கருத்து வழிச் சொற்கள் காற்றில் கலந்து காலாவதியாகிப் போகும். ஆனால், எழுத்து வழி ஏடுகள் தாம் காலத்தைக் கடந்து சிரஞ்சீவித்துவம் பெற்றுச் சிறப்புறும். எத்தனையோ வரலாற்று நாயகர்களின் சிறப்புத் தியாகங்கள் செவிவழிச் செய்தியாக மட்டுமே தலைமுறை தலைமுறையாகப் பரவி ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மறைந்தே போனது.
ஆனால், எழுத்தில் வாழுகின்ற தியாகிகளின் தகவல்கள் மட்டும் தான் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. இவற்றில் கூட ஆவணங்கள் அழிப்பு, தீயிட்டுக் கொளுத்துதல், கரையான் அரிப்பு, காணாமல் போவது, சண்டையில் நாசமாகிப் போனது, களவு போனது, இடமாற்றம் செய்யும் போது தவறிப் போனது, காலங் காலமாகக் கிடப்பில் இருந்ததால் காகிததாளே உடைந்து நொறுங்கிப் போனது என்றவாறு பல்வேறு இடையூறுகளையும் தாண்டி மிஞ்சி நிற்கின்ற ஆவணங்கள் மட்டுமே தற்போது தகவல் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன்.
இவையும் எங்கெங்கு உள்ளன என்பதும் வெகு சிலருக்கு மட்டும் தெரிந்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் இனி யாரும் ஈடுபடும் வாய்ப்பே கிடையாது. ஏற்கெனவே தியாகிகளாக இருந்தவர்களின் தகவல் ஆவணங்களைப் பாதுகாக்காப்பதே நமது நாட்டின் மிக பெரிய சொத்தாகும்.
இந்தப் பணிக்கான தேடுதலில் ஒரு பத்திரிகையாளர் ஈடுபட்டார். 'தினமணி" நாளிதழின் தலைமைச் செய்தியாளராக இருந்தவர் அவர். ஏராளமான இதழ்களில் கட்டுரைகள் எழுதியவர், தமிழ்க்கடல் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை வைத்திருந்து ஏராளமான நூல்களை வாசகர்களுக்கு வழங்கியவர். ஆண்டுதோறும் தமிழக அரசின் பரிசுகளை வாங்கி வெற்றிக் கோப்பைகளைத் தொகுத்துக் காட்டியவர் என்றவாறு ஏராளமான அனுபவ ஆற்றல்களைத் தன்னகத்தே கொண்டவரும், ஆயிரமாவது பிறை காணக் காத்திருப்பவருமான திருவாளர் வி.என். சாமி அவர்கள்தான் இந்தத் தேடுதல் நாயகர்.
அவர் மிகப் பெரும் சிரமங்கள் எடுத்து தேடித் திரட்டிய தகவல்களைச் சீர்மைப்படுத்தி நூல் வடிவில் வழங்கியிருக்கிறார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஜாதி, மதம், இனம், மொழி என்ற எந்தப் பேதமும் இன்றி அனைவரும் ஓரணியில் நின்று போராடினர். அப்போது சிறைக் கூடங்களை நிரப்பினர். இறுதியாக நாடு சுதந்திரம் பெற்றது. முஸ்லிம்களுக்கு என பாகிஸ்தான் உருவாயிற்று.
'இந்தியாவைத் துண்டாட முஸ்லிம்கள் காரணமாகி விட்டார்களே! என்ற கோபத்தில் சுதந்திர இந்தியாவில் இருந்த சில உணர்ச்சிவாதிகள் முஸ்லிம்களின் தியாக வரலாற்று ஆவணங்களை நாசப்படுத்தி விட்டனர். அவற்றையும் தாண்டி எஞ்சியுள்ள ஆவணங்களை மையமாக வைத்தது திருவாளர் வி.என். சாமி இந்த அரிய நூலை நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.
வெளிவராத அபூர்வத் தகவல், மறைந்தும் மறையாத தியாகிகளின் புகைப்படங்கள் கிடைக்காத நிலையில் வரைபடங்கள் என்றவாறு கருத்துக்களைப் படம் பிடித்துக் காட்டியது போல் நூல் உருவாகி இருக்கிறது.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏராளமான பகுதிகளின் இன்னும் இருள்தான் சூழ்ந்திருக்கிறது. அவற்றுக்கு ஒளியூட்டக் கூடிய விளக்கங்கள் இந்த நூலில் ஏராளம். தமிழில் வெளியான முஸ்லிம் தியாகிகள் பற்றிய முழுமையான ஒரே நூல் என்ற இதனைக் குறிப்பிடலாம். இதன் மொழியாக்கங்கள் மிகவும் அவசியம் என்பதை அரசும் உணர வேண்டும்.
வரலாற்று ஆய்வுப் பேழையாகவும், ஆய்வாளர்களின் பார்வை நூலகவும் இருந்தே தீர வேண்டிய அம்சங்கள் இந்நூலில் ஏராளம்.
இந்நூலை முழுமையாகப் படித்து முடிப்பவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தினரின் சுதந்திர வேட்கையையும், தன்னலம் கருதாத அர்ப்பணத் தொண்டையும் புரிந்து கொள்ள முடியும்.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, தமிழ்நாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆகும். அந்த மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கு கொண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். அவர்கள் பங்கு கொண்ட போராட்டங்கள், பெற்ற தண்டனை, சிறைவாசம் அனுபவித்த ஊர்கள் பற்றிய விவரங்களை அரசு ஆவணங்களிலிருந்து இயன்ற அளவு திரட்டி எழுதியுள்ளார்.
இந்திய விடுதலைப் பேரில் தமது இன்னுயிரை தியாகம் செய்த முதல் பத்திரிகையாளர் ஒரு முஸ்லீமாவார். அதன் தொடர்ச்சியில் கண்ணிய மிகு புண்ணிய காயல்பட்டணத்தில் 1878 - ஆம் ஆண்டு பிறந்தவர் செ.யி.ம. செய்யது அகம்மது மவுலானா. இவர் விடுதலைப் போராட்ட வீரர். 1925 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'அல் ஹிதாயா" என்னும் இதழின் ஆசிரியர். அந்த இதழை இவர் விடுதலைப் போருக்குப் பயன்படுத்தினார். அதனால் ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசு இவரைச் சிறையில் தள்ளியது.
அன்னார் 93/c தைக்கா தெருவை சேர்ந்த ஜனாப். மர்ஹீம் மௌலானா அவர்களின் மகன்.
ஜனாப். செ.யி.ம. செய்யது அஹமது மௌலானா அவர்களின் மகன்கள் இருவர்
1. மர்ஹீம். செய்யிது யாஸீன் மௌலானா
2. மர்ஹீம் செய்யது சல்மான் மௌலானா.
இவரின் மகன் ஜனாப் S.S.M. மஹ்மூது மர்ஜீக், குறுக்குத் தெருவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி எண்ணற்ற இஸ்லாமிய மக்கள் விடுதலைப் போரில் தங்கள் தியாகங்களை இத்திருநாட்டுக்காக அர்பணித்தவர்கள் வரிசையை தொகுத்து பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பாடத் திட்ட நிபுணர்கள் இந்நூலின் மீது கவனம் செலுத்தினால் நாட்டு மக்களுக்கு மிகப் பெரும் சகாப்தத்தின் ஓயாத தியாக உணர்வு சென்று சேரும்.
சுதந்திர தினங்கள் மற்றும் குடியரசு தினங்களின் போது, இது போன்ற நூல்களை மாணவ - மாணவியர்களுக்கு விநியோகித்து மகிழ வேண்டும். பள்ளி - கல்லூரிகளிலும் - பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு போட்டிகளுக்காக வழங்கப்படும் நூல்கள் பட்டியலில் இந்த நூலுக்கும் மகத்தான இடத்தை வழங்கலாம்.
67-வது குடியரசுதினம் கொண்டாடும் 26.01.2016 இன்று அனைத்து இஸ்லாமிய தியாகிகளின் தியாகத்தை நினைவில் கொள்வோம். |