(விசுவாசம் கொண்டோரே!) நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், கனி வர்க்கங்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்... (தூதரே!) பொறுமையுடையோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக... (திருக்குர்ஆன் 2:155)
என்ற இறைவாக்கு எத்தனை சத்தியமானது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது... டிசம்பர் 01! எந்நாளும் போல்தான் அன்றும் விடிந்தது... மழையின் உரத்த சப்தம் வெளியில் கேட்டதும் வழக்கம் போல் ஸ்கூலில் இருந்து மெஸேஜ் ஏதும் வந்துள்ளதா என்று பார்க்க அனிச்சையாய் என் கைகள் மொபைலைத் துளாவின... ஆம்! எதிர்பார்த்தபடியே பெற்றோருக்குத் திண்டாட்டம்! பிள்ளைகளுக்கோ கொண்டாட்டம்!! காரணம் ஒன்றுதான். மழை காரணமாக பள்ளிகளுக்கு அன்றும் விடுமுறை... பள்ளிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த மகள்களிடம் விஷயத்தைக் கூறிவிட்டு... அதிகாலை அடுப்படி வேலைகளிலிருந்து அன்று எஸ்கேப்...
மழை வலுக்க... வலுக்க... மனம் கனக்க ஆரம்பித்தது... காரணம் மழை தன் இயல்பைத் தொலைத்தது போலவே எனக்குத் தோன்றியது... ஆனால் உண்மையில் நான்தான் என் இயல்பைத் தொலைத்திருந்தேன். முன்னரெல்லாம் மழையென்றால் மனம் இலேசாகும்... இன்றோ மனம் கனக்கிறதே? கடந்த வாரமெல்லாம் தொடர்ந்த பல இரவுகளில்... தண்ணீர்... தண்ணீர்...! என்று தூக்கத்திலேயே கத்தி, கணவரையும் கலவரப்படுத்தியிருக்கிறேன். இப்போது இரண்டு நாட்களாகத்தான் வீடு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
“அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா...” (இறைவா! எங்கள் மீது இல்லாமல் இதை வேறு பக்கம் திருப்புவாயாக!) என என் மனம் திரும்பத் திரும்பப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. தெருவைப் பார்த்த கணவரின் முகம் கலவரமாகிப் போவதைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டேன். தொண்டைக் குழிக்குள் ஒரு பந்து இறங்கி... நெஞ்சுக்குள் உருண்டு... வயிற்றைப் பிசைந்தது... அவரோ எதுவுமே பேசாமல் கீழே இருக்கும் பொருட்களுக்கெல்லாம் ‘ப்ரமோஷன்’ கொடுத்துக்கொண்டிருந்தார்.
எங்கள் சிற்றறிவிற்கு உயரம் என்று எட்டியதெல்லாம் சோஃபாக்களும், கட்டிலும்தான்! தரையில் பொருட்கள் எதுவும் இல்லையென நாங்கள் எங்கள் முதுகில் தட்டிக்கொண்டோம். சென்ற முறை பட்டது நினைவுக்கு வந்து... கடைசித் தட்டுகளில் இருந்த துணிமணிகள், பொருட்கள் என அனைத்தையும் எங்கள் அறிவுக்கு எட்டிய உயரங்களில் வைத்தோம். தண்ணீருக்கு அது எட்டாது என்று நாங்கள் நினைத்தது தவறு என்று அப்போது எப்படி எங்களுக்குத் தெரியும்?
ஸ்கூல் பெல் அடித்தவுடன், ‘ஓ’வென்று சப்தமிட்டுக்கொண்டெ பாய்ந்தோடி வரும் குழந்தைகளைப் போல தண்ணீர் தெருவில் சளசளவென ஓடி வந்துகொண்டிருந்தது... வீட்டில் டி.வி. இல்லை! கம்ப்யூட்டரில் செய்தி சேனலைத் திருப்பினால்... வெளியில் சென்னை பரபரத்துக் கிடந்தது... அதற்கு நேரெதிராக எங்கள் தெருவிலோ மயான அமைதி! அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு மழையின் சப்தம்... அதையும் தாண்டியது எங்கள் இதயத்துடிப்பு...
‘மிரட்டும் மழை’, ‘தத்தளிக்கும் தலைநகர்’ என மீடியாக்கள் ஒருபுறம் மிரட்டிக்கொண்டே இருந்தன... ஏற்கனவே மிரண்டு போயிருந்தோம்... மீண்டும் பேக்கிங்தானா? என்று நினைத்துக்கொண்டே அனைத்தையும் பேக் செய்து, ஆயத்தமாக வைத்துக்கொண்டோம்... தெருவில் நீர் மட்டத்தின் அளவு ஏற ஏற, எங்கள் பல்ஸும் எகிறிக் கொண்டிருந்தது...
குடும்ப நண்பர் வீட்டிலிருந்து மீண்டும் அழைப்பு... எங்களுக்கும் மழைக்கும்தான் என்னவொரு ஒற்றுமை! மழை அழையா விருந்தாளி! நாங்களோ மீண்டும் மீண்டும் அழைக்கப்படும் பழைய விருந்தாளிகளானோம். “மோட்டார் போட்டு டேங்க் நிரப்பி வையுங்கள்” என்று அவர்களையும் அலர்ட் பண்ணிவிட்டோம்... (சென்ற முறை பட்ட அனுபவமாயிற்றே!)
ஒருவழியாக எதிர்பார்த்த விருந்தாளியாக... இல்லை இல்லை... வீட்டு உரிமையாளராக தண்ணீர் சுவாதீனமாய் எங்கள் வீட்டுக்குள் நுழைய, நாங்களும் அப்பாவிகளாய்... அகதிகளாய்... அடுத்த ஹிஜ்ரத்திற்கு ஆயத்தமானோம். தவக்கல்து அலல்லாஹ் என்று அல்லாஹ்விடம் வீட்டை ஒப்படைத்து விட்டு, எங்கள் மன திருப்திக்காக கதவுகளைப் பூட்டி... மனதை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு நாங்கள் மட்டும் வெளியேறினோம்...
வாடகைக் கட்டிடத்தில் வருடக்கணக்கில் குடியிருப்போரை வெளியேற்றுவதற்கு கட்டிட உரிமையாளர் எடுக்கும் முயற்சிகளையும், படும் அவஸ்தைகளையும் பார்க்காத சென்னை வாசிகள் இருக்க மாட்டார்கள். ஆனால் இங்கோ, வீட்டு உரிமையாளர்களாகிய எங்களை எந்த அலட்டலுமின்றி வெளியேற்றிவிட்டதே இந்த மழை? என்ன ஒரு நகைமுரண்???
குடும்ப நண்பர் வீட்டில் எங்களை எப்படி கவனித்துக் கொண்டார்கள் என்பதை ஒற்றை வரியில் உள்ளத்திலிருந்து சொல்வதானால், அன்ஸாரிகளாய் எங்களை அரவணைத்துக் கொண்டனர். ஒரு நாள் அல்ல... இரண்டு நாட்களல்ல... ஆறு நாட்கள்... முதல் நாள் சிரித்த கண்கள் ஆறாவது நாளிலும் அதே தரத்துடன் சிரித்தன.
வெளியேறிய அன்று இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்தது மழை. தன் ஆதங்கத்தை... உள்ளக் குமுறல்களை... தான் செல்லும் பாதைகளில் அடைத்திருக்கும் ப்ளாஸ்டிக் குப்பைகளின் அவலங்களை... ஆக்கிரமிப்புகளை... என்று பேசாத கதையெல்லாம் பேசித் தீர்த்தது... புலம்பித் தவித்தது... விடிய விடிய இறைவனிடம் இருகரமேந்தி முறை வைத்து முறையிட்டோம்... இரவு விடியாதா என ஏங்கித் தவித்தோம்... நிமிடங்கள் வருடங்களாய் உருண்டன... ஃபஜ்ரை முடித்துவிட்டு, பொழுது புலர்ந்ததும் தெருவைப் பார்த்தால்........ இந்தத் தெருவிலேயே இடுப்பளவு தண்ணீர்... எங்கள் தெருவின் நிலையை எதிரே வந்த ஒரு மனிதரின் சட்டையில் மார்பு வரை இருந்த ஈரம் தெள்ளத் தெளிவாகச் சொன்னது...
காலை 12 மணிக்கு என் நச்சரிப்பு தாங்க இயலாமல் கணவர் மட்டும் எங்கள் வீட்டைப் பார்க்கச் சென்றார். திரும்பி வந்தவரின் முகமே வீட்டின் நிலவரத்தைச் சொல்லிவிட்டது... மாலையில், “எம்புள்ளைய இப்பவே நா பாக்கனும்...” என்று அடம்பிடிக்கும் தாயைப் போல பிடிவாதமாய் வீட்டைப் பார்க்கச் சென்றால்... தெருவில் எங்கள் நெஞ்சளவுக்குத் தண்ணீர்... வீட்டுக்குள்...??? ஜன்னல் வழியாகத்தான் பார்க்க முடிந்தது... சுப்ஹானல்லாஹ்! மூன்று சோபாக்களும் இடுப்பளவு தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தன. கட்டிலின் மீது நாங்கள் ஏற்றி வைத்திருந்த பெட்டிகளின் மீதெல்லாம் அலையடித்துக்கொண்டிருந்தது. கம்ப்யூட்டர் டேபிள் ஒரு பக்கம் மிதந்துகொண்டிருந்தது... அதன் மீதிருந்த கம்ப்யூட்டரைக் காணவே முடியவில்லை.
நேற்று வரை நாங்கள் சிரித்து மகிழ்ந்த எங்கள் வீடுதானா இது என்று நம்ப முடியாத அளவுக்கு அது எங்களுக்கு மிகவும் அந்நியமாகியிருந்தது... எனக்கோ வீட்டின் பொருட்கள் எல்லாம் “எங்கள காப்பாத்துங்க...!” என்று மானசீகமாய் என்னிடம் கதறியது போலவே தோன்றியது. வீட்டிற்குள் இப்போது நுழைவது அபாயம் என பயந்து திரும்பிவிட்டோம்... நடைப்பிணமாக!!!
“என்ன இது? பட்ட காலில்தான் படும் என்பார்களே?” என்று ஷைத்தானிய எண்ணம் மனதில் தோன்ற, இல்லையில்லை... பல்வேறு தொடர் சோதனைகளுககுப் பிறகுதான் நபிகளாருக்கு மக்கா வெற்றி சாத்தியமாயிற்று என ஈமானிய நெஞ்சம் தேற்றியது.
அச்சத்தாலும், பொருட்களின் இழப்புகளாலும் மட்டுமே எங்களைச் சோதித்த அல்லாஹ் மாபெரும் கருணையாளன். அச்சத்தை வென்றெடுக்கும் மன வலிமையையும், பொருட்களின் இழப்பை ஈடு செய்யும் உடல் வலுவையும் எங்களுக்களித்த வல்ல நாயன், மற்ற இரு இழப்புகளிலிருந்தும் எங்களைப் பாதுகாத்தானே...? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்! என்ற நன்றியுணர்வு எங்கள் வலிகளை மறக்கச் செய்தது.
நாங்கள் உயரமென நினைத்து பொருட்களைப் பத்திரப்படுத்திய இடங்களையும் மீறி தண்ணீரை விதியாக்கியது இறைவனின் விளையாட்டல்லவா? வீட்டின் காட்சிகளைக் கண் முன் கொண்டு வரும்போதெல்லாம்... நூஹ் (அலை) அவர்களின் மகன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏறிக்கொண்ட மலையையும் மீறி வந்த வெள்ளம்தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
அல்லாஹ் நாடியதை யாராலும் தடுக்க முடியாது! அவன் தடுத்ததை யாராலும் கொடுக்கவும் முடியாது!! வீட்டுக் கதவுகளில் ஸ்டிக்கரில் பளபளக்கும் இவ்வாசகங்கள் சத்தியம்! சோதனைகள் வரும்போது “இதுவும் கடந்து போகும்” என்ற ஒற்றை வரிதான் நமது பலம். எங்களுக்கோ “இதுவும் வடிந்து போகும்” என்ற ஒற்றை வரியே நம்பிக்கையாகிப் போனது.
பின்னர் சென்னையில் நடந்ததெல்லாம் சென்னை வாசிகளைத் தவிர உலகமே அறிந்த வரலாறு. வேறென்ன? சென்னைவாசிகள்தான் அடுத்த ஐந்து நாட்களும் மின்சாரமின்றி... அலைவரிசை இன்றி... தொடர்புகள் எதுவுமின்றி... தனித்தீவாகிவிட்டனரே...??? தமிழகமே மின்தடையால் இருளில் மூழ்கிய காலங்களில் கூட தொய்வின்றி ஒளிர்ந்துகொண்டிருந்த தலைநகர் சென்னைக்கு வந்த நிலையைப் பார்த்தீர்களா...?
ஐந்து நாட்கள்... மின்சாரமும், மொபைலும் இல்லாத பழங்காலத்தை அனுபவித்தோம்... ஒரு வினாடி கூட பிசகாது இறை நினைவிலேயே கழிந்த நாட்களல்லவா அவை...? வீட்டின் காட்சியும் மனதைப் பிசைந்து தூக்கத்தைத் தொலைத்து விட......
“(அல்லாஹ்) அவன் புறத்திலிருந்து உங்களுக்கு (மன) அமைதி அளிப்பதற்காக சிறு தூக்கத்தை(க் கொண்டு) உங்களைப் பொதிந்துகொள்ளுமாறு அவன் ஏற்படுத்திய நேரத்தில் வானிலிருந்து மழையை உங்களுக்காக அவன் இறக்கி வைத்தான். அதைக் கொண்டு உங்களை அவன் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் அசுத்தத்தை (ஊசலாட்டத்தை) உங்களை விட்டும் நீக்குவதற்காகவும், உங்களுடைய இதயங்களை உறுதிப்படுத்தி, அதைக் கொண்டு (உங்களுடைய) பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் (மழையை இறக்கினான்)... [திருக்குர்ஆன் - அத்தியாயம்: அல்அன்ஃபால்; வசனம்: 11]”
என்று பத்ரு யுத்தத்தின்போது நபித்தோழர்கள் மன அமைதி பெறுவதற்காக அல்லாஹ் சிறு தூக்கத்தைக் கொடுத்தது போல, எங்களையும் மீறி அவ்வப்போது எங்களை ஆட்கொண்ட சிறு தூக்கங்கள் எங்கள் மனதை இலேசாக்கின. கண்ணீர் மட்டும்தான் கண்களில் அவ்வப்போது எட்டிப் பார்த்ததே தவிர வெடித்து அழவோ, கதறவோ ஈமானிய நெஞ்சம் வெட்கப்பட்டது.
தனது புத்தக கலெக்ஷன்களெல்லாம் போய்விட்டது என்பதற்காக அவ்வப்போது வாய்விட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்த எனது மூன்றாவது மகளிடம் என் நான்கு வயது மகன், “அழுவாதே லாத்தா... அல்லாஹ் லேசாக்குவான்...” என்று கூறியது எங்களை நோக்கிக் கூறியது போலவே இருந்தது.
குறைகளை தன்னிடம் முறையிடும்போதெல்லாம் என் கணவர் தவறாமல் பயன்படுத்தும் இந்த “அல்லாஹ் லேசாக்குவான்” என்ற இரண்டே சொற்கள் பிஞ்சு மனதிலும் அழகாகப் பதிந்துவிட்டதை அந்த நேரத்திலும் எண்ணி எனக்கு மனது மகிழ்ந்தது. குழந்தைகள் மூலம் இறைவன் நமக்குத் தரும் பாடமாகவே தோன்றியது.
02ஆம் தேதி நண்பகல் 12 மணி இருக்கும்... வெளியில் சப்தம் கேட்டு மாடி வழியே எட்டிப் பார்த்தால்... ஒரு மிதவை மீது சாப்பாடு நிறைந்த பாத்திரங்களுடன் வீடு வீடாக, “சாப்பாடு வேண்டுமா...? வெஜிட்டேரியன்தான்! தயங்காம வாங்கிக்கோங்க...” என்று, மதமாச்சரியமின்றி, தாயுள்ளத்தோடு அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்களைப் பார்த்ததும் என் உடல் சிலிர்த்தது... “இறைவா! என் சமுதாயத்தை இந்த மக்களிடம் நிரூபிக்க நீ வழங்கிய பொன்னான வாய்ப்புதானா இது...?” என்று முதன்முதலாக அப்போதுதான் வாய்விட்டு அழுதேன்.
ஐந்து நாட்கள் வரை எங்கள் வீட்டில் (ஆம்! அடைக்கலம் தந்த அந்தக் குடும்ப நண்பர் வீட்டில்தான் தற்போத நாங்கள் உறுப்பினர்களாகிவிட்டோமே...?) மின்சாரம் இல்லையென்றாலும், தண்ணீர் சப்ளை குறையாதது பெரும் ஆச்சரியம்தான்! “பிரஷ்ஷரில் தண்ணீர் தானாக மேலேறியிருக்கும்” என்று ஆளாளுக்கு அறிவுப்பூர்வமாக ஏதேதோ காரணங்களைக் கூறினாலும், எனக்கோ நபிகளார் (ஸல்) அவர்கள் கையை வைத்ததும் பசியோடு இருந்த நபித்தோழர்களுக்கு தொடர்ந்து உணவு கிடைத்த சம்பவம் அல்லாஹ்வின் அருட்கொடை என்றால் இதுவும் அந்தக் கருணையாளன் அல்லாஹ்வின் பெருங்கருணையால்தான் சாத்தியமானது என்றே மனம் அழுத்தமாக நம்பியது.
“ஒரு பாக்கெட் பால் விலை நூறு ரூபாயாம்...” என்ற உரையாடல்களுக்கிடையே - காலையிலும், மாலையிலும் பால் பாக்கெட்டுகளையும், பிஸ்கட்டுகளையும் வீடு வீடாகச் சென்று நமது முஸ்லிம் இளைஞர்கள் அடையாளங்களோடும், அடையாளமற்றும் இலவசமாக வினியோகித்துக் கொண்டிருந்தனர். “இது எனது சமுதாயமடா...!” என பெருமிதத்தில் விம்மியது என் மனம்.
ஓரளவு மனதை எதையும் தாங்கிட ஆயத்தப்படுத்தியே வைத்திருந்தோம். டிசம்பர் 05ஆம் தேதி தண்ணீர் சிறிது வடிந்ததும் வீடு சென்று பார்த்தால்....... தண்ணீருக்கு இத்தனை வலிமையா என அதிசயிக்கும் வகையில் எங்கள் வீட்டையே அது தலைகீழாய்ப் புரட்டிப் போட்டிருந்தது... எங்கள் வாழ்வையும்தான்...!
ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், புக் ஷெல்ஃப், ஸ்டடி டேபிள் என அனைத்தும் பரிதாபமாய் விழுந்து கிடந்தன. பாவம்... தங்களையும், அவர்களை நம்பி நாங்கள் வைத்திருந்த எங்கள் பொருட்களையும் காப்பாற்றிக் கொள்ள அவைதான் என்ன பாடு பட்டிருக்குமோ...? இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
“உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! எனது உள்ளத்தை ஈமானில் நிலைத்திருக்கச் செய்!” என பிரார்த்தித்துக் கொண்டே வீட்டைப் பார்வையிட்டோம்... மனவலிமை தானாக அதிகரித்தது...
“இதை இப்படி வைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்... அப்படி செய்திருந்தால் தடுத்திருக்கலாம்...” என முடிந்துபோன விஷயங்களைப் பற்றிப் பேசுதல் ஷைத்தானின் தூண்டுதல் என்ற நபிகளாரின் அறிவுரை மனதில் இடம் பிடித்ததும்... வாய் வரை வந்த சொற்கள் வழியிலேயே நின்றுவிட்டன.
பொருட்களின் இழப்புகளை ஈடுகட்டிவிடலாம். பல்லாயிரக் கணக்கான மதிப்புள்ள புத்தகங்களின் இழப்பு மட்டும் மனதை என்னவோ செய்தது... Ph.D. தீஸிஸ்க்காக தேடித்தேடி சஊதியில் வாங்கிய புத்தகங்கள், சிட்டுக் குருவி சேகரிப்பது போல கொஞ்சங்கொஞ்சமாகச் சேகரித்து வைத்திருந்த குறிப்புகள், ஜெராக்ஸ் நகல்கள் என ஒன்றும் மிஞ்சவில்லை... தேடித் தேடிச் சேர்த்த புத்தகங்களை தேடாமலேயே இறைவன் கையில் சேர்ப்பான் என பொறுப்பை அவனிடம் சாட்டியதும்தான் மனம் அமைதியடைந்தது.
“மேலும் உங்களிலுள்ள போராளிகளையும். பொறுமையாளர்களையும் நாம் அறிந்துகொள்வதற்காக திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம்...” (திருக்குர்ஆன் 47:31) என்ற இறைவசனம் எங்களை யாரென எங்களுக்கு இனங்காட்டியது.
இப்பேரிடர் இழப்புகளில் ஒருவராக எங்களையும் தேர்ந்தெடுத்ததற்கு இறைவனுக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்...
“யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவர்களை அவன் துன்பங்களின் மூலம் சோதிப்பான்...” (நூல்: முஸ்லிம்) என்ற நபிமொழி உணர்த்தியது போல, பொறுமை காக்கும் நல்ல முஃமின்களாக எங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்பட்டதோடு, பொறுமை காத்தலின் பலனாக எங்கள் பாவங்களும் மன்னிக்கப்படும் மாபெரும் பாக்கியத்தையும் அல்லாஹ் எங்களுக்கு வழங்கிவிட்டான்.
மட்டுமல்ல! “பொறுமையாளர்கள் இறைவனோடு இருக்கிறார்கள்” என்று அவனோடு இணைந்திருக்கும் கூட்டத்தாருள் ஒருவராக எங்களையும் அல்லாஹ் தேர்ந்தெடுத்தானோ! அப்படியானால் எங்களை விட பெரிய பாக்கியசாலிகள் வேறு யார்தான் இருக்க முடியும்?
*** இப்போதெல்லாம் என் மகனின் ஓவியக் கிறுக்கல்களில் மழைகளும், கருப்புத் தண்ணீரும், அதன் பின்னான தெருக் குப்பைகளுமாக அவன் மனம் அதில் பிரதிபலிக்கிறது. மழை மென்று துப்பிய சக்கையாய், ஒரு யுத்த களத்தின் இறுதி காட்சியாய் கண் முன் நின்ற வீடு கனவிலும் துரத்துகிறது...மழையென்றால் எப்போதும் குதூகலிக்கும் உள்ளம் இப்போதெல்லாம் சிறு தூறலுக்கும் பதறுகிறது...இந்த அச்சம் எங்கள் உள்ளத்திலிருந்து அகல இன்னும் சில காலங்கள் ஆகும். அதுவரை உங்கள் பிரார்த்தனைகளில் எங்களையும் இணைத்திருங்கள்.
சென்னைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான முகங்களுள் நாங்களும் ஒரு முகம். அவ்வளவுதானே தவிர, இன்னமும் மீள முடியாத எண்ணற்ற மக்களை மீட்டெடுக்கும் வேள்வியில் கைகோர்த்து செயல்பட்டு, வென்றெடுக்கப்பட்ட மனிதத்தில் நாமும் இணைந்திருப்போம்.
இது எங்கள் அனுபவத்தின் ஒரு பதிவுதானே தவிர அனுதாபத்திற்கான பதிவு அல்ல. இந்த மழை நமக்கு உணர்த்திச் சென்றது மனித நேயத்தை மட்டுமல்ல; சென்னை வெயிலின் அருமையையும்தான்! ஆம்... இப்போதெல்லாம் சென்னையின் வெயில் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
[ஒரு படம் அகற்றப்பட்டு, இரண்டு படங்கள் இணைக்கப்பட்டன @ 21:50 / 03.01.2016.] |