“ஜனவரி ஜம்ப் பண்ணிப் போயிடும்! ஃபிப்ரவரி ஃப்ளை பண்ணிடும்! மாாச்… மார்ச் பண்ணிப் போயிடும்! இப்பவே படிக்க ஆரம்பிச்சிடுங்கடீ... என எங்க எச்.எம். பிரமிளா மேடம் சொன்னது இன்னமும் காதுகள்ல ஒலிச்சிக்கிட்டு இருக்குது...
“ஏடீ... இப்படி மெலிஞ்சிக்கிட்டே போறே...? நல்லா சாப்பிடுங்கடீ...! எக்ஸாம்ல நல்லா ஸ்கோர் பண்ணனும்ல...?” என்று எங்கள் கண்களுக்கள் ஊடுருவி சிரிச்ச சிரிப்பும், அக்கறையும் இப்பவும் நெஞ்சுக்குள்ள ஃப்ரேம் போட்டு நிக்குது!
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் முடிந்து ஜனவரி வந்ததுமே அவங்களோட இந்த வார்த்தைகள் மனசுக்குள்ள அலையடிச்சிக்கிட்டே இருக்கும்... எம்பிள்ளைங்க எக்ஸாம் எழுத போறப்பல்லாம் எத்தனை முறை அவங்ககிட்ட இந்த டயலாக்க சொல்லியிருப்பேன்னு கணக்கே கிடையாது...! (உங்க வீட்ல எப்பூ...டி?)
நாமதான் இப்படி மார்க்... மார்க்...ன்னு (மார்க்கம்... மார்க்கம்...ன்னு இல்ல!) டென்ஷன் அகி ஹார்ட் பீட்டை எகிற வச்சிக்கிட்டு இருக்கிறோமே தவிர, பிள்ளைகள் தங்களோட capacity என்னன்னு தெளிவா தெரிஞ்சுகிட்டு... கூலா.. ப்ராக்டிக்கலா யோசிக்கிறாங்க! மணந்தால் மகாதேவன்... இல்லையேல் மரண தேவன் என்பது போல,“எம்புள்ள டாக்டராகனும்... இல்லைன்னா அட்லீஸ்ட் ஒரு என்ஜினீயராகவாவது ஆகனும்” என்று நம்மால் சாத்தியப்படுத்த முடியாத நமது கனவு பாரங்களை பிள்ளைகளின் மெல்லிய தோள்களில் ஏற்றிவிட துடியாய்த் துடிக்கின்றோம்... அவர்களுக்கே அவர்களுக்கென இருக்கும் கனவுகளில்... நமது ஆசைகளெனும் ஊசிகளைக் கொண்டு குத்திக் கிழித்து, காற்றுப் போன பலூனாய் அவர்களின் சுயத்தை சிதறடித்து விடுகிறொம்... மயிலின் இறக்கைகளைப் பிய்த்தெடுததுவிட்டு ஆடச் சொல்கிறோம்... குயில்களின் குரல்வளைகளை நெரித்துவிட்டு பாடச் சொல்கிறோம்...
அறிவியலின் மீதே ஆர்வம் இல்லாத பிள்ளைகளை நமது ஆசைகளுக்காக அறிவியல் பிரிவை எடுக்க நிர்ப்பந்திப்பதிலேயே நமது பிழை தொடங்கி விடுகிறது... தொடர்ந்த காலங்களில் படி... படி... என அவர்களைப் பாடாய்ப்படுத்தி... ஃபீஸ் கட்டிவிட்டோமே என்பதற்காக அவர்களுக்குப் பிடிக்காத டியூஷனில் கொண்டு அவளைத் தள்ளிவிட்டதோடு நமது கடமை முடிந்தது என்று ஸ்டெதஸ்கோப்போடு நமது பிள்ளையைக் கனவு காண ஆரம்பித்து விடுகிறோம்... நமது கனவிலே கருநாகமாய் அவர்களது மதிப்பெண்கள் கலைத்துவிட்டால்... “அவனைப் பார்... இவனைப் பார்... அவனுக்கு முடிகிறது உனக்கு முடியலையோ...?” என்ற ஒப்பீடுகளில் அவர்களின் திறன்களை ஒடுக்கி விடுகிறோம்... நான் ஒன்றுக்கும் இயலாதவளா என்ற சந்தேகங்களை அவர்களுக்கள் விதைத்து, அவர்களது தன்னம்பிக்கைகளுக்கு வேரிலேயே வெந்நீர் ஊற்றி விடுகிறோம்...
என்ன செய்வது? மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே மதிப்பீடு செய்யும் ஒரு குறுகிய வட்டத்தின் ராணிகளாகவும்... ராஜாக்களாகவும் பிள்ளைகளின் தயவால் நாம் முடிசூட்ட வேண்டும் என்ற பெருங்கனவு நம்மைத் தூங்க விடாது தினமும் துரத்திக்கொண்டே இருக்கிறது... துரத்தும் கனவின் எச்சமாய் வண்டி மாடுகளைக் குச்சி கொண்டு துரத்தும் வண்டியோட்டிகளாய் பெற்றோர்களாகிய நாம்!
முதலில் நாம் ஒன்றை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்! படிப்பு முக்கியம்தான்! இல்லையென்று சொல்லவில்லை!! இந்த மதிப்பெண்களெல்லாம்... அழியப் போகும் இந்த அற்ப உலகின் ஆசைகளுக்காக மட்டுமே! ஆகிரத்திற்கு (மறுமைக்கு) இதனால் ஆகப்போவது ஒன்றுமேயில்லை! நற்பண்புகளும்... நல்ல ஒழுக்க விழுமியங்களும்... இறையச்சமும்... உலக அறிவும்... உழைக்கும் ஆர்வமும்... செயல்திறனும் கொண்ட பிள்ளைகளாக இருப்பின் அது போதும்! தேர்வில் சாதிக்கிறார்களோ இல்லையோ... இறையுதவியால் வாழ்வில் நிச்சயம் சாதிப்பார்கள்.
“அதெல்லாம் சரிதான்! ஆனா காலைல 10 மணிக்க ரிசல்ட் என்றால் 10.02க்கெல்லாம் நண்பர்களிடமிருந்தும்... நலம் (?) விரும்பிகளிடமிருந்தும்... உறவினர்களிடமிருந்தும்... தொ(ல்)லைப் பேசி அழைப்புகள் விடாப்பிடியாய் விசாரிக்குமே... என்ற கவலை இப்போதே கண்ணைக் கட்டுகிறதே...?” என்கிறீர்களா? எனக்கும்தான்...! (எனது மகளும் ப்ளஸ் 2 தான்! அந்த ரிசல்ட் நாளை நினைச்சா இப்பவே கண்ணக் கட்டுது!)
இப்படியாக, வெளியிலிருந்து நமக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு நாமும் பலியாகி, பிள்ளைகளையும் பலிகிடாக்களாக்கிடத் துடிக்கிறோம்... நான் ஊட்டி வளர்த்த ப்ராய்லர் கோழி நல்ல புஷ்டியாய் இருக்கிறது என்று ஊரெல்லாம் பெருமையடிக்க எனக்கு மனசெல்லாம் ஆசைதான்... என்னுடைய ப்ராய்லர் கோழி அதற்கு ஒத்துழைக்க வேண்டுமே...? ஆகா... இதற்கு சரியான தீர்வு...... நாமக்கல் கோழிப்பண்ணைதான்... நமது கவலை விட்டது... கண்களைக் குருடாக்கி... காதுகளைச் செவிடாக்கி... அடித்தோ... பிடித்தோ... சக்கையாய்ப் பிழிந்து, சாறை நம்மிடம் தந்து விடுவார்கள்...! ரேஸில் ஓடும் என் பிள்ளை ஒன்று முதல் வரிசையில்தான் வர வேண்டும்... அல்லது முன் வரிசைகளிலாவது இருந்து மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்கிறோம்... ஆனால் “சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும்” என்பதை வசதியாய் மறந்து விடுகிறோம்... (என்ன முழிக்கிறீங்க...? நாமதாங்க அந்த சட்டி...!!!)
நமது சக்தி என்னவோ அதற்கேற்றார் போல் செயல்படுவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்ட முஃமின்கள் நாம் என்பதை நினைவில் கொண்டு, மதிப்பெண்கள் குறைவதற்கும்... அதிகமாவதற்கும் பிள்ளைகளின் முயற்சிகளையும், திறனையும் தாண்டி இன்னமும் எத்தனையோ காரணங்கள் உள்ளன என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்!
மனித ஆற்றலின் மீது நம்பிக்கை கொண்டிரக்கும் அதே நேரத்தில் விதியின் மீதும் - இறைவனின் நாட்டத்தின் மீதும்தான் முதன்மையாக நம்பிக்கைக் கொண்டுள்ளோம்... இறைவன் நாடினால் அதனை யாராலும் தடுத்திட முடியாது... இறைவன் தடுத்ததை யாராலும் வழங்கிடவும் முடியாது என்ற உண்மைக்கு நம் மனதை முழுமையாக தயார்படுத்திட வேண்டும்.
போனது போகட்டும்! இருக்கிற இந்த 30 நாட்களிலாவது நமது அக்கறையையும்... அன்பையும்... ஒத்துழைப்பையும் அவர்களுக்கு முழுமையாக வழங்குவது அவசியமானது... “எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நல்லா பண்ணு! உனக்கு சப்போர்ட்டிவ்வா நாங்க இருக்கோம்...!” என்று பசங்களுக்க வார்த்தைகளால் மட்டுமல்லாது... நமது உணர்வுகளாலும் வெளிப்படுத்தல் வேண்டும்.
கிடைக்கிற ஓய்வு நேரங்களில் அவர்களை அருகில் அமர்த்தி வைத்து, ஆறுதலா நாலு வார்த்தை பேசுறது... அன்பா தலை கோதி விடுறது... (வளர்ந்தா என்ன...? நம்ம பிள்ளைங்கதானே...??) சூடா ஒரு கப் காஃபி கொடுத்து சிநேகமா உரையாடுவது... இதெல்லாம் அவர்களுக்கு மனரீதியான பலத்தையும், “இவங்களுக்காகவாவது நாம நல்லா படிக்கனும்” என்ற உத்வேகத்தையும் கொடுக்கும்.
ரிவிஷன் தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைவாக எடுக்கும்போது... “இப்பவே இப்படீன்னா... பப்ளிக் எக்ஸாம்ல என்னத்த கிழிக்கப் போற...?” என்று எதிர்மறையாய்ப் பேசாமல், “அட... விடு! அடுத்து இன்னொரு மாடல் கொஸ்டின் போட்டப் பாரு...! நீ நினைச்ச ஸ்கோர் வரும் பாரு!!” என்று நாம்தான் மாரல் சப்போர்ட் பண்ணனும்! கூடவே, நினைவாற்றலை வலுப்படுத்துவதற்கான துஆக்களையும் சொல்லிக் கொடுத்து... இறைவனோடு அவர்களது நெருக்கத்தையும் அதிகப்படுத்த வேண்டும்.
குறிப்பாக அவர்களின் நேர நிர்வாகத்தை தொழுகை... பிரார்த்தனைகள்... குர்ஆன் திலாவத் (ஓதல்) ஆகியவற்றை உள்ளடக்கி அமைத்துள்ளார்களா என்பதைக் கண்காணித்து, அவ்வாறில்லையெனில் அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும்.
தேர்வு முடியும் வரை டி.வி., மொபைல், சாட்டிங்... சோஷியல் நெட்வர்க்... என்பதற்கெல்லாம் பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் மட்டும் தடா கிடையாது! வீட்டில் உள்ள எல்லோருக்கும்தான்! குறிப்பாக Brothers ப்ளீஸ்!
தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் வெறுப்பு வராதா? ஒரே வேலையைத் தொடர்ந்து செய்ய நம்மால் முடியுமா? நிச்சயம் முடியாது... குட்டி குட்டி ப்ரேக் எடுத்துட்டு பசங்க ரிலாக்ஸ் பண்ணும்போதும், தம்பி - தங்கைகளோடு அப்பப்போ விளையாடும்போதும்... கொஞ்ச நேரம் வீட்டைச் சுத்திச் சுத்தி வரும்போதும்... நாம பேசுறத வந்து வாய் பார்க்கும்போதும் கண்டுக்காம விட்டு விடுங்கள்!
“காலார வாக்கிங் போலாம் வா!”ன்னு நாமே அழைச்சுக்கிட்டு போகலாம்... வேளாவேளைக்கு ஜமாஅத்துக்குப் போறது... பக்கத்துல போய் மாலை நேரங்கள்ல விளையாடிட்டு வருவது... என்று அவர்களை அவர்களது இயல்பிலேயே இருக்க விடுங்கள்...!
வாழ்க்கை முழுதும் நாம் அவர்களிடம் காட்டும் பரிவு, தேர்வுக் காலங்களில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருக்கும்போது, அது அவர்களுக்கு ஒரு அசுர பலத்தைக் கொடுக்கும். அதை விடுத்து நாம் செய்யும் தேவையில்லாத விமர்சனங்களும், ஒப்பீடுகளும் அவர்களது பதற்றத்தை மேலும் அதிகப்படுத்திவிடும்!
ஆரோக்கியமான... எளிதில் ஜீரணமாகும் உணவுகளைக் கொடுப்பது... அயர்ந்து தூங்குவதற்கான நல்ல சூழலை அமைத்துத் தருவது... நமக்கிடையே இருக்கும் சண்டை சச்சரவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு... நல்ல அன்பான குடும்பச் சூழலை அமைத்துக் கொடுப்பது... ‘படிக்க வைக்கிறேன் பேர்வழி’ என்று அவர்களைத் தனிமையில் அடைத்து வைக்காதிருப்பது... “யாரிடமும் பேசக்கூடாது!” என்று வாய்ப்பூட்டு போடுவது... டியூஷன்... டியூஷன் என்று துரத்தாமல் இருப்பது... என்று நாம் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டிய அம்சங்கள் ஏராளம் உள்ளன.
ஒவ்வொரு குழந்தையையும் அதனதன் குறை-நிறை கலந்த இயல்போடு ஏற்றுக்கொண்டு, அவர்களைப் புரிந்து வழிநடத்துங்கள்! எப்படி நம்முடைய இயல்புகளோடு நம்மை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ அது போல!!
மறுபடியும் சொல்கிறேன்... பிள்ளைகள் ரொம்...ப சென்சிடிவ்! கண்ணாடி பாட்டில்களைப் போல அவர்களைக் கையாள வேண்டும்... அவர்களின் நுண்ணிய உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுத்துப் பாருங்கள்... ஈன்ற பொழுதினும் நீங்கள் பெரிதுவக்கம் பரிசை உங்களுக்குத் திருப்பித் தருவார்கள் - இன்ஷாஅல்லாஹ்! |