பயணத்திற்கான புளியோதரை, எலுமிச்சை கட்டுசாத பொட்டலங்களை ஷரஃபுத்தீன் கொண்டு வந்திருந்தார். அவர் ஹஜ் பயணத்திற்கு அடுத்தபடியாக குடும்பத்தை விட்டு நீண்ட நாட்கள் பிரிவது இந்த சுற்றுலாவில்தான் என்பதால் அவர் மனைவியின் கரிசனம் கட்டுணவில் மேலதிக சேர்த்தி.
சென்னையில் உணவுக்கடை நடத்தி வரும் நண்பரிடம் சொல்லி தொடு கறியாக ஆணத்திரட்டுடன் கூடிய மாட்டிறைச்சி பொறியலும் மணக்க மணக்க வந்து சேர்ந்தது, அடுமனை ரொட்டி, பழக்கூழ், மருந்துகளையும் சேர்த்தே கட்டிக் கொண்டோம்.
தாம்பரத்திலிருந்து குவாஹத்தி வழியாக திப்ரூகட் செல்லும் வாரந்திர தொடர்வண்டிக்கான கூட்டமானது சென்னை எழும்பூர் நிலையத்தில் அலையடித்து நின்றது.
கோதுமைத்தொலி நிறமுடைய அப்பட்டமான பெரும்பான்மை இந்திய முகங்கள், நீள் சதுர பெங்காலி முகங்கள். வெளுப்பு கருப்புடன் சற்றே அமுங்கிய நீள்சதுரமான அஸ்ஸாமிய முகங்கள், வெண்மையில் மஞ்சள் கலந்த முழு மங்கோலிய முகங்கள் என அத்திரள் நிறைந்திருந்தது.
சிறு தாமதத்துடன் வண்டி வந்து சேர்ந்தது. நெடும்பயணம் என்பதால் மூன்றடுக்கு குளிர்சாதன வகுப்பில் பதிந்திருந்தோம். உள்ளே நுழைந்ததும் வண்டிக்குள் கடும் நெடி அழுகிய தசை வாடை .
இருக்கையில் அமர்ந்து கொஞ்ச நேரத்தில் எதிரில் உள்ள இருக்கையின் கீழ் பெரும் தகரபேழையைக் கொண்டு வந்து வைத்தார் உத்தரம் போல கைகால்களைக் கொண்ட கருத்து உயர்ந்த மனிதர். அவருக்கான இருக்கையும் அங்கில்லை. எனவே நாங்கள் ஆட்சேபித்தோம்.
அவர் உடனே நண்பர் ஸுலைமானைப் பார்த்து தாறுமாறாக பேசத் தொடங்கினார். நாங்கள் மொத்தமாக மல்லுக்கட்டி ஆளை அனுப்பி வைத்தோம். மனதின் வெம்மை தணிந்த பிறகு அவரிடம் போய் இணக்கமாக உரையாடினோம். அவருக்கு ஊர் தென்காசி பக்கமாம். சொந்த தொழில் புரியும் நோக்கில் ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று இரண்டு வருடங்கள் வரை எதுவும் அமையாமல் சும்மாவே இருந்திருக்கின்றார். பிறகு அவருக்குள்ளிருந்த சிப்பாய் மனது அவரை சி.ஆர்.பி.எஃபுக்குள் கொண்டு போய் சேர்த்து விட்டது. வடகிழக்கில் பணிபுரியும் அவர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்புகிறார்.
ஏன் அவ்வாறு பேசினீர்கள் எனக் கேட்டதற்கு , இந்த ஆள் எங்கோயிருந்தோ வந்து விட்டு என்னிடம் அதிகாரம் பண்றாரே என்றார்.
ஸுலைமானின் முகச்சாயலில் மங்கோலிய வாசியும் இருந்ததுதான் சிக்கல். அவரை வடகிழக்குகாரர் என தவறாக புரிந்து கொண்டு சி.ஆர்.பி.எஃப் காரருக்குள் ஒளிந்திருந்த எதிர்மறை மனம் ஆடித்தீர்த்து விட்டது. எந்த உள்ளீடுமில்லாமல் திறந்த வெளியில் வெற்றாக அலையும் சிப்பாய்க் கண்களுக்கு சொந்தக்காரர். தசைகளினால் மட்டுமே வழி நடத்தப்படும் மனிதர். இவர் உட்பட நம் அனைவருக்குள்ளும் “பிற“ வற்றின் மீதான வெறுப்பு மனதின் தரையில் வண்டலாகத் தங்கியிருக்கின்றது
உரையாடி உரையாடி கடைசியில் இயல்பாகி விட்டோம்.
வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்தில் கழிவறைக்கு சென்று பார்த்தால் நீரில்லை. இரு முனைகளிலும் உள்ள கழிவறைகளிலும் இதுதான் நிலைமை. நடத்துனரிடமும், பயணச்சீட்டு பரிசோதகரிடமும் காவலரிடமும் முறையிட்டோம். இது அஸ்ஸாம் பிராந்திய வண்டி என்பதால் எங்களிடம் முறையிட்டு பயனில்லை என கைவிரித்தனர்.
அடுத்தடுத்த நிலையங்களில் நீரேற்றினார்கள் . பயனில்லை. காரணம் பெட்டிக்குள் இருக்கும் வினியோக புதை குழாய்கள் மிகவும் பழையவை .துருவேறியவை பழுதடைந்தவை. தொட்டி நிறைய நீரிருந்தாலும் காற்று அடைப்பு இருப்பதனால் மெல்லிய கோடு போலவே நீர் வந்தது. எங்களைத்தவிர மற்றெந்த பயணிகளும் இது குறித்து முணுமுணுக்கக்கூட இல்லை.
யாரிடம் சொல்லியும் ஆகப்போவது ஒன்றுமில்லை என்ற ஞானமா ? அல்லது எதுவும் உறைக்காத எருமை மந்தமா ? அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
குவாஹத்தியிலிருந்து சென்னைக்கு நாங்கள் திரும்பிய வேறொரு வாரந்திர தொடர் வண்டியிலும் நீர் தட்டுப்பாடு சிக்கல்தான்.
மாபெரும் இந்திய நாட்டின் மிக முக்கியமான ஒருமைப்பாட்டுக் குறியீடாக திகழும் தொடர்வண்டித்துறையின் ஒரு பிராந்தியத்தைச் சார்ந்த வண்டித்தொடரை வேறொரு பிராந்திய பணிமனைகளில் தீண்டிக்கூட பார்ப்பதில்லை. அல்லது அரைகுறையான பராமரிப்பு என்ற அவல நிலைதான். அடுத்த ரயில் பிராந்தியத்தை எதிரி நாட்டு தொல்லை போல் ஏன் கருத வேண்டும் ?
எங்களுடன் நேப்பாளிய குடும்பம் ஒன்று வந்தது. கண் மருத்துவம் & கண்ணாடி வணிகம் செய்பவர்கள். உலக நாடுகள் பலவற்றிற்கும் போய் வரக்கூடியவர்கள். வணிகத்துடன் சுற்றுலா என்ற இரட்டை நோக்குடன் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தாயகம் திரும்புகின்றனர். புது ஜல்பைகுடியிலிருந்து நேபாள எல்லையானது அரை மணி நேரத் தொலைவில்தான் உள்ளது.
சென்னைக்கும் அவர்கள் போய் வந்துள்ளனர். சென்னை மக்கள் கடுமையானவர்கள். தூசியும் ஓசையும் இங்கு கூடுதல் என்ற மனப்பதிவுடன் திரும்புகின்றனர். ஒரு வேளை முரட்டு ஆட்டோக்காரரர் எவரிடமாவது பட்டிருக்கலாம்.
நேபாளம் பற்றிய உரையாடலில் மன்னராட்சி, மர்மமான மன்னர் குடும்ப கொலை என பல சங்கதிகள் சுழன்று வந்தன.
“நாங்கள் மதத்தால் ஹிந்துக்கள், மாட்டிறைச்சி உண்ண மாட்டோம். ஆனால் நாடென்று வரும்போது நாங்கள் தனித்துவமானவர்கள்தான். இந்தியா எங்களை பெரிய அண்ணணின் மன நிலையில் இருந்துதான் பார்க்கின்றது. சீனாவுடனான எங்கள் உறவையும் அது அச்சுறுத்தலாகவே பார்க்கின்றது. எங்களை பணிய வைப்பதற்காக மாதேசிக்களின் போராட்டத்தை ஒட்டி எங்களுக்கான அத்தியாவசிய பொருட்களுக்கான தடை ஏற்பட்டது. இதன் பின்னனியில் இந்திய அரசு இருந்தது “ என கசந்த குரலில் கூறினர்.
ஓடு ஓடென்று ஓடிய தொடர் வண்டி கொல்கத்தாவின் ஹவுடா நிலையத்தை தொடாமல் மால்தா வழியாக கடந்து சென்று கொண்டிருந்தது.
ஃபராக்கா அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரானது மாலைப்பொழுதின் மொத்த மஞ்சள் சிவப்பையும் தன்னுள் இழுத்து கரைத்துக் கொண்டு வெளிறிய சிவப்பு நிறத்தில் அகன்ற பரப்பில் எங்கள் கால்களுக்கு கீழே முழு சீற்றத்துடன் பாய்ந்த விதமானது .ஒரு வித மன கலக்கத்தையும் உடல் சிலிர்ப்பையும் உண்டு பண்ணியது.
அஸ்ஸாமின் அரச குடும்பத்தை சார்ந்தவர் என தன்னைத்தானே கூறிக்கொண்ட மாணவர் ஒருவர் அறிமுகமானார். அவர் பகுதி நேரமாக சுற்றுலா வழிகாட்டியாகவும் பணி புரிபவர் போலும்.
அஸ்ஸாமின் பா.ஜ,க. அரசை கண்மூடித்தனமாக ஆதரித்துக் கொண்டே வந்தார்.
ஃபாஸிஸ தந்தையர்களும் புரவலர்களுமான பனியாக்களுக்கு இன்று பா.ஜ.க.வானது தொண்டைக்குள் சிக்கிய கசப்பு குளிகையாக மாறியிருக்கும்போது அஸ்ஸாமின் துள்ளும் புது குஞ்சுக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகின்றது ? புது வரவு கொஞ்ச நாளைக்கு இனிக்கத்தான் செய்யும்.
பெங்காலுக்குள் எங்கள் வண்டி நுழைந்த பிறகு ஒவ்வொரு நிலையத்திலும் ஈஈஈ……க் பீபீபீ…. க்க் என என உறுமலும் கூக்குரலுமாக தொடர்ந்து கொண்டே இருந்தது. தொண்டைக்குள் தகர உருண்டை சிக்கி இழுபட்டது போன்ற வேதனை ஒலி
வண்டியின் காவலர் பெட்டிக்கு அடுத்துள்ள சரக்குந்தில் கிட்டதட்ட 90 பன்றிகள் அடைக்கப்பட்டிருந்தன. பெட்டியின் பாதியில் மூங்கில் தட்டியை அடைத்து அதன் மேல் கால்களை ஆட்டிக்கொண்டு அரைத்தூக்கத்தில் மந்தையின் மேய்ப்பர்கள் படுத்து கிடந்தனர். பன்றிகள் இறைச்சிக்காக வடகிழக்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தக் காட்சியில் பசு மைந்தர்களுக்கு ஏதோ செய்தியிருப்பது போல தோன்றியது.
2792 கிலோ மீற்றர் தொலைவு, 56 மணி நேரம் கடந்து ஒரு வழியாக குவாஹத்தி வந்து சேர்ந்தோம்.
மூடுந்து போல இருக்கும் தானிகள் ( ஆட்டோக்கள் ) , குடை வைத்த சைக்கிள் ரிக்சாக்கள் என நிதானமாக இருந்தது குவாஹத்தி.
அய்ஸாவ்ல் நண்பர் சதீஷ் பரிந்துரைத்த விடுதிக்கு சென்றால் அங்கு இடமில்லை.
ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கினோம். எல்லாம் எங்கள் நிதி நிலைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தோம். கடைசியில் தொங்கலில் ஒரு விடுதிக்கு போய் சேர்ந்தோம். குளியலறை பராமரிப்பைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத விடுதி.
......... பயணம் தொடரும் .........
|