சேவை குறித்து ஆய்வு கட்டுரை இது. பல அறிஞர்களின் நூல்கள் தரும் விளக்கம் என்ன? நமதூர் பெரியவர்கள் சொல்லும் அனுபவமும் இதில் இடம் பெறும் படியுங்கள்.
சேவை இரண்டு விதமாக கூறுகிறார்கள். ஒன்று சுயநலம் கருதாமல் முழுக்கமுழுக்க பொது மக்களுக்கு எந்த நேரமும் சேவை செய்வது. (சேவை செய்து விட்டு பணத்தை கூலியாக பெற நினைக்காமல் இருப்பது மட்டுமல்ல) ஒரு வேலையை மனப்பூர்வமாக ஒரு நபருக்கு வெற்றிகரமாக செய்ததால் அவர்கள் தரும் அன்பு பரிசாக கூலி கண்டிப்பாக வாங்குதல் கூடாது. நான் மனவிட்டு சொல்ல வேண்டுமானால் சென்னையில் நான் வாழ்ந்து தொழில் செய்த நாற்பது ஆண்டுகளில் 23 நகைக் கடையில் (Jewelleri)-ல் நமது ஊர் படித்த வாலிபர்கள் படிக்காத சிறுவர்கள் கவுண்டர் பாய்ஸ்ஸாக நகைக்கடையில் சேர்த்து விட்டேன். நகைக்கடையின் வேலை செய்வதற்கு சமையல் செய்து கொடுக்க, சமையல்காரர்கள் அவருக்கு கையால், மார்க்கெட் போய் வர திறமை மிக்க பெரியவர்கள் என்று சுமார் 535 பேர்களை சைனா பஜார் (என்.எஸ்.சி போஸ் ரோடு) நகைக்கடைகள், T.நகர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், பாண்டிபஜார், அண்ணாநகர் நகைக்கடைகள் பலவற்றிலும் நான் சேர்த்த படித்த பண்புள்ள காயல் நகரை சேர்ந்த நல்ல குடும்பத்து வாலிபர்களை சேல்ஸ் மேன்களாக சேர்த்து விட்ட போது, அதற்காக எந்த சர்வீஸ் கமிஷனும் வாங்கினது இல்லை. அந்த நகைடையில் டீ, காபி தந்தாலும் சாப்பிட பயப்படுவேன். அது லஞ்சமாக ஆகிவிடுமா என்று பயப்பட்ட காலத்தை இன்று நினைத்து பார்க்கிறேன்.
வேலையில் சேர்ப்பது ஒருவகை சேவை அதில் பதிலுக்கு எதையும் எதிர்பார்த்து வாங்குவது சேவையா? என் மனம் கேட்கும் உண்மையான சேவையாளர் எதையும் எதிர் பார்த்து செய்யக்கூடாது நான் கற்ற பாடம். அதே சமயம் அதே நகைக்கடையில் நவரத்தின ஸ்டோன் ஒன்பது கற்கள் உள்ளதை விற்கும்போது அதிக விலைக்கும் விற்கப் பயப்படுவேன். அதுவும் ஒருவகை லஞ்சம் அமைப்பில் சேர்ந்து விட்டால் எனது பொது சேவைக்கு அர்த்தமில்லாது சேவைக்கு கிடைக்கும் நன்மை அல்லாஹ் இடம் முழுமையாக கிடைக்குமா? என்ற மனப் போராட்டத்தின் மத்தியில் நவரத்தின செட் கற்களுக்கு விலை அதிகம் கூட கேட்க பயப்பட்ட காலம் உண்டு. சேவை செய்து விட்டு நான் நடந்து கொண்ட முறையை இங்கு இப்போது தான் உங்களுக்கு எழுதிகாட்ட நேரத்தை அல்லாஹ் தந்துள்ளான் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ் (நன்றி).
எப்போதும் சென்னை நகைக்கடைக்ளுக்கு சேல்ஸ்மேன் தேவை. நமதூர் வாலிபர்கள் திடீர் என்று படித்து விட்டு சென்னை வந்தால் என்னை சந்திக்க மண்ணடியில் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். எங்கள் சொந்த வீட்டின் மொட்டை மாடியில் தங்க வைப்பேன். குளிக்க தங்க மொட்டை மாடி வசதியாக அமைந்திருந்தது. எனக்கு தெரிந்த கீழக்கரை கிழக்குத்தெரு முதலாளி நெய்னா முஹம்மது ஹாஜி நகைக்கடை சைனாபஜாரில் லக்கி ஜீவல்லரி என்ற பெயரில் இருந்தது இங்கு தங்கலாம், சாப்பாடு தருவார்கள் அவர்கள் நகைக்கடையில் வேலைபார்த்து கொண்டு அவனுக்கு வேறுகடையில் வேலைகிடைக்கும் வரை லக்கி ஜீவல்லரியில் சம்பளம் இன்றி தங்க அனுமதித்தார்கள். முதலாளி நெய்னா முஹம்மது ஹாஜி எனக்கு நல்லபழக்கம் என் வாப்பா இடம் தொழில் நகைக்கடை சம்பந்தமாக இலங்கை கொழும்பில் கற்றதாக கூறி, இந்த சலுகையை நீங்கள் அழைத்து வரும் காயல் நகர வாலிபருக்கு நான் உணவு தந்து எங்கள் கடையில் சம்பளமில்லாத வேலையை தருகிறேன். வேலை கிடைத்ததும் அவன் அங்கு போய் சேர்ந்து கொள்ளலாம் என்று ஒப்பந்தம் என்னிடம் செய்தது ஒருவகையில் உதவியாக இருந்து வந்ததை 20 ஆண்டுகளுக்கு பின்னும் இந்த கட்டுரை வாயிலாக நினைத்து பார்க்கிறேன்.
வாரத்தில் ஒருநாள் வெளியே லக்கி ஜீவல்லரியில் நான் டெம்பரவரியாக சேர்ந்த நமதூர் வாலிபர் வேலை தேடி வெளியே போக அனுமதித்தார். லக்கி முதலாளி. இது கூட ஒரு வகை சேவை என்றுதான் நான் நினைப்பேன். எல்லாம் முஸ்லீம் வாலிபராக சேர்ப்பதால் சென்னை காயல் நகர் இந்து வாலிபர் பலரை நான் உம்முடி பங்காரு செட்டி ஜீவல்லரி, நாதள்ளா சம்பத்துச்செட்டி N.S.C. போஸ் நகைக் கடையில் சேர்த்து விட்டு இருக்கிறேன். அங்கு நவரத்தின செட் சப்ளை செய்தேன்.
நமதூர் நகைக்கடை சென்னை ஒன்றில் காயல் நகர் அலியார் தெருவில் வாழ்ந்து வந்த வைத்தியர் ஒருவரின் மகன் சேகர் என்ற ஆதித்தனர் கல்லுரியில் படித்த பையனுக்கு அகவுண்டர் வேலையில் சேர்த்த பெருமை என்னைச்சாரும். இந்து முஸ்லீம் என்ற பாகுபாடுபார்க்காமல் பழகும் மிஸ்டர் சேகர் நல்ல பண்புள்ள வாலிபன். இன்று அவன் இந்தியாவிலுள்ள கோவாவில் இருந்து விட்டு நமதூர் வாலிபர்களால் துபாய் சேக் இடம் வேலை வாங்கிதந்தாக தெரிகிறது. மிஸ்டர் சேகர் எனது மருமகன் தாவூதின் உயிர் நண்பர், நல்ஒழுக்கம் நிறைந்த இளைஞன். சேவை செய்வதால்தான் என் மனம் சந்தோஷப்படும், எந்த சங்கடமும் எனக்கு சேர்த்து விட்ட வாலிப தோழர்களால் ஏற்பட்டதுமில்லை. மாறாக பாராட்டுதலும் போற்றி முதுகை தட்டிக்கொடுத்து புகழ்ந்த வார்த்தைகள். அதனால் நான் அனுபவித்த சுகங்கள் ஏராளம் உண்டு. எப்போதுமே படுக்கும் வரையில் இரவிலும் சந்தோஷம்தான். தினமும் பலரை நகைக் கடையில் சேர்ப்பது நடந்து கொண்டே இருந்தது.
சேவை என்றால் என்ன?
(அதாவது 1979 முதல் 2005 வரை சேவை செய்தேன்)
சேவை என்பது பிறரை சுகப்படுத்தி அவரும் அவர் குடும்பமும் வளமான வாழ்க்கைக்கு உள்ளே நுழைய செல்லும் வழிப்பாதையை காட்டுவது நாம் சுகமாக வாழ்ந்தால் போதாது நம்மோடு சுற்றி இருக்கும் மனித இனங்கள் முஸ்லீம், இந்து கிருத்துவ தோழர்கள் யாராக இருந்தாலும் அல்லது தோழியாக இருந்தாலும் ஆண் பெண் இரு பாலருக்கும் நாம் சரிபங்கு உதவி செய்ய வேண்டும். இதுதான் மனித நேய பண்பாடுகளாகும் என்பது என் எண்ணங்களே ஆகும். சேவை செய்பவர்களை இன்று சில சங்கங்களில் அல்லது நூலகங்களில் புரிந்து கொள்ளாத வாலிபர்களால் கிண்டல் கேலி செய்கிறார்கள். அவர்கள் ஏன் புரிந்து கொள்வது இல்லை சேவை செய்வதில் கஷ்டம் இருக்கிறது. சேவை செய்தவரின் செயலை பாராட்டி மகிழ வேண்டிய நேரத்தில் சாணி பூசுவது போல நடந்து கொள்வதை நானே அறிந்து பாதிக்கப்பட்டும் இருக்கிறேன். சேவையின் மறுபக்கம் என்ன என்பதை உணரமால் சேவை செய்தவரை அவரின் செயல்பாடுகளை நஞ்சு கருத்துகளாக எழுதிவைக்கும் பண்புகெட்ட சில வாலிபர்களை அறிவுஜீவிகளை நான் கண்டு வேதனைபட்டுள்ளேன். மலையை கூட சுமந்து நடந்து விடலாம், சேவையை தலையில் தூக்கிவைத்து நடப்பது என்பது கஷ்டமான காரியம்.
ஒருவர் சேவை செய்த செய்தி ஊரில் பரவி விட்டால் அவரை மொய்த்துக் கொண்டு தேனீபோல தூய்மையான தேனை (சேவையை) எதிர்பார்ப்பவர்கள். நாலாபக்கம் இருந்தும் வருவார்கள். இதைத்தான் நான் மலையை விட சுமப்பது கஷ்டம் என்று கூறிய வார்த்தையின் அர்த்தங்கள் ஆகும்.
உண்மையான சேவை மன அமைதியை தருகிறது. போலிச் சேவை சுயநலமிக்கது புனிதமும் ஆகாது. சேவை செய்து விட்டு சொல்லிக்காட்டுவது பணத்தை எதிர் நோக்கினால் பணம் கிடைக்கும் அது சேவையாகாது. பணம் எதிர்பார்க்காமல் சேவை செய்வது தானே புனிதமானது. அத்தகைய சேவை தான் புனிதம் ஆகும். இந்த சேவையினால் மனம் சந்தோஷப்படும். நமது பாவசெயல் கூட ஒரு வகையில் கரிந்து எரிந்து சாம்பலாகி விடும் என்கிறார் ஒரு தமிழ் அறிஞர். வாருங்கள் சேவை செய்து பிறரை சந்தோஷக் கடலில் மிதக்கச் செய்வோம் என்பதே எனது இலட்சியமாகும்.
சென்னையிலும் ஊரிலும் 48 வருடங்கள் சேவை செய்துள்ளேன். சேவையின் மறுபக்கம் சங்கடம் அல்ல சுயநலமாக சேவை இருந்தால் கண்டிப்பாக மானிடன் சங்கடப்பட்டே ஆவான். பொதுமக்கள் நலன்கருதி நான் என்றுமே சேவை செய்து வருவதால் என் மனதில் எந்த குழப்பமும் இல்லை. என் மனம் அமைதியாக இருக்கிறது. இதனால் உள்ளத்தில் கலக்கமில்லை. குதுகலமான சந்தோஷம் சேவை செய்து விட்டு பிறரின் மனநிலை கண்டதும் நானும் சந்தோஷப்படுகிறேன். எனது உண்மையான சேவையின் அர்த்தங்கள் என்று சொன்னால் மிகையாகாது.
இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடர் இரண்டில் சேவை குறித்து எழுத பல நூல்களை தேடி போனேன். மனநில மருத்துவ நிபுணர் டாக்டர் சி. பன்னீர் செல்வன் M.B.B.S., M.D. எழுதிய மனநலம் என்ற நூலில் 144 பக்கங்களில் பல தகவல் சேகரித்து உள்ளேன். மற்றொரு நூல் மனசே டென்ஷன் ப்ளீஸ் 10 ஆம் பதிப்பு 2013-ல் ஆசிரியை நளினி எழுதி வெளியிட்ட சுமார் முப்பது பக்க நூலின் சில தகவல் அடுத்த இதழில் படிக்கலாம். பல நூல்களை சேகரிக்க காயல் அரசு நூலகர் முஜீப் அவர்களும் Y.U.F. நூலகரையும் நாடி பல நூல்கள் வாசிக்க கேட்டுள்ளேன். பல அனுபவசாலி பெரியவர்களை சந்திக்க உள்ளேன்.
17.12.2015 வியாழன் கொம்புத்துறை பகுதியை சார்ந்த வில்ஷன் அய்யா அவர்கள் என்னை சந்திக்க மாலை 5.30 க்கு மேல் என் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களிடம் “சேவையின் மறுபக்கம் சந்தோஷமா? சங்கடமா?” என்ற கேள்வியைக் கேட்ட போது சேவை செய்தாலே மனம் சந்தோஷம் தான் அடையும். பைபிலில் ஒரு பொன்மொழி வருகிறது.
எங்கள் பகுதியுள்ள சர்ச்சியில் சொல்வதைக் கேட்டதாக சொன்னார்கள். உனக்கு சேவை செய்ய முடியும் வயதில் தேவை உள்ளவர்களுக்கு சேவை செய்ய மறந்து விடாதே? என்ற பைபிள் பொன்மொழி ஒன்றை சொன்ன போது அய்யா நீங்கள் இந்துதானே? அதனால் பகவத்கீதை மகாபாரத பொன்மொழிகள் சேவை குறித்து சொல்லுங்களேன், பதிவு செய்து கொள்கிறேன், என்ற போது அடுத்த இரண்டாம் தொடரில் தருவதாக கூறினார்கள். சேவை குறித்து நபிமொழி பெரியவர்கள் அனுபவசாலிகளின் கருத்துக்களை பதிவு செய்து தர உள்ளேன். இரண்டாம் தொடரில் படியுங்களேன். சேவை செய்ய மனம் எனக்கு எப்படி வந்தது என்றால் நினைத்த தகவலை உடனுக்கு உடன் D.T.P பிரிண்ட் போட்டு எத்தனை பக்கமாக இருந்தாலும் சளிக்காமல் பிரிண்ட் செய்து தரும் சகோதரி (MEGA BYTES) சகோதரி அவர்களும் ஒரு காரணம்.
ஊர் வந்ததும் எழுத்து மூலம் தகவல் சேகரிக்கும் முறை அதிகமானதால் D.T.P. பிரிண்ட் செலவு எனக்கு அதிக வந்ததை கண்ட L.T.S. Gold House சார்பில் சேவை உங்களுடையதாக இருக்கட்டும். குறிப்பிட்ட அளவு செலவுக்கு நான் தருகிறேன். எனக்கும் அதன் நன்மை கிடைக்க வேணும் என்றார்கள். இதன் முத லாளி L.T. சித்தீக் அவர்கள் நவம்பர் 2015 முதல் இப்படி செய்ய முன் வந்துள்ளது பாரட்டக் கூடியது தானே? |