உலகில் வாழும் காயல் நகர அன்பு இதயங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
மனதை மயக்கும் ஓவியங்கள் பலவற்றை நாம் கண்டு பிரமதித்தும், ரசித்தும் இருக்கிறோம். குழந்தையின் சிரிப்பு, அழகிய குமரிப் பெண், இயற்கைக் காட்சிகள் மற்றும் விஷயங்களும் மனதை இழுத்து ஒருமுறை கேட்கவும், காணவும் தூண்டும்.
A.L.S. School of Arts ஓவியர் ALS மாமா அழைக்கிறார்! காயல் நகரின் ஓவியக் கூடம் ஆரம்பம்!!
காயல் நகரில் ஓவியக் கூடம் நடத்த வேண்டும் என்று நான் சென்னையில் 1976இல் இருந்தபோதே அதற்கான முயற்சி எடுத்தேன். சென்னை அரசு ஓவியக் கல்லூரியில் மாலை நேரம் போய் ஓவியம் கற்று வந்தேன். எனது வயோதிக காலத்தில், ஓய்வு நேரத்தில் காயல் நகர மாணவ-மாணவியர்களுக்கு முறைப்படி ஓவியம் சுலபமாகக் கற்றுத் தர திட்டமிட்டேன். அல்லாஹ் உதவியால் 2004 முதல் கோடை கால விடுமுறையில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு தெளிவாக நேரடியாக தினமும் ஒரு மணி நேரம் வீதம் ஒரு மாதம் கற்றுத் தந்தேன். (ஆரம்பத்தில் மூன்று வருடம் இலவசமாக எனது வீட்டு மாடியில் - உருவம், உயிரற்ற ஓவியம் கற்றுத் தந்தேன்.) இதற்கும் ஆலிம்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தக் காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று பெண்களைப் படிக்க விடாது தடுத்த அதே ஆலிம் கூட்டம் போல் இன்று நமதூரிலுள்ள பல பள்ளிக்கூடங்களில் அவர்கள் நிர்வாகியாக உள்ளதால், அங்கு ஓவியம் வரையும் கலையை பள்ளி விடுமுறைக் காலத்தில் கற்றுக் கொடுக்க மறைமுகமாகத் தடுத்து வருவதை நான் அறிவேன்.
பள்ளிவாசல், வீடு, கட்டிடம், மரம், செடி, கொடி, மலர், காய்கறி, கனி, இயற்கைக் காட்சிகள், உயிர் ஓவியங்களா என்று (எனது ஓவியப் பள்ளியை நடத்த விடாது தடுக்கும் கூட்டத்தினர் எண்ணிப் பார்க்கட்டும்!) இதற்காக நான் எடுக்கும் முயற்சியுடன் உடலும் கஷ்டப்படுகிறது. பணமும் அதிகம் செலவாகிறது.
புகழ்பெற்ற ஓவியர்கள்
அந்தக் காலத்தில் ராஜா ரவிவர்மா சிறந்த ஓவியராக மதிக்கப்பட்டு, புகழ்பெறக் காரணம், அந்தக் காலத்தில் வண்ணக் கலர்கள் தயாரிக்க யாரும் இல்லை. ஓவியர் ரவி வர்மா அவர்களே எல்லா வண்ணங்களையும், மரப்பட்டை இலைகள், சில காய்கறி கனி கொட்டை பருப்புகளில் இருந்து வண்ணங்களை தயார் செய்து, அவர் வரைந்த ஓவியத்தில் தீட்டினார்.
உதாரணமாக, சிகப்பு பூ வரைய வேண்டுமானால், வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு இவற்றை இடித்து, சிகப்பு வண்ணம் உருவாக்கினார். காவிக் கலர் உருவாக்க, கடல் சிப்பியை சூடு பண்ணி, சுண்ணாம்பு தயார் செய்து, மஞ்சள் தூள் கலந்து, காவி / மஞ்சள் கலர்களை எடுத்தார். மரங்களை வரைய, வண்ணம் தீட்ட, பாக்குகளை இடித்து, தண்ணீர் இட்டு ப்ரவுன் கலரை உருவாக்கினார்.
அன்று அவர் சுலபமாக வரைந்தாலும், கலரை உருவாக்கி ஓவியத்தில் தீட்ட மிகவும் கஷ்டப்பட்டதால் அவர் ஓவியம் உலகப் புகழ்பெற்றது. பல லட்ச ரூபாயிக்கும் இன்றும் வாங்குகிறார்கள். ஓவியர் ரவி வர்மா ஓவியங்கள் அனைத்தும் பார்க்க வேண்டுமா? நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையின் எல்லா சுவர்களிலும் பார்க்கலாம். இது தவிர, சென்னை ஓவியக் காட்சி காலரி, பம்பாய் மற்றும் இலங்கை பொருட்காட்சி சாலை (அங்காடியில்) காணலாம்.
முஸ்லிம் ஓவியர்கள் யார்?
அரபுலகத்தில் வாழ்ந்த உலமாக்கள் அந்தக் காலத்தில் முஸ்லிம்களை ஓவியம் வரைய தடுத்ததால், அரபி காலிக்ராபிக் - அதாவது அரபி எழுத்தில் சித்த வடிவியல் ஓவியத்தை தந்தார்கள். ஒரு முஸ்லிம் பெரியவர் தலைப்பாகையுடன் அத்தஹையாத்து இருப்பில் விரல் நீட்டி இருப்பது போல் அரபி எழுத்தின் மூலம் வரைந்து வைத்தார். அதுபோல, கவ்பத்துல்லா - மதினா முனவ்வரா, பைத்துல் முகத்திஸ் பள்ளிவாசல்களை பல விதமான அரபி எழுத்து மூலம் பிஸ்மில்லாஹ் முழுவதையும் 786 சித்திர ஓவியமாக காலிகிராபிக் ஓவியமாகத் தந்தார். இதில், அத்தஹையாத்து காலி கிராபிக் ஓவியத்தை நான் சென்னையில் இருந்தபோது, துணியில் பேப்ரிக் கலரில் வரைந்து, இலங்கை மலேசியா வியாபாரிகளுக்கு 1985 முதல் 2006 வரை விற்பனை செய்து ஸைடு வருமானம் பெற்று வந்தேன். காயல் நகரில் பதுரு ஜமான் கே.டி.எம். தெரு இளைஞர் (இப்போது கத்தர் நாட்டில் வேலை பார்ப்பதாக கூறப்படுகிறது.) அவர் தாயார் சுவரில் அத்தஹையாத்து ஓவியம் வரைந்துள்ளார்.
எனது மாணவ-மாணவியர்கள் 2004 முதல் வரைந்த ஓவியங்கள் எனது வீட்டு மாடி சுவரில் இன்றும் காட்சிப் பொருட்களாக இருப்பதை பலர் பார்த்துப் போகிறார்கள். 1985இல் உலக நாட்டு வண்ண தேசிய கொடிகள் பல, 2001இல் வரைந்த ஒன்பது ரத்தினங்கள் கிடைக்குமு் நாடுகள், மேலும் 59 முஸ்லிம் நாடுகளின் வண்ணக் கொடிகள் வரைந்த இரண்டு திரைச் சீலையில் எனது வீட்டு வாசலில் தொங்கவிட்டு உள்ளதை இன்றும் காணலாம்.
எனது உயிர்த்தோழன் சீனா பீனா அஹமது (அலியார் தெரு) வீட்டு வரவேற்ப்பு பெண்கள் ஹால் நடுவாசல் மேல் சுவரில் 30 வருடங்களுக்கு முன் நான் வரைந்த மதீனா முனவ்வரா கட்டிட சித்திரம் இன்றும் உள்ளதாம்.
முஸ்லிம் ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் சிறந்த ஓவியராக இந்திய அரசு தேர்வு செய்து கவுரவித்தது. இவர் மகாபாரத காவியத்திலுள்ள யுத்தத்தை வரைந்து புகழ்பெற்றார். (மார்க்க அடிப்படையில் மனித, மிருக, பறவை உருவப்படம் வரைவது ஹராம் - குற்றம்.) அவர் வரைந்ததால் முஸ்லிம்கள் அவரை வெறுத்தனர். காலம் சென்றது. இந்து கடவுளான லட்சுமி தேவியை நிர்வாணமாக ஆடையின்றி வரைந்து சர்ச்சைக்குள் ஆளாகினார். (இது தேவையற்ற ஓவியம்.) அரசு கொடுத்த ஓவிய விருதை அவரிடமிருந்து வாபஸ் பெற்றது. இந்து மக்களின் வெறுப்பைப் பெற்றார். அத்துமீறிய செயலால் வீழ்ச்சி கண்டு மறைந்தார்.
10ஆம் ஆண்டு ஓவியப்பள்ளி துவக்கம்
என்னிடம் ஒன்பது ஆண்டுகளில் காயல் நகரின் அனைத்து பள்ளி மாணவ-மாணவியர்கள் 400 பேர் ஓவியம் கற்று பள்ளி பாடங்களில் வரும் படங்களை வரைந்து மார்க்குகளை அள்ளுவதாகவும், பள்ளியிலும் வெளி இடங்களிலும் நடக்கும் ஓவியப் போட்டிகளில் கலந்து முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளை வெல்லுவதாகவும் அவர்களின் பெற்றோர்கள் தரும் நன்றிக் கடிதம் கூறுகிறது. டாக்டர் படிப்பு, எஞ்சினியர் படிப்பு, பி.ஆர்க் கட்டிட வரைகலை படிப்புக்கு எனது ஓவியம் கைகொடுக்கும்.
2015 ஏப்ரல் 29இல் 229 பஞ்சாயத் ரோடு அல்மர்ஹமா வீட்டு தோட்டத்தில் துவங்கவுள்ளது. ஏப்ரல் 30இல் ரஹ்மானிய்யா பள்ளியிலும் 10ஆம் ஆண்டு ஓவியப் பயிற்சி துவங்கவுள்ளது இன்ஷாஅல்லாஹ். காயல் நகரில் விண்ணப்ப பாரம் விளக்கப் பிரசுரத்தை (1) ஸ்கூல் வியூ ஸ்டோர், (2) நைஸ்லுக் ஆர்ட் & கிரஸ்ட், (3) SMS ஷாப்பிங் சென்டர், (4) சதுக்கைத் தெரு அல்அமீன் மினி மார்க்கெட், (5) கே.டி.எம். தெரு A.L.S. மாமா வீடு இவைகளில் பெறலாம்.
தொடர்புக்கு: ஓவியர் ALS மாமா / 04639 - 280 558. (உங்கள் வீட்டுப் பெண்கள் மூலம் விபரம் பெறவும்.) |