எனது ஒன்பது வயது மகளுக்கு எப்பொழுதும் கையில் ஏதாவது புத்தகம் வேண்டும். பாடப்புத்தகங்களைத் தவிர மற்ற எல்லா புத்தகங்களும் அவளுக்குப் பிடிக்கும். அவளுக்கான உலகம் புத்தகங்களால் சூழ்ந்தது என்பதை அவளது ஆறாவது வயதிலிருந்தே உணர்ந்த நாங்கள், துவக்கத்தில் - அவளது ஆங்கில மொழியறிவுத் திறன் வளர வேண்டும் என்பதற்காக அவள் வயதிற்கேற்ற கதைப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள்... இஸ்லாமிய நூல்கள் என வாங்கிக்கொடுக்கத் துவங்கினோம். அவள் பிடிக்குள் புத்தகங்கள் இருந்த நிலை மாறி, இன்று புத்தகங்களின் பிடிக்குள் அவள் என்ற நிலையாகிவிட்டது.
வாசிப்பு... இன்றைய Genz தலைமுறையால் மறக்கப்பட்ட ஒரு விஷயம். அந்த ஒன்றுக்காகவே அவளை வாசிப்புத் தளத்தில் வளர விட்டோம். ஆனால் இப்போதோ, அவளும் - அவள் புத்தகங்களுமாய் ஓர் உலகத்திற்குள் ஒன்றிவிட்டாள். கவனிக்கப்பட வேண்டிய விஷயமாய் அது இன்று எங்கள் கண்களை உறுத்துகிறது.
அது சரி! அது என்ன Genz தலைமுறை? 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்களே Genz தலைமுறையினராம். அதற்கு முந்தைய தலைமுறை (1975 - 1995) Geny தலைமுறையினராம். அதற்கும் முன்னாள் உள்ளவர்கள் Genx தலைமுறையினர். (நீங்கள் இவற்றில் எதில் சேர்த்தி???)
இந்த Genz தலைமுறைப் பிள்ளைகள் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கும் (multi tasking) திறன் கொண்டவர்களாம். அதாவது முன்பெல்லாம் ‘தசாவதாணி... சதாவதாணி’ என்று சொல்வார்களே அதுபோல இவர்களை ‘பாஞ்சாவதாணி’ (‘பாஞ்ச்’ என்றால் இந்தியில் ஐந்து என்றுதானே பொருள்?)
இவர்களின் இயல்புகளாக என்னென்னவோ பாஸிட்டிவ் பாய்ண்ட்டுகளைச் சொல்கிறார்கள். கையில் ஃபோனுடன் வாட்ஸ்அப்பில் சேட் செய்துகொண்டே எப்படி பாடத்தையும் படிக்கிறார்கள்? ஆச்சரியமாக இருக்கிறதே? நானெல்லாம் ப்ளஸ் 2 படித்தபோது ஒரே பாடத்தை மாய்ந்து மாய்ந்து நூறு முறைகளாவது படித்துவிட்டு, ரிவிஷன் எழுதி எழுதிப் பார்த்தும் திருப்தியடையாமல், “பப்ளிக் எக்ஸாம்ல ஒழுங்கா மார்க் ஸ்கோர் பண்ணுவோமா...?” என்று டென்ஷனாக இருந்தவள். ஆனால் இந்தப் பிள்ளைங்களோ... காலையில் தேர்வு என்றால் முந்திய இரவில்தான் புத்தகத்தையே தொடுகின்றனர்! இந்த அலட்சியம் எங்கிருந்து வந்தது?
என் நான்கு வயது மகனைப் பார்த்து, “எப்பப் பார்த்தாலும் என்ன கம்ப்யூட்டர்...?” என சப்தமிடும் என் உம்மாவை, “ம்..மா... ஒனக்கு ஒன்னும் தெரியாது! கொஞ்சம் பேசாம இருக்கியா?” என்று அதட்டுகிறான். சென்ற ஆண்டு வரை பேசத் தெரியவில்லையே என்று கவலைப்பட்ட எங்களுக்கு, இன்று இவன் பேசுவதைப் பார்த்து சிரிப்பதா, கவலைப்படுவதா என்று தெரியவில்லை.
இரவெல்லாம் விழித்திருந்து, ப்ளைன் டீ போட்டு, தூக்கம் தொலைத்துப் படித்த நம் காலங்கள் எங்கே...? இப்போதுள்ள பிள்ளைகளோ, நாளைக்கு பப்ளிக் எக்ஸாம் என்றால் கூட, அதையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று எடுத்துக்கொள்ளும் கூ.......ல் தலைமுறையினர். எதக்கும் பதற்றப்படுவது Genzஇன் குணமல்லவாம்! ஆமாம்! பாய்ஞ்சு... பாய்ஞ்சு படிச்சிட்டு... காலையில எக்ஸாம் போற அவசரத்துலயும் மாமாக்கு... மாமிக்கு என்று உறவினர்களுக்கெல்லாம் ஃபோன் செய்து (அப்போ லேண்ட்லைன் ஃபோன் மட்டும்தான்!), “நான் பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறேன்... துஆ செய்ங்க மாமி...” என்று சொன்னது ஒரு காலம்... இன்றோ, எது எதுக்கெல்லாமோ மொபைல் ஃபோனைப் பயன்படுத்தும் நம் பிள்ளைகளிடம், “உறவினர்களுக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லிட்டு போங்க” என்று சொன்னால், கரண்டியும் கையுமா நிக்கிற நம்மள ஒரு காமெடி பீஸாகவே பார்க்கிறாங்க! அவங்க ஏதாவது நல்ல மார்க் வாங்கி அதை நாம பெருமையா வெளியில சொன்னோம்ன்னு தெரிஞ்சா அவ்வளவுதான்! சீறிக்கிட்டுப் பாய்ஞ்சு அடிக்கிற குக்கர் விசிலைக் கரண்டியால் தலைல தட்டி அடக்குற மாதிரி “ம்...ம்...மா......”ன்னு ஒரே வார்த்தையில நம்மள அடக்கி வச்சிடறாங்க! ஆனா, எல்லா உம்மாக்களுக்குமே - ஈன்ற பொழுதின் பெரிதுவக்க ஆசை இருக்காதா என்ன? அதற்காகத்தானே இந்தப் பன்னிரண்டு வருஷங்களும் பாடாய்ப்படுத்திப் படிக்க வைக்கிறோம்...?
Genz தலைமுறை டெக்னாலஜியில் எங்கேயோ போயிருக்காம்... மறுக்கவில்லை! எங்கோ அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் அரங்கேறும் கலாச்சார மாற்றங்கள் இங்கிருக்கும் ஆண்டிப்பட்டிகளின் உள்ளங்கைகளுக்குள் வந்து ஒரே நிமிடத்தில் தஞ்சம் புகுந்து விடுகிறது. ஒன்றை வினாடியில் உலகமே என் கைக்குள் என தானும் தன் மொபைலுமாய்... Me and me only என்ற செல்ஃபி தலைமுறையும் இந்த Genzஇன் அடையாளம்.
ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தபோது, என் தோழியின் மகள், கூட்டம் நெட்டித் தள்ளிக்கொண்டிருந்த ஏணிப்படியில் நின்றுகொண்டு, தன் தோழியுடன் செல்ஃபி க்ளிக்கிக் கொண்டிருந்தாள். சுற்றியிருக்கும் கூட்டம், அவர்கள் படமெடுத்து முடிக்கும் வரை நெரிசலில் காத்திருக்கும் கூட்டம் என எதையும் அவர்கள் பொருட்படுத்தவேயில்லை. நான்... நான் மட்டுமே என்ற ஒரு கூண்டுக்குள்தான் மகிழ்ச்சியோ, துக்கமோ என எல்லாமுமான அவர்களின் உலகம் அடங்கி விடுகிறது.
இந்தத் தலைமுறை பிள்ளைகளுக்கு உறவுமுறைகள் பற்றிய புரிதலும் இல்லை; புரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் இல்லை. தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ... வீட்டிற்கு வரும் அனைத்து ஆண்களுமே அவர்களுக்கு ‘அங்கிள்’கள்தான்! பெண்கள் எல்லாம் ‘ஆண்ட்டி’கள்தான்! எனது முப்பதுகளில், நான் சென்னைக்கு வந்த புதிதில், பக்கத்து ப்ளாட்டிலிருந்த இருபத்து இரண்டு வயது பெண் என்னைப் பார்த்து ‘ஆண்ட்டி, ஆண்ட்டி’ என்று என்னை அழைத்ததும், பூமியே பிளந்து என்னை உள்வாங்கிக்கொண்டது போன்ற அதிர்ச்சியைச் சந்தித்தேன். அது ஒரு காலம்! இன்றோ அது பழகிப்போய்விட்டது.
நமது இளமைக் காலத்தில், நம் உறவுமுறைகளில் இல்லாதவர்களைக் கூட, ‘மாமி’, ‘சாச்சி’, ‘பெரிமா’ என வாயார உறவுமுறை சொல்லியழைத்து நெருக்கமாக்கிக் கொண்டது நம் நினைவூஞ்சல்களில் அழியாத காவியங்கள்... ஆனால் இன்றோ... உறவினர்களே வந்தால் கூட, ஆமை ஓட்டுக்குள் தலையைப் புகுத்திக்கொள்வது போல அறைக்குள்ளேயே தங்களைப் புதைத்துக்கொள்கிறார்கள்.
தொலைவிலிருக்கும் உறவுகளை அருகில் இணைப்பதாகத்தான் தொலைபேசி நமக்கு அறிமுகமானது. தொலைபேசி வழி சப்தங்களின் ஊடாக உறவுகளின் உணர்வுகளை உணர்ந்தோம். இன்றும்... குடும்ப பாரங்களை முதுகில் சுமந்துகொண்டு, பாலைவனப் பெருவெளியில் பாடுபடச் சென்றிருக்கும் பலரது வாழ்க்கை தொலைபேசியிலேயேதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘தொலைபேசி’ என்று ‘அலைபேசி’யானதோ அன்றே - அருகிலிருக்கும் உறவுகளெல்லாம் ஆளுக்கொரு திசையாய் ஃபோனில் மூழ்கிக்கொண்டு தொலைவில் சென்றுவிட்டனர்.
“இன்றைக்கு வீட்டில் பூரி... கிழங்கு... ம்... யம்மி!” என்று ஸ்டேட்டஸ் தட்டும் Genz தலைமுறையினர், அந்த பூரியையும், கிழங்கையும் கால் கடுக்க நின்று செய்த ‘மம்மி’யின் கரம் பற்றி ‘நன்றி’ ஒன்று ஒரு வார்த்தை...??? “நல்லாயிருக்குமா...” என்று அங்கீகரிப்பதெல்லாம் கொஞ்சங்கொஞ்சமாய்த் தொலைந்து வரும் நாகரிகங்கள்... என்று டெக்னாலஜியின் பிடிக்குள் சிக்கிய ஓர் உலகத்திற்குள், திருவிழாவில் தொலைந்த குழந்தை போல என்ன செய்வதென்று தெரியாமல் நாம் தேங்கி நிற்கின்றோம். ஈர்க்கும் இரு எதிர்த்துருவங்களாய்ப் பிணைந்திருக்கும் அவர்களையும் - டெக்னாலஜியையும் பிரிப்பதற்கு என்ன வழியென்று நாம் ஆராய வேண்டியதில்லை.
வெள்ளமாய் ஓடிவரும் மிகை நீரைப் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தோடச் செய்யும் வாய்க்காலை வெட்டுவது போல, தொழில்நுட்பத்துடனான அவர்களது உறவு போகும் பாதையை வேறு வழியில் திசை திருப்பிட வேண்டும். இந்த டிஜிட்டல் யுகம் இஸ்லாமை மூலை முடுக்குகளிலெல்லாம் கொண்டு சேர்க்கும் வேலையை மிகச் சிறப்பாய்ச் செய்து வருகிறது. பர்மா முஸ்லிம்களின் துயரத்தைப் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது... சிரியாவின் ஐலன் குர்த்தியை ஐ.நா. வரை அடையாளம் காட்டியது... ஃபலஸ்தீனத்தின் பதற்றச் சூழலை நமது ஒவ்வொரு துஆவிலும் இடம்பெறச் செய்தது... மாட்டுக்கறி அரசியலைக் கூட பாமரன் வரை கொண்டு சேர்த்தது... இப்படி அனைத்துமே இத்தொழில்நுட்பத்தால் சாத்தியமெனில், இதன் துணைகொண்டு மவுனப் புரட்சிகளை வெடிக்கச் செய்திட - அதற்கான செயலிகளையும். செயல்திட்டங்களையும் உருவாக்கும் நுண்ணறிவும், செயல்திறனும் கொண்டவர்களாய் அவர்களை உருவாக்கிக் கையாளுதல் நம் கரங்களில்தான் உள்ளது.
அழைப்புப் பணிகள், ஆன்மிகப் பணிகள் ஆகியனவற்றை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டுமெனில், இன்றைய இளைய தலைமுறையினரின் Genz வேகம் நமக்கு அவசியம். சமூகப் பங்களிப்புகளில் தடைகளைத் தாண்டி இலக்கை அடைய, அவர்களின் ‘ஜஸ்ட் லைக் தட்’, ‘கூ.......ல்’ மனப்பான்மை மிகவும் அவசியம்.
“நான்... நான் மட்டுமே!” எனும் கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் அவர்களை, “நானும், எனது சமூகமும்” என்ற கோட்டின் வெளிநின்று, உலகைக் காட்டும் வழிகாட்டிகளாய் நாம் களமிறங்குவோம்! அவர்களது தளங்களில் அவர்களோடு கைகோர்த்து இயன்ற வரை நாமும் சளைக்காது ஓடுவோம்!! |