எந்த செயலுக்கும், எந்த காரியத்திற்கும், முயற்சிகள் தேவை. முயற்சி என்றால் சாதாரண முயற்சிகள் அல்ல. வெற்றியை பெறவேண்டுமானால் கடுமையான உழைப்பும், அதே சமயம் ஆர்வமும், கலந்தாலோசித்து ஒருசெயலை சரியான திட்டத்தோடு, இறைவனின் நல் உதவியாலும் நாம் செய்ய வேண்டும் அப்போதுதான் சில சோதனைகள் வந்தாலும் அதை ஏற்று, விடாமல் தொடர்ந்து நாம் கொண்ட முயற்சியில் வெற்றிபெற முடியும். வெற்றி பெற்றவர்கள், பல்வேறு நாடுகளில் ஒரு ஸ்தாபனத்தையோ, தொழிற்சாலையையோ, ஒரு குறிப்பிட்ட பொருளையோ உற்பத்தி செய்து விடுகிறார்கள் அவற்றின் ஏற்ப்பட்ட கஷ்டங்களையும், சோதனைகளையும் கண்டு சோர்ந்துவிடாமல் அவர்கள் வெற்றிகண்ட அனைத்தையும் நூல்வடிவில் தந்து சென்றிருக்கின்றார்கள். குறிப்பாக தமிழ்நாட்டை சார்ந்த ஜி.டி.நாயுடு அவர்கள் கண்டுபிடத்த விஞ்ஞான புதுகருவிகளை மக்களுக்கு எடுத்துக்காட்ட நூல்வடிவில் தந்து சென்றார்கள்.
நாம் சுமார் 350 வருடங்களாக இலங்கை சென்று பல்வேறு தொழில் செய்து வந்திருக்கிறோம். குறிப்பாக உயர்ந்த மணிகளான நவர்ந்த்தினங்கள் இலங்கை பூமியிலே பன்னெடுங்காலமாக நமது பெரியவர்கள் செய்துவந்திருக்கிறார்கள் அவர்களில் யாராவது ஒருவர் நவமணிகள் பற்றி நூல் எழுதியிருக்கிறார்களா? நமதூர் பிள்ளைகள் அன்றும் சரி, இன்றும் சரி ஜெமாலஜிஸ்ட் படிப்புகளையும், டைமண்ட் கட்டிங் கலைகளையும் கற்றவர்கள் இருந்த போதிலும், அவர்கள் எல்லாம் சிறு நூல்களாவது, பல்வேறு பத்திரிகளில் கட்டுரைகளாவது எழுதி இருக்கிறார்களா? இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் நீங்கள் கற்ற தொழில்களையும், சாதனை புரிந்த செயல்களையும் அவசியம் இந்த இணையதளத்தில் தொடர்ந்து எழுதிவருவீர்களா? முஸ்லீம்களில் நவரத்தினங்களை பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் எழுதிய பெருமை நீடூர் அய்யூப் அவர்களை சாரும்.
T.NAGAR L.K.S கோல்ட் ஹவுஸ் அதிபர் அக்பர்ஷா ஹாஜி அவர்களின் தந்தை S.A சுலைமான் M.A அவர்கள் பழமொழி ஆயிரம் என்ற தொடரை முஸ்லீம் முரசில் 40 ஆண்டுகளுக்கு முன் எழுதிவந்தார்கள். பின்னர் நூல் வடிவிலும் அது வந்திருக்கிறது. இதுபோல நமதூர் டாக்டர். கிஸார் D.C.H குழந்தை நல மருத்துவம் என்ற நூலை இரண்டு தொகுப்புகளாக(முதல் பதிப்பு 2004 இரண்டாவது பதிப்பு 2005) சமீபகாலத்தில் வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கின்றார்கள். நமதூரை சார்ந்த எந்த டாக்டர்களும் இதுவரை நூல் எதுவும் வெளியிட்டதாக தெரியலில்லை, அந்த பெருமையை தட்டிசெல்கின்றார் நமது டாக்டர். கிஸார் அவர்கள். நமதூரை பற்றிய வரலாற்றை எம்.கே செய்து அஹமது அவர்களும், ஆர். எஸ். அப்துல் லதீப் சாஹீப் M.A அவர்களும் நூல் எழுதி இருந்ததை நான் படித்திருக்கின்றேன்.
நம் ஊரை சார்ந்தவர்கள் லண்டன் , அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று வருகிறார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் குறிப்பாக எனது டைரி குறிப்பின்படி 32 நாடுகளில் வாழ்வதும் தெரியவருகிறது. ஏன் இவர்கள் அந்த நாடுகள் பற்றி அவர்களின் கலாச்சாரங்கள் பற்றி, தொழில் துறைகள் பற்றி மக்களுக்கு எடுத்துவைக்க நூல் எழுதலாமே. நீங்கள் சென்ற நாடுகள் குறித்து என்போன்ற எழுத்தாளர்களிடம் சொன்னால் நூலாக எழுதிதருவார்களே. உலகம் சுற்றிவரும் காயல் வாசிகளே நூல் எழுத முன்வருவீர்களா. உதாரணமாக நான் சென்ற நாடுகள் என்ற பிரயாண கட்டுரையை நூல்வடிவில் தந்த C. சுப்பிரமணியம் அவர்கள், இதயம் பேசுகிறது மணியம் அவர்களும் உலகில் பல்வேறு நாடுகளுக்கு சென்று பிரயாண கட்டுரை எழுதி வெளியிட்டார்கள். இந்த நூல்களை படிக்க வேண்டுமானால் சென்னை கன்னிமாரா நூலகத்தில் போய் படிக்கலாம்.
நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் நாம் பிறந்தோம் பல்வேறு நாடுகளுக்கு சென்றோம் தொழில்மூலம் சம்பாதித்தோம், மனைவி மக்களுக்கு கொடுத்தோம், சுற்றத்தார்களுக்கும் செலவு செய்தோம், இறுதியாக ஓய்வுக்காக ஊர் வந்தோம் காலங்கள் தேய்ந்துவிட்டது, சிலரை மரணமும் தழுவிவிட்டது, அவகளை பற்றிநாம் பேசினால் மட்டும் போதாது, அவர்கள் கற்றவைகளை நூல்வடிவில் தந்தால் காலத்தால் அழியாமல் இருக்கும் அல்லவா அதைதான் என் இதயம் உங்களிடம் படம்பிடித்து காட்டுகிறது. வருங்காலத்தில் நமது வாரிசுகளுக்காக அவசியம் நூல்களை எழுதி வெளியிடுங்கள் நமதூர் இணையதளங்கள் உங்களை பாராட்டி கௌரவிக்க இருக்கிறது மறந்துவிட வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
லண்டனில் தனது கணவரோடு தங்கி இருக்கும் எனது ஓவிய சகோதரி மோச்சி (எ) மீரான் நாச்சி அங்கு அடிக்கடி ஓவியக்கண்காட்சி நடத்தி வருவதாக அறிகிறேன் இந்த செய்தியை கூட அவர்கள் தவறாமல் படிப்பதும் அறிகிறேன். அவர்கள் தனது செல் போனில் படம்பிடித்து வந்து காண்பிப்பார்கள். நமது இணையதளங்களுக்கு உங்களின் ஒவிக்கன்காட்சியை படம்பிடித்து அனுப்பினால் என்ன? லண்டனில் வாழும் மக்கள் தான் உங்கள் ஓவியக்கலையை காண வேண்டுமா? நானும் நமது இணையதள வாசகர்களும் காண செய்வீர்களா? உங்களின் திறமைகளை எங்கோ மூடிமறைக்க எழுத்தாளனாகிய நானும் நமது இணையதளங்களும் இனி ஒருபோதும் அப்படி செய்ய விடமாட்டோம். இது ஒரு எச்சரிக்கை அல்ல படிக்கிற அனைவர்களுக்கும் அன்புக் கட்டளை என புரிந்துகொள்ளுங்கள்.
ஐரோப்பிய நாடுகள் இருளில் ஆழ்ந்திருந்த காலத்தில் அலி இப்னு சீனா (எ) இப்னு சீன் இவர்களின் வைத்திய குறிப்புகளை ஐரோப்பியர்கள் எடுத்து சென்று பல்வேறு மருத்துவ துறைகளை கற்றிருக்கிறார்கள். இன்னும் சில வைத்திய மேதைகள் அலி அத்தபரி , அல் ராஸி (கி.பி.865 -925), அல் மசூசி இவர்கள் தவிர வானவியலுக்கு அல்மன்சூர், அல் பராசி (கி.பி.721) இது போல் கணக்கியலில் அல்ஜீப்ரா எழுதியவர் ஒரு முஸ்லீம், புவியியல் கண்டுபுடித்தவர்களும், உலக வரைபடத்தை (பூமியின் விஸ்தீரம்) இவைகளை எல்லாம் கண்டறிந்தவர்கள் குறிப்புகளை அக்காலத்தில் எழுதிவைத்ததினால், உலகில் எல்லா நாடுகளும் அவர்களின் ஆய்வு ஆற்றல்களை அவரவர் நாடுகளுக்கு எடுத்துபோய் பயன்பட்டு இருக்கின்ற செய்தியை எல்லா சரித்திர ஆசிரியர்களும் அறிந்திருந்தும் முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் அவைகள் ஏனோ மறைக்கப்பட்டு வருவதை காணுகின்றோம். இந்த கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இன்னும் அதிகம் அறியவேண்டுமானால் இலங்கை வெலிகம அல் அஸ்ஹர் வெளியிட்டகம் 1991ல் மூன்றாம் பதிப்பு இஸ்லாமிய நாகரீகம், இதன் ஆசிரியர் முக்தார் ஏ முஹம்மது B.A (honors) அவர்களின் நூல் நமக்கு தெரிவிக்கிறது.
குமர்களின் தந்தை :
நமதூர் சதுக்கை தெருவை சார்ந்த மு.க.அ.ச.முஹைதீன் தம்பி அவர்களைத்தான் வடபகுதிமக்கள் அன்று குமர்களின் தந்தை என்று அழைப்பார்களாம். இவர்கள் பற்றி பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்கள் வெளியிட்ட 25 ஆம் ஆண்டு மலரில் மாசாமாசம் என்ற தலைப்பில் இவர்களின் கொடை தன்மைகளை, பொதுநல சேவை பற்றி குறிப்பிட்டதாக சொல்கிறார்கள். வடபகுதியில் உள்ள பெரிய ஜும்மா பள்ளி, சிறிய குத்பா பள்ளியின் தரையில் மார்பல் கல் பதிக்க அன்று பெரும்பங்கு செலுத்தியதாகவும் பலரிடம் பணம் பெற்று இந்த இரு ஜும்மா பள்ளியின் வளர்ச்சிக்கு இவர்கள் என்றும் உதவிவந்ததாகவும் தகவல் தந்தவர்கள் கூறுகிறார்கள். இவர்களின் உற்ற நண்பராக அம்பலத்தார் என்பவரும் எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்களாம்.
தோல் வியாபாரத்தில் நேர்மையால், தொழில் வளம் பெருகி இருந்ததால் வட பகுதிமக்கள் தினமும் இவர்களை காண வருவார்களாம். இவர்கள் எங்கு நின்றாலும் அவர்களிடம் சென்று தன் கஷ்டங்களை கூறும் போது செய்கை காண்பித்தி நாசூக்காக யாரும் அறியாவண்ணம் பணங்களை கொடுத்து அவர்களை அனுப்பிவைப்பார்கள். இவர்களின் அதிக பங்கு குமர்களை கரைசேர்க்க பணங்களை நண்பர் அம்பலத்தார் மூலம் ரகசியமாக கொடுப்பார்களாம். இவர்களை காண வந்த ஆண்களை விவரம் விசாரிக்க தன் நண்பரிடம் கூறும் வார்த்தை மாசாமாசம் என்று கேட்பார்களாம் (இந்த சொல்லுக்கு குமர்களை கரை சேர்க்கும் வழியில் பயன் படுத்தும் அதிக பணம் கொடுத்து அனுப்பும் படி ரகசிய சொல்லாகும்). இன்னும் இவர்களின் சேவை வீடு வீடாக சென்று பணங்கள் யாருக்கு தேவைப்படுமோ அவர்களை அறிந்து மறைமுகமாக தர்மம் கொடுக்கும் வள்ளலாக மறைந்திருக்கிறார்கள். இவர்கள் பற்றிய குறிப்புகளை எனக்கு சேகரிக்க உதவியவர்கள் குத்துக்கல் தெருவை சார்ந்த S.E. ஹசன் காக்க ( மூனா. கீனா. குடும்பத்தார்) அல் மர்ஹமா வீட்டின் சொந்தக்காரர் மற்றும் S.E. முஹம்மது தம்பி அவர்களும் இணைந்து மார்ச் மூணாவது வாரத்தில் இவர்களை நேரில் சந்தித்த போது கிடைத்த தகவல் இந்த இருவர்களுக்கும் எனது நன்றி, அல்ஹம்துலில்லாஹ்.
தினமும் ஓர் விருந்தாளி :
சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன் நமதூரில் நடந்த ஒரு நிகழ்ச்சி சென்னையில் இருந்து முஸ்லீம் லீகின் இளைஞர் அமைப்பை ஏற்ப்படுத்தி அதிக உறுப்பினர்களை சேர்ப்பதற்காக தலைவர் இஸ்மாயீல் சாஹீப் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு இளைஞர் காயல்பட்டினம் வந்து பெரிய ஜும்மா பள்ளியில் ஜும்மா தொழுதுவிட்டு முஸ்லீம் லீக்கிற்கு இளைஞர் அணியில் பலரை சேர்க்க அறிவித்தார்கள் அன்றைய பல இளைஞர்களும் சேர்ந்தார்களாம். தொழுகை முடிந்துவிட்டது சுன்னத்தான தொழுகையும் முடிந்த பின்னர் மக்கள் எல்லாம் அவரவர் வீடுகளுக்கு பகல் உணவு சாப்பிடுவதற்கு சென்றுவிட்டார்கள், இந்த சென்னை இளைஞர் மட்டும் அந்த ஜும்மா பள்ளியின் ஒருபகுதியில் வாடிய முகத்துடன் பசியுடன் அமர்ந்திருப்பதை கண்ட K.T.M தெரு அன்றைய பெரியவர் அந்த இளைஞரை நேரில் சென்று தம்பி சாப்பிட போகவில்லையா, அல்லது யாரும் விருந்துக்கு அழைக்கவில்லையா நீங்கள் தானே முஸ்லீம் லீக் சார்பில் எங்கள் ஊருக்கு வந்த இளைஞர் அணி தலைவர் என்று கேட்க ஆமாம் பாய் இந்த ஊரில் டி சாப்பிட ஒரு ஹோட்டல் கூட இல்லை, சாப்பாடு ஹோட்டல் எங்கே இருக்கும்! நீங்களே சொல்ல்லுங்கள் பாய் என்று அந்த இளைஞர் பசியோடு திக்கித்திக்கி பேசியபோது தம்பி நீ ஒருபோதும் பயப்படாதே நான் தினமும் ஒரு விருந்தாளியை அழைத்து சென்று உணவு அருந்தகொடுப்பேன். நீ இன்று எனது விருந்தாளியாக வரவேண்டும் என்றவாறு அந்த இளைஞனின் கையை பிடித்து தனது K.T.M தெரு ஸ்தாபனத்தின் மேல்மாடியில் உள்ள தனது அறைக்கு அழைத்து சென்று தன்பக்கத்தில் அமரவைத்து தனக்கு வீட்டில் இருந்து வந்த உணவை இருவரும் பகிர்ந்து சாப்பிட்டு முடிக்கிறார்கள் முடித்த பின் அந்த பெரியவரின் அறையில் அடுக்கிவைக்கப்பட்ட இஸ்லாமிய நூல்களை அந்த இளைஞர் பார்வையிடுகிறார் இந்த நிகழ்ச்சி பற்றி சென்னை மண்ணடி ஜின்னா ஹோட்டல் அருகில் நடந்த முஸ்லீம் லீக் கூட்டத்தில் காயல்பட்டணத்தில் தினமும் ஒரு நபருக்கு விருந்தளிக்கும் பெரியார் மூசா சாஹிப் ஆலிம் அவர்கள் பெயரை அன்றைய இளைஞர் அணி தலைவராக ஊருக்கு வந்த முஸ்லீம் லீக் தலைவர் அ.க.அப்துஸ் சமத் சாஹிப் அவர்கள் ஆயிரக்கணக்கான நபர்கள் மத்தியில் கூறிய இந்த செய்திகள் அன்று சென்னை தினசரி பத்திரிக்கைகளில் வெளியாகி இருந்தது. அந்த கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சி சுமார் 30 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியாகும்.
மூஸா சாஹீப் அவர்கள் முதன் முதலில் காயல் நகருக்கு தப்லீக் இயக்கத்தை கொண்டு வந்தவர்களில் ஒருவர் ஆவார்கள். இவர்களின் மூத்த மகன் ஹசன் காதிரி அவர்கள் ஆவார்கள். நற்சிந்தனை மாத இதழை 74 முதல் 97 வரை நடத்தி வந்தார்கள். இவர்களின் தம்பி அஹ்மது என்பவர் முகம்மதிய மௌலூது சபையை ஆரம்பித்து பல அறிஞர்களை குறிப்பாக மதுரை ஆதீனம் வரை ஆண்டுதோறும் கொண்டுவந்த பெருமை இந்த முஹம்மதியா மௌலூது சபைக்கு உண்டு. அதன் பின் சில காலம் சென்றுஇந்த சபையின் அமைப்பாளரும் தலைவருமான அஹமதுகாக்க முஹம்மதியா மௌலூது சபையை நிறுத்திவிட்டு கௌது முஹைதீன் பெண்கள் தைக்கா என்று உருவாக்கினார்கள். இவர்களின் தந்தை மூஸா சாஹீப் அவர்கள் தாயிம் பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளர்கள்.
தாயிம் பள்ளியில் ஹஜ் பெருநாள், நோன்பு பெருநாள் தொழுகைக்கு பின் மூஸா சாஹீப் ஆலிம் அவர்களால் சிறிதுநேரம் மார்க்க பயான் நடத்தப்பட்டு வருவது வழக்கம். மக்கள் மத்தியில் இந்த ஆலீம் அவர்களுக்கு மிகுந்த அன்பும் பாசமும் நிறைந்திருந்தது. ஆலீம் அவர்களும் அமைதியாக மிகவும் மெல்லிய குரலில் அன்பாக பேசுவார்கள், தொழுகைக்கு அழைப்பார்கள் K.T.M தெருக்களில் நிற்கும் சிறுவர்களை அசரு வேளைகளில் அன்பாக பள்ளிக்கு அழைத்து சென்றுவிடுவார்கள். இவர்களின் தன்மை மகத்தானது எந்த சிறுவனும் இவர்கள் தொழுகைக்கு அழைத்தால் மறுக்காமல் அவர்கள் பின்னாலேயே சென்றுவிடுவார்கள். இதை எனது அனுபவத்தில் எழுதுகின்றேன்.
முன்னாள் சேர்மேன் சேவை ஒரு பார்வை:
இந்த தொடரில் அன்று சேவை செய்து மறைந்த பெரியவர்கள் பற்றிய குறிப்புகள் எழுதவே ஆசைப்பட்டேன். இக்காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பற்றி எழுதுவது என்றால் அதன் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அப்பா பள்ளி தெருவை சார்ந்த ஆனா.கானா. ஒரு கொடைவள்ளல் ஊரின் நலனுக்காக எப்பொழுதும் பணத்தைம் வாரி கொடுத்துகொண்டே இருப்பார்கள் அவர் குடும்பத்தில் வழி வந்த சின்னத்தம்பி அவர்களின் மனைவி வஹீதா B.Sc. அவர்கள் (2001-2006) சேர்மேனாக இருந்த காலத்தில் நடந்த ஒரு சேவை பற்றி அவர்களின் கணவர் என்னிடம் சமீபத்தில் சொன்ன ஒரு தகவலை காலத்தின் அருமை கருதி எடுத்துவைக்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருக்கின்றேன் தயவு செய்து இணையத்தால் வாசர்கள் நண்பர்கள் மன்னிக்க வேண்டுகின்றேன்.
அவர்கள் சேர்மனாக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி ஆத்தூரில் இருந்து நமக்கு தண்ணீர் வரும் S.S டேங் (ஸ்டும்பு ஸ்டோரேஜ் டேங் ) இதை பார்வையிட்டபோது அதனுள் 8 அடி சகதிகள் தேங்கி நின்றது அதை சுத்தமாக்க கேட்ட போது கலெக்டர் ராஜாராம் அவர்களிடம் இது பற்றி எடுத்து வைத்து நீக்கும் படி கூறியபோது, அவற்றை நீக்க அரசிடம் போதிய வருவாய் இல்லை என்றதும் இந்த கழிவு சகதிகள் விவசாயிகளுக்கு உரமாக்க வழியிருக்கிறது அவர்களுக்கு டெண்டர் கொடுத்து அவர்கள் அள்ளிசெல்ல சொல்லலாமே என்று கூறினார்களாம் அதன் படியே சகதிகள் நீக்கப்பட்டது இன்று சேர்மனின் கணவர் சின்னத்தம்பி காக்க அவர்கள் காயல்பட்டினம் ஜாவியா அருகில் வைத்து சமீபத்தில் என்னிடம் கூறினார்கள். அவர்கள் காலத்தில் நடந்த பல்வேறு சேவைகள் குறித்து சொன்னபோது எந்த செய்திகளையும் இந்த தொடரில் எழுதமுடியாது என்று ஒரேஒரு தகவல் மட்டுமே என்னால் எழுதிகாண்பிக்கப்படும் என்று சொன்னேன்.அதனால் ஒரேஒரு தகவல் மட்டுமே எழுதினேன் இணையதள அன்பர்கள் கோவப்படாதீர்கள். நீங்கள் காட்டும் ஆதரவினால் தான் பக்கம் பக்கமாக எழுதி தகவல் சேகரித்து தருகின்றேன். தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன். நீங்கள் அறிவாளிகள் நான் (ஆ)சிரியன்.
[முற்றும்] |