி இந்து “ நாளிதழின் கடைசிப்பக்கத்தில் வெளியாகியிருந்த ஒரு செய்தி எனது நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது. அந்தச் செய்தி இதுதான்...
“சென்னை-கன்னியாகுமரி இரட்டை வழி மின் ரெயில் பாதை “
அதாவது மறுநாள் வெளியாகப் போகும் மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் சென்னை -கன்னியாகுமரி இரட்டை வழி மின் ரெயில் பாதைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா...? என்பது குறித்த விரிவான தகவல்களுடன் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது.
அதாவது, 90 களுக்குப் பிறகு நாட்டின் ரெயில் போக்குவரத்தில் கனிசமான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. மீட்டர்கேஜ் ரெயில் பாதைகள் யாவும் படிப்படியாக அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டுவிட்டன. இப்போது மீட்டர்கேஜ் ரெயில் பாதையே நாட்டில் எங்கும் உபயோகத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது.. புதிது புதிதாக நிறைய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ரெயில்களின் வேகமும் கனிசமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேகத்தில் ரெயில் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. ரெயில் பெட்டிகளுக்குக் கண்ணைக் கவரும் வகையில் நீல நிற வர்ணமும் பூசப்பட்டுள்ளது. பழைய –இருண்டுபோன- மெரூன் கலர் வர்ணத்துக்கும் விடை கொடுத்தாகிவிட்டது.
ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு இவை எதுவும் ரெயில்வேயில் கிடையாது. நமதூர் வழியாகப் போகும் திருச்செந்தூர் - நெல்லை ரெயிலில் அப்போது நிலக்கரி எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டது. சென்னை வரையும் கூட மீட்டர் கேஜ் பாதைதான்.
நெல்லையில் இருந்து சென்னைக்கு அப்போது ஒரே ஒரு ரயில் மட்டும்தான் இருந்தது. ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்களுக்கும் சென்னைக்குப் போக அந்த ஒரே ரெயில்தான் அதற்குப் பெயர் “கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்“. ஆனால் அது கன்னியாகுமரியிலிருந்து புறப்படாது. நெல்லையில் இருந்துதான் புறப்படும். ஏனெனில் அப்போது நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு ரெயில் பாதை கிடையாது. நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு ரெயில்பாதை போடப்பட்டு, அது கடந்த 1979 ஆம் ஆண்டுதான் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்தான் அப்போது ரெயில் போக்குவரத்தைத் துவக்கி வைத்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் அதில் கலந்துகொண்டார். அதற்கு முன்பு வரையிலும் குமரி மாவட்ட மக்களுக்கும் நெல்லைதான் ரெயில்வே சந்திப்பாக இருந்தது. மாலை ஆறு மணிக்கு ஒவ்வொரு நாளும் நெல்லையிலிருந்து சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் செல்லும். மறுநாள் காலை எட்டு மணிக்கோ... அல்லது ஒன்பது மணிக்கோ... சில நேரங்களில் சிக்னல் கிடைக்காவிட்டால் சவுகரியம் போல பத்து மணிக்கோ கூட அது சென்னை சென்றடையும். இன்றைய இளம் தலைமுறையினர் சென்னைக்கு அவ்வாறு ஒரு பயணத்தை மேற்கொண்டால் வெறுத்துப் போய்விடுவார்கள் என்பது மட்டும் உறுதி.
கன்னியாகுமரி எக்ஸ்பிரசைப் பிடிக்க அப்போது திருசெந்தூரில் இருந்து மாலை மூன்று மணிக்கு இப்போது போல அப்போதும் லோக்கல் வண்டி புறப்படும். நெல்லை - திருச்செந்தூர் இடையே உள்ள எல்லா ஸ்டேஷன்களுக்கும் சென்னைக்கு செல்ல ஒரே பெட்டிதான் ஒதுக்கீடு. எஞ்சினுக்கு அடுத்தாற்போல அந்த சென்னை செல்லும் பெட்டியைத்தான் கோர்த்திருப்பார்கள். சென்னை செல்லும் பதிவு செய்யப்பட்ட நமதூர் ஆம் ஆத்மிக்கள் எல்லாம் அதில்தான் ஏறுவார்கள். நாங்கள் சிறுவர்கள் என்பதால் வண்டி போகும்போதே வாசலில் நின்று எட்டி.. எட்டி... பார்ப்போம்... அநியாயத்துக்கு கரி எஞ்சின் கரிப்புகையை அள்ளி வீசும்.
எஞ்சினுக்கு அடுத்த கோச் என்பதால் ..நெல்லைக்குச் சென்று சேர்வதற்குள்ளாகவே உடை முழுவதும் “அண்டாக்கா கசம் “ஆகி ஆளே ஒரு மாதிரி கரிப்புகையில் குளித்திருப்போம். பெரியவர்கள் என்னதான் நாசூக்காகப் பயணம் செய்தாலும் அவர்களும் கரிப்புகையில் குளித்திருப்பார்கள். ரெயில் செல்லும் வேகத்தில் அந்தக் கரிப்புகையில் கலந்து வரும் நிலக்கரி துகள்கள் எப்படியும் கண்ணில் விழும். கண்ணைக் கசக்காத பயணிகள் குறைவு. இதற்கிடையே ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு அரைமணி நேரம் ஓய்வெடுக்கும். அப்போது ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனில் ஒரு அருமையான காப்பிக் கடை இருந்தது. அந்தக் காப்பிக்கு ஒரு தனி ருசி இருந்தது. ரெயில் டிரைவர் முதற்கொண்டு அங்கு இறங்கி அந்தக் காப்பியை சுவைத்த பின்பே மறுபடியும் ரெயில் நகரும். இப்போதும் கூட ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் வரும்போதெல்லாம் அந்தக் காப்பிக் கடை எனது நினைவில் ஒளிரும்.
ரெயில் நெல்லைக்கு வந்து சேர்ந்ததும் ,சென்னைக்கு எஞ்சினோடு சேந்திருக்கும் அந்த முதல் பெட்டியை மட்டும் தனியே பிரித்து, ஏற்கனவே நெல்லையில் தயாராக இருக்கும் மற்ற பெட்டிகளோடு இணைப்பார்கள். அதுவும் எங்களுக்கு அப்போது ஒரு வேடிக்கைதான். ரெயில்வே கேங்மேன் பக்கவாட்டில் நின்று பச்சைக் கொடியை அசைக்க..அசைக்க... அந்த ரெயில் பெட்டி மெதுமெதுவாக பின்னகர்ந்து சடக்கென மற்ற பெட்டிகளோடு இணைந்துகொள்ளும். இப்போது கரி எஞ்சினுக்குப் பதிலாக டீசல் எஞ்சின் இணைக்கப்படும். இப்போதும் நமதூர் ஆம் ஆத்மிக்களின் பெட்டியே முதலிலிருக்கும்.
அப்போது கணினி பயன்பாட்டில் இல்லை என்பதால்... இப்போது போல பெட்டிகளுக்கு S1… S2… S3… என்றெல்லாம் வரிசை எண் இருக்காது. A…B…C…D…என்ற அல்பாபெட் வரிசை முறைதான் அப்போது அமுலில் இருந்தது. அதுபோல டிக்கெட்டும் செவ்வக வடிவிலான அட்டை டிக்கெட்த்தான். அதன் பின்புறம்தான் ரிசர்வேஷன் விவரங்களை புக்கிங் கிளார்க் கிறுக்கி இருப்பார். பிறகு நீண்ட ரெயில் தொடராக வண்டி புறப்படும்.
இனி வண்டியில் ஒரு பயண நிம்மதி தெரியும். கடலை மிட்டாய், வெள்ளரிக்காய், போலி, வடை வகைகள் எல்லாம் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக விற்பனைக்கு வரும்.
பெரியவர்கள் இருக்கும் பகுதியில் நின்று வாங்காமல், விற்பனையாளன் அந்த பாத்ரூம் பகுதிக்குப் போனதும் ஓடிச் சென்று வாங்கித் தின்பது வழக்கம். இதில் கடம்பூர் போலியும், கோவில்பட்டி கடலை மிட்டாய், இஞ்சி முரப்பாவும் கூடுதல் விஷேசம். அதுபோல மதுரை பால்கோவா மிகவும் ருசி. இப்போது போல அப்போது பால்கோவா எங்கும் கிடைக்காது. அது மதுரையில்தான் வரும். இதற்காக மதுரை எப்போது வரும் என்று காத்திருந்து பால்கோவா வாங்கித் தின்போம்... ஐம்பது பைசாவோ, ஒரு ரூபாயோதான் அப்போது அதுக்கு விலை. மதுரை வந்ததும்.. .”சார்..பாலே.. கோவா...” என்று ஒரு மாதிரியான குரலில் நீட்டி முழக்கிக் கொண்டு தட்டு நிறைய பால்கோவாவோடு வருவார்கள். நான்கோ, ஐந்தோ வாங்கித் தின்போம்...! என்ன ருசி... என்ன ருசி... வாயில் போட்ட உடனேயே கரைந்து விடும். தின்ற பிறகும் கூட கையில் பால்வாடை வீசிக்கொண்டே இருக்கும்.
இதற்கிடையே வண்டி மணியாச்சிக்கு வந்து விடும். அங்கு மேற்கூரை இல்லாத நீண்ட நடை மேடையில் வண்டி நிற்கும். அங்குதான் தூத்துக்குடியில் இருந்து வரும் பெட்டிகளை இந்த ரயிலோடு இணைப்பார்கள். நமதூர் ஆம் ஆத்மிகள் இருக்கும் பெட்டி இப்போது நடுவாக வந்து விடும். இனி அது முழுமையான கன்னியாகுமரி விரைவு வண்டி. வேகத்தோடு புறப்படும்.
அனேகமாக மதுரை வரும்போது இரவு மணி பத்தாகி விடும். இனி அவரவர் சாப்பாட்டுப் பொட்டலத்தை அவிழ்ப்பார்கள். ரெயில்வேயில் விற்கும் அந்த ரயில் சாப்பாடு விருதுநகரில் வந்துவிடும். இப்போது போல சில்வர் கவரில் பொதிந்து தரப்படும் உணவல்ல. சில்வர் சாப்பாட்டுத் தட்டில் அதே அளவு மூடி போட்டு பாதுகாப்பாக கொண்டு தருவார்கள். சுவையாகவும் இருக்கும். சென்னையிலிருந்து வரும்போது அது விழுப்புரத்தில் கிடைக்கும்.
மதுரை கடந்ததும் இனி உறக்கம்தான்...! அனேகமாக திருச்சி வரும்போதெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போம். பொழுது பள பள வென விடியும்போது வண்டி விழுப்புரத்தில் நிற்பது தெரியவரும். “டீ....காப்பி ...” என்று கூவிக்கொண்டு வருவார்கள். பல் விளக்காமல் காப்பி குடிக்கும் வழக்கத்தை நான் அங்கேதான் கற்றேன்.
விழுப்புரத்தில் வண்டி அதிக நேரம் நிற்கும். டீசல் எஞ்சினை மாற்றிவிட்டு அங்குதான் மின்சார எஞ்சினை பொருத்துவார்கள். பொழுது நன்கு விடிந்த உடன் வண்டி விழுப்புரத்தை விட்டு நகரும். விழுப்புரம் தாண்டிய உடனே ஒரு மாதிரி மூக்கைத் துளைக்கும் நாற்றம் நாசியைத் தாக்கும். இது என்னடா... சாக்கடை நாற்றம்..? என்று அப்போது மூக்கைப் பிடித்துக்கொள்வேன். ஒரு ஐந்து நிமிட நேரம் வண்டி அந்த சாக்கடை நாற்றத்திலேயே பயணிக்கும். இப்போதும் அந்த “நாற்றம் “அங்கு இருக்கிறது. பிறகுதான் தெரிந்து கொண்டேன். அது முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை என்று. அதில் கரும்பு பிழியும் வாடைதான் அந்த நாற்றத்துக்குக் காரணம். இப்போது அது நாற்றமாகத் தெரியவில்லை.
இப்படியாக பொழுது புலர்ந்து, வண்டி திண்டிவனம், மதுராந்தகம், போன்ற இடங்களைக் கடந்தோடும். வெய்யில் நேரமாக இருந்தால், அப்போதே உடம்பில் ஒரு பிசுபிசுப்பை உணரலாம். முதல் நாள் மாலையில் உடம்பில் ஒட்டிய கரிப்புகையின் அடர்த்தி அப்போதுதான் தனது வேலையைக் காட்டத் தொடங்கும்.
வண்டி செங்கல்பட்டை அடைந்ததும் ,அங்கு நிலையத்தில் நிரம்பி நிற்கும் கூட்டம் மளமளவென்று - கிடைத்த எல்லா பெட்டிகளிலும் ஏறி நம் அனுமதியின்றியே நமது ஆசனத்தில் ஹாயாக அமர்ந்து கொள்வார்கள். அவர்கள் அனைவரும் சென்னைக்கு பணிக்குச் செல்பவர்கள். இந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வண்டியை எதிர்பார்த்து வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள். வண்டி செங்கல்பட்டில் நின்றதுமே மளமளவென ஏறி அமர்ந்துகொள்வார்கள்.. ரிசெர்வேஷன் கம்பார்ட்மென்ட் ...சாதா கம்பார்ட்மென்ட் என்றெல்லாம் அவர்களுக்கு வேறுபாடில்லை. எல்லாம் அவர்களுக்கு ஒன்றுதான். அது ஒரு வகையான ஆக்கிரமிப்பு என்றே சொல்லலாம். தூங்குவதற்கு மட்டும்தான் உங்களுக்கு ரிசெர்வேஷன்... இரவு கழிந்துவிட்டது... இனி உங்களுக்கு என்ன ரிசெர்வேஷன்...? என்பது அவர்களது ஆக்கிரமிப்பில் தொக்கி நிற்கும் கேள்வி. அதோடு நிற்க மாட்டார்கள்... உடனே சீட்டுக் கட்டைப் பிரித்து விளையாடத் தொடங்கி விடுவார்கள். இது இன்னொருவர் பணம் செலுத்தி பயணம் செய்யும் கம்பார்ட்மென்ட் என்ற உணர்வெல்லாம் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. சிரிப்பும், கூத்தும், கும்மாளமுமாக இருக்கும். நம்மை ஒரு அற்ப ஜீவி போன்று பார்ப்பார்கள். நாம் அப்படியே ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்க வேண்டியதுதான். இதை அப்போது ரெயில்வே நிர்வாகமும் அனுமதித்தது டிக்கெட் பரிசோதகர் முதற்கொண்டு யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். இப்போது இது நடக்குமா...? என்று சொல்லுங்கள்.
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அப்போது சென்னை மின்தொடர் வண்டிகள் தாம்பரம் வரைக்கும்தான் செல்லும். இப்போது விழுப்புரம் வரையிலும் ஏகப்பட்ட மின்தொடர் வண்டிகளை விட்டிருக்கிறார்கள். பாசஞ்சர் வண்டிகள் மட்டுமே அப்போது செங்கல்பட்டைக் கடந்து செல்லும் .எனவேதான் வேறு வழியின்றி இந்த ஆக்கிரமிப்பு.
வெய்யில் சூடு ஏற... ஏற... ஒரு வகையாக வண்டி தாம்பரத்தை அடைந்துவிடும். இடையில் சிக்னல் கிடைக்காமல் ஆங்காங்கே போட்டு விடுவதும் உண்டு. மூஞ்சி, மொகரக்கட்டை எல்லாம் வியர்த்து, சட்டை பிசுபிசுப்பாக முதுகில் ஓட்டத் தொடங்கும். எப்போதடா எக்மோர் வரும்....என்றாகி விடும்.
ஒரு வழியாக வண்டி எக்மோர் நிலையத்தில் நுழையத் துவங்கும்போதே அப்பாடா.... என்று ஒரு பெருமூச்சு பிறக்கும். ஒரு சாகசப் பயணத்தை ஒரு வழியாக நிறைவு செய்த உணர்வு ஏற்படும்.
(குறிப்பு – எனது வயதுடைய எல்லோரும் அறிந்த பயணம்தான் இது. இதை அறியாத இன்றைய இளைய தலைமுறையை மனதிற்கொண்டே இங்கு இது பதிவு செய்யப்படுகிறது.) |