| |
ஆக்கம் எண் (ID #) 190 | | | ஞாயிறு, ஐனவரி 31, 2016 | | வேதனையின் விளிம்பில்… (தொடர் 2): “ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களும்! – சிறுபிள்ளைகளும்!!” சமூக பார்வையாளர்
|
| இந்த பக்கம் 3342 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய | |
அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த கட்டுரையை படிக்கின்ற ஒவ்வொருவரும் , என்னுடைய நோக்கத்தை, வேதனையை உணரவேண்டுமானால் ஒரு முறை படித்தால் போதாது – பல முறை படிக்க வேண்டும். பல முறைப்படித்தால் உங்கள் மூலமாக ஒருவராவது பயன் பெறக்கூடும்.
- வஸ்ஸலாம். |
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இது என்ன தலைப்பு! பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டுவது கூடாதா? இல்லை பிள்ளைகள்தான் ஸ்கூட்டர் ஓட்டுவது குற்றமா? என்று நினைக்க தோன்றும் – அப்படி வாசகர்கள் நினைப்பது போல் கூடாது என்றோ, குற்றம் என்றோ சொல்ல வரவில்லை – அத்தியாவசிய , அவசியமின்றி ஸ்கூட்டர் ஓட்டுவதினால் ஏற்படும் சாபக்கேடுகளை பற்றிய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பற்றியதே! இந்த கட்டுரை.
பெண்கள் ஸ்கூட்டர்கள் ஓட்டுகிறதும், சிறு பிள்ளைகள் ஸ்கூட்டர் ஓட்டுகிறதை பெற்றோர்கள் அனுமதிப்பதும் / பார்த்துக்கொண்டிருப்பதும் , ஆலிம்கள் தங்களுக்கு பின்னால் பெண்களை இருக்க வைத்துக்கொண்டு ஸ்கூட்டர் ஓட்டுகிறதும் ஈமானில் பலகீனத்தை ஏற்படுத்துகிறது – இது சமுதாயத்திற்கு ஓர் இழிவு என்றே சொல்ல வேண்டும்.
பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டுகிறது நல்லதா? அது மார்க்கப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டுகிறதை அனுமதிப்பதற்கு / ஏற்றுக்கொள்வதற்கு பல காரணங்களை இந்த காலத்திற்கு ஏற்ற முறையில் விளக்கிட முடியும் – ஆனால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உற்றுநோக்கிட வேண்டும், சிந்திக்க வேண்டும், அப்போதுதான் எது சிறந்தது என்பது விளங்கும் – சிறந்தது எதுவோ! அதைத்தான் நாம், உண்மை முஸ்லிம்கள் கடைபிடிக்க வேண்டும்.
எது ஒன்றையும் இஸ்லாமிய ஒளியின் கீழ் நின்று செயல்படுத்த வேண்டும் அப்போதுதான் அது சிறந்ததாகவும், சிறப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும். அதல்லாது இன்றைய கால சூழல், பொருளாதாரம் , நாகரீகம் என்று பார்த்தோமானால் சீர்கேடுகள்தான் ஏற்படும்.
இன்று நம் ஊரைப் பொருத்தவரை பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டுகிறது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது – இன்னும் இரண்டு , மூன்று வருடத்தில் ஸ்கூட்டர் ஓட்டுகிறவர்களில் 20% பெண்களாகத்தான் இருக்கும் என்று இன்றைய கணக்கெடுப்பு சொல்கிறது.
சென்னை மாநகரத்தில் அலுவலக நேரங்களில் ஸ்கூட்டர் ஓட்டுகிறவர்களில் 12 முதல் 14 சதவிகிதம் பெண்கள் இருக்கிறார்கள். திருநெல்வேலியில் அலுவலக நேரங்களில் ஸ்கூட்டர் ஓட்டுகிறவர்களில் 8 முதல் 9 சதவிகிதம் பெண்கள் இருக்கிறார்கள்.
இப்பெரும் நகரங்களில் எல்லாம் பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்களே! ஸ்கூட்டர் அதிகமாக ஓட்டுகிறார்கள் – அதிலும் முஸ்லிம் பெண்கள் அத்திப்பூத்த மாதிரி ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள் – சென்னையைப் பொருத்தவரை ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களில் முஸ்லிம்கள் ஒரு சதவிகித்திற்கும் குறைவானவர்களே! இருக்கின்றனர்.
சென்றவருடம் நம் ஊரைப் பொருத்தவரை ஸ்கூட்டர் ஓட்டுபவர்களில், பெண்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தனர் ஆனால் இன்று 3 சதவிகிதத்தை தொட்டு இருக்கின்றனர் இது அசுர வளர்ச்சி ஒரு வருடத்தில் 3 சதவிகிதம் பெண்கள் என்பது மட்டுமல்ல – அதில் 90 சதவிகிதம் முஸ்லிம்கள் என்பதும் வேலை அற்றோர் (ஒன்றிரண்டு விதிவிலக்கு) என்பதும் அதிர்ச்சியை தரக்கூடியது. இந்த நிலை நீடித்தால் இன்னும் மூன்று வருடத்தில் 20 சதவிகிதத்தை தாண்டும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு மோசமான நிகழ்வை அறிந்ததால் அதைப் பற்றி கட்டுரை எழுத நாடியபோது நம்முடைய கட்டுரையின் காரணமாக அந்த நிகழ்வின் கதாநாயகிக்கு வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாதே! என்று எழுதாமல் இருந்தேன்.
ஆனால் இப்பொழுது சில நிகழ்வுகள் நடந்திருப்பதை, நடந்துக் கொண்டிருப்பதை அறிகிறேன் – கிட்டத்தட்ட அது போன்ற நிகழ்வுகளாகவே இருப்பதாலும் , மேலும் சும்மா மெளனமாக இருந்தால் எங்கே நாமும் குற்றவாளியாக ஆகிவிடுவோமோ என்ற எண்ணமும் மேலிட்டதால் இந்த கட்டுரையை எழுதுவதோடு அந்த மோசமான நிகழ்வையும் எழுதுகிறேன்.
பொதுவாக ஸ்கூட்டர் ஓட்டுகிறவர்கள் முறையாக விதிகளைப் பின் பற்றி ஓட்டுவதில்லை – அதிலும் பெரும்பாலான பெண்கள் அரவே விதிகளை பின்பற்றுவதில்லை – சிலரின் வேகமோ மிக அதிகம், சில மாதங்களுக்கு முன் ஒருநாள் மதியம் ஊருக்குள்ளே உள்ள தெருவில் ஒரு பெண் அதிவேகமாக ஸ்கூட்டரில் வந்துக்கொண்டிருக்கிறாள், அவள் வேகத்தடையை உபயோகிக்காமல் பக்கவாட்டு (Side Road) ரோட்டை உபயோகிக்க (அதுவும் வலது பக்கமாக உபயோகிக்க) முயற்சித்தபோது சிறுவன் ஒருவன் திடீரென குறுக்கிடுகிறான் – அந்த சிறுவன் மீது மோதாமல் இருக்க வந்த வேகத்தில் ஸ்கூட்டரை வேகத்தடை பக்கமாக திருப்ப அது வேகத்தடை மீதேறி நிலைதடுமாறி கீழே விழுகிறாள்.
கீழே விழுந்ததில் அவளுடைய அபாயா ஸ்கூட்டரில் மாட்டி அவள் அணிந்திருந்த நைட்டியோ / மேக்ஸியோ இழுத்துச்செல்லப்பட்டு அவள் நிர்வாணமாக தரையில் விழுந்து எழ முடியாமல் தவித்தபோது ரோட்டில் சென்ற இரு பெண்கள் ஓடிச்சென்று தூக்க முயற்சிக்கிறார்கள் அவர்களால் தூக்க முடியவில்லை – உடையை மட்டும் இழுத்துவிட்டு முழு நிர்வாணத்தை அரை நிர்வாணமாக குறைக்கிறார்கள் அதன் பின் ஓர் ஆண் வந்து ஸ்கூட்டரை தூக்கி துணியை அகற்றிவிட அந்த பெண்கள் இருவரும் அவளை பக்கத்தில் உள்ள முடுக்குக்கு அழைத்துச்சென்று ஆசுவாசப் படுத்துகிறார்கள்.
தன் உடல் நிர்வாணமாக்கப்பட்டதால் ஸ்கூட்டரை எடுத்துச்செல்ல மனமில்லாமல் – ஸ்கூட்டர் சாவியை வாங்கிக்கொண்டு முடுக்கு வழியாக வீட்டுக்கு சென்றுவிட்டாள். ரோட்டிலே சென்ற அந்த இருபெண்களும், ஸ்கூட்டர் பெண்ணையும், அவளுடைய பெற்றோரையும் வசைப்பாடிக் கொண்டே செல்கிறார்கள்.
இவள் தொழக்கூடியவளா? தொழுதால் தொழுகை எப்படிக் கூடும்? – தாய்மார்கள், பிள்ளைகளுக்கு சுத்தத்தைப் பற்றி, ஒழுக்கத்தைப் பற்றி படித்துக்கொடுக்க வேண்டும் – ஒழுக்கத்தை படிக்காமல் காலேஜுக்கு போய் என்னத்தை செய்யப்போறாளாம் – ஸ்கூட்டரை ஓட்டி என்ன சாதிக்கப்போறாளாம் என்று போகிற போக்கில் பேசிக்கொண்டே சென்றது காதில் விழ தவறவில்லை.
அந்த ஸ்கூட்டரின் ஞாபகமும், நெம்பரும் மறக்கடிக்கப்பட்டுவிட்டது – மேலும் அந்த ஸ்கூட்டர், ஓட்டிச்சென்றவளுக்கு சொந்தமானதா? அல்லது வேறு யாருடையதுமா? என்பதை அல்லாஹ்வே! அறிவான்.
இந்த நிகழ்வுக்குப்பின் பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டுகிறதை பார்க்கும்பொழுதெல்லாம் மனம் சஞ்சலப்படும் – மேலும், மேலும் மனவருத்தம்தான் ஏற்படுகிறதே! தவிர குறைந்தபாடில்லை.
ஆண்கள் என்றில்லாமல் பெரும்பாலான பெண்களுக்கு ஸ்கூட்டரை முறைப்படி ஓட்டத்தெரியவில்லை , சட்டத்திட்டங்களை கடைபிடிப்பதில்லை ஆனால் பின்னால் பெண்களையும் , பிள்ளைகளையும் உட்கார வைத்துக்கொண்டு தாறுமாறாக ஓட்டுகிறார்கள். சில நேரங்களில் மூன்று பெண்கள் (TRIPLES) உட்கார்ந்து செல்வார்கள் – இதை எப்படி ஏற்றுக்கொள்வது? ஆண்கள் மட்டும்தான் மூன்று பேர் செல்வார்களா? ஏன் பெண்கள் மூன்று பேர்கள் செல்லக் கூடாதா? என்ற சவாலாகத்தெரிகிறது!.
ஆரம்பத்தில் ஊருக்குள்தான் பெண்கள் ஓட்டினார்கள் இப்பொழுது திருச்செந்தூர்வரை வேலைக்காரியை பின்னால் உட்காரவைத்துக்கொண்டு செல்கிறார்கள் – அதற்கு அப்பாலும் செல்கிறார்களா? என்பதை நாம் பார்த்தது இல்லை - கேள்விப்பட்டதுமில்லை – இப்படி செல்வது கலாச்சார சீரழிவா ? இல்லையா? – இது எங்கே கொண்டு போய் விடும்!!.
இவைகளை நன்கு சிந்திக்க வேண்டும் - ஸ்கூட்டர் ஓட்டுகிற பெண்களைவிட அவர்களை ஸ்கூட்டர் ஓட்ட அனுமதிக்கின்ற பெற்றோர்களும் , கணவனும் , சகோதரனும்தான் முதலில் சிந்திக்க வேண்டும்.
பெண்கள் எங்கே, எப்படி ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொள்கிறார்கள் தெரியுமா? இரவு நேரங்களில் அதிகம் வாகனங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டப் பழகுகிறதை பார்க்கலாம்.
பெண்களுக்கு ஸ்கூட்டர் ஓட்ட எப்படி பழகிக் கொடுக்கிறார்கள்? – அவள் முன்னால் உட்கார, அவளுக்குப் பின்னால் அவளுடைய உடலுடன் ஒட்டியிருந்தவாறே! தகப்பன், தாய் மாமன், அல்லது சகோதரன் என்று யாராவது ஒருவர் இருக்கிறார்! – அவர்கள் மகரமானவர்கள்தான் என்று இருந்தாலும்கூட எப்படி உடம்போடு உடம்பு ஒட்டிக்கொண்டு இருக்க முடியும்? – இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலும் 10,12 வயது சிறுமிகளுக்குக்கூட ஸ்கூட்டர் பழகிக்கொடுக்கப்படுகிறது – பழகிக்கொடுப்பவர் மகரமானவர் என்றில்லை சகோதரியின் கணவர், சாச்சியின் கணவர் என்று மகரமில்லாதவர்களும் பழகிக்கொடுக்கிறார்கள் – இதனால் எவ்வளவு விபரீதங்கள் ஏற்படுகின்றன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு 7 வயதாகிவிட்டால் படுக்கையைவிட்டு விலக்கி வையுங்கள் என்று மார்க்கம் நமக்கு கற்றுத்தருகிறது எதற்காக! - அந்த வயதுதான் உணர்வுகளை உணரக்கூடிய வயது என்பதால் அந்த வயதில் உள்ளவர்களை அல்லது வயதுக்கு வந்தவர்களை ஒட்டி, உரசிக் கொண்டு எப்படி இருக்க முடியும் – அவர்கள் மகரமானவர்களாக இருந்தாலும் மார்க்கத்தில் அனுமதி இல்லையே! அதனால் ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக் கொடுப்பதற்காக எப்படி ஒட்டிக்கொண்டு இருக்கலாம்? – கொழுந்தியாவுக்கோ! அல்லது மச்சியின் மகளுக்கோ! உடலோடு ஒட்டியிருந்தவாறு எப்படி ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொடுக்கலாம் சிந்திப்பீர்?
பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கின்ற பெண் பிள்ளைகள் ஸ்கூட்டர் ஓட்டுகிறார்கள் – அவர்களுக்கு நேரம் காலம் இல்லை, இருட்டியபின்னும் ஓட்டுகிறார்கள் – பிள்ளைகள்மீது பெற்றோர்களுக்கு அக்கரை இருப்பதாக தெரியவில்லை. பள்ளிக்கல்வி துறையிலிருந்து புதிய, புதிய சட்டங்கள் வந்து கொண்டிருக்கிறது அதில் ஒன்றுதான் மாணவ, மாணவிகள் ஸ்கூட்டர் ஓட்டக்கூடாது என்பது. அவர்களுக்கு ஓட்டுவதற்கான லைசென்ஸ் கிடைக்காது. அப்படியிருந்தும் அவர்கள் ஸ்கூட்டர் ஓட்டுகிறார்கள் என்றால் அதை எப்படி அனுமதிக்க முடியும்.
சட்டம் வருவதற்கு முன்பு இருந்ததைவிட சட்டம் வந்தபின்பு தான் மாணவ,மாணவியர்கள் ஸ்கூட்டர் ஓட்டும் கலாச்சாரம் கூடியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஒரு மாணவி, யூனிபாஃர்முக்கு மேலே முறையாக அபாயா அணிந்து ஒரு புதிய பள, பளக்கும் ஸ்கூட்டரிலே ஒய்யாரமாக வந்து என் வீட்டருகே ஸ்டான்ட் போட்டு நிறுத்தினாள், பர்ஸை திறந்து மொபைலை எடுத்து டையல் செய்தாள், மறுமொழி வந்ததோ! இல்லையோ!! போனை பர்ஸில் வைத்து மூடினாள் – ஸ்கூட்டரை ஸ்டையிலாக ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டாள்.
புத்தம், புதிய இரட்டைக்கலர் ஸ்கூட்டர் – அதே இரட்டைக்கலரில் அபாயாவின் பார்டர், பர்ஸின் பார்டர் எல்லாம் மேட்சாகவே இருந்தது.
அந்த மாணவியிடம் எந்த தவறையோ, குறையையோ நாம் காணவில்லை – அவளுக்கு ஏன் ஸ்கூட்டர் வாங்கிக் கொடுக்கனும்? அதன் கலருக்குத் தக்க அபாயாவின் டிஸைன்! பர்ஸின் டிஸைன்!! ஏன் பிள்ளைகளை கெடுக்கனும்? என்பதுதான் நமது கேள்வி! – பிள்ளைகளின் மேல் கவனம் இருந்தால் அவர்கள் மீது மேலோட்டமான ஓர் பார்வை இருந்தால் அவர்கள் வழி தவற மாட்டார்கள்.
ஸ்கூட்டர் ஓட்டும் பெண்கள் எல்லோரும் வசதி படைத்தவர்கள் என்றோ! நடுத்தரவாதிகள் என்றோ! அல்லது வேலைக்கு போகும் பெண்கள் என்றோ! இல்லை - மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களும் ஓட்டத்தான் செய்கிறார்கள்.
இதில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், நடுத்தரவாதிகள் என்றில்லாமல் அதிக வசதி படைத்தவர்கள்கூட ஸ்கூட்டர் வாங்கி ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் கடனுக்கு (LOAN BASIS OR INSTALLMENT) வாங்கி பணம் கட்ட முடியாமல் – ஸ்கூட்டரை பிடுங்கிக் கொண்டுச் சென்ற வரலாறும் உண்டு.
அதைவிட கேவலம் சில மாதங்களுக்கு முன்பு ஸ்கூட்டருக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல், கடன் கொடுத்தவரிடம் வீட்டுக்கு வராதீங்க, போஸ்ட் ஆஃபீஸ்க்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாப்புக்கு வாங்க, விவரம் சொல்கிறேன் என்று அழைத்து, அந்த பெண்ணும், அவளுடன் வந்த வயதான (தாயோ அல்லது வேறு என்ன உறவோ!) மனசியும் – கடன் கொடுத்த பக்கத்து ஊர் காரரிடம் ரொம்பவும் கூச்சப்பட்டு ஈனமான குரலில் 2 மாதம் பொறுங்கள் கடனை முழுவதுமாக அடைத்து விடுகிறோம் என்று தவனைக் கேட்டு கெஞ்சுகின்ற காட்சியையும் பார்க்க முடிந்தது.
அந்த கடனை அடைத்தார்களா! அல்லது ஸ்கூட்டரை திருப்பிக் கொடுத்தார்களா! அல்லாஹ்வே! அறிவான். நம் அறிவுக்கு எட்டியது இது – நம் அறிவுக்கு எட்டாதது என்னென்னவோ! – மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டுவது அதிகரிக்குமேயானால் மிக விரைவில் ஆட்டோ வாங்கி ஓட்டக்கூடிய காலமும் வரும் – பெண்கள் ஆட்டோ ஓட்டுவதில் என்ன தவறு இருக்கிறது அவளுடைய குடும்பம் அவள் ஒருவளுடைய வருமானத்தில்தான் இயங்கவேண்டியது இருக்கிறது அதனால் தவறு ஒன்றுமில்லை - பெண்களுக்காக ஊருக்குள் மட்டும் ஓடும் என்று போடு போட்டு ஓட்டுவது கூடும் என்பார்கள்.
பின்பு பெண்களுக்காக மட்டும் என்பது குடும்பம் என்றாகி கடைசியில் பொது ஆட்டோவாக மாறும். ஊருக்குள் என்பது மொகுதூம் பள்ளி, திருச்செந்தூராகி – ஆறுமுகநேரி, ஆத்தூராகி உலகம் முழுவதற்கும் செல்லும் – இப்படி நடக்கும் என்பது சாத்தியமா இல்லையா? மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டும் கலாச்சாரத்தை பற்றி எழுத நினைத்த போது, பெண்கள் ஓட்ட, ஆண்கள் பின்னால் உட்கார்ந்து செல்கிறார்களே! அவர்களெல்லாம் மகரமானவர்களாக இருப்பார்களா? என்று வேதனையோடு இருந்தேன் – அவர்களில் மகரமில்லாதவர்களும் உண்டு என்பதை அல்லாஹ்! வெளிப்படுத்தினான் – சென்றமாதம் ஒரு பெண் ஸ்கூட்டர் ஓட்டிச்செல்ல அவள் பின்னால் ஒரு தாத்தா உட்கார்ந்திருந்தார் – அவள் வீட்டு வேலைக்காரரோ! தெரிந்தவரோ!! – அவரை அவருடைய வீட்டில் விடப்போகிறாளா? அல்லது சுகவீனமென்று மருத்துவரிடம் கூட்டிட்டு போகிறாளா? என்பதை அல்லாஹ்வே! அறிவான்.
இன்றைய பெண்களில் சிலர் மேல் நாட்டு பானியில் அவர்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர் –ஒரு சில பெண்கள் கையில் ஒரு “கப்” பை ஏந்திக்கொண்டு ஏதோ (டீ, காஃபியோ அல்லது கூல் டிரிங்கோ) அருந்திக்கொண்டு மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவாறு செல்கின்றனர் – சிலர் கணவனுடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து போகும்போது ஓப்பன் பர்தா அணிந்து, இரண்டு தொடையையும் விரித்து உட்கார்ந்து கொண்டும் – இன்னும் சிலரோ கணவனுடன் வாக்குவாதம் அல்லது கணவன் மனைவியுடன் வாக்குவாதம் செய்து கொண்டே செல்கின்றனர்.
நமது பெண்கள் எந்த அளவுக்கு மார்க்கப் பற்றும், கவுரவமும் நிறைந்திருந்தார்களோ! அது இன்று தவிடு பொடியாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணரமுடிகிறது - மேலும் இன்றைய சூழலில் பெண்களிடம் பல விசயங்களிலும் ஈமானின் பலம் மிகவும் பலகீனமாகிறது என்பதை நன்கு உணரலாம் – இவைகளை பார்க்கும்போது மனம் மிகவும் வேதனை அடைகிறது.
ஆகவே! ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களும், பின்னால் உட்கார்ந்து செல்லும் பெண்களும் தவறானவர்கள் என்றோ!, சண்டை பிடிப்பவர்கள் அல்லது திமிராக நடக்கக்கூடியவர்கள் என்றோ சொல்ல வரவில்லை – ஆனால் நமது பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டுவதால், பின்னால் உட்கார்ந்து செல்வதால் பல கலாச்சார சீரழிவுகள் உருவாகிறது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதை மட்டும் என்னால் சுட்டிக்காட்ட முடியும்.
என் கண்ணில் பட்டதையும், காதில் கேட்டதையும் எழுத வேண்டும் என்றால் புத்தகமாகத்தான் வெளியிட வேண்டியது வரும் – மக்களுக்கு சிலதையாவது தெரியப்படுத்த வேண்டும் அதன் மூலம் ஒரு சிலராவது பயன் பெறக்கூடும் என்ற நோக்கில் மறைக்க வேண்டியதை மறைத்து, சிலதை மட்டும் வெளியிட்டிருக்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் மக்களுக்கு நல்ல ஹிதாயத்தை கொடுத்து மார்க்க வழியில் வாழ்க்கையை அமைத்து, பலமான ஈமானுடன் வாழ கிருபை செய்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
|
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|