என்ன ஓர் அருமையான நிம்மதி நமக்கு! நமக்கீந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கூட நேரமில்லை தினசரி ஒட்டத்தில் நாம்!
நம்மில் ஆண்களுக்கு அலுவலகப் பணி, தொழில் எனவும் பெண்களாகிய நாம் சமையல், குழந்தை பராமரிப்பு, வீட்டு நிர்வாகம் போன்ற அன்றாட பணியிலும் என இரு சாராரும் மூன்று வேளை உணவை முழுமையாக உட்கொண்டு இடையிடையே விதவிதமான திண்பண்டங்களை கொறித்தவாறே இரவு தூக்கத்தினை பஞ்சு மெத்தையிலே குளிரூட்டப்பட்ட அறையினில் அயர்ந்து நித்திரையில் அன்றாடம் நாம்! நோய்களால் உடற்சுகவீனம். சிறு சிறு குடும்பப் பிரச்சினைகளால் இடையிடையே ஏற்படும் உளச்சுகவீனம் கூட நமக்கு இமயமளவு உச்சகட்ட பிரட்சனையாக மனதில் விஸ்வரூபமெடுக்கிறது!
பெருநாள். குடும்ப, உறவினர்களது வீட்டில் கல்யாணம் என்றால் நமது வீடே களைகட்டுகிறது. இடையிடையே பல்வேறு விசேஷங்கள் ஊரிலே! அலுவலக பள்ளி ஆண்டு விடுமுறையென்றால் அவரவர் வசதிக்கேற்ப வெளியூர், வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா என சுற்றி சுற்றி ஒரே வட்டப்பாதையில் நாம் சுற்றி வருகிறோமே தவிர அதிலிருந்து சற்று விலகி உலகெங்கிளுமுள்ள நம் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் படும் அல்லல்களை அறிய முனையாததும், ஊடகங்கள், பத்திரிக்கை, பயான்களில் கேட்க பார்க நேர்ந்தாலும் – “ஐயோ பாவம்!” என்ற ஒற்றை வரியுடன் வேறு திசையில் நம் கவனம் திசை திரும்பிடுவதை நம் ஈமானிய பலவீனம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
எங்கோ அடித்தால் நமக்கென்ன என்பதல்ல பூரண ஈமான். எங்கு அடித்தாலும் இங்கு வழிப்பது தான் பூரண் ஈமான். ”முஃமின்கள் அனைவரும் ஓர் உடலைப் போன்றவர்கள். அதில் ஓர் உறுப்பு சிதைந்தால் கூட முழு உடம்பும் அதற்காக வருத்தபடும்” என்ற நபிகளாரின் பொன்மொழியை வாழ்வியலாக்க முனைவோம்.
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தீயினால் உயிரோடு எரிக்கப்பட்டும், உடலுறுப்புகளை கூறு கூறாக வெட்டியெறியப்பட்டும், நீரில் மூழ்களிட்டப்பட்டும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டும் தோட்டாக்களால் துளைக்கப்பட்டும், கை, கால், மூக்கு, காது மூளை என ஆடறுப்பது போல் தனித்தனியாக சிதைக்கப்பட்டும் பல இலட்சம் பேர் சன்னஞ்சன்னமாக அழியக்காரணம் முஸ்லிம் என்ற அடைமொழி மட்டுமே!
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பர்மா என்ற நாடு 1987ல் மியான்மார் என தனது பெயரை மாற்றிக்கொண்டது. இரும்புத்திரை எனும் புனைப்பெயரைக் கொண்ட இந்நாட்டை தற்போது அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற ஜனநாயக தலைவியான “ஆங் சான் சூச்சி” நிர்வகித்து வருகிறார். 1992ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற இவர் அடக்குமுறை இராணுவ ஆட்சிக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியதால் பலவருடம் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டு விடுதலை ஆனார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் ஆட்சிக்கு வந்தால் நல்லதொரு மாற்றம் ஏற்படும் என்றென்னிய மக்களிடையில் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நாடு தெற்கே இந்து சமுத்திரத்தையும், வடக்கே பங்களாதேஷ் நாட்டினையும், மேற்கே வங்காள விரிகுடாவையும், கிழக்கே அரக்கான் என்னும் ரோகிங்கியர்கள் வாழும் மாநிலத்தையும் கொண்டுள்ளது.
முன்னோரு காலத்தில் இம்மாநிலம் தனியொரு இஸ்லாமிய நாடாகவே இருந்தது. 130 இனங்கள் கலந்து வாழும் இடம் இது. கி.பி. 8ம் நூற்றாண்டிலே தனியொரு மொழி கலாச்சாரத்துடன் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர். கி.பி. 1400 முதல் 1700 வரை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் நிர்வகித்த வரலாறும், அப்பொழுது ஆட்சியாளர் சுலைமான் ஷாஹ் தலைமையில் ஆட்சி நடைபெற்ற பொழுது ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று பொறிக்கப்பட்ட நாணயமும், 15ம் நூற்றாண்டில் உள்ள ‘ரோஹிங்கியா’ என பொறிக்கப்பட்ட எழுத்தோலைகளும், நாணயங்களும் வரலாற்றை எடுத்தியம்புகிறது.
1700க்குப்பின் ஆங்கிலேயர்களால் கைப்பற்றபட்ட பின் அங்கு இஸ்லாமிய ஆட்சி உடைந்தது. 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின் பர்மாவில் உள்ள பௌத்தர்கள் இந்த அரக்கான் என்னும் நாட்டை ஆக்கிரமித்து பர்மாவின் ஒருபகுதியாக மாற்றிவிட்டு அன்று முதல் இன்று வரை அடக்குமுறைகளை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து கொண்டிருக்கின்றன. 1948 முதல் 1960 வரை சுதந்தர நாடு என்னும் பெயரில் பௌத்தர்கள் பிடியில் இருந்தது. 1960இல் இராணுவ ஆட்சி ஆரம்பமான போது அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட 5 லட்சம் ரோஹிங்கியர்களை அன்றைய சவுதி அரேபியா மன்னர் கிங் பைசல் அவர்கள் (அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்யப்படுமாக) தனது நாட்டில் குடியமர்த்தினார். இன்றும் அங்கு 100க்கு 15 சதவிகிதம் பர்மிய மக்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஜனநாயக ஆட்சியில் பார்லிமெண்டில் 35% பேர் பௌத்தர்களாவார்கள்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையான 5 கோடியில் 5இல் ஒரு பங்கு இஸ்லாமியர்கள். பெருமான்மையான பௌத்தர்களுடன் இராணுவம் கூட்டு சேர்ந்து அடக்கு முறையை இஸ்லாமியர்கள் மீது கையாளுகின்றனர். அங்குள்ள ரோகிங்கியர்களுக்கு எந்தவித அரசாங்க அடையாள அட்டையையோ, அரசாங்க உரிமையோ, பிரப்பு இறப்பு சான்றிதழ்களோ, சட்ட உரிமைகளோ கல்வி உரிமையோ மத சுதந்திரமோ, அரசு சலுகைகளோ, பல்கலைகழலத்தில் இடமோ வழங்கப்படவில்லை. அடிப்படை கல்வி கூட மறுக்கப்படுகிறது, திருமணம் செய்து கொள்ள கூட ஆணும், பெண்ணும், தனித்தனியாக அரசுக்கு வரி செலுத்துவதோடு மட்டுமல்லாமல் திருமணம் முடித்துக்கொள்ளும் ஆணும் பெண்ணும் காவல்துறையினரால் முழுஉடல் பரிசோதனை செய்து கொள்ளும் அவலம் கூட!
தனது சொந்த நிலப்பரப்பு, ஆடுமாடுகளுக்கும் வரி செலுத்துகிறார்கள். ஓர் எல்லையை வரையறுத்து அதை தாண்ட கூடாது என்ற விதிமுறை. உறவினர்கள் தங்குவதற்குகூட அரசியின் அனுமதி வேண்டும். பள்ளிக்கூடம், கட்டிடப்பணிகள், மற்றும் இதர அரசாங்க வேலைகளை முஸ்லீம்கள் ஊதியமில்லா கொத்தடிமைகளாக வேலைபார்கக வேண்டும். காவல்துறை, அறிவிப்பு ஏதுமின்றி சமைத்த உணவை வீட்டின் உள்ளே வந்து எடுத்து செல்லும்.
இப்பேர்பட்ட பலவித இடற்பாடுகளை இப்போது மட்டுமல்ல பலவருடங்களாக தொடராக ரோகியங்கிய மக்கள் சந்தித்து வருகின்றனர். இச்சூழலில் சர்வதேச நியதியான அடையாள அட்டை கொடுப்பது பற்றி அரசு மக்களுக்காக சற்று ஆலோசித்த போதுதான் பௌத்த மற்றும் இராணுவத்தினரின் இனவெறி தாக்குதல் உச்சகட்டத்திற்கு மேலோங்கியது. பேரிடர்களை சந்தித்த முஸ்லிம் மக்கள் சிலர் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக இராணுவ சோதனைச் சாவடிகள் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் சிறியதோர் தாக்குதல் நடத்தியதன் விளைவாகத்தான் தற்போது அம்மக்கள் சன்னஞ்சன்னமாக அழித்தொழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் அம்மக்களை, இவர்கள் மியார்மர் பிரஜைகள் அல்ல, வங்கத்தேசத்தில் இருந்து வந்தேறியவர்கள், முறையற்று குடியேறியவர்கள், மங்கோலியர்களுக்கு சார்பானவர்கள், அரபுகளுக்கு நாட்டை காட்டிக்கொடுத்தவர்கள் போன்ற பல்வேறு துவேசங்களை பரப்பி நாட்டை விட்டு துரத்தி அடிப்பதன் காரணம் என்னவோ “முஸ்லிம்கள்” எனபதால் மட்டுமே.
ஆங்கில பத்திரிக்கையாளர் ஒருவர் ஓர் பௌத்தரிடம் நீங்கள் ஏன் முஸ்லிம்களை விரட்டுகிரீர்கள் என பேட்டி கண்டபோது அப்பௌத்தரின் இனத்துவேச கருத்து என்னவெனில் அவர்கள் (ரோகிங்கிய முஸ்லிம்கள்) விரைவாக இனப்பெருக்கம் செய்கின்றனர். புத்த மதம் அழிந்து விடுமோ என நாங்கள் பயப்படுகிறோம். உலகம் அழியும் வரை நாங்கள் புத்த மதத்தை பாதுகாக்க வேண்டும் என கூறினார். அதே நிருபர் பௌத்த சிறுவன் ஒருவனிடம் நீ உனது வயதுடைய முஸ்லிம் சிறுவர்களை பார்த்தால் நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்டபோது அச்சிறுவன் ‘ அவர்களை கொல்ல விரும்புகிறேன்’ என்று கூறினார். பௌத்த தலைவர்களுள் ஒருவனான ‘அஸின் விராது’ கூறுகையில், எங்களது கலாச்சாரம் அழிக்கப்பட்டு எங்கள் பகுதியில் அவர்களது (முஸ்லிம்களது) ஆதிக்கம் நிறைந்து விடுமோ என நாங்கள் பயப்படுகிறோம் என்றார். புத்தரும், புத்த மதமும் அன்பை மட்டுமே போதிக்கிறது என்று கூறிக்கொண்டு அதற்கு நேர்மறையான போக்கினையே அவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
துரத்தி அடிக்கபடும் மக்கள் (ஆரம்பத்தில்) அண்டை நாடான பங்களாதேச் சென்றபோது அந்த நாட்டு அதிபர் அனைவருக்கும் என் நாட்டில் இடம் கொடுத்தால் என் நாட்டு மக்களுக்கு பொருளாதர நெருக்கடி வந்து விடும் என கூறினார். எல்லையில் உள்ள இராணுவத்திற்கு உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கட்டளையிட்டது. அகதிகளாய் படகு மூலம் வந்தவர்களை இராணுவம் தடுத்தபோது ஒரு முதியவர் எங்களுக்கு வேறொரு போக்கிடம் இல்லை. தயவு செய்து எங்களை அனுமதியுங்கள் என கண்ணீர் விட்டு கதறியபோது கண்கலங்கிய வீரர்கள் உங்களை அனுமதிக்க எங்களுக்கு அனுமதியில்லை. ஆகவே நீங்கள் திரும்பி சென்று விடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவுவான் என ஆறுதல் கூறி வழியனுப்பிய அப்படகு காணவில்லை. வழியில் கவிழ்ந்து அம்மக்கள் மரணித்திருக்கலாம் என்ற செய்தியை கேட்கும் போது, அச்சூழலில் அம்மக்களின் மனநிலையையும், பரிதவித்து மரணித்திருக்கலாம் என்ற சம்பவந்தை எண்ணும்போது எம் நெஞ்சம் வலிக்கிறதல்லவா!
மிஜோரம் வழியாக வந்து சேர்ந்த ஒரு சில அகதிகளை கூட நம் இந்திய அரசு முறையற்ற குடியேற்றம், நாட்டிற்கு பாதுகாப்பு இல்லை என காரணம் கூறி திருப்பி அனுப்பியதன் மூலம் நம் பாரத பிரதமரின் மதவாதம் பிரதிபளிக்கின்றன. ஆஸ்திரேலிய அதிபர் நாங்கள், மியான்மார் மக்களை எடுக்க மாட்டோம் என்றது. மலேசிய அரசு நாங்கள் ஒரு வருடம் தான் வைத்திருக்க முடியும் அதற்கு பின் வேறு எங்காவது அனுப்பி விட வேண்டும் என்றது. இலங்கை அரசிடம் அந்நாட்டில் வாழும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று வேண்டுகொள் விடுத்தது என்னவெனில் ரோகிங்கிய முஸ்லிம்களை நம் நாட்டில் குடியேற அனுமதியுங்கள். நாங்கள் அவர்களுக்கு உரிய உணவு, தங்கும் இடத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறோம் என கேட்டுள்ளது. மேலும் அவர்கள் அம்மக்களுக்காக இந்தியா, இலங்கை, குவைத், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல லட்சம் பணம் வசூல் செய்து நேரடியாக சென்று உதவி வருகின்றனர். இறைவன் இவர்களுக்கு சிறந்த கூலியை நல்குவானாக.
இவ்வாறாக அம்மக்கள் சிதரடித்து பல திசைகளாக ஓடியும் ஒதுங்க யாரும் இடம் கொடுக்காததால் சொந்த நாட்டில் இருக்கமுடியாமலும், சென்ற நாட்டில் உள்ளே நுழைய அனுமதியின்றியும் அகதிகளாக எல்லையில் அல்லோளப்பட்டுக்கொண்டிருப்பது வேறு யாரும் இல்லை நம் சகோதர சகோதரிகள் தான்.
தலைவி “ஆங்சான் சூச்சி” பி.பி.சி ஊடகத்திற்கு பேட்டியளிக்கையில் ஏன் முஸ்லிம்கள்; மியான்மரிலிருந்து வெளியேறுகிறார்கள் என்று எனக்கு தொpயவில்லை என்று கூறியிருக்கிறார். மற்றொரு அறிவிப்பில் “சர்வதேச கண்காணிப்பு” குறித்து எமக்கு அச்சமில்லை என்று கூறியிருக்கிறார். அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில் ரோகிங்கியர்கள் பொய்கூறுகிறார்கள். இதற்கு எம் நாடு காரணமில்லை என்றார். இவையெல்லாம் முழு பு+சணிக்காயை சோற்றில் மறைத்த கதை! சொந்த நாட்டில் அடக்குமுறையில்லாத, பாதுகாப்பான, அச்சமற்ற நிம்மதியான சூழ்நிலை நிலவியிருந்தால்; அம்மக்கள் ஏன் வெளியேறுகிறார்கள்?
ஆற்றின் வழியாக படகிலே அகதிகளாய் வெளியேறும் மக்கள் அளவுக்கதிகமான ஆட்களை ஏற்றிவந்ததந் காரணமாக எத்தனையோ படகுகள் ஆற்றில் கவிழ்ந்து வயோதிகர்கள், வாலிபர்கள,; கர்பிணிகள், பெண்கள், பச்சிளம் குழந்தைகள், ஏதுமறியா சிறார்கள் என பல நூறு பேர் நீரிழ் மூழ்கி தத்தளித்து மூச்சுத்தினறி மரணைத்திருக்கிறார்கள். இதை மீறி வருபவர்களை இராணுவம் ஹெலிக்காப்டர் மூலம் தாக்குதல் நடத்தினர் (4:100) யார் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்து இடையில் மரணித்தால் அவர்களுக்கு கூலி கொடுப்பது அல்லாஹ்வின் கடமை! என்ற வசனத்திற்கேற்ப மேற்கூறப்பட்ட நம் சகோதர சகோதரிகளுக்கு இறைவன் சிறந்த கூலியைக் கொடுப்பானாக என்று நாம் பிராதிப்போம்.
தரைவழியாக பலநாட்கள் நடந்து வந்து பலர் எல்லை வந்தடைகின்றனர். சிலர் தன் தாய் தந்தையை ஓர் கம்பின் இரு ஓரங்களிலும் கூடை வைத்து அதில் வயோதிக பெற்றோரை தனது தோலில் சுமந்தபடி பயணித்திருக்கின்றனர். ஒர் கர்பிணிப்பெண் மலைகலையும், புதர்களையும், 7 நாட்களாக கடந்து எல்லை வந்தடைனர். எல்லை தாண்டும் போது கூட எல்லையோர பகுதிகளில் மியான்மர் இரானுவம் கண்ணி வெடிகளை புதைத்து வெடிக்கச் செய்தனர்.
ஆரம்பத்தில் “இக்யாப்” மற்றும் 13,14 கிராமங்களுக்கு அழைப்புப் பணியை மேற்கொண்ட 10 இஸ்லாமிய அழைப்பாளர்களான மார்க்க அறிஞ்ர்கள் செல்லும் வழியில் ஓய்விற்காக அவர்கள் சென்ற பேருந்தை நிறுத்திய போது வெறியாளர்கள் இடைமறைத்து மிக மிகக் கொடூரமான முறையில், மூக்கு, நாக்கு, கை கால் என தனித்தனி உறுப்புக்களாக சிதைத்தும், மூளையை வெளியில் எடுத்தும் வதை வதைத்துக்கொன்றனர். இவ்விடம் எம் நெஞ்சத்தில் இவ்வுலகம் ‘முஃமின்களின் சிறைச்சாலை, காஃபிர்களின் பஞ்சோலை’ என்ற நபி மொழி தான் நிழலாடுகிறது. இம்மக்கள் இச்சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாக ஒரே காரணம் “ஈமான் எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்திருப்பதனால்தான். அங்கு வாழுகிற மக்களின் ஈமானை மென் மேலும் வலுப்பெறச் செய்து இறைவன் அவனது உதவியை விரைவாக ஈந்திடுவானாக!
மனித உரிமை அமைப்பு, செயற்கைக்கோல் மூலம் எடுத்த புகைப்படத்தில் அரக்கானில் முஸ்லிம்கள் வாழ்ந்த அனைத்து பகுதிகளும் எரிக்கப்பட்டு விட்டதாக சென்ற மாதம் பி.பி.சி, அல்ஜஸீரா ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியிட்டது. ஒரே நேரத்தில் இராணுவம் 7 இஸ்லாமிய கிராமங்களை மக்களுடன் உயிரோடு எரித்திருக்கின்றனர். சிறுபான்மை மக்கள் மிகவும் சிறுமைப்படுத்தப்படுகிறார்கள். என ஐ.நா. அறிவித்துள்ளது. உலகிலேயே அதிக அடக்குமுறைக்கும், சித்திரவதைக்கும், உள்ளாகும் இனம் ‘ரோஹிங்கிய இனம்’ என்று மனித உரிமை ஆர்வளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு பல சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது இக்கொடுமைக்கு. ஆனால் அவர்களது மனதில் மனித நேயம் செத்துவிட்டது போலும். உலகில் சிறு தொகையான 2½ கோடி எண்ணிக்கையைக் கொண்ட ‘யூத’ இனம் தனது மதத்திற்காக அளபெரும் பங்காற்றுகையில் பெருந்தொகையான 150 கோடி முஸ்லிம்களாகிய நாம் இவ்விடயத்தில் ‘மௌனம் காத்துக் கொண்டிருக்கும் நிலை வேதனையளிக்கிறது. இது பற்றி நாளை மறுமையில் இறைவனிடம் கூற என்ன பதில் நம்மிடத்தில் உள்ளது? தனி மனிதர் முதல் ஆட்சியாளர் வரையுள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை இம்மக்களுக்காக உதவுவதும், பிராத்திப்பதும்.
ஆம்! இதை நாம் செய்யாவிட்டாலும் நம்முடைய சகோதரர்கள் அமைப்புகளாகவும், பலர் தனிப்பட்ட முறையிலும் “பங்ளாதேஷ்” எல்லைக்குச் சென்று உதவுகிறார்கள். தனது உயிரினை துச்சமாக எண்ணி தனது சொந்தப்பணிகளையெல்லாம் ஓரங்கெட்டிவிட்டு சிரமங்களுக்கு அஞ்சாது தனது சொந்த செலவில் அந்நாட்டிற்கு சென்று அங்கிருந்து அகதிகள் வைக்கப்பட்டிருக்கும் எல்லைக்கு பல மணி நேரம் நடைப்பயணமாக, ஒத்தையடிப்பாதையிலே மலைகளைக்கடந்தும், மழை, சேர், சகதிகளில் கால் பதித்து சென்று தம்மால் முடிந்த அளவு பலவித சிரமங்களை மேற்கொண்டு பொருளாதர உதவிகளை அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும், உதவி வருவதை எவ்வித சிரமமேதும், அம்மக்களுக்காக மேற்கொள்ளாது இங்கிருந்து கொண்டிருக்கும் என்னால் எழுத்துக்களால் எடுத்தியம்புவது ஈடாகாது! அவர்களது தூய பணி தொய்வின்றி தொடரவும், இதற்கான உதவியை இறைவனிடமிருந்து முழுமையாக பெற்றிடவும் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகத்தான கூலியை இறைவன் இம்மையிலும், மறுமையிலும் கொடுத்தருள்வானாக! எனும் பிராத்தனையை நாம் ஒவ்வொருவரும் கேட்க மறந்துவிடக்கூடாது.
ரோஹிங்கிய - பங்களாதேச் இரு நாடுகளுக்கு இடையே 4 எல்லைகள் உள்ளன. அதில் ஓர் எல்லையான “சாப்பூர்” எனும் இடத்தில் நம் சகோதரர்கள் சென்று அங்குள்ள அகதிகளுக்கு இரானுவ உதவியுடன் பணப்பட்டுவாடா மற்றும் பொருளாதார அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வருகிறார்கள்.,பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பெரும்பாலான மக்கள் நீண்ட வரிசையில் பெற்றுச் செல்கின்றனர். வறுமையினாலும், பசியினாலும் 8, 10 வயது குழந்தைகள் கூட அதன் சக்திக்கு அப்பாற்பட்டு 20கிலோ பொருட்கள் அடங்கிய மூடையை சிரமத்துடன் தூக்கிச்செல்கின்றனர்.
பங்களாதேஷ் இரானுவத்தினர் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது தனது பரந்த சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவதுடன் அங்கு உதவ சென்றுள்ள நம் சகோதரர்களுடன் சேர்ந்து முழு ஒத்துழைப்பு வளங்கி இரவு பகலாக சேவையாற்று கின்றனர். பெரும் ஜனத்தொகை கொண்ட அம்மக்கள் விநியோகிக்கும் பொருட்களை பெரும்போது கூட்ட நெரிச்சல் ஏற்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாவண்ணம் அம்மக்களின் குடில்களுக்கு சென்று டோக்கன் வழங்கி வரிசை முறையை ஏற்படுத்தி சிரமமின்றி முறையாக வினியோகித்து உதவிக்கொடிருக்கும் அச்சகோதரர்களின் உழைப்பிற்குரிய சிறந்ததொரு கூலியை இறைவன் கொடுப்பானாக!
இரானுவத்தினரின் கணக்கெடுப்பின் படி அக்டோபர் 19ம் திகிதி வரை பங்ளாதேஷ் வந்தடைந்த ரோகிங்கிய அகதிகளின் எண்ணிக்கை 9,26,000எனவும் அதிலிருந்து 3,00,000 பேர் கூடுதலாக இருக்கலாம் கணக்கெடுப்பின்றி என அறிவித்துள்ளது. ரோஹிங்கிய - பங்களாதேஷ் இடையேயான மற்றொரு எல்லையான ‘நாப்” என்ற ஆற்றின் இரு கரையோரங்கள் ஓர் கரை அராக்காளையும் மற்றொரு கரை பங்ளாதேஷ் எல்லையையும் கொண்ட அவ்வாற்றின் மூலமும் பெரும்பாலான மக்கள் வங்கதேசம் எல்லை வந்தடைகின்றனர்.
அங்குள்ள மலைக்குன்றுகளில் சிறு சிறு குடில்கள் அமைத்து 12 இலட்சம் மக்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
முறையான மருத்துவவசதி, மின் வசதி, கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, உணவு வசதி உடை வசதி இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். கொட்டும் மழையில் கூட ஒதுங்க இடமின்றி ஒரே குடையின் கீழ் சிறார்கள் முதல் பலர் அடுத்து என்ன செய்வதென்ரறியாது விழிப்பிதுங்கி நிற்பது வேதனையளிக்கிறது.
களத்திலுள்ள நம் சகோதரர் தரும் செய்தியில் மிக வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் அகதிகளாகிய அம்மக்களில் 10வயதுடைய மற்றும் அதற்கொத்த வயதுடைய பெண்பிள்ளை பெரும்பாலோர் மேலாடையின்றி கீழாடை மட்டுமே அணிந்திருக்கிறார்களாம் ஆண்பிள்ளைகளில் பலர் ஆடை ஏதுமின்றி 7, 8, வயதாகியும் “ஹத்தனா” (சுன்னத்) கூட செய்யாதிருப்பதாகவும், “ஹத்தனா” செய்வதற்காகவும் ஆடைகளை வழங்க இச்சகோதரர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் பொருளாதர பின்னடைவால் தொடர முடியாது தொய்வடைந்துள்ளனர். வகைவகையான வண்ண வண்ண ஆடைகளை நம் மக்களுக்கு உடுத்தி மகிழும் நாம் இங்கே! வயதிற்கு வரும் வயதை அடைந்தும் கூட மானத்தை மறைக்கக் கூட ஆடையின்றி நம் சகோதர சகோதரியின் பிள்ளைகள் அங்கே.
தனது குடும்பத்திலுள்ள அனைவரையும் ஒன்று விடாமல் இழந்துவிட்டு தனிஒரு ஆளாக அனாதையாக எல்லை வந்தடைந்த சகோதரர்.
தனது தாயை இழந்து விட்டு தட்டு தடுமாறி எல்லை வந்தடைந்த குழந்தைகள்
கழுத்தில் வௌ;ளை துணியைச் சுற்றியுள்ள இச்சகோதரர் உடலில் நெருப்புக் கங்குகள் தெரித்த காயத்துடன் எல்லை வந்தடைந்துள்ளார்
இப்பெரியார் தனது ஊரிலிருந்து எல்லைக்கு 8 நாட்களாக நடைப்பயனம் மேற்கொண்டு வந்தடைந்த போது மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். மியாமர் இரானுவம் அடித்ததில் இவரது இடது தோல்பட்டை உடைந்து பரிதாபமான நிலை
இப்பெண்மணி 6 லட்சம் மியான்மர் பணம் கொடுத்து எல்லை வந்தடைந்துள்ளார் நடக்க முடியாத இவர் வரும் வழியில் பசியால் இலை,தலை புற்களை உண்டு வந்ததை கூறும் போது நாம் உண்ணும் உணவோடு சற்று ஒப்பிட்டு பார்த்தால்
இக்குழந்தை தந்தையை இழந்து விட்டு தாயுடன் எல்லை வந்தடைந்த இதன் கண்களில் தந்தையின் ஏக்கம் தவழ்கிறதே.
மார்க்க அறிஞர் ஒருவரை மியாமர் இரானுவம் துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளது. அச்சூழலில் அவரது உயிர் பிரியாததை கண்ட அவர்கள் அருகில் சென்று கத்தியால் குத்தி மிகக்கொடுரமான முறையில் கொலை செய்து விட்டு உயிர் பிரிந்து விட்டது என ஊர்ஜினமானதும் இடத்தை விட்டு சென்றுள்ளனர். இச்சம்பவத்தை நேராக கன்னுற்று சஞ்சலத்துடன் எல்லை வந்தடைந்த குடும்பத்தினர்.
இச்சொல்லொன்னாத் துயரங்களை என்னும் போது இறைவன் அனியாயக்காரர்களுக்கு அவகாசம் அளிக்கிறான், எனபதே உண்மை. அத்துயரங்களை படிக்கும் போதே நம் இதயத்தை பிரட்டி போடுகிறது எனில் நாள் தோரும் இவற்றை அனுபவித்து கொண்டிருக்கும் அம்மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி உடனடியாக கிடைக்க வேண்டும் எனவும். அனியாயக்காரர்களுக்கு எதிராக எம் இனத்தவருக்கு உதவிடு எனும் துஆவை மறவாது ஒவ்வொரு தொழுகையிலும் இறைவனிடம் மன்றாடி கேட்பதும் அவர்களுக்காக நாம் துஆ செய்யும் சிரியதோர் உதவி! பெரியதோர் உதவியான கழத்திற்கு சென்று உடலால் உதயும் சூழ்நிலை நமக்கு அமையாவிட்டாலும் உள்ளத்தால் சற்று மனமிறங்கி அங்கு நேரிடையாக சென்று உதவிடும் நம் இஸ்லாமிய அமைப்புகளுக்கும், சகோதரர்களுக்கும் நம்மால் இயன்ற அளவு பண உதவியை வாரி வழங்கலாமல்லவா! அம்மக்களோடு நம் பொருளாதாரத்தை ஒப்பிட்டு பார்கையில் கடலளவுள்ள வசதியில் துளியளவு கொடுப்பதில் ஒன்றும் குறைத்து போகக்கூடியதல்ல நமக்கு! நாம் இம்மையில் கடுகளவு கொடுப்பதினால் மறுமையில் மலையளவு நன்மை நமக்கு காத்திருப்பது கனவல்ல நிஜம்!
கர்பிணிகளுக்கான பிரசவ அறை, தொழுவதற்கான தகர மூங்கில் கூரை, கழிப்பிட வசதி, பெண்களுக்கான மறைவிட குளிப்பிடம், இருப்பிடக் குடில், மின் வசதி, ஆடை, உணவு, பாத்திரம், மருந்து பொருட்கள், போர்வை, பாய், காலணி என அத்தியாவசியமான தேவைகளை அமைத்துக் கொடுக்க நமது பங்களிப்பு மிக அவசியம். இச்சூழலிழும் அம்மக்கள் தொழுவதையோ, சிறார்களுக்கு குர்ஆன் ஓத கற்றுக்கொடுப்பதையோ, மார்க்க உரைகளையோ, மார்க்க வகுப்புகளையோ, குர்ஆன் மனனத்தையோ நிறுத்தி விடவில்லை.
“பணமிருந்தாலும் மனம் வேண்டும்” என்று சொல்வார்களே அப்பேர்பட்ட பெரிய மனதினைக் கொண்ட இச்சகோதரர் தனது வீட்டைச் சுற்றி தனக்குச் சொந்தமான நிலத்தை ரோகிங்கிய 100 குடும்பங்களுக்கு மேல் குடில் அமைத்து தங்க இடங்கொடுத்தது மட்டுமல்லாது, அக்டோபர் 19 திகதி 50 அடிக்கு 50 அடி நிலத்தினை இறை இல்லம்(பள்ளி வாயில்) கெட்டுவதற்காக எந்தவித ஆட்சேபமும் தொpவிக்காது அளித்திருக்கும் பட்சத்தில் அம்மக்களுக்காக நமது பங்கீடு என்ன? அல்லாஹ் இச்சகோதருக்கு சுவர்க்கத்தில் சிறந்ததோர் உயர்ந்த இருப்பிடத்தைக் கொடுப்பானாக!
தகரத்தினாலான அல்லது மூங்கிளினான ஒரு பள்ளிவாயிலைக் கெட்டுவதற்கு 1½ இலட்சம் டாக்கா (பணம்) தேவைப்படுவதாக அறிவிக்கிறார்கள். காட்டிலே மக்கள் வசிப்பதால் வெளிச்சத்திற்காக “சோலார் பேனல்” அமைக்கவும் நமது சகோதரர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கு அதீத பணம் தேவையுள்ளது. அனைத்து உதவிகளையும் உத்வேசத்துடன் செய்திட காத்துக்கொண்டிருக்கும் நமது சகேதரர்களுக்கு நம்மால் இயன்றளவு நன்கொடைகளை கொடுத்து நன்மைகளில் ஒன்றினைவோமாக!
இக்கட்டுரையை படித்து முடித்ததும் நமது கண்கள் கலங்கியதோ இல்லையோ! ஒவ்வொருவரது உள்ளத்திலும் இரக்கம் பிறந்து உதவ முன்வருவதோடு மட்டுமல்லாது நம் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் இச்செய்தியை விரைவாக அனுப்பி அவர்களது பங்களிப்பையும் இடம்பெறச் செய்து பாதிக்கப்பட்ட அம்மக்களின் துஆவினையும், இறைவனின் அருளையும் பெற எமது பணிவான வேண்டுகோளுடன், எமது சகோதர சகோதரிகளின் அளப்பொpய துன்பத்தை அனுவளவு கூறியவளாக கனத்த இதயத்துடன், கண்ணீர் மல்க, அவர்களுக்கு ஈகை குணமுடைய ஒவ்வொரு தனவந்தவர்கள் முதல் தனி மனிதர் வரை, நமதூர் உள்ளூர், வெளியூர், காயல்நலமன்றங்கள், பத்துல்மால்கள்,குத்பா பள்ளிகள், ஒவ்வொரு பள்ளி நிர்வாகம், பெண்கள் தைகாக்கள், பெண்கள் மதரஸாக்கள்,ஆண்கள் மதரஸாக்கள். கல்வி அமைப்புகள்,மக்தபுக்கள், மற்றும் பொது நல அமைப்புகள் மூலம் உங்களது உதவி சென்றடையும் என்ற ஆவலுடனும், நம்பிக்கையுடனும் அடுத்த பதிப்பில் அடியெடுத்து வைக்கும் ஆவளுடன் இன்ஷா அல்லாஹ். இக்கட்டுரையை எழுதும் போது எனக்குத் தோன்றியது இதை எழுதும் எனது பேனாவின் மையல்ல! எம் சகோதர சகோதரிகளின் குருதி என!!!
|