அண்மையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளை மூலம் வந்த இரண்டு எதிர்மறையான தீர்ப்புகள் (உயிரி எரிவாயு திட்டம், டிசிடபிள்யூ வழக்குகள்) சமூகத்தினுள் ஒரு வகையான கையறு நிலையையும், அவ நம்பிக்கையையும் கிளப்பி விட்டுள்ளது.
கட்டப்பஞ்சாயத்தின் நடுவர்களுக்கும், நீதிமனறத்தின் நீதிமான்களுக்கும் உள்ள வேறுபாடு மிகத் தெளிவானது. நீதிமான்கள் என்பவர்கள் இன்று சட்டக்கல்வியை முடித்து, நாளை காலை நீதிமான்களாக பதவியேற்கக்கூடியவர்கள் கிடையாது.
மாறாக - சட்டத்தை, நீதியை, தர்க்கத்தை முறையாக பல வருடங்கள் பயின்று - வழக்கறிஞர் பட்டம் பெறுகின்றனர். பின்னர் - ஒரு மூத்த வழக்கறிஞரிடம் - இளைய நிலையில் - பல வருடம் பயிற்சி பெறுகின்றனர். அதன் பின்னர் தனியாக வழக்கை நடத்துகின்றனர். இதிலும் பல வருட தேர்ச்சிக்குப் பிறகு அவர்களின் பணித்திறன், பட்டறிவு, தொழில் நேர்த்தி ஆகியவற்றை அறிந்த பின் நீதி வழங்கக் கூடிய நீதிமான்கள் எனும் அந்தஸ்தை இறுதியாகப் வழங்கப்பெறுகின்றனர்.
இத்தகைய மாண்பும் தகைமையும் உடைய நீதிமான்கள் - கறுப்பு வெள்ளை நிறங்களைப்போல மிகத்தெளிவான வழக்குகளில் அடிப்படையான சங்கதிகள் எதையும் கணக்கில் கொள்ளாமல் எப்படி - “ தள்ளுபடி “ என்ற தீர்ப்பை வழங்குகின்றனர் என்பது விலை மதிக்க முடியாத கேள்வி.
இதற்கான விடை - நடுப்பகல் நேரத்து கதிரவன் போல தெளிவானது. அனைவரும் அறிந்த ஒன்று. அந்த விடையானது, பாதிக்கப்பட்டவர்களின் நீதியை நேசிப்பவர்களின் அறிவிலும் உணர்விலும் சோர்வையும் எதிர்மறை உணர்வுகளையும் முழு வீச்சில் பிறப்பிக்க வல்லது.
மனித சிந்தனைக்கும் பார்வைக்கும் அடங்காத பேரண்டங்களும் பூமியும் இறைவனின் நீதியாலும் கட்டளையாலும் மட்டுமே அதனதன் இடத்தில் நிலை பெற்றிருக்கின்றன.
பூமியில் தன்னுடைய பேராளராக (பிரதிநிதி) அனுப்பி வைத்த மனிதனுக்கும் இறைவன் விதித்த கட்டளை “ நீதியை நிலை நிறுத்துக “ என்பதுதான்.
உலகில் நீதியை நிலை நிறுத்துவதின் வழியாக அக்கிரமங்களையும் குழப்பங்களையும் வரம்பு மீறல்களையும் ஒழித்து அனைத்து உயிரினங்களும் அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழ்ந்து நிறைவதற்கான ஓரிடமாக நீடிக்க வைப்பதுதான் இறைவனின் நோக்கம்.
ஹிந்துக்களிடையே ஒரு சொல்வழக்கு உண்டு:
மனிதர்களுக்கு தீட்டானால் கங்கையில் குளிப்பார்கள்
கங்கையே தீட்டானால் எங்கு போய் குளிப்பது?
உண்மைகளையும், சான்றுகளையும் நீதிமன்றங்களில் எவ்வளவுதான் அள்ளி அள்ளி போட்டாலும் “ அவைகளை எல்லாம் தூக்கி ஒரு மூலையில் போடு. இந்தா பிடி! நான் தரும் தீர்ப்பை “ என்ற ரீதியிலான அதிரடி தீர்ப்புகளின் வாயிலாக இவர்கள் எதை நோக்கி மக்களை தள்ளுகின்றார்கள்?
இங்கு நீதியை நிலை நிறுத்துவதற்கு உண்மைகளும் சான்றுகளும் போதாது. அதற்கு அப்பாலும் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன என்றுதானே பொருள்? மக்களை நீதி மன்றங்களின் மேல் நம்பிக்கையிழக்கச் செய்வது போல கலகமூட்டும் செயல் வேறொன்றுமில்லை.
சலனமின்றி கிடக்கும் நீர் நிலைகளுக்குள் ஒரு கல்லை விட்டெறியும்போது அது முதலில் அதன் மேல் பரப்பில் ஒரு வளையத்தை உருவாக்கும். அது விரிந்து விரிந்து தன்னைச் சுற்றி எண்ணற்ற அதிர் வளையங்களை உருவாக்கிக் கொண்டே செல்லும்.
அது போலத்தான் நீதமான அல்லது அநீதமான எந்த ஒரு சொல்லும் செயலும் மனித மனங்களில் சமூக வாழ்க்கையில் ஏன் வானங்களிலும் பூமிகளிலும் கூட உடன்பாடான அல்லது எதிர்மறையான எண்ணற்ற அதிர் வளையங்களை உருவாக்கும்.
பாதை மறுக்கப்பட்ட நீரானது சென்னையில் 100 வருடங்களுக்குப்பிறகு தன் தடத்தை தேடி வந்ததைப்போல மறுக்கப்பட்ட நீதியும் ஒரு போதும் தன் தடத்தை மறக்கப்போவதில்லை.
அது எத்தனை ஆண்டுகள் உருண்டு பறந்தாலும் சரியே அல்லது எத்தனை தலைமுறைகள் கடந்து சென்றாலும் சரியே நீதியானது தன் இடத்தை கண்டு பிடித்தே அடைந்தே தீரும்.
டி.சி. டபிள்யூ ஆலையின் மாசு குற்றங்களுக்கெதிரான சான்றுகள், ஒளிப்படங்கள், வரைபடங்கள், தீர்ப்புகள், ஆய்வறிக்கைகள் போன்றவற்றை ஒன்றன் மேலாக ஒன்றாக அடுக்கி வைத்தாலே குட்டி மலை ஒன்று உருவாகி விடும்.
குவிந்து கிடக்கும் இந்த குற்றத்தை தள்ளுபடி என்ற ஒற்றை வரியால் ஒதுக்கி தள்ளுவது மலையை நகத்தால் சுரண்டிக் கரைத்து விட்டதாக நினைப்பதற்கு சமம்.
குருதியும் சதையும் உணர்வும் நினைவும் ஆசையும் கோபமும் அச்சமும் நிறைந்த நீரோட்டம் போல ஓடி வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களில் முன்னூறு பேரை இருள் மூலைக்குள்ளிருந்து பாய்ந்து கடிக்கும் கொடும் புலி போல புற்று நோய் கடந்த 15 ஆண்டுகளில் கொன்று தின்று தீர்த்திருக்கின்றது.
இவை எதுவும் தீர்ப்பு சொல்லும் கண்களுக்கு ஆளுமைகளுக்கு போதாது போலும். போபாலில் யூனியன் கார்பைட் ஆலை பேரிடரில் ஒரே நாளில் கொத்து கொத்தாக சனம் செத்து மடிந்த பேரவலம் போல இங்கும் நடந்தால்தான் நீதி தேவதையின் கண்கள் திறக்கும் போலும்.
வீட்டின் அன்றாட குப்பைகளை “டபக்” என தொட்டியில் வீசும் அனிச்சை செயல் போல ஊரையும் உலகத்தையும் சாட்சியாக நிறுத்தி செங்காவி நிறத்தில் நமதூரின் கடலுக்குள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பாதரச நச்சுக்கழிவுகளை கொட்டி வரும் டி.சி. டபிள்யூ ஆலையின் குற்றச்செயல்கள் நீதியின் காவலர்களின் கண்களுக்கு பால் ஊற்றுவது போல தோன்றியதோ என்னவோ?
மக்கள் மரங்கள் செடி கொடிகள் நதிகள் மலைகள் ஓடைகளின் வாழ்விடங்களையும் சூழலையும் வளர்ச்சியின் பேரால் பறிக்கும் பெரு வணிக நிறுவனங்களின் சூறையாடலுக்கு எதிரான நீதி மன்ற வழக்குகள் பெரும்பாலும் வணிக கொள்ளையர்களுக்கும் ஆள்வோருக்கும் சாதகமாகவே தீர்க்கப்படுகின்றன.
முதலாளிகளின் கூடாரமான காங்கிரஸ் கட்சியும், ஃபாஸிஸ ஹிந்து முன்னணியும், பா.ஜ.கவும் - டி.சி. டபிள்யூ ஆலை போன்ற பெரு வணிக முதலாளிகளின் குற்றச் செயல்களை தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு நாட்டு வளர்ச்சி என்ற பெயரில் சரி காணுவதையும் காண முடிகின்றது.
இவை குறித்து நமக்கு வியப்போ கவலையோ தோன்றுவதில்லை. காரணம் இவை அனைத்தும் ஒரே சாக்கடையில் ஊர்ந்திடும் புழுக்கள் போன்றவர்கள். அவைகளின் நெளிவு ஒரே அலைவரிசையில்தான் இருக்கும் என்ற தெளிவு அனைவருக்கும் இருக்கின்றது.
ஆனால் நமதூர் சனங்களில் மிகச் சிறுபான்மைக் குழு ஒன்று டி.சி. டபிள்யூ ஆலையின் குற்றச் செயலுக்கு ஆதரவாக இருப்பதை எப்படி புரிந்து கொள்வது?
பல கோடி ரூபாய்களுக்கு முதலாளியான எனது சிறு பருவத்து நண்பன், “ டி.சி. டபிள்யூ ஆலைக்கு எதிராக நாம் பொய்யை பரப்புகின்றோம் “ என்கின்றான்.
இன்னொரு பக்கம் நமது நகர் மன்ற உறுப்பினர்களில் சில பேர் டி.சி. டபிள்யூ ஆலைக்கு சென்று கை நனைத்து விட்டு வந்திருக்கின்றனர். கிடைத்த கை மடக்கு எவ்வளவு என்பது அவர்கள் சொல்லாமல் யாருக்கும் தெரியப்போவதில்லை.
பொது இடங்களுக்கு என டி.சி.டபிள்யூ ஆலை போடும் சில்லறைகளை எவ்வித தயக்கமுமின்றி வாங்கி போட்டுக்கொள்வதில் சில மனிதர்கள் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.
நமது மனதின் சிறுமைகள் அதன் முழு வடிவத்தில் இது போன்ற தாழ்ந்த செயல்களின் வழியாக கசிந்து வடிகின்றது என்றுதான் பொருள். சக மனிதனின் துயரத்தையும் அவலத்தையும் அதில் தனக்கென்ன ஆதாயம் என்ற அளவு கோல் கொண்டு அளப்பவர்கள் இவர்கள் என்றுதான் புரிய முடிகின்றது.
“ சொன்னா கேட்டீங்களா “ என இப்போதும் “ டி.சி.டபிள்யூக் காரன் நரேந்திர மோதியின் ஊர்க்காரம்பா . பணத்த அடிச்சி தப்பிச்சிக்கிருவாம்பா, இவனோட மோதுரதுலாம் வீண் வேல “ என்ற சொற்களை இந்த போராட்டம் தொடங்கிய நாட்களிலிருந்தும் நாம் பல பேரின் வாயிலிருந்து கேட்க முடிகின்றது.
போராட்டம் தொடங்குவதற்கு முன்பே நாங்கள் தோற்று விட்டோம் என கால் மடக்கி தலை பணிந்து கீழடங்கும் தாழ்மையை தனக்குள் கொண்டவை இது போன்ற சொற்கள்.
சொந்த வாழ்க்கை என்ற சுற்றுச் சுவருக்கு அப்பாலும் வாழ்க்கை உயிர்த் துடிப்புடன் இயங்குகின்றது என்பதை இந்த கனவான்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
டி.சி.டபிள்யூவின் குற்றங்களுக்கெதிராக தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் பின்னனியில் இருக்கும் நெடிய உழைப்பின் வலியின் புறக்கணிப்பின் அவமானத்தின் அர்ப்பணத்தின் தடங்களை புரிந்து கொள்ளத் தவறும் ஒவ்வொரு கணமும் நன்றி செலுத்தும் நமது பண்பில் நாம் குறை வைத்தவர்களாகத்தான் ஆவோம்.
இதற்காக முகம் தெரிந்தும் தெரியாமலும் உழைத்த ஒவ்வொரு ஆளுமைக்குமான நற்கூலியை முழுமையாக வழங்குமாறு நாம் வல்ல றஹ்மானிடம் கோர வேண்டும்.
```
நமதூரைச் சார்ந்த குழந்தைகள் நல மூத்த மருத்துவருடன் புற்று நோய் குறித்த ஆவணப்படம் ஒன்றின் நேர்காணலுக்காக உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர் சொன்னார் , “ வேதியியல் ஆலையின் நீர் , காற்று மாசினால் நமதூர் குழந்தைகளுக்கு இளம் காச நோயின் பாதிப்பு கூடுதலான அளவில் உள்ளது. இதிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி மாத்திரையிலும் மருந்திலும் இல்லை. இந்த ஊரை விட்டு வெளியேறுவதுதான் தீர்வு “ என்றார்.
கருமையையும் நீலத்தையும் தன் உடல் முழுக்க பூசி தவழ்ந்து உருளும் எங்கள் மன்னார் வளைகுடா.
தாய்மைக்குள் நுழைந்து அடங்கும் ஆண்மை போல அதற்குள் மரகதப்பச்சை நிறத்தில் பாய்ந்து கலக்கும் நெல்லை தூத்துக்குடிச் சீமையின் உயிர் நீர் பெருந்தாரை தாமிரபரணி.
மன்னார் வளைகுடாவையும் தாமிரபரணியையும் இவைகளுக்கு மேலாக இள நீல விதானமாக கவிழ்ந்து நிற்கும் வெண் பஞ்சு ஆகாயத்தையும் தன் விருப்பப்படி விற்று தீர்க்க அவை ஒன்றும் டி.சி. டபிள்யூ ஆலையின் விற்பனை சரக்கல்ல.
உங்கள் மனங்களுக்கும் கண்களுக்கும் கரங்களுக்கும் அவை பணக்கற்றைகளாகவும் பங்கு சந்தை ஈவுகளாகவும் மட்டுமே தெரியும்.
ஆனால் எங்களுக்கு அவற்றின் ஒவ்வொரு துளிக்குள்ளும் எங்கள் ஊரின் நெறியின் மூதாதையரின் எங்களது பண்பாட்டின் வரலாற்றின் நினைவுகளும் ஏக்கங்களும் விருப்பங்களும் இவை அனைத்தும் துகளாகவும் அதனினும் குறுகிய அணுவாகவும் கலந்து எங்களை எப்போதும் தாய்மைக்கு நிகரான அரவணைப்பின் வெதுவெதுப்புடன் பொதிந்து கொண்டே இருக்கின்றன.
டி.சி.டபிள்யூ ஆலை முதலாளிகளே ! அரசே ! நீதி மன்றங்களே நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள்!!
அலையடித்து கிடக்கும் மன்னார் வளைகுடாவின் ஒவ்வொரு சொட்டு நீரும் எங்களின் தாய்ப்பாலுக்கு சமம். உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக பாதரசத்தை புகட்டுவீர்களா ?? பின் ஏன் எங்கள் வாயில் நஞ்சை ஊற்றுகின்றீர்கள்?
டி.சி.டபிள்யூ ஆலை முதலாளிகளே ! அரசே ! நீதி மன்றங்களே ! நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் !!
நீதி பெற்றிருப்பதாக உங்கள் முதுகை நீங்கள் தட்டிக் கொடுத்துக் கொள்ள வேண்டாம். இது எங்களுக்கு தோல்வியில்லை. ஏனென்றால் தோற்பது ஒரு போதும் நீதியாக இருக்கவும் முடியாது. வாங்கப்படுவதும் ஒரு போதும் நீதியாக இருக்கவும் முடியாது. எனவே நீங்கள் வாங்கியிருப்பது அநீதியைத்தான் அநீதியை மட்டுமேதான்.
இது எங்கள் மண். இது எங்கள் நீர். இது எங்கள் ஆகாயம். இதை உங்களிடமிருந்து நாங்கள் பெறவுமில்லை. நீங்கள் உங்கள் கரங்களினால் இதை எங்களுக்கு செய்தளிக்கவுமில்லை. இது அகிலத்தாரின் இறைவன் எங்களுக்கு போட்ட பிச்சை.
இது எங்கள் காற்று. எங்கள் மண் எங்கள் நீர் எங்கள் வீடு எங்கள் திடல் எங்களது கடல் எங்களது கரை. இந்த மண்ணில் வாழும் அனைவருக்கும் இது சொந்தம்.
இறைவன் நாடினாலே தவிர இதைவிட்டு நாங்கள் ஒரு போதும் அகல மாட்டோம். இதை பறிப்பதற்கான உங்கள் முயற்சிகளுக்கு எதிரான முயற்சிகளும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும் இன்ஷா அல்லாஹ் !!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross