வாழ்வியல் அறிவை - புத்தகங்களைப் படித்தும், அனுபவசாலிகள் சொல்லக் கேட்டும், பட்டறிவின் மூலமும் என பல வகைகளில் நாம் பெற்று வருகிறோம்.
இவையனைத்தின் மூலமும் எனக்குத் தேவையான அறிவை நான் பெற்றுக்கொள்கிறேன் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக - யாரும் செல்லத் துணியாத அல்லது செல்ல விரும்பாத - கவனிக்கத்தக்க சில இடங்களுக்குப் பயணித்து அந்த அறிவைப் பெற்று வருகிறேன். அதில் கிடைக்கும் இன்பமே தனிதான்!
தகவலுக்கு வருமுன் ஒன்றை உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கட்டுரைகள் வாயிலாக நான் சொல்லும் எதுவும் - யாரையும் திருத்துவதற்காக அல்ல. மாறாக, எனக்குக் கிடைத்த அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான். இதை எடுத்துக்கொள்வதும், புறந்தள்ளுவதும் அவரவர் உரிமையில் உள்ளது.
மீண்டும் அதே கூட்டணி... ஆம்! நான், நண்பர்களான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, சாளை பஷீர், குளம் முஹம்மத் தம்பி கூட்டணிதான். இதில் இருவர் எப்போதும் ஆயத்தமே! ஆனால் ஒருவருக்கோ - சரியான சூழலும், மனதும் ஒன்றாக அமைய வேண்டும். அவரைப் பயணத்தில் இணைத்துக்கொள்ள நாங்கள் போட்ட நாடகங்களையும், எடுத்த முயற்சிகளையும் சொல்லவே இரண்டு கட்டுரைகள் தேவை. சரி போகட்டும்!
தர்மபுரியைத் தாண்டி, கிருஷ்ணகிரியை ஒட்டி - கர்நாடக மாநில எல்லைக்கு மிக நெருக்கத்தில் அமைந்துள்ளது வரண்ட மலைப்பகுதியொன்று. அதில் 150 ஏக்கர் அளவில் மட்டும், ‘மூங்கில் கோம்பை’ எனும் பெயரில் மூங்கில் மரங்கள் அடர்ந்து சூழ்ந்த பசுமைக் காடு உருவாக்கப்பட்டுள்ளது. ஏராளமான மனிதர்கள் இணைந்து கடும் உழைப்பைக் கொடுத்து செய்திருக்க வேண்டிய இப்பணியை, ஒரு சிலரின் துணையுடன் ராஜஸ்தானைச் சேர்ந்த பியூஷ் மானுஷ் என்ற ஒரேயொருவர் பாடுபட்டு உருவாக்கியிருக்கிறார் என்றால் அது நிச்சயம் வியப்பிற்குரியதே.
“சாலீ... ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தேனே...? மூங்கில் கோம்பை, மூங்கில் கோம்பை-ன்னு...? அங்கே பிப்ரவரி இருபத்தி ரெண்டாம் தேதிக்கி, ‘சொல் விதைப்போம்’ங்கற தலைப்புல இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுகூடல் நடக்குதாம்...”
இப்புதிய தகவலையும் - வழமை போல நண்பர் சாளை பஷீர்தான் என்னிடம் கூறினார்.
“அதுக்கென்ன காக்கா... நாம தனியா போகலாம்னு பேசிட்டிருந்தோம்... இப்போ நம்மைப் போலவே ஆர்வமுள்ள பலரோடு இணைந்து அமர்வது இன்னும் சிறப்புதானே...? என்றேன்.
திட்டமிடல் துவங்கியது. சென்னையில் நண்பர் குளம் தம்பி “நான் ரெடி” என்று கூறிவிட்டார். காயல்பட்டினத்தில் நண்பர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீயும் வர ஆயத்தமாகிவிட்டார். அப்புறம் என்ன? நானும், நண்பர் முஜாஹிதும் காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்து, அங்கிருந்து நாங்கள் நால்வரும், கூடுதலாக - அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் அறிமுகமான - சன் தொலைக்காட்சியில் பணியாற்றும் பொறியாளர் தம்பி வினோத்தும், ஓட்டுநராக ஒரு சகோதரரும் என மொத்தம் 6 பேர் தனி வாகனத்தில் பயணத்தைத் துவக்கினோம்.
கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் நாளன்று மாலையில் துவங்கிய எங்கள் பயணம், வாணியம்பாடியில் இரவு தங்குவதற்காக நிறுத்தப்பட்டது.
வாணியம்பாடிக்கு வந்தது வந்தாச்சி... என் சொந்தத் தேவையையும் முடித்துக்கொள்ளலாம் என்று கருதிய நான், அங்குள்ள இஹ்யா உலூம் அரபிக்கல்லூரியில் திருக்குர்ஆன் மனனம் செய்து வரும் என் சகோதரியின் மகன் இளவல் இப்றாஹீமைச் சந்திக்க குழுவினருடன் சென்றேன்.
நுழைவாயிலிலேயே இந்தக் கல்லூரி தன்னை வேறுபடுத்திக் காட்டியது. நான்கு பேர் கூடும் இடத்திலே கூட - கலவரத்தில் பாதிக்கப்பட்ட இடம்போல் காட்சியளிக்கும் நமது செருப்பு வைக்கும் பகுதி. சுமார் 250 மாணவர்கள் பயிலும் அக்கல்லூரியில் அழகாக - வரிசையாக அடுத்தடுத்து கழற்றப்பட்டிருந்தன அனைவரின் பாதணிகளும். எவ்வளவு அவசரத்தில் அங்கிருந்து கிளம்பினாலும், கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருவர் தனது பாதணியை அடையாளங்காண முடியும்.
அனைவரும் ஒரே சீராக வெண்ணிற உடையில்!. கல்லூரியை நடத்துவதும், படிக்கும் பெரும்பாலோரும் உர்தூவைத் தாய்மொழியாகக் கொண்டோர் என்பதால், மருந்துக்குக் கூட தமிழ் இல்லை. என்றாலும், உர்தூ தெரியாத மக்கள் அங்கு வருகையில் அவர்களும் தமிழில் பேசத் தயங்கவில்லை. ஏதோ வேறு மாநிலத்திற்குள் நுழைந்தது போல இருந்தது.
தமது ஆண் பிள்ளைகளை நல்லதொரு அரபிக்கல்லூரியில் பயில வைக்க விரும்புவோர் கண்ணை மூடிக்கொண்டு இக்கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம். (இலகுவாக உர்தூவையும் பேச, எழுத, வாசிக்கக் கற்றுக்கொள்ளலாம்.) அவர்களும் நம் பிள்ளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆம்! அவ்வளவு எளிதாக சேர்க்கை (அட்மிஷன்) கிடைக்காது என்பதே அதற்குக் காரணம்.
வாணியம்பாடியிலுள்ள - வட்டியில்லா கடன் வழங்கும் ஜன்சேவா அலுவலகம் சென்று, அங்குள்ள நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய பின், அந்த ஊரின் ஸ்பெஷல் பிரியாணியை இரவுணவாக உண்டுவிட்டு, அங்கே ஒரு தங்கும் விடுதியில் 3 அறைகள் எடுத்து, அறைக்கு இருவர் என தங்கி, தூங்கி விழித்தோம் அதிகாலையில்.
வாணியம்பாடியிலுள்ள ஓர் உணவகத்தில் காலை உணவை முடித்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
அனைவரும் ஒன்றுகூடும் இடமாகத் தேர்வு செய்யப்பட்டிருந்த தர்மபுரி தொடர்வண்டி நிலையத்தை, நண்பகல் 11.00 மணியளவில் சென்றடைந்தோம். பயண அலுப்பு, சுமார் ஒரு மணி நேர காத்திருப்பு ஆகிய அவதிகளை மறக்க, நாங்கள் வேடிக்கை கலந்த அரட்டையில் மூழ்கினோம்.
சில மணித்துளிகளில், முகாமில் பங்கேற்க வந்திருந்த இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் ஒரு கல்லூரி வாகனத்தில் புறப்பட, அவர்களைப் பின்தொடர்ந்து எமது வாகனமும் சென்றது. சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணித்த பின், கரடு முரடான காட்டுப் பகுதிக்குள் நுழைந்தன இரு வாகனங்களும். சில மணித்துளிகளிலேயே அனைவரின் கைபேசிகளும் சிக்னல் இழந்தன. எங்கள் குழுவினருள் ஒருவர் அதைத் தாங்கி்க்கொள்ளவே மிகவும் அவதிப்பட்டார். மற்றவர்கள் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள, எனக்கோ அது சொல்லில் விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. வேறென்ன...? இரண்டு பகல்கள், ஓர் இரவு முழுக்க நவீனத்தை விட்டும் ஒதுங்குவது எளிதானதா...? அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் இன்பம்.
அந்த மலைப்பகுதியிலும் ஏதோ ஒரு மேற்பரப்பில் மட்டும் சிக்னல் கிடைக்குமாம். தேவையுடையோர் கைபேசியைப் பயன்படுத்திக்கொள்ள சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டது. ஏதோ மூன்று ஆண்டுகள் பிரிந்த மனைவியுடன் பேசச் செல்வதைப் போல அனைவரும் திரண்டு சென்றனர் ஒரே நேரத்தில்! அப்போதும் எனக்கு இந்த கைபேசியைப் பயன்படுத்தத் தோன்றவேயில்லை. என்றாலும் அவர்களோடு இணைந்து நானும் சென்று, ஓரிடத்தில் அமர்ந்து பசுமையை அனுபவிக்கத் துவங்கினேன்.
“அடே என்னா...? வீட்டுக்கு ஃபோன் பேசலையா...? நண்பர் முஜாஹித் கேட்டார்.
“வந்து மூனு மாசமா வாப்பா ஆயிடிச்சி...? இரண்டு நாட்கள் பயணம்... இன்னும் ஒரு நாள் கூட முடியல... அதுக்குள்ள என்னத்த பேச...? இங்கு நடக்குறதையெல்லாம் நேரடி ஒலிபரப்பா செய்யச் சொல்ற...?”
“ஹூம்... உன்ன திருத்தவே முடியாது! உன்னோட கொஞ்ச நேரம் கூடுதலா இருந்தா நானும் கெட்டுப் போயிடுவேன்... நீ சரிப்பட்டு வர மாட்டா...” அன்புச் சாபமிட்டுவிட்டு, கைபேசியைக் காதில் வைத்தவாறே வேறிடம் சென்றுவிட்டார் அவர்.
காட்டுக்குள் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் என எதுவும் இல்லை. எளிமையே உருவாக அமர்ந்து, சட்னியை நக்கியவாறே கம்பங்கூழ் குடித்துவிட்டு, உணவுண்ட தட்டைக் கழுவிக் கொண்டிருந்தார் - இவ்வளவு பெரிய காட்டை உருவாக்கிய பியூஷ் மானுஷ்.
கேரள மாநிலம் இடுக்கி நகரைச் சேர்ந்த - சிறந்த எழுத்தாளரும், திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான ஷாஜி...
நெல்லை மாவட்டம் கடையம் என்ற தன் சொந்த ஊரில், புகழ்பெற்ற நிலச்சுவான்தாருக்கு மகனாகப் பிறந்தும், தனக்கென 35 சென்ட் இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு, தன் குடும்ப வாழ்விற்குத் தேவையான காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் என அத்தனையையும் தன் இல்லத்தரசி துணையுடன் பயிரிட்டு, பெரும்பாலும் கரன்சியையே கையில் தொடாமல், கடைகளுக்குச் செல்லாமல் இன்ப வாழ்க்கை வாழ்ந்து வரும் ஃபெலிக்ஸ்...
நினைத்ததையெல்லாம் உயர் பட்டப்படிப்புகளாகப் படித்து முடித்து, ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகளில் பல தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளெல்லாம் எழுதிய பின்பும், மன அமைதி கிடைக்காமல், அனைத்தையும் துறந்துவிட்டு, ஓட்டை மிதிவண்டி ஒன்றில் ஊர் ஊராய்ச் சுற்றித் திரிந்து, கண்ட இடத்திலும் படுத்து, கண்ணில் பட்டதையெல்லாம் உண்டு, திருமணம் செய்யாமல் தனிக்கட்டையாக வாழ்ந்துகொண்டு, வாழ்வில் இழந்ததை - ஒருபோதும் கிடைக்காத இடத்தில் நம்பிக்கையுடன் தேடிக்கொண்டிருக்கும் மாணிக்கம்...
நவநாகரிக வாழ்வின் கோரம் பிடிக்காமல், வட நாட்டிலுள்ள தன் வீட்டை விட்டும் வெளியேறி, தர்மபுரிக்கு வந்து குடியேறி, பொதி சுமக்கும் கழுதை போல பாடப்புத்தகங்களைத் திணிக்காமல், நினைத்த படி விளையாடிக்கொண்டே - விரும்பினால் கல்வியும் கற்க மாணவர்களுக்கு வழிவகை செய்து, முன்மாதிரி பள்ளிக்கூடத்தை நடத்தி வரும் மீனாட்சி...
இவர்கள்தான் இந்த ஒன்றுகூடலில் குறிப்பிடத்தக்கவர்கள். படிகளிலும், பள்ளத்தாக்கிலும், மரத்தடியிலும் என ஒவ்வொரு வேளையிலும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்தவாறு அவர்கள் பிறருடனும், அனைவரும் அவர்களுடனும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
இந்த நவீன உலகம் நம்மை அடிமைப்படுத்தி வருகிறது... அதிலிருந்து மீண்டேயாக வேண்டும் என்ற உணர்வைத்தான் - மொத்த கருத்துப் பரிமாற்றங்களிலும் உணர முடிந்தது.
இடையிடையே வேதிப்பொருட்கள் - விஷம் கலக்கப்படாத சுத்தமான தினை அரிசி, குதிரை வாலி, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட சோறு, கழி, கூழ் ஆகியற்றையும், தாழம்பூ உள்ளிட்ட மூலிகைகளைக் கொண்டு காய்ச்சப்பட்ட தேனீரையும் என இரண்டு நாட்களாக பரிசுத்தமான உணவு வகைகளை உண்டும், பானங்களைப் பருகியும் இன்புற்றோம்.
மின்சார இணைப்பெல்லாம் அங்கு கிடையாது! முழுக்க முழுக்க மூங்கில் பொருட்களை மட்டும் கொண்டு அமைக்கப்பட்டிருந்த குடிசைகளில், சூரிய சக்தியில் உருவாகும் மின்சாரத்தைக் கொண்டு அறைக்கு ஒரு சி.எஃப்.எல். விளக்கு மட்டும் பொருத்தப்பட்டிருந்தது. அந்தந்த வேளைகளில் அறைகளுக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றினோம்.
ஊரில் இருக்கையில் பசியை உணராமல், கடிகார முட்களைப் பார்த்தே உணவை உள்ளே தள்ளிப் பழக்கப்பட்டுப் போன எங்களுக்கு, அங்கு அந்தந்த வேளைகளில் சரியாக வயிறு பசித்தது. ஒவ்வொரு வேளையிலும் உடலும், குடலும் எங்களுடன் உரையாடின என்றே சொல்வேன். பசித்த பின் புசித்ததால், உண்ட உணவு - பழக்கப்படாத பொருளாக இருந்தும், மிகவும் சுவையாகவே இருந்தது.
19.00 மணிக்கெல்லாம் இரவுணவை உண்ட பின், திடீரென எங்களைக் காடுகளுக்கிடையே அழைத்துச் சென்றார் பியூஷ் மானுஷ். கும்மிருட்டில் ஒருவர் பின் ஒருவராகச் சென்ற எங்களுள் சிலர் தமது கைபேசியிலுள்ள விளக்கை ஒளிர விட்டதும், அதைத் தவிர்க்கக் கூறிய அவர், “வெளிச்சம் கொண்டு வர ஒரு முயற்சியும் எடுக்காதீங்க...! கொஞ்ச நேரத்தில் இந்த இருட்டுக்கு நம் கண்கள் பழகிவிடும் பாருங்க...” என்றார். அவர் சொன்னது போலவே கண்கள் பழகிவிட்டன.
மிகப்பெரிய நீர்த்தடாகத்தின் ஓரங்களில் சதுரமாக அமர்ந்தவாறு, நாங்கள் யாவரும் கதைக்கத் துவங்கினோம். பேசுவதற்குத் தலைப்பெல்லாம் கிடையாது. இது ஒரு மனந்திறந்த கலந்துரையாடல் மட்டுமே. அவரவர் மனதில் பட்டவற்றையெல்லாம் பரிமாறிக்கொண்டனர்.
“விறகடுப்பில், வியர்வை சிந்தி சமைத்துக்கொண்டிருந்த நம் மக்களுக்கு, சமையல் எரிவாயு அடுப்பு, எரிவாயு இணைப்பு என அனைத்தையும் இலவசமாக அளித்து, நன்மை செய்வதாகக் கருதி பலரது நோய்களுக்கும், தீராத வியாதிகளுக்கும் முதல் காரணமானது நம் மாநில அரசு...
இயற்கையின் காதலர்களாகவே வாழ்ந்து பழகிய கிராமத்து மக்கள் கூட காலப்போக்கில் விறகடுப்பை மறந்துவிட்ட தற்காலத்தில், எரிவாயு இணைப்பு வைத்திருப்போர் வங்கிக் கணக்கு விபரத்தை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு புதிய உத்தரவைப் போட்டுள்ளது...
மொத்தத்தில் நம்மையுமறியாமல் நாம் அடிமைகளாக்கப்பட்டு வருகிறோம்... என்னைப் பொருத்த வரை, இதுபோன்ற தருணங்களில் சுதாரித்துக்கொள்வேன்... எங்கள் வீட்டில் தற்போது மீண்டும் விறகடுப்புக்கு மாற திட்டமிட்டுள்ளோம்...”
என் பங்குக்கு நான் இவ்வாறு எனது கருத்தைப் பரிமாறிக்கொண்டேன். அதை மேற்கோள் காட்டி எழுத்தாளர் ஷாஜியும் பேசியது எனக்கு மகிழ்ச்சியளித்தது.
பின்னர் ஒரு பத்து நிமிடங்கள் யாரும், எதுவும் பேசாமல் நிசப்தமானோம். அடுத்து நாங்கள் உணர்ந்ததை சொற்களால் விவரிக்க இயலாது. ஆம்! எங்களுடன் அந்த ஒட்டுமொத்த காடும் பேசியது. அடர்ந்த மூங்கில் மரங்கள் அசைந்தாடிப் பேசின... புழு பூச்சிகள், வண்டுகளின் ஓசைகள் கிறீச்சிட்டுக்கொண்டேயிருந்தன... பகல் முழுக்க உழைத்து, பின் கூட்டில் இளைப்பாறும் பறவைகளின் ஓசைகளும் எம் காதுகளில் தேனாய்ப் பாய்ந்தன...
மொத்தத்தில் இனம் புரியாத இன்ப உணர்வு எம்மை ஆட்கொண்டது. உண்மையைச் சொல்வதானால், இந்த இன்பச் சூழலில் வாழ்ந்தால் தீராத வியாதியுடையோரும் கூட இறையருளால் வெகு விரைவில் குணமடையலாம். இழந்ததால் பெறப்பட்ட வியாதி, பெறுவதால் இழக்கப்படும் என்பதே இதன் சூத்திரம்.
பியூஷ் மானுஷ் பேசினார்.
“இந்த இயற்கையை மக்களும் அழித்து வருகின்றனர்... அரசும் அவ்வாறே நடந்துகொள்கிறது... அறிவற்ற மக்களால் இயற்கை சாகடிக்கப்படுவதைத் தடுக்க, இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு ‘ஐயப்பன் வனம்’, ‘முருகன் வனம்’ என பெயர்களிட வேண்டும்... நானும் அவ்வாறு பல இடங்களில் செய்துள்ளேன்... தற்போது அந்த இடங்களில் இயற்கை பாதுகாப்பாக உள்ளது. இந்தக் காட்டிலும் பல பகுதிகளுக்கு அவ்வாறு பெயர் சூட்ட திட்டமுள்ளது...
அதுபோல, இந்தக் காட்டில் முதியோர் இல்லம், அநாதைகள் இல்லம் கட்டும் திட்டங்களும் உள்ளன...” என்றார் அவர்.
நான் சார்ந்த மதத்தையும் தாண்டிச் சொல்கிறேன்... இந்தக் கூற்று முற்றிலும் தவறானது. இப்பெயர் சூட்டப்படும் சமகாலத்தில் வாழும் மக்கள் வேண்டுமானால் அதன் தத்துவத்தை உணர்ந்து செயல்படலாம். காலப்போக்கில், தத்துவம் மறக்கப்பட்டு, வழிபாடு ஒன்று மட்டுமே நிலைக்கும். ‘ஐயப்பன் வனம்’ என்ன? ‘ஐதுரூஸ் வனம்’ என்று வைத்தாலும் பிரச்சினை இதுதான்.
அடுத்த சிக்கல்... ஆள் அரவமே இல்லாமல் இக்காடு இருப்பதால்தான் அது தன் இயல்புடன் காக்கப்படுகிறது. அவர் சொல்வதைப் போல இது மக்களால் நிரம்பத் துவங்கினால், காலப்போக்கில் இதன் இயல்பு சாகடிக்கப்படும் என்பது நிச்சயம்.
இக்கருத்துக்களை நண்பர் சாளை பஷீர் உள்ளிட்ட சிலர் அவரிடம் நாசூக்காக முன்வைக்கத் தவறவில்லை.
மின் விசிறியே காணக்கிடைக்காத அந்தக் காட்டில், மூங்கில் குடிசையில், மூங்கில் கழிகளைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டிருந்த கட்டிலில் அனைவரும் படுத்துறங்கினோம்...
ஏசியில் இருந்து பழகியவனுக்கு மின்விசிறியில் இருக்க முடியவில்லை...
மின்விசிறியில் சுகம் கண்டவனுக்கு பவர் கட்டைப் பொறுக்க முடியவில்லை...
ஆனால், எதுவுமே இல்லாமல் எங்களால் இங்கு இன்பமாக உறங்கி எழ முடிந்ததே அது எப்படி...?
மறுநாள் காலையில், காட்டின் முழு பரப்பையும் சுற்றிக் காண்பித்தார் பியூஷ். அரிய வகை மூலிகைச் செடிகள், மழை பெய்யாத காலத்திலும் இங்குள்ள மரங்களுக்குத் தேவையான நீர் கிடைக்க ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள தடாகங்கள், வடிகால்கள், வாய்க்கால்கள், பள்ளங்கள் என அனைத்துமே புதுப்புது தகவல்களை எமக்கு அளித்துக்கொண்டிருந்தன.
இறுதி அமர்வாக, நாங்கள் படுத்துறங்கிய மூங்கில் குடிலில் அமர்ந்தோம். நவீனத்தில் தன்னை இழந்து வரும் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட 5 தலைப்புகளில் நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
எம் குழுவினருள் ஒருவரான சாளை பஷீரும் ஒரு நூலை வெளியிடும் வாய்ப்பைப் பெற்றது எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியளித்தது.
விடைபெற்று சென்னை திரும்பிய பின், அங்கு ஆக வேண்டிய சில வேலைகளை முடித்துக்கொண்டு, நானும், நண்பர் முஜாஹிதும் காயல்பட்டினம் திரும்பி வந்தோம்.
நான் மேலே குறிப்பிட்டது போன்ற சில சிக்கல்களை மட்டும் தவிர்த்துப் பார்த்தால், இந்த மூங்கில் காடு உண்மையிலேயே மனதிற்குப் புத்துணர்ச்சியையும், ஊக்கம் - உற்சாகத்தையும் மட்டுமே தந்தது.
கோடை விடுமுறைக் காலங்களில், அடுக்கு மாடிக் கட்டிடங்களையும், இயந்திரங்களையும் நம் மக்களுக்குக் காண்பித்து இன்புறும் நாம், இதுபோன்ற இடங்களுக்கும் அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் தங்கி வந்தால், அவர்கள் உண்மையான வாழ்க்கையை அந்தக் குறுகிய காலத்தில் படித்துக்கொள்வார்கள் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. |