| |
ஆக்கம் எண் (ID #) 184 | | | வியாழன், டிசம்பர் 10, 2015 | | வேதனையின் விளிம்பில்… (தொடர் 1): “வெளியே செல்லும் பெண் குழந்தைகள்!” சமூக பார்வையாளர்
|
| இந்த பக்கம் 3271 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய | |
அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
கலாச்சார சீரழிவுக்கு வித்திடுகின்ற, மார்க்கத்தை விட்டு விலகுகின்ற, குடும்பங்களை சீர்குலையச் செய்கின்ற பல விசயங்களை - பார்த்ததையும், கேட்டதையும், ஆராய்ந்தபோது – மனம் வேதனையின் உச்சிக்கே சென்றுவிட்டது. அதை “வேதனையின் விளிம்பில்” என்ற தொடரில் சில தலைப்புகளில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
என்னுடைய கட்டுரையில் எழுத்துநடை இருக்காது , சொற்பிழைகள் இருக்கக்கூடும் - அவைகளை பெரிதுப்படுத்தாமல் கருத்துகளை மட்டும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். - வஸ்ஸலாம். |
இன்றைய காலங்களில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதில் மெத்தனப் போக்கு மிக அதிகமாக உள்ளது – அதுவும் பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகள் போன்று நினைக்க தொடங்கிவிட்டனர். வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை வெளியே தனியே அனுப்புகிறார்கள் – கல்வி கற்பதற்காக என்றாலும்கூட துணையின்றி தனியே அனுப்புவது கூடாது. அவர்கள் உடலை மறைத்து பர்தா போட்டிருந்தாலும் முகத்தை அரைகுறையாக மூடி, தன் அழகை வெளிப்படுத்தி செல்லும்போது அதை காணுகின்ற என் போன்றோருக்கு மனம் வேதனை அடைகிறது.
வாலிபத்தை கடந்துதான் வயோதிகம் அடைந்திருக்கிறோம் – வாலிபத்தில் நண்பர்களுக்கு , அன்பர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் நம் மனக்கண் முன் தோன்றுகிறது. ஏதோ நம் பெற்றோர்கள் சீதேவிகளாக இருந்து நம்மை ஒழுக்கத்தோடு வளர்த்ததால் நம்மில் சிலர் பாதை மாறவோ, பண்புகள் கெடவோ இல்லை!! அல்லாஹுவுக்கே எல்லாப்புகழும்.
வெளியே துணையின்றி தனியாக செல்கின்ற பெண் குழந்தைகள் வயதுக்கு வராத சிறு குழந்தைகளாகக்கூட இருக்கலாம் அல்லது வயதுக்கு வந்த (குமரிப்) பெண்ணாகவும் இருக்கலாம், ஆனால் தோற்றம் என்னவோ குமரிப்பெண்ணாகவே! தோன்றுகிறது. அந்த குழந்தை வேண்டுமென்றே முகத்தை அரை குறையாக மறைக்கவில்லை, எதேச்சையாக , அறியாமல் செல்கிறது. ஆனால் பார்க்கின்றவர்களின் மனதில் ஷைத்தான் குடிகொள்கிறான்.
கவர்ச்சியாக அதிலும் அழகு செளந்தரியமான பெண் குழந்தைகள் வெளியே செல்லும்போது சிலர் அந்த குழந்தைகளை வைத்தக் கண் வாங்காமல் பார்க்கிறார்கள் அல்லது திரும்பத் திரும்ப பார்க்கிறார்கள் – இந்த காட்சிகளை பல முறை பார்த்து இருக்கிறேன் – மனம் வேதனை அடைகிறது.
அவர்கள் பெண்குழந்தைகளை பார்க்கும் பார்வை உண்மையாகவே என்னை போன்று வேதனையான பார்வையா? அல்லது ஷைத்தான் குடிகொண்ட பார்வையா? அல்லாஹ்வே! அறிவான்.
பெற்றோர்கள் இதை அவசியம் கவனத்தில் எடுத்து தங்கள் பெண் குழந்தைகளை அவர்கள் வயதுக்கு வரவில்லை என்றாலும்கூட, வயதுக்கு வந்த தோற்றத்தில் இருந்தால் – கண்டிப்பாக தெரு வழியாக அனுப்பாமல் முடுக்குகள் வழியாக பள்ளிக்கூடத்திற்கும் , டியூஷன் படிக்கவும் அனுப்புங்கள். மிக, மிக முக்கியம் கண்டிப்பாக அவர்களை தனியாக அனுப்பாதீர்கள் – உற்ற துணையுடனே அனுப்புங்கள்.
நம் ஊரைப் பொருத்தவரை இந்த கோடியிலிருந்து அந்த கோடிவரை தெருக்களை அதிகம் பயன்படுத்தாமல் முடுக்குகள் வழியாகவே பெண்கள் செல்லலாம் – இது அல்லாஹ்! நம் முன்னோர்கள் மூலமாக நமக்கு தந்த நன்கொடை (GIFT) எனவே பெண்கள் முடுக்குகளை தவிர்க்காமல் அவைகளை பயன்படுத்துவதே! நம் பெண்களுக்கு பாதுகாப்பு – பெற்றோர்களுக்கும் நிம்மதி.
ஆண் குழந்தையாயினும் பெண் குழந்தையாயினும் எல்லோரும் நல்லவர்களே! சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவர்களை கெடுக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே அவர்கள் வழி தவறி, பாதை மாறிப்போகிறார்கள். ஆகவே அவர்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளை உருவாக்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முழுக்க,முழுக்க பெற்றோர்களிடமே உள்ளது. ஹராமைத் தவிர்த்து, ஹலாலைப் பேணி நடக்கும் எந்த பெற்றோரும் தன் பெண் குழந்தைகளை தனியாக வெளியே அனுப்ப மாட்டார்கள்.
பொதுவாக நம் ஊர் மக்களிடம் ஓர் எண்ணம் உண்டு! ” நம் பிள்ளைகள் அப்படி இல்லையே! நாம் அப்படி வளர்க்கவில்லையே!! என்ற நல்ல எண்ணம்”. இந்த எண்ணம் முழுக்க , முழுக்க உண்மைதான் – ஆனால் இந்த காலத்திற்கு அந்த எண்ணம் பொருந்தாது.
முந்திய காலத்தில் ஏறத்தாள 40 ஆண்டுகளுக்கு முன்புவரை நம் முன்னோர்கள் கட்டுப்பாட்டுடன், பண்புடன் நம்மை வளர்த்த வளர்ப்பு, நாம் உண்ட ஹலாலான உணவு, ஊர் பெரியவர்கள், ஆலிம்களுக்கு மக்கள் கொடுத்த மதிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக மார்க்கத்தின் மீதும் மார்க்கக் கடமைகள் மீதும் மக்களுக்கு இருந்த பயபக்தி இவைகளே! நமக்கு நமது மக்கள் மீது அச்சமற்ற நம்பிக்கையைத் தந்தது.
ஆனால் இன்று அவை அத்தனையும் பெரும்பாலும் தலைகீழாக உள்ளது ஆகவே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்தி, அவர்களை பாதுகாப்புடன் ஒழுக்கமாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கட்டாய கடமையாகும்.
அதல்லாது எங்கள் தாய்மார்கள் எங்களை இப்படித்தான் வளர்த்தார்கள், நாங்கள் நன்றாகத்தான் வளர்ந்திருக்கிறோம் – எங்கள் பிள்ளைகளையும் அந்த முறையிலேயே ஃப்ரீயாக வளர்க்கிறோம் என்று – இந்த தலைமுறையிலே உள்ள தாய்மார்கள் சொல்வார்களேயானால் அது பெரும் தவறு இல்லை…இல்லை… அது பெரும் தப்பு.
காலங்கள் செல்லச்செல்ல ஒவ்வொரு தலைமுறையிலும் கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டு கேடுகளை விளைவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் நிறுத்தி, மார்க்கம் காட்டிய வழியில் குழந்தைகளை வளர்ப்பதே! சிறந்த வளர்ப்பாகும்.
மார்க்கக் கட்டளைகளை பேணி நடந்தோமானால் உங்கள் குழந்தைகளின் மனம் பேதலிக்காது! உங்கள் மனம் சஞ்சலப்படாது!! குடும்ப மானமும் காக்கப்படும்!!!. – கெட்டப்பார்வை பார்க்க காட்சிகள் இல்லாததால் ஆண்களின் குற்றமும் குறையும்.
மேலும் சில தாய்மார்கள் தம் பெண் பிள்ளைகளை டியூஷன் படிப்பதற்காக தோழிமார்களுடன் அனுப்பி வைக்கிறார்கள் – வயதிற்கு வந்த பிள்ளையை பெரியவர்கள் துணையில்லாமல் ஏன் அனுப்புகிறீர்கள் என்று கேட்டால் - பெரிய பிள்ளை என்றாலும் தனியாகவா! போகிறாள்? நான்கு பேர் சேர்ந்துதானே! போகிறார்கள், அதனால் பயமேதுமில்லை என்ற பதில்தான் வருகிறது.
பெரியவர்கள் துணையில்லாமல் அனுப்புவது கூடாது – இப்படி துணையின்றி அனுப்புவதுதான் “ பிள்ளைகள் தன் இஷ்டப்படி வளர்வதின் ஆரம்ப நிலை” இதிலிருந்துதான் பிள்ளைகள் படிப்படியாக கெட்டுக் குட்டிச்சுவராய் போவதற்கு வழிப்பிறக்கும்.
ஓர் ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது , ஊரிலே மிக அதிகமாக மழை பெய்து கொண்டிருந்த காலம்… மழை எப்போது வரும் என்பதை கணிக்க முடியாத சூழல், திடீரென்று மேகமூட்டம் ஏற்பட்டு, மழை பெரிய அளவில் வந்து கொண்டிருக்கிறது ஒருநாள் மாலை சுமார் ஐந்தரை மணியளவில் பெரும் மழை பெய்துகொண்டிருந்த போது உடல் முழுக்க நனைந்த நிலையில் 4 பெண் குழந்தைகள் (குமரிப்பிள்ளைகள்) கடற்கரையிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பர்தாவை உயரே தூக்கிப் பிடித்தவாறு நடந்து வந்ததால் அவர்கள் அணிந்திருந்த யூனிஃபார்ம் சொல்லிற்று அவர்கள் எல்லோரும் பள்ளிக்கூட மாணவிகள் என்று.
இந்த நேரத்தில் இவர்கள் ஏன் கடற்கரைக்கு சென்றார்கள்? பள்ளிக்கூடம் விட்டால் நேராக வீட்டிற்கு போக வேண்டியதுதானே! என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியபோது, ” எப்போதாவது ஒரு நாள் டியூஷனுக்கு போகாமல் தோழிமார்களுடன் கடற்கரைக்கு சென்று (அரட்டையடித்து) விட்டு, இருட்டியதும் வீட்டிற்கு செல்வது “வழக்கமாம்”. ஆனால் இன்று எதிர்பாராமல் மழை வந்ததால் அதுவும் பயங்கரமான மழை என்பதால் இருட்டுவதற்கு முன்பே வீட்டிற்கு செல்கிறார்கள் ” என்ற பதில் கிடைத்தது.
இந்த ”வழக்கமும் – பழக்கமும்” தொடர்ந்தால் என்ன நடக்கும்? என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்! டியூஷனுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் துணையுடன் அனுப்பினால் இந்த பழக்கமெல்லாம் ஏற்படாது - பெண்பிள்ளகளை வெளியில் அனுப்பும்போது எப்போதும் உற்றத் துணையுடன் அனுப்பினால்தான் மானம் மரியாதை நிலைக்கும்.
மானத்தையும், மரியாதையையும் விரும்புகின்ற பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை தனியாக அனுப்ப மாட்டார்கள் – அப்படி தனியாக அனுப்பினால் அவர்களுக்கு மானம் மரியாதை அவசியம் இல்லை! என்றே பொருள்படும்.
ஆகவே, பெண் குழந்தைகளை பேணிப்பாதுகாத்து வாருங்கள், அவர்களை தனியாக வெளியில் அனுப்புவதும், அவர்களை அவர்கள் இஷ்டப்படி வளரவிடுவதும் உங்களையும், அவர்களையும் நரகத்திற்கு இழுத்துக் கொண்டுப்போக வழி வகுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
சில வீடுகளில் வயதுக்கு வந்த பெண் குழந்தை பள்ளிக்கூடத்திற்கோ! அல்லது டியூஷனுக்கோ சென்று இருந்தால் அவர்களின் தாய்மார்கள் சொல்வார்கள் “ என் மகள் வீடு வந்து சேரும்வரை வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டிருக்கிறேன் என்று, அந்த தாய்மார்கள் வயிற்றில் நெருப்பை கட்டியிருப்பதாக உணர்கிறார்களோ! இல்லையோ!. பெண் குழந்தைகளை வீட்டுக்கு வெளியே தனியாக பார்க்கும்போது, என் வயிற்றில் நெருப்பை உணர்கிறேன்.
இரவு ஒன்பதரை மணிக்குமேல் குமரிப்பெண்கள் தனியாக ரோட்டில் நடந்து செல்வதை காணலாம் – அவர்கள் டியூஷனுக்கு போய்விட்டு வீடு திரும்புகிறார்கள் என்பதை அறியமுடிகிறது. இரண்டு, மூன்று தெருக்களுக்கு அப்பால் சென்று படித்துவிட்டு தனியாக பெண் குழந்தைகள் வருவது அதுவும் இரவு நேரத்தில் வருவது நல்லதா? என்பதை பெரியவர்கள் சிந்திக்க வேண்டும்.
அதிகாலையிலும் குமரிப்பெண்கள் தனியாக செல்வதை மிகுதமாக காணமுடிகிறது – இவைகள் எல்லாம் அவர்களின் பிற்கால வாழ்க்கையை பாதிக்கக் கூடிய செயல்கள் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து திருந்த வேண்டும்.
இந்த கட்டுரையை மிகுந்த வேதனையுடனே எழுதுகிறேன் – எழுதாமல் இருக்க முடியாது, அதே நேரத்தில் பார்த்ததையும், செவிக்கு எட்டியதையும் திறந்து எழுத முடியாத சூழல்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வெறுமனே கல்வியை கற்பிக்கச் செய்வது பெரிதல்ல – தரமான கல்வியை, ஒழுக்கத்தை , பண்பாட்டை கற்றுக்கொடுக்க வேண்டும் – அதுதான் அவர்களது பிற்கால வாழ்க்கையை செம்மைப்படுத்தும், சீராக்கும்.
ஆகவே, மக்களே! பெண் குழந்தைகளை அதுவும் வயதுக்கு வந்த அல்லது வயதுக்கு வருகின்ற தோற்றத்தில் உள்ள பெண் குழந்தைகளை தயவு செய்து உற்ற துணையில்லாமல் வீட்டுக்கு வெளியே அனுப்ப வேண்டாம் உலகக் கல்விக்கு என்றல்ல மார்க்கக் கல்விக்கு என்றாலும் சரியே!.
வஸ்ஸலாம்
|
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|