நேற்று முன்தினம் தற்செயலாக வாட்ஸ்அப்பை நோண்டிக் கொண்டிருந்தபோது... எதிர்பாராது ஒரு மரண அறிவிப்பு! செய்தித்தாளில் வெளியான ஒரு கண்ணீர் அஞ்சலியை பார்வைக்கு மெஸேஜ் பண்ணியிருந்தனர். பார்த்ததுமே மனம் திடுக்கென்றது... என்றும் நினைவில் அழியாத அந்த முகம் எங்கள் எட்டாப்பம்மாவுடையது.
எனக்குத் தெரிந்து, நான் நர்ஸரியில் சேர்ந்த காலத்திலிருந்து, எனது எட்டாம் வகுப்பு வரையிலும் இந்த எங்கள் எட்டாப்பம்மாதான் (அப்போதைய) சுபைதா நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியை! அதுக்கும் முன்னால எங்க உம்மாவுக்கும் அவங்க டீச்சரா இருந்திருக்காங்க... சுபைதா நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியான பிறகு எங்க எட்டாப்பம்மாவும் தலைமையாசிரியையாக இல்லாமல், ஆசிரியையாகப் பணியாற்றினாங்க!
மூன்று தலைமுறை மாணவியருக்கு ஆசிரியையாக இருந்திருக்காங்களாம்!. அப்பவும் சரி! நான் படித்தபோதும் சரி! எப்பவுமே எட்டாம் வகுப்புக்குத்தான் அவங்க டீச்சர்! அதனாலதான், புஷ்பம் ஃபெலிஷியா-ங்கற அவங்களோட பெயரே எங்களுக்கு ரொம்ப நாளா தெரியாது. எட்டாப்பம்மான்னாதான் எல்லோருக்கும் தெரியும். (எட்டாம் வகுப்பு அம்மா என்பதைத்தான் எட்டாப்பம்மா என்று அழைத்தோம்!)
எட்டாப்பம்மா முகத்தை இன்றைக்கும் மறக்க முடியாது. அந்தக் காலத்திலேயே அப்படியொரு கம்பீரம்... கணீரென்ற குரல்... எப்போதும் உதடுகளோடு ஒட்டியிருக்கும் புன்னகை... நேர்த்தியான உடைகள்... தலையில் ஒரு வலை மூடிய பன் கொண்டை... கையில் கறுப்பு அல்லது ப்ரவுண் கலர் ஹேண்ட் பேக்... என எப்போதும் ஒரே தோற்றத்தில் ஒரு typical teacher ஆக வலம் வந்தவர்கள். மூன்று தலைமுறை மாணவியருக்கு ஆசிரியை என்றாலும், எல்லாத் தலைமுறை மாணவியரின் பெயர்களையும் மறக்காமல் கூறுவார். (இரண்டு வருஷத்துக்கு முன்னாடி என்கிட்ட படிச்ச மாணவியின் பெயர் கூட எனக்கு சட்டென்று நினைவுக்கு வர்றதில்லை!)
எட்டாப்பம்மா... எனக்குப் பல வகைகளில் ரொம்பவும் ஸ்பெஷல்! இரண்டு சம்பவங்களைக் குறிப்பாக நான் அடிக்கடி நினைவுகூர்வதுண்டு. நான் எட்டாம் வகுப்பு படித்தபோது, எட்டாப்பம்மாதான் எனக்கு க்ளாஸ் டீச்சர்... (எங்க உம்மா எட்டாம் வகுப்பு படித்தபோதும் அவங்கதானாம்!) மேத்ஸ் டீச்சரும் கூட! அப்போதெல்லாம் எட்டாம் வகுப்பில்தான் அல்ஜிப்ரா புதுசாப் படிப்போம். (இப்பவும் அப்படித்தானா அல்லது எல்.கே.ஜி.யிலேயே படிச்சி கொடுக்கப்படுதான்னு தெரியல! Lol)
எங்களுக்கு முன்னாடி படிச்ச சீனியர் லாத்தாமர்களெல்லாம்... அஸர் நேரத்துல வெட்டையில விளையாடும்போது... (நம்ம பிள்ளைங்களுக்கு வெட்டையும் தெரியாது; வெளையாட்டும் தெரியாது!) “அல்ஜிப்ரா ரொம்...ப கஷ்டம்... புரியவே புரியாது! Algebra is Cobra” (அவங்களோட English knowledgeஐக் காட்டுறாங்களாமாம்...) அது இதுன்னு வயித்துல புளிய கரச்சி விட்டுட்டாங்க... நானும் அந்த மைன்ட்செட்லயே அல்ஜிப்ராவைக் கவனிக்க ஆரம்பிச்சேன்... எட்டாப்பம்மா பாடம் எடுக்கறாங்க... எடுக்கறாங்க... எங்க சீனியர் லாத்தாமாரெல்லாம் சொன்ன அந்த கோப்ரா வரவேயில்லை. ஒருவேளை இனிமேதான் வரும்-ன்னு காத்துக்கிட்டு இருந்தா, அல்ஜிப்ரா பாடமே முடிஞ்சி போச்சி!
எங்க எட்டாப்பம்மா அவ்வளவு சிம்பிளா, அழகா சொல்லித் தந்தாங்க... “அல்ஜிப்ராவுல வர்ற ப்ளஸ் (+) குறியீடுகள் எல்லாம் உன் கையில இருக்கிற பணம்ன்னு வச்சுக்க! மைனஸ் (-) குறியீடு எல்லாம் நீ கொடுக்க வேண்டிய கடன்னு வச்சுக்க... இப்ப கணக்கு போடு! குழப்பாம இருக்கும் பாரு!!” என்று சொல்லி, ரொம்...ப ஈஸியா புரிய வச்சாங்க!
அவங்களோட டீச்சிங் முறை என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணியதாலதான் “பேராசிரியர் பெருமானார்” என்ற தலைப்பில் நான் எழுதிய நூலில் கூட, “உதாரணங்களைக் கூறி பாடங்களை விளக்குதல்” என்ற தலைப்பில் இந்த அம்சத்தைக் குறிப்பிட்டிருப்பேன்.
இப்பவும் என் பிள்ளைக்கு அல்ஜிப்ரா அப்படித்தான் சொல்லிக் கொடுத்தேன்... “ம்ம்... சூப்பர்மா...”ன்னு சொன்னாங்க. “சூப்பர் நா இல்லமா... எங்க எட்டாப்பம்மாதான்!”ன்னு அவங்ககிட்ட சொல்லியிருக்கேன்.
இரண்டாவது சம்பவமோ என் வாழ்வில் பெரிய திருப்புமுனையாகவே அமைந்துவிட்டது எனலாம்.
ஒருநாள் திடீர்னு க்ளாஸ்ல எங்ககிட்ட, “உங்களுக்கு உங்க குர்ஆனை நல்லா படிக்கத் தெரியுமா?”ன்னு எங்க எட்டாப்பம்மா கேட்டாங்க... “ஆமா டீச்சர்! நல்.......லா தெரியும்”ன்னு கோரஸாக பெருமையடிச்சோம். (அப்பல்லாம் ‘மிஸ்’ கிடையாது! “குட்... மா......ர்னிங்... டீச்ச.......ர்...”தானே? “சரி! மனப்பாடமா ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க!” என்றாங்க!
நாமதான் முந்திரிக் கொட்டையாச்சே...? எந்திரிச்சி நின்னு, ‘அல்ஹம்து’ சூராவை பக்காவாக ஓதி முடிச்சிட்டு, ‘வெரிகுட்’ சொல்வாங்கன்னு எதிர்பார்த்துட்டு இருந்தா... “எங்கே மீனிங் சொல்லு பாக்கலாம்...?”ன்னு ஒரு குண்ட தூக்கிப் போட்டாங்களே பார்க்கலாம்! அது 1985ஆம் ஆண்டுன்னு நினைக்கிறேன்... அப்பல்லாம் யாருக்கு மீனிங்லாம் தெரியும்?
“அதெல்லாம் தெரியாது டீச்சர்”ன்னு வெக்கமே இல்லாம கூலா பதில் சொன்னா... “உங்க இறைவன் கிட்டயிருந்து உங்களுக்கு வந்த வேதத்த எப்படி புள்ள நீ தெரியாம இருக்கலாம்...? பின்னே எப்படி நீ அத ஃபாலோ பண்ண முடியும்?” என்று ஒரு போடு போட்டாங்க!
‘மருக்’ன்னு மண்டைக்குள் இருந்த ஏதோ ஒரு திரை உடைஞ்சி... ‘சர்’ருன்னு ஒரு கதவு ஓபன் ஆச்சு... அதே சுருதியோட வீட்டுக்கும் வந்து, உம்மாகிட்ட, “உம்மா! நம்ம வீட்டுல தமிழ்ல குர்ஆன் இருக்காமா?” என்று கேட்டா...... ஏதோ கேக்கக் கூடாதத நான் கேட்டுட்ட மாதிரி என் உம்மா ஒரு மாதி...ரியா பாக்குறாங்க...
இன்றைக்கும் குர்ஆனின் அவசியத்தைப் பற்றி நான் உரையாற்றும்போதெல்லாம் எங்க எட்டாப்பம்மாவுடைய இந்த சம்பவத்தை நான் சொல்லாம விடுவதே கிடையாது.
சிலுவை போட்ட லாங்க் செயின் கழுத்தில தொங்கும்... அது எப்பவுமே அவங்க கையில விளையாடிக்கிட்டே இருக்கும்... அது அவங்க மேனரிஸம்... ஏதாவது தப்பு பண்ணினா வயித்தப் பிடிச்சுதான் சவ்வு மிட்டாய் இழுப்பாங்க...
ஆஃபீஸ் ரூம்ல அவங்க உக்கார்ந்திருக்கிற அழகே தனி! அதிர்ந்து அவங்க பேசி நான் அதிகமாகக் கேட்டதில்லை! நான் எட்டாம் வகுப்பு படித்தபோதே அவங்களும் ரிடையர்ட் ஆகிட்டாங்க! ஆனாலும் அவ்வப்போது ஸ்கூலுக்கு வேலையா வரும்போது... பேங்க் வேலையா வரும்போது... போஸ்ட் ஆஃபீஸ் வரும்போதெல்லாம் தன் பழைய மாணவிங்க வீட்டுக்கெல்லாம் ஓர் எட்டு போயிட்டு வருவதை வழக்கமாகவே கொண்டிருந்தாங்க...
எவ்வளவு சிம்பிள் பாருங்க! அவங்க ஊரு நாசரேத்துலயிருந்து நம்ம ஊருக்கு வரும்போதெல்லாம் எங்க வீட்டுக்கும் வருவாங்க! (எங்க வீட்ல அவங்களுக்கு இரண்டு ஸ்டூடன்ட்ஸ் ஆச்சே...? போதாக்குறைக்கு, எங்க வாப்பாவும் - சென்ட்ரல் ஸ்கூல்ல பணியாற்றி வந்த அவங்க ஹஸ்பண்ட் ஜெயராஜ் வாத்தியாரோட ஸ்டூடென்ட்டாக்கும்...!) வரும்போது மறக்காம அவங்க வீட்டுத் தோட்டத்துல காய்ச்ச எலுமிச்சம்பழத்தை அதன் புத்தம்புது வாசத்தோட கொண்டு வருவாங்க...
இப்படியாக எங்க எட்டாப்பம்மாவின் நினைவுகள் இரண்டு நாட்களாக என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டேயிருக்கு... எங்க உம்மாவும் அவங்கள பத்தி புலம்பிக்கிட்டே இருக்காங்க... மத்திய காயலில், 1985 வரை சுபைதா ஸ்கூல்ல படிச்ச பெண்களுக்கெல்லாம் எங்க எட்டாப்பம்மா மனசுக்கு நெருக்கமானவங்கதான்! ஆயிரக்கணக்கான மாணவியருக்கெல்லாம் எட்டாப்பம்மாவாக இன்றைக்கும் நினைவில் நிற்பவர்கள்...
எம்.கே.டீ. அப்பா கூட க்ளாஸ் ரவுண்ட் வரும்போது... “கோழிக்கு எத்தன கால்...? ஆட்டுக்கு எத்தன கால்...?” என்று அவங்க கேக்கும்போது, பின்னாலிருந்து எங்க எட்டாப்பம்மா புன்சிரிப்பு சிரிச்சிட்டு நின்றது இன்றைக்கும் என் கண் முன்னால காட்சியா நிக்குது!
ஏணியாய் எங்களை உயரத்தில் ஏற்றி அழகு பார்த்த எங்க எட்டாப்பம்மாவின் டீச்சர்ஸ் pet ஆக நானும் இருந்தேன் என்பது என் வாழ்வின் பொக்கிஷ தருணங்கள்...
எங்க எட்டாப்பம்மாவை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
|