பத்து வருடகால பயணக்கனவொன்று அண்மையில் நிறைவேறியது. எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
என் மூன்றாவது மகன் அப்துல் காதர் ஜியாத் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வடகிழக்கிந்திய சுற்றுப்பயணத்திற்கான நானும் சிறு பருவத்து நண்பருமான ஸுலைமானும் பயணத்திற்கான முன்பதிவு பண்ணினோம்.
ஆனால் எனக்கேற்பட்ட குடற்புண் சிக்கலின் விளைவாக அப்பயணம். கைவிடப்பட்டது. அது மீண்டும் நிறைவேறுவதற்கு பத்தாண்டுகள் வரை காத்திருக்க வேண்டி வந்தது.
வழி நெடுக நம் தலைக்கு மேல் உடன் வரும் நீல வானம் போல இந்த பத்து வருடங்களில் நான் மேற்கொண்ட அனைத்து பயணங்களிலும், நிறைவேறாமல் போன வடகிழக்கிந்திய பயணக்கனவு உடன் மிதந்து வந்து கொண்டே இருந்தது.
இந்த வருட நோன்பு கழித்து போகலாம் , கோடை விடுமுறையில் போகலாம் என ஒவ்வொரு வருடமும் நண்பர்களுக்குள் பேசிக்கொள்வோம். ஆனால் குறிப்பிட்ட அந்தக்காலங்கள் வரும்போது நாளை மற்றுமொரு நாளே என்பது போல வழமையான சலிப்புடன் கடந்து போகும்.
இந்த கனவு ஏக்கங்களுக்கிடையே எனது தனிப்பட்ட வாழ்வின் பெரும் தேவை ஒன்று குறுக்கிட்டது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இந்தத் தேவை நிறைவேறியவுடன் வடகிழக்கை பார்த்து நடையைக் கட்ட வேண்டியதுதான்.
இறைவனின் அருளால் அந்தத் தேவை நிறைவேறியது. இந்த வருட ரமழான் கழிந்த பிறகு எனது சிறு பிராயத்து நண்பரும் என்னைப்போலவே இன்னொரு பயண உயிரியுமான ஸுலைமானிடம் “மச்சான் கெளம்பீருவோமா ? எனக்கேட்டேன். ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அங்கு மழைக்காலம். மழை என்றால் அப்படி இப்படியெல்லாம் இருக்காது. வைத்து வாங்கி விடும். ஒன்றையும் பார்க்க முடியாது என்றான். உடனே அக்டோபர் மாதம் கிளம்புவது என தீர்மானித்தோம்..
எங்கெங்கு போகலாம் வழி எப்படி என்பனவற்றை இணையத்தின் வழியாக தேடினோம். தேடத்தேட வழி பிடிபடுவது போல இருக்கும். மீண்டும் குழம்பி விடும். ஒன்றுக்குள் பலவாக விழுந்து கிடக்கும் கிடங்கு போல இருந்தது ஏழு மாநிலங்களின் தொகுதி.
சமவெளியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போக வேண்டிய தொலைவையும் நேரத்தையும் எளிதாக கணித்து விடலாம். ஆனால் இங்கு அப்படி இல்லை. வரைபடத்தில் பார்க்கும்போது எல்லாம் அருகருகே இருப்பது போலத்தான் இருக்கும். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குன்றில் இருக்கும் என்ற பேருண்மையை ஸுலைமான் சொன்னான். அதுதான் நூறு சதவிகிதம் என்பது பின்னர் பயணத்தில் உறுதியானது.
சுற்றுலா இடங்களையும் தொடர்வண்டித்தடங்களையும் எழுதி எழுதி சேர்த்த கத்தைக் காகிதங்களுடன் மூன்று நாட்களும் செலவழிந்ததுதான் மிச்சம். அற்றத்தைக் காண முடியவில்லை.
வானூர்தி வழியாக போவதில்லை என தீர்மானித்திருந்தோம். மாபெரும் குடை ராட்டினத்தில் ஏறி இறங்கிய உணர்வுதான் மிஞ்சுமே ஒழிய பயண பட்டறிவு என எதுவும் உண்டாகாது என்பதுதான் காரணம்.
சென்னையிலிருந்து தொடர் வண்டியில் புறப்பட்டு பெங்காலின் சிலிகுடியில் இறங்கி அங்கிருந்து தரைவழியாக சிக்கிம், பூட்டான் செல்லலாம் என்றுதான் முடிவெடுத்தோம். ஆனால் அந்த நேரத்தில் கோர்க்காலாந்து கோரிக்கையை ஒட்டி கிளர்ச்சிகளும் கடையடைப்புகளும் நடந்து கொண்டிருந்ததால் கடைசியாக குவாஹத்திக்கு வண்டியைத் தட்டலாம். அங்கு போய் இறங்கி மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம்.
கடைகளும் சுற்றுலாப்பயணிகளும் குப்பைகளும் நிறைந்த எல்லோரும் போய் தேய்ந்த வழமையான பிரபலமான இடங்களுக்கு போவதில்லை. பயண வழித்தடத்தை பெரிதாக திட்டமிடுவதில்லை. முன் முடிவுகளும் முன் அறிதல்களும் ஏதுமின்றி பயணத்தை அதன் போக்கிலேயே முன் செல்ல விட்டு விட்டு உரிமையாளரை பின் தொடரும் குட்டி நாய் போல அலைந்து திரிவது என்ற கொள்கையும் எங்களுக்கு ஏற்கனவே உண்டு.
பயணக்குழுவில் நண்பர்கள் முஜாஹித் அலீ, குளம் முஹம்மத் தம்பி , ஷரஃபுத்தீன் ஆகியோரும் வருவதாக இருந்தது. எனது பெரும்பாலான பயணங்கள் இவர்களுடன் கழிந்திருந்திருக்கின்றது. குளம் தம்பியும், முஜாஹித் அலீயும் தனிப்பட்ட அலுவல்களினால் வர முடியாமல் போகவே ஸுலைமான், ஷர்ஃபுத்தீன், நான் என்ற மூவர் குழுவானது.
மொத்த பயண நாட்கள் 23 என்ற கணக்கிட்டு போக வர பயணச்சீட்டுகளை முன் பதிந்தோம். சென்னையிலிருந்து கொல்கத்தாவில் இறங்கி மாறி குவாஹத்திக்கு அடுத்த வண்டியை முன் பதிவு செய்வதை விட நேரடியாக குவாஹத்திக்கு முன்பதிவு பண்ணுவதுதான் ஆதாயம். கிட்டத்தட்ட தலைக்கு ரூ.1,200/=க்கு மேல் மிச்சமாகின்றது. ஒரேயடியாக 50 – 56 மணி நேர பயணம்தான். காசு கணக்கு பார்க்கும்போது நேரக்கணக்கில் மனம் தன்னைத்தானே நேர் செய்து கொள்கின்றது.
வடகிழக்கு பயணத்திற்கான உந்துதலை ஏற்படுத்திய காரணிகள் :
நான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் சுற்றி வருபவன். இங்கு பல இன மொழி உணவு மத வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் ரொட்டி, பருப்பு, மார்வாடி, கடுகெண்ணெய் வாசம், கயிற்றில் தொங்கும் கவ்வி ( கிளிப்தான் ) போலிருக்கும் தேவநாகரி எழுத்து வடிவங்கள், தூய மரக்கறி உணவகம் போன்றவற்றைதானே திரும்ப திரும்ப காண முடிகின்றது.
பெங்களூருக்கும் கொல்கத்தாவிற்கும் அப்பால் உள்ள நிலப்பரப்புக்களின் வாழ்க்கை முறை ஏன் ஒட்டு மொத்த இந்திய வாழ்க்கை முறையில் எதிரொலிக்கவில்லை? என்ற தீராக்கேள்வி.
பெரு நிலப்பரப்பின் வாழ்க்கை முறைக்கும் பார்வைக்கும் அடியோடு மாற்றமான வடகிழக்கின் வாழ்க்கை முறை
இரோம் ஷர்மிளாவின் அமைதி வழி போராட்டம்.
கிறிஸ்தவ பரப்புரையாளர்களால் துண்டாடப்படும் வடகிழக்கு என்ற இடைவிடாத ஃபாஸிஸ பரப்புரை.
பெரிய ஷாப்பிங் மால்
சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் உற்ற நண்பரான ஃபழ்ல் இஸ்மாயீலுடனான ஒரு உரையாடலில் , நான் இங்கேயிருக்கும்போதே சிங்கப்பூர் மலேஷியா சுற்றுப்பயணத்திற்கு திட்டமிடுங்களேன் “ என்றார்.
செலவேறிய வானூர்தி பயணம், மாயையின் மீதும் தீரா நுகர்வின் மீதும் கட்டப்பட்டிருக்கும் பெரிய ஷாப்பிங் மாலான சிங்கப்பூரின் மீதான ஒவ்வாமை என்ற இரு காரணங்களையும் காட்டி நான் சொன்னேன் , “ எல்லா எடத்தயும் பாக்கத்தாம்பா செய்யனும். அது நல்ல விஷயந்தான் ஆனா நாம இருக்குற இடந்தாம்பா சிங்கப்பூரும் மலேஷியாவும் மொத்த உலகமும்.
இந்தியாவுக்குள்ளயே பல வெளிநாடுகள் இருக்கும்போது இத மொதல்ல பாத்து முடிப்போம் என ஒரு வீறாப்பில் சொன்னேன்.
அந்த சொல்லானது வடகிழக்கு பயணம் என்ற மன விருப்பத்திற்கு மேல் போய் உட்கார்ந்து கொண்டது. அழுத்தம் தாங்காமல் வண்டி புறப்பட்டுவிட்டது.
--- தொடரும் ---
|