உலகம் பூராவும் வாழும் காயல் நகர வாசிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
மேற்கண்ட தலைப்பில் ஒரு கட்டுரை எழுத மூன்று வருடங்களுக்கு முன்னாள் ஆசையாக இருந்தது. அழகான செயல்பாடுகள் என்றால் என்ன என்ற கேள்வி எழலாம். எல்லோருக்கும் பிரயோஜனப்படக்கூடிய செயலை நாம் அழகான செயல் என்று கூறலாம்.
“தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை”
“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”
என்று முன்னோர்கள் சொல்லிய யாவற்றையுமே அழகான செயல்பாட்டில் வைத்துப் பார்க்கலாம். பட்டம் படித்த தாயரை விட, படிப்பறிவில்லாத தாய் எவ்வளவோ பேர்கள் தன் பிள்ளைகளை நேர்மையாக, மார்க்க பக்தி உள்ள பிள்ளையாக வளர்த்து, இந்த சமுதாயத்தில் வெற்றி பெறச் செய்தவர்கள் ஏராளம் உண்டு.
இந்தியாவின் அணு விஞ்ஞானி டாக்டர் ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம் (ராமேஸ்வரத்தில் பிறந்தவர்) இவர்கள் தாய் - தந்தை படித்த பட்டதாரிகளா? இந்தியாவில் அணு சோதனை நடத்தி உலக விஞ்ஞானிகளின் பாராட்டைப் பெற்றவர். இவர்களை வளர்த்தவர் சாதாரண ஒரு தாயும், தந்தையும்தானே? ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம் அவர்களால் முஸ்லிம் சமுதாய மக்களுக்கே பெருமையாக உள்ளதே? பெருமை சேர்த்த அவர்களைப் பாராட்டி மகிழ்வோம்.
இரவில் கல்லை எடுப்பதிலும் கவனம் தேவை!
நான் நிறைய நூல்களைப் படிப்பவன். எனக்கு இப்போது 68 வயது ஆகிறது. நான் இதுவரை 6 ஆயிரத்திற்கும் அதிகமான நூற்களைப் படித்து, குறிப்பு எழுதி வைத்துள்ளேன். 30 வருடங்களுக்கு முன் பிலே இருதயநாத் என்பவரின் “காடு கொடுத்த ஏடு” என்ற காடுகள் சம்பந்தமான நூலைப் படித்தேன். அதில் உள்ள அனைத்து சம்பவங்களையும் என்னுடன் பழகுபவர்களிடம் பகிர்ந்துகொள்வேன்.
கீழே கிடக்கும் கல்லை இரவில் எடுப்பது எப்படி என்று அவர் படித்துத் தருவதும் அதில் ஒன்று. சிறிய - பெரிய கல் எதுவாக இருந்தாலும் இரவில் விஷ ஜந்துக்கள் - குறிப்பாக பூரான் - தேள் விஷ சிலந்தி மறையும் அடிப்பகுதியாகும். வீதியோரம் ஜல்லி (கருங்கல்) தட்டி இருந்தாலும், செங்கல் அடுக்கி இருந்தாலும் அதன் மீது சில சிறுவர்கள் - வேலைக்காரர்கள் கூட படுக்கிறார்கள். அப்படிப்பட்ட ஜல்லி, செங்கல் இடுக்கில் பாம்புகள் மறைந்துகொண்டு, ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது இரவில் இரை பிடிக்க வெளியே வரும் என்று அந்த ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். இரவில் கல்லை ஐந்து விரல்களும் மண்ணில் படும் அளவு எடுக்கக் கூடாது என்றும், கல் மீது பட்டும் படாமலும் இரண்டு விரல் கொண்டு, மேல் பகுதியில் அசைத்து அடிப்பகுதியில் விஷ ஜந்துக்கள் மறைந்துள்ளதா என்று கவனித்து எடுக்கும்படியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுபோல, புதிய ஊருக்கு அதிகாலையில் போனால், கீழே கிடக்கும் கம்பை மேல் பகுதி கீழ் பகுதியில் பிடித்து எடுக்கக் கூடாது. ஏன் என்றால், இரவில் யாராவது பாம்பு அடித்து இருக்கலாம். அதன் விஷம் கம்பில் இரவில் பட்டு இருக்கும். இரவு பூராவும் பெய்யும் பனித்துளியில் அந்த கம்பில் ஈரமாகவோ, காய்ந்தோ படிந்திருக்கும் விஷம் நம் கையில் பட்டால் நம் உயிருக்கே அது ஆபத்து என்கிறார். கம்பின் நடுப்பகுதியைப் பிடித்து, ஏதாவது இரத்தக் கரை, அடித்த விபரம் தெரிகிறதா என்று பார்த்து, விடியற்காலை கம்பை எடுக்கக் கூறுகிறார்.
புதிய ஊருக்குப் போகின்றவர்களிடம் ஒரு ஊண்டுகோல் கம்பு தேவை. புதிய நபர் வீதிக்கு வந்தால் நாய் கடிக்க வரலாம். கம்பைக் கண்டால் ஓடி மறைந்து விடும் என்றார். ஊருக்கு புதிய நபரைக் கண்டால் நாய் குரைக்கும். இரண்டு மூன்று தடவை அதே வழியாகச் சென்றால் நாய் மோப்பம் பிடித்துக் கொண்டு கத்தாமல் இருந்துவிடும். இது என் அனுபவத்தில் மங்களவாடி வழியாக கடற்கரைப் பகுதிக்குச் செல்லும்போது நான் உணர்ந்து இருக்கிறேன்.
ஆந்திரா கடப்பா கிராமப் பகுதி ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவம். ஆந்திரா ஏலூரைச் சேர்ந்த காயல் வாசி 20 வருடங்களுக்கு முன் சொன்ன செய்தி. கடப்பாவில் ஒரு பகுதியில் இருட்டில் ஒரு காயல்வாசி சிறுநீர் கழித்துவிட்டு, இருட்டில் இரவில் கிடந்த ஒரு கல்லை எடுத்து, கட்டிக்கல்லாக ஆண் உறுப்பில் வைத்ததும், துடிதுடித்துக் கத்திக் கீழே விழுந்துவிட்டாராம். காட்டுப் பெரிய வண்டை கல் என்று நினைத்து கட்டிக் கல்லாகப் பிடித்துள்ளார் அவர். இரவில் கவனிக்காமல் செய்ததால் உயிர் போகக் கூடிய அபாயம். நல்ல வேளையாக அவர் தப்பினார். இரவில் பகலை விட இரண்டு மடங்கு கவனம் தேவை. (டார்ச் ஒளி பார்த்து கல்லை இரவில் எடுப்பது நல்லது.) எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும்.
கொடுக்கல் - வாங்கல் எழுதி வைப்பது நல்லது:
ஜும்ஆ பள்ளி, பொது இடங்களில் தரும் பிரசுரங்களின் மறுபகுதி வெள்ளை இடமாக இருந்தால், அவற்றைக் கோர்த்து ஒரு புத்தகமாகச் செய்துகொள்ளுங்கள். (நான் அப்படிச் செய்துகொள்வேன். கட்டுரை எழுதவும் ஒருபக்கப் பிரசுரங்களைப் பயன்படுத்துவேன்.) இந்த மாதிரியான புத்தகத்தில் நாம் கொடுக்கல் கொடுத்த கடன் பெற்றவர் பெயர், தேதி, பணத்தின் மதிப்பும், திருப்பித் தரும் நாளையும் எழுதி வைத்தல் அவசியம். கேட்காத கடன் பாழ் - திருப்பிக் கேட்கும்போது யார் கோபப்படுகிறார்களோ அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு நாம் கடன் கொடுக்கக் கூடாது. “கடன் கொடு; திருப்பிக் கேள்; நண்பனை இழந்துவிடுவாய்” என்ற ஆங்கிலப் பழமொழியை நினைத்துக் கொள்ளுங்கள்.
உதவிக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு, உபத்திரத்தில் மாட்டிக்கொள்வதை விட - கொடுக்காமல் தப்பித்துக் கொள்ளலாம். சில பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் தங்களின் தங்க நகையைக் கொடுக்கிறார்கள். வாங்கிய சில பெண்கள் நாம் கொடுத்த தங்க நகையை பேங்கில் வைத்து பணம் எடுப்பதாக ஒரு தகவல் வருகிறது. தங்க நகையை யாருக்கும் கொடுக்கக் கூடாது. (தங்க நகையின் எடையை எல்லாப் பெண்களும் அறிந்திருப்பது நல்லது.)
நமதூரில் உள்ள நகைக் கடைக்குப் போனால் உங்கள் தங்க செயின் நகை மோதிரங்களை எடை போட்டு, அறிந்துகொள்ளுங்கள். தங்க நகையை தோழிக்கோ, பக்கத்து வீட்டுக்கோ கொடுக்கும்போது, திருப்பித் தரும் நாளைக் கூறுங்கள். அதன் எடை இவ்வளவு என்றும் கூறிவிடுங்கள். எல்லா கணவர்குளும் மனைவியின் நகைகளை அடிக்கடி பார்வையிட வேண்டும்.
ஒரு வீட்டில் 12 பவுன் தங்க செயினை வாங்கிச் சென்று, அரை பவுன் அளவு வெட்டி, ஆசாரி மூலம் சரி செய்து பாலிஷ் செய்து திருப்பிக் கொடுத்து இருக்கிறார்கள். அந்த நகை திரும்ப வந்தது. மாப்பிள்ளை ஒரு தேவைக்கு எடை போட்டுப் பார்த்தபோது குட்டு வெளிப்பிட்டு இருக்கிறது. இதை எல்லாப் பெண்களும் அறிந்துகொள்வது அழகான செயலாகும்.
கணவனின் கடின உழைப்பை ஒவ்வொரு மனைவியும் புரிந்து வைப்பது நல்லது. தங்க நகைகள் எதையும் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று கணவன் சொன்னால் மட்டும் போதாது. ஊர் வந்ததும் மனைவியிடம் எந்த நகை இல்லை என்று ஆய்வு செய்தால் எப்போதும் நல்லது. வெளிநாட்டில் கடின உழைப்பு செய்துவிட்டு, ஊர் வரும் ஆண்கள் இந்த தங்க நகை ஆய்வில் - வீண் சந்தேகம் பூசல்கள் எல்லாம் ஏற்படாமல் பக்குவமாக நடந்துகொள்வது நலம். அப்போதுதான் உங்கள் விடுமுறைக் கால ஊர் பயணம் சுகப்படும்; சந்தோஷப்படும்.
யாருக்கும் தொந்தரவின்றி வாழுங்கள்!
நமது செயல் யாரையும் பாதிக்கக் கூடாது. செல்போனில் வீதியில், வீட்டில் சப்தமிட்டுக் கத்திப் பேசுவதும் பிறருக்கு இடைஞ்சலாகும். இப்போது மாணவ-மாணவியரின் முழு ஆண்டு பரீட்சைக் காலம் துவங்க இருப்பதால், தொலைக்காட்சிப் பெட்டியின் சப்தம் அடுத்த வீட்டுப் பிள்ளைகளின் படிப்பைக் கெடுக்கும்படியும், எரிச்சல் ஊட்டும்படியும் நடந்துகொள்ளாதீர். வெள்ளி, திங்கள் பெண்கள் தைக்காக்களில் அதிக சப்தமிட்டு மொத்த பெண்கள் சேர்ந்து ராகமிட்டு ஓதுவதும் கூட படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு இடையூறு இன்றி சப்தங்களை அவர்கள் குறைத்து ஓதலாம். இது மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாத செயலாகக் கருதுங்கள். (பெண்கள் தைக்காவில் ஓதக்கூடாது என்று கருத்தை வைக்கவில்லை. புரிந்துகொள்ளவும்.)
காலம் அறிந்து செயல்பட்டால், நாளும் நல்லது. பரீட்சைக் காலத்தில் மாணவ-மாணவியர் காலை மாலை விளையாட்டுக்களை அதிகம் குறைத்துக்கொண்டு, பரீட்சைக்கு வேண்டிய முக்கிய பாடங்களை சுபஹூ தொழுகைக்குப் பின் பாடமிட்டு அல்லாஹ்விடம் பரீட்சையில் ஞாபக சக்தியோடு பரீட்சை எழுத, பாஸாக, அதிக மார்க் எடுக்க ஐந்து வேளை தொழுகையில் துஆ கேட்டு வரலாம். பரீட்சைக்கு படிக்கும் காலத்தில் உணவுகளை தள்ளிப் போட்டு காலம் தாழ்த்தி சாப்பிடக் கூடாது. சோர்வு வரும். உடலின் தெம்பு குறைந்து, மறதி கூட ஏற்படலாம். பால், போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ் போன்ற சத்து நிறைந்த பானங்களை மாணவர்கள் பருக வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாதவாறு அடிக்கடி பழ வஸ்துக்களைச் சாப்பிட வேண்டும்.
தமிழ்நாட்டில் காயல்பட்டண மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று முத்திரை பதிக்க வேண்டும். இதுவே எங்கள் அனைவரின் ஆவல். மாணவ-மாணவியருக்கு யாரும் படிக்கும் நேரத்தில் தொந்தரவு செய்யக் கூடாது. மாணவ-மாணவியர்களின் குறைகளைக் கூறக்கூடாது. அவர்களை உற்சாகப்படுத்தும் நடவடிக்கைகளை பெற்றோர்களும், உற்ற தோழர் - தோழியரும் அறிந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
ஜனவரி - மார்ச் 2015 KCGC புல்லட்டின் மூன்று மாத இதழ்களில் பொதுத் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு டிப்ஸ் (பக்கம் மூன்றில்) சுவையான பத்து குறிப்புகள் உள்ளன. மாணவ-மாணவியர் கண்டிப்பாக படித்தால் நல்லது.
இன்னும் எழுத வேண்டுமா?
இந்த தலைப்பில் ஏராளமான தகவல்கள் உள்ளன. உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்துள்ளதா? கருத்து எழுதினால் இரண்டாம் தொடர் எழுதப்படும்.
“மனதில் மலை போல் குவிந்த எண்ணங்களில் ஒரு துளி இங்கே பிறந்து இருக்கிறது”. ரசிப்பதில் உங்கள் ஆர்வத்தைப் பொறுத்து எழுதப்படும். எழுத என் கை வலிப்பதில்லை. எனக்காக தட்டச்சி செய்கின்றவரின் மனதை நான் அறிவேன். அவருக்கு அதிக சிரமம் ஏற்படுத்த நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன். (அவருக்கு இதுபற்றி தெரியும்.) நன்றி அவருக்கு! அல்ஹம்துலில்லாஹ் இறைவனுக்கு!! |