கட்டி சுமார் 20 வருடங்களேயான - நான் குடியிருக்கும் வீட்டில் கான்க்ரீட் பழுதாகி, சிறுமழைக்கும் அருவி போல பெரிதாக ஒழுகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, நமதூரில் புதிதாக - ஒப்பந்த அடிப்படையில் கட்டிடப் பணிகளைச் செய்து தரும் ஒரு நிறுவனத்தாரிடம் பொறுப்பை ஒப்படைத்ததால், இருந்து கண்காணிக்க எந்த அவசியமும் இல்லாத அளவில் பணிகள் மிக நேர்மையாக நடைபெற்று வருகின்றன. அதனால், என் வழமையான பணிகளை எந்தத் தொந்தரவுமின்றி செய்து வருகிறேன். கட்டிடப் பணிகள் நிறைவடையும் வரை, என் மனைவி வீட்டிற்கு எதிரிலுள்ள எனது மாமியார் இல்லத்தில் இருந்து வந்தோம். ஏற்கனவே சிலர் இருந்த அவ்வீட்டில் - நான், என் மனைவி, 4 பெண் மக்களும் இணைந்துகொண்டதால், இட நெருக்கடி ஏற்படவே, மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரிக்குச் சொந்தமான - அடுத்த வீட்டில் நான் மட்டும் இருந்து எனது செய்திப் பணிகளைக் கவனித்து வந்தேன்.
இவ்வாறிருக்க, 18.12.2015. வெள்ளிக்கிழமையன்று இரவு துவங்கி காலை 9 மணி வரை காயல்பட்டினத்தில் கனமழை. இரவில் மழை பெய்த நிலையைப் பார்த்த எனக்கு, காலையில் நடக்கப் போகும் நிகழ்வுகள் மனக்கண் முன் வந்து சென்றன. மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து அன்று காலையில் பெறப்பட்ட தகவல் படி, காயல்பட்டினத்தில்தான் மாவட்டத்திலேயே அதிக மழை (14 சென்டி மீட்டர்) என்று இருந்தது.
[படங்கள்: கோப்பு]
ஊரெல்லாம் வெள்ளக்காடு. அழையாத விருந்தாளியாக மழை நீர் தன் மாமியார் வீட்டிற்குள் நுழைவது போல என் மாமியார் வீட்டிற்குள்ளும் நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தது “பழைய வழமை”ப்படி!
“வாப்பா! இன்னும் ஒரு இஞ்ச்தான் இருக்கு... தண்ணி உள்ள வந்துடும் போல!”
என்றனர் என் மூத்த மகள் நுஸுலாவும், அடுத்தவளான மர்ஜூனாவும். அவர்கள் சொன்னது போலவே உள்ளே நுழைந்தது மழை. கழிப்பறையை நிறைத்த மழை, வெளியே செல்வதற்கான நடைபாதையைத் தாண்டி, திண்ணையைத் தாண்டி, படுக்கையறையைத் தாண்டி, சாலைப் பக்கமுள்ள வரவேற்பரைக்குள்ளும் குடியேறியது. மழை நீருடன் சில குப்பை கூளங்களும், கவிழ்ந்த நிலையில் கரப்பான் பூச்சி ஒன்றும், அதையொட்டி உருண்டையாக ஒரு பொருளும் (விளக்கிச் சொன்னால் வாசகர் கருத்துப் பகுதி நாறும்!) திண்ணையில் வலம் வந்தன. வீட்டிற்குள்ளிருந்த ஒரு பனை ஓலைப் பொட்டியைக் கொண்டு அவற்றை நான் அகற்றி துப்புரவு செய்து, தரையிலிருந்த வாஷிங் மெஷின் போன்ற மின் பயன்பாட்டுக் கருவிகளையெல்லாம் வீட்டார் துணையுடன் கட்டிலில் ஏற்றி வைத்தேன்.
பின்னர், என் இடுப்பில் எப்போதும் குடியிருக்கும் கேமராவை என்னையுமறியாமல் என் கைகள் வருடின.
“ஆரம்பிச்சாச்சா...?” என்றாள் என் மனைவி.
திருமணமான புதிதில், “என்னங்க! இந்த நேரத்துல ஃபோட்டோ எடுத்துக்கிட்டு...?” என்று - பாதிப்பின் மிகுதியால் வலிமையுடன் வந்த வாசகங்கள், ஆண்டுதோறும் பருவமழையின்போது வாடிக்கையாகிப் போன இக்காட்சிகளால், வலுவிழந்ததன் விளைவே இந்த ஒற்றைச் சொல் கேள்வி. ஒவ்வொன்றாகப் படமெடுத்து, கிடைத்த தகவல்களை ஒருங்கிணைத்து, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் காயல்பட்டினத்தின் நடப்புத் தகவலைப் படங்களுடன் அனுப்பி வைத்துவிட்டு, நான் பணிபுரியும் www.kayalpatnam.com தளத்திலும் அதைச் செய்தியாக வெளியிட்டேன்.
தேவையான பொருட்களை மட்டும் முதற்கட்டமாக எடுத்துக்கொண்டு, சாக்கடையில் அங்குமிங்கும் அலைந்தவாறு - அதுவரை நான் மட்டும் இருந்த என் மனைவியின் சகோதரி வீட்டில் அனைவரும் குடியேறினோம். (அவர்கள் ஊரிலில்லை!)
“லாத்தாமாரெல்லாம் மழத்தண்ணில விளையாடுறாங்களே... என்னெ மட்டும் விட மாட்டேங்குறீங்களே வாப்பா...?” என்றாள் என் மூன்றாவது மகள் சித்தி ருஸ்னா.
அவளது உலகம் அவ்வளவுதான். அவள் ஆசையைக் கெடுக்க மனமில்லாமல், “கொஞ்...ச நேரம் தண்ணியில அலைஞ்சிட்டு, வேகமா வந்துடனும் என்ன...?” என்ற எனது கேள்விக்கு தலையசைப்பை மட்டும் விடையாகத் தந்துவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.
“வாப்பிச்சா வீட்டுலயெல்லாம் என்ன வாப்பா செய்வாங்க இப்ப...?” அக்கறையுடன் கேட்டாள் 13 வயதை நெருங்கும் என் முதல் மகள் நுஸுலா.
ஆம்! மழைக்காலம் வந்து தண்ணீர் தேங்கத் துவங்கிவிட்டால் கொச்சியார் தெருவிலிருக்கும் என் தாயார் வீட்டிற்குப் படகில்தான் செல்ல வேண்டும். அவர்களோ, பத்து பதினைந்து நாட்களுக்குத் தேவையான மளிகைச் சாமான்களையெல்லாம் மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு, வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அடைகாக்கும் கோழி போல காலந்தள்ளுவர். அன்றாடம் சந்திக்கும் என் தாயை வாரத்திற்கொருமுறை சந்திப்பதே அரிதாகிவிடும் அப்போது. இருந்தாலும், என் தாய் வீட்டுத் தோட்டத்தில் மழைப் பருவத்தின் துவக்க நாட்களில் தேங்கும் சுத்தமான மழை நீரில் எனது மற்றும் என் சகோதரியரின் மக்களுடன் கூட்டமாகக் குளித்துக் கொண்டாடிவிடுவோம்.
தங்கையின் கணவரும் இக்குதூகலத்தில் இணைந்துகொள்வார். இரண்டே நாட்கள்தான் இக்கூத்து! அடுத்தடுத்த நாட்களில் தண்ணீர் கறுப்பாக மாறி, பச்சையாகப் பாசி படர்ந்து, கொசுக்களைத் தேக்கி, ஊரின் ஒட்டுமொத்த சாக்கடையினது மொத்தப் புகலிடமாகக் காட்சியளித்து, “இங்கேயா நேத்து குளிச்சோம்... உவ்வே...!” என்று சொல்ல வைக்கும்.
கடந்தாண்டு மழை நீர் தேங்கியபோது, “ஊர் வேலைக்கெல்லாம் பிஸியா அலையிறே... வீட்டுல இப்படி தண்ணீர் தேங்கிக் கிடக்குதே...? கொஞ்சமாவது கவலைப்பட்டியா...? யாரிடமாவது சொல்லி தண்ணிய வழிந்தோடச் செய்ய வேண்டியதுதானே...?” என்றார் என் தாய்.
“நாம விரும்பியோ, விரும்பாமலோ நமது வீடுகள் தாழ்வான பகுதிகளில் அமைஞ்சிடிச்சி... இயற்கைக்கு நம்ம கையில இருக்கிற பத்திரத்தையெல்லாம் வாசிக்கத் தெரியாது... அதன் ஆதாரங்கள் மட்டுமே அதுக்குத் தெரியும்! எனவே, மழைக்காலம் முடியும் வரை பொறுக்கத்தான் வேண்டும்!” என்றேன்.
”ஆமா... நீயா கஷ்டப்படுறே...?” என்று கேட்ட என் தாயிடம், என் மனைவி வீட்டு பழைய ‘உருண்டைக் கதை’களைச் சொல்லி என் அவதிகளைச் சொன்னதும் அவர்கள் கப்சிப்.
“இவன யாரு என்ன சொன்னாங்க...? இப்ப எதுக்கு இதையெல்லாம் சொல்லிக்கிட்டு...?” என்று கேட்கத் தோன்றலாம்.
பழைய சாலைகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய சாலைகள் அமைக்குமாறு 2008ஆம் ஆண்டில் - அப்போதைய நகர்மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜியாரிடம் கத்தர் காயல் நல மன்றம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 2009ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர்மழையால், சித்தன் தெருவிலுள்ள என் மனைவியின் சகோதரி, ஆஸாத் தெருவிலுள்ள எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் (13ஆவது வார்டின் தற்போதைய நகர்மன்ற உறுப்பினர்) அவர்களது மனைவியின் சகோதரி ஆகியோரின் இல்லங்களில் கழிவுநீர்த்தொட்டி நிறைந்து வீட்டிற்குள் ஓடியதைப் பார்த்து - அதைச் செய்தியாக்கினேன்.
[படங்கள்: கோப்பு]
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தம் சுயநலனுக்காக ‘சாலைக்கு மேல் சாலை’ என, அப்பகுதி பொதுமக்களுக்கு தேவையே இல்லாத நிலையிலும் புதிய சாலையை - பழைய சாலையைத் தோண்டியகற்றாமல் அமைத்து, ‘அவர்கள் மட்டும்’ பயனடைந்துகொள்வதால், பல லட்சங்கள் செலவழித்துக் கட்டப்பட்ட வீடுகளெல்லாம் பல ஆண்டு ஆயுட்காலத்தை இழந்து, பூமிக்குள் புதைகிறது என்ற உண்மையை உணர்ந்த அப்போது என் மனதை அது வெகுவாகப் பாதித்தது.
இதை நான் ஆதாரமில்லாமல் கூறவில்லை. முந்தைய நகர்மன்றப் பொறுப்புக் காலத்தின்போது, முத்துவாப்பா தைக்கா தெருவில், ஏற்கனவே அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சிறிதும் பழுதாகாமல் - அதே புதுப்பொலிவுடன் இருந்த நிலையிலும், அங்கு மீண்டும் சாலை அமைக்க பொருட்கள் இறக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த அப்பகுதி நகர்மன்ற உறுப்பினரிடம்,
“ஏன் காக்கா...? ரோடு நல்லாத்தானே இருக்கு? எதுக்கு புதுசா திரும்ப...?” என்றேன்.
“புது ரோடு போட்டா நல்லதுதானேப்பா...?” என்றார் அவர்.
அவர் “தனக்கு மட்டும் நல்லது” என்பதைத்தான் கூறியிருக்கிறார் என்று பின்னர்தான் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.
இனியாவது பழைய சாலைகளை அகற்றி புதிய சாலை அமைக்க நம்மாலான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்” என்று தீர்மானித்தேன். இக்கருத்தை என் நட்பு வட்டத்திற்குள் வலிமையாக முன்வைத்தேன். அடுத்த ஆண்டிலேயே அதற்கான பலன் தெரியத் துவங்கியது. கொச்சியார் தெருவில் பழைய சாலையைத் தோண்டி அகற்றாமல் புதிய சாலை அமைக்கப்படுவதைக் கண்டித்தும், நகர்மன்றத்தினருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வழிவகுக்குமாறும், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையிடம் மனு அளித்த நிகழ்வும் நடைபெற்றது.
[படம்: கோப்பு]
அப்போதைய நகர்மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜியாரிடமும் என் கவலையை வெளிப்படுத்தத் தவறவில்லை.
“நம்ம ஊரின் துவக்கப் பகுதியான எல்.எஃப். ரோட்டை உயரத்தில் துவக்கி, கொச்சியார் தெருவோடு தண்ணீர் கடலில் கலக்கும் வகையில் ஒரே சீராக அமைக்கலாம் என்று ஒரு நகர்மன்றக் கூட்டத்தில் சொன்னேன்... இடைப்பட்ட காலத்தில் யாரும் எங்க வார்டுக்கு ரோடு வேணும்-ன்னு அவசரப்படக்கூடாது என்றும் சொன்னேன்... சரின்னு சொன்ன கவுன்சிலர்ஸ், கொஞ்ச நாட்களுக்கு மேல ஒத்துழைக்கலியே...? நான் என்ன செய்ய?? சொல்லுங்க ஹாஃபிஸா...” என்றார் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜியார்.
“சிரிக்காத தலைவர்... கடுகடுப்பானவர்... பணத்திமிர் பிடித்தவர்... பாவப்பட்டவர்களைக் கண்டுகொள்ளாதவர்...” என்றெல்லாம் அவருக்கு அடைமொழிகளிட்டு Legal size காகிதத்தில் பக்கம் நிறைய வாசகங்களுடன் பிரசுரம் வெளியிட்டு, அதை அனைத்து ஜும்ஆக்களிலும் வினியோகித்து, ஒரு நல்லவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி மகிழ்ந்த அன்றைய நகர்மன்றத்தின் 13 உறுப்பினர்கள், பேருந்து நிலையம் முன்பு ஊர் நலன் குறித்து சிறிதும் அக்கறையில்லாத சிலரைக் கூட்டி வைத்துக்கொண்டு “மாபெரும்” கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தியதை நாம் மறந்தாலும் வரலாறு மறக்காது. அப்போதைய உறுப்பினர்கள் இருவர், தற்போதைய நகர்மன்றத்திலும் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் நிலையில், தற்போதைய நகர்மன்ற நடவடிக்கைகளின் உண்மை நிலை, இன்றைய சீர்குலைவுக்குக் காரணமானவர்கள் குறித்தெல்லாம் விளக்க அவசியமிருக்காது.
[படங்கள்: கோப்பு]
இவற்றையெல்லாம் வசதியாக - தேர்ந்தெடுத்து மறந்துவிட்டு, இன்று “நாங்களும் நியாயம் பேசுகிறோம்” எனும் தொணியில் பேசுவோரைப் போல என்னால் இலகுவாக மறந்துவிட்டு எதையும் பசப்பிப் பேச இயலவில்லை.
கதை என்னவோ தொடர்கதைதான்! ஆனால், கடந்த காலத்தில் வில்லனாக்கப்பட்டவர்கள், பிற்காலத்தில் ஹீரோவாக்கப்பட்டுள்ளனர். அந்த சூத்திரத்தின் படி, தற்போதைய நகர்மன்றத் தலைவரும் அடுத்த பருவத்தில்தான் ஹீரோவாவார்... அதுவரை வில்லனாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவருக்கு இறைவன் விதித்த தலைவிதியோ என்னவோ...?
ஆனால் ஒன்று! தம் சுய நலனுக்காக ஊர் நலன் மறந்து, தமக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு என்ற ஒரே காரணத்திற்காக - தனியாட்களாகவும், பொதுநல அமைப்பு பெயர்களிலும் - மனசாட்சி, ஈவு, இரக்கம், மக்கள் நலன், நீண்டகால செயல்திட்டம் எதுவுமின்றி, நேர்மையான நடவடிக்கைகளையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் அந்த ஒரு சாரார்தான் அன்றும், இன்றும் “உண்மையான வில்லன்”!!!
இன்றைய நகராட்சிப் பருவத்தில் மட்டுமல்ல! இதற்கு முந்தைய நகர்மன்றத் தலைவர்களின் காலங்களிலும் இதுதான் நிலை என்பதை விளக்கவே இந்நிகழ்வை முன்வைத்துள்ளேன்.
அது மட்டுமல்ல! இப்பிரச்சினை காயல்பட்டினத்தில் மட்டும் நடப்பதுமில்லை. மாறாக, முறையாகத் திட்டமிடப்படாமல் சாலை, கட்டிடங்களை அமைக்கும் எல்லா ஊர்களிலும் இதுதான் தொடர் பிரச்சினையாக உள்ளது.
அண்மையில் சிவகாசிக்கு நாங்கள் நண்பர்கள் நால்வர் சொந்த வாகனத்தில் சென்றபோது, திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பெரும் பள்ளம் மழை நீர்த் தேக்கத்துடன் இருக்க, அதன் வழியே செல்லும் (எங்கள் வாகனம் உட்பட) அனைத்து வாகனங்களும் சிக்கித் தவிப்பதைக் கண்ட நான், முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளக் கோரி - முகநூலில் எனக்குள்ள 5 ஆயிரம் நண்பர்களுக்கும், வாட்ஸ் அப் வழியே சுமார் 600 பேருக்கும் தகவல் அளித்திருந்தேன்.
அதையும் கூட முகநூலில் விமர்சித்த சில நண்பர்கள், காயல்பட்டினத்திலுள்ள சாலைகளைச் சுட்டிக்காட்டி, வேறுபட்ட கருத்துக்களைப் பதிந்திருந்தனர். அவர்கள் சார்ந்த தெருக்களிலும் புதிய சாலை நன்றாக அமைக்கப்பட வேண்டுமே என்ற கவலையில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை மூலம் ஸ்கேல் வைத்து சாலைகளை அளந்த “புண்ணியவான்”களுள் (அவர்களின் மொழி!) நானும் ஒருவன். என் உறவினர்களே என்னைத் தூற்றுவார்கள் என்று தெரிந்தும் இச்செயல்களிலிருந்து விடுபட என் மனம் ஏனோ ஒப்பவில்லை. பச்சைக் குழந்தை விரும்புகிறது என்பதற்காக அது நெருப்பில் கை வைக்க முனையும் என்றறிந்து எப்படி முற்கூட்டியே அதற்கான சூழலைத் தவிர்ப்போமோ அப்படித்தான் இதுவும்! குழந்தை வளர்ந்த பிறகுதான் அது பற்றி விளங்கும்.
சாதாரண நாட்களில் நியாயம், நேர்மை, புரட்சி, போராட்டம் பற்றியெல்லாம் பேசும் நாம், நமக்கென்று வரும்போது மட்டும் எதையாவது கொடுத்து, காரியம் சாதித்து, நம் சுருதியை இறக்கிக் குறுகிக்கொள்கிறோமே... ஏன்?
வியாபம் ஊழல், 2G Scandal என வாய் கிழியப் பேசுகிறோம்... “மக்கள் பணத்தை அவனவன் அப்பன் வீட்டு சொத்து போல கொள்ளையடிக்கிறானுங்க...” என்றெல்லாம் ஆத்திரப்படுகிறோம். முகநூலில் கீறிக் கிழிக்கிறோம்... ஏன், அண்மையில் சென்னையில் பெரும் பணக்காரர்களையெல்லாம் ஒரே நாளில் புரட்டிப்போட்ட மழையையும், அதன் பின்விளைவுகளாகக் காணக்கிடைத்த சீரழிவுகளையும் பார்த்த பிறகு, அங்கிருந்த ஆறுகளும், குளங்களும் பட்டா போடப்பட்டதைக் கூட நுனி நாக்கில் சரளமாகப் பேசுகிறோம்.
ஆனால், இந்த நிலை நம் மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக நேர்மையான - முறையான நகர்மன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது, “இப்டியெல்லாம் கண்ணுல வௌக்கெண்ணெய்ய ஊத்திக்கிட்டு பார்த்தா ஒரு வேலையும் நடக்காது” என்று மார்க்க அறிஞர்களும் கூட வாயாரச் சொல்லக் கேட்கிறோமே...? “காயல்பட்டினம் சிறு மக்கம்”, “குர்ஆன் - ஸுன்னா”, “மார்க்கம்”, “நேர்மை”, “சத்தியம் - அசத்தியம்” என்றெல்லாம் பீற்றிக்கொள்ள நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிந்தித்தோமா...?
அல்லது சென்னை - கடலூரைப் போல நமக்கும் தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகுதான் ஞானோதயம் பிறக்குமா...? (இறைவன் காப்பற்றட்டும்!)
தீர விசாரிக்காமலோ அல்லது வேண்டுமென்றே தவறாகவோ விமர்சிப்போருள் பெரும்பாலோருக்கு மனதில் உள்ள எண்ணமெல்லாம், “அவன்பாட்டுக்கு ஊர்ல சுகமாக உக்காந்துக்கிட்டு, நம்ம தெருவை நாத்தமாக்குறானுங்க...” என்பதுதான்.
“அடுத்த வேளை கழிப்பறை செல்ல வாய்ப்பின்றி அடக்கிய நிலையில்தான் இத்தனையையும் செய்கிறேன்... அடுத்த வீட்டிலிருக்கும் என் சொந்தங்களுக்கும் கைபேசியின் துணையுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லையே...?
என்ன செய்ய? அவர்கள் குறைகளை மட்டும் பார்க்கிறார்கள்... அதனால் அக்குறைகள் (சில வேளைகளில் தற்காலிகத் தீர்வுகளுடன்) தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. என் போன்றவர்களோ குறைகளுக்கான மூல காரணத்தைப் பார்க்கிறோம்... எல்லோரும் இதுபோன்று பார்த்தால் நிச்சயம் எல்லாம் சரியாகும், இன்ஷாஅல்லாஹ்!
யார் மனதையும் மாற்றிட எனக்கு எந்த உரிமையோ, தகுதியோ இல்லை என்பதை நன்கறிவேன். அதே வேளையில், “எந்த ஒரு சமூகமும் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளாத வரை இறைவன் ஒருபோதும் அவர்களை மாற்றப் போவதில்லை” என்ற இறைமறை குர்ஆன் வாசகத்தில் மட்டும் எனக்கு அழுத்தமான நம்பிக்கையுண்டு!
“ஆயிரம் இளைஞர்கள் ஒன்றிணைந்து முன்வந்தால், இந்த தமிழ்நாட்டுல இயற்கையை நல்ல நிலையில் மீட்டுடலாம்ய்யா...” என்றார் நம்மாழ்வார். இவ்வளவு பெரிய ஊரில் ஒரு நூறு பேர் கூட தேற மாட்டார்களா என்ன...?
குறைந்தபட்சம், அடுத்த நகர்மன்றப் பருவத்தில் வார்டுக்கு ஒரு நல்லவர் என 18 பேரும், பணம் - புகழ் போதைகளுக்கோ, யாருடைய எவ்விதமான நிர்ப்பந்தத்திற்கோ அணுவளவும் அடிபணியாத, நேர்மையும் - சிறப்புத் திறமையும் கொண்ட நல்லதொரு தலைவரும் என ஒரு 19 பேராவது கிடைக்காமலா போய்விடுவர்...??? அது வரையிலும்
“அவங்க அப்டித்தான்! நாங்க இப்டித்தான்!!”
என் தாயார் வீட்டில் நான் வளர்க்கும் வெள்ளாடும், குட்டியும் மழையில் வெளிச்செல்ல வழியின்றி பசியோடு காத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு எதையாவது பறித்துப் போட வேண்டும். சந்திப்போம்!!! |