குவாஹத்தியை பார்க்க ஒரே ஒரு நாள்தான் ஒதுக்கினோம்.
முதலில் அஸ்ஸாம் அரசு அருங்காட்சியகத்திற்கு சென்றோம்.
அருங்காட்சியக வளாகத்தினுள் நாங்கள் மூவரும் சேர்ந்து நிற்கிறார் போல ஒரு ஒளிப்படம் எடுப்பதற்காக ஆளைத் தேடினோம். தலைவாயிலைக் கடந்து ஒற்றைக்கோடு போடுவது போல நங்கை ஒருத்தி சீராக நடைபயின்று வந்தார்.
நாங்கள் கேமிராவைக்காட்டி சொல்வதற்குள் அவர் தன்னைத்தான் நாங்கள் ஒளிப்படம் எடுக்கப்போகின்றோம் என நினைத்துக்கொண்டார் போலும் அதற்கேற்ப தோரணை அவரிடம் வெளிப்பட்டது. விளக்கி சொன்னவுடன் குறுநகையுடன் சம்மதித்தார்.
அருங்காட்சியகத்திற்குள்ளே அஸ்ஸாமின் நாகாவ் பகுதி பழங்குடி மாணவி நடந்து வந்தாள். வானத்திலிருந்து இறங்கி பாந்தமாக தரையில் நடக்கும் பறவை நடை. கௌதாரியை நினைவுபடுத்தும் ஆடை. ஆளை நிற்கச்சொல்லி படமெடுத்தேன்.
நான் நன்றி சொல்வதற்குள் எனக்கு நன்றி சொல்லி விட்டு இளம் புன்னகையுடன் அவள் மீண்டும் மெல்ல நடந்து காற்றில் ஏகினாள்.
பொதுவாகவே வடகிழக்கின் பொதுவெளியில் பெண் ஆண் எதிர்கொள்ளல் என்பது மிக இயல்பாகவும், அச்சுறுத்தலுமின்றியும்தான் நடைபெறுகின்றது. பதட்ட அதிர்வுகளும் அலட்டல்களுமில்லை. பெரும்பான்மை இந்தியாவில் இவை அரிதான நிகழ்வுகளே.
அரசுத் துறைகளுக்குரிய அலட்சியமும், பற்றாக்குறையும் அருங்காட்சியகத்தில் எதிரொலித்தாலும் - அஸ்ஸாம் & வடகிழக்கு பற்றிய சிறு திறப்பை உண்டாக்கும் வகையில் அமைத்திருந்தனர். ஏராளமான அரங்குகள். தூய்மையாகவும் அகலமானவயாகவும் இருந்தன.
காந்தியடிகளின் அரிய ஒளிப்படங்களையும் வைத்திருக்கிறார்கள். கவுன் போட்ட இந்திரா பிரியதர்ஷினி காந்தியின் தலைமாட்டில் அமர்ந்திருக்கிறார்.
ஜனநாயகக்கனியின் அருகில் சர்வாதிகார தளிர். உறையும் காலத்தின் மெல்லிய சட்டகங்களுக்குள்ளிருந்து மெல்ல கசிந்து நிகழ்காலத்திற்குள்ளும் இறங்கிக் கொண்டிருக்கும் இரு தீரா முரண்கள்.
ரப்பரால் ஊற்றி இறுக்கப்பட்டது போன்ற முக அமைப்பு,. சதைப்பாறை படித்தட்டு போலவுள்ள கன்ன கதுப்பு, செந்நிறம், வலுவான உடற்கட்டு ,வண்ண வண்ண ஆடைகளுடன் ஒரு பழங்குடி குடும்பம் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு மூதாட்டி தன் வயதை மட்டுமே தன்னிலிருந்து கடந்து போக விட்டிருக்கின்றார். அவரின் உடலின் மிடுக்கையும், கட்டுறுதியையும் எதனைக் கொண்டு பிடித்து வைத்திருக்கின்றார் எனத் தெரியவில்லை.
காமரூபம் என முன்னர் என்றழைக்கப்பட்ட மாநிலத்தின் இன்றைய பெயர் அஸ்ஸாம் .அதனை ஆண்ட அஹோம் அரச மரபினரின் பெயரிலிருந்து திரிந்து உருவானது.
அரசாட்சி, இனக்குழு ஆட்சிகளின் கீழ் மாறி மாறி ஆளப்பட்ட அஸ்ஸாம், கி.பி. 1821 இல் பர்மிய ஆட்சியாளரின் கையில் வருகின்றது. பின்னர் வெள்ளையர் ஆட்சியின் வழியாக விடுதலை இந்தியாவின் உறுப்பாக மாறியது.
இந்தோ ஆரியன், ஆஸ்ட்ரோ ஆசியாடிக், திபெத்தோ பர்மியன் என மூன்று இனங்களின் சங்கமமாக அஸ்ஸாம் விளங்குகின்றது.
1837 ஆம் ஆண்டிலிருந்து தேயிலை பயிரிடுதல் இங்கு தொடங்கியிருக்கின்றது. தேயிலைத்தோட்டங்களில் பணி புரிவதற்காக நாட்டின் உள்பகுதிகளிலிருந்து ஏராளமான அடிமைத் தொழிலாளர்களை கொண்டு வந்து மணல் குவிப்பது போல் குவித்தது வெள்ளையரசு.
கிழக்கு பாகிஸ்தானாக இருந்து இந்தியாவின் தலையீட்டின் பேரில் தனி நாடாக்கப்பட்டது பங்ளாதேஷ்.
இந்தியப் பிரிவினையின் கசப்பான அடிப்படைகள் இந்திராவின் இந்த தவறான முடிவினால் என்றென்றைக்கும் நீறிக் கொண்டிருக்கும் நெருப்பு வித்துக்களாக மாறி வடகிழக்கு முழுக்க விழுந்திருக்கின்றது.
புதிய தேசம், அரசியல் குழப்பங்கள் ஏற்கனவே நீடிக்கும் வறுமையும் நெருக்கடியும் என எல்லாமாக ஒன்று சேர்ந்து மாபெரும் அகதித்திரள் பங்களாதேஷின் எல்லாப்பக்கங்களிலிருந்தும் வெளியில் உதிர்ந்தது.
பசித்தவனுக்கு ஏது எல்லைக்கோடு ?
சோறும், நீரும், நிம்மதியும் எங்கேயாவது கிடைத்திடாதா ? என்ற தவிப்பில் பெங்காலிலிருந்து இந்தியா வந்த அகதிகள் ஏராளம்.
பிரிவினை, வெறுப்பு, அதிகார, மேலாதிக்க காய் நகர்த்தல்கள் என்ற ரீதியில் அரசுகள் நடத்தும் அரசியல் கொடூரங்களின் தீய கனியை புசிப்பது வறுமையும் பசியும் மட்டுமே விதிக்கப்பட்ட சராசரி மக்களே.
பெங்காலி முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல் 1983 ஆம் ஆண்டு மோரிகாவ் மாவட்டம் நெல்லி கிராமத்தில் நடைபெற்றது. இந்தியப்பிரிவினையின் நச்சு தொடர் விளைவு..
அனைத்து அஸ்ஸாம் மாணவர் ஒன்றியம் (AASU) என்ற மாணவர் அமைப்பின் தலைமையின் கீழ் அணிதிரண்ட பழங்குடியினரால் 3,500 க்கும் மேற்பட்ட குடிமக்கள் இன அழித்தொழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர்.
தீவிரவாத அஸ்ஸாமின் மாணவர் அமைப்பினரை உள்ளடக்கிய அஸ்ஸாம் கண பரிஷத்துக்கும் நடுவணரசுக்குமிடையே அஸ்ஸாம் ஒப்பந்தம் 1985 ஆம் ஆண்டு ஏற்பட்டது, அதன்படி நெல்லி இன அழித்தொழிப்பிற்கு காரணமான அனைத்து குற்றவாளிகளின் மீதான வழக்குகளும் கைவிடப்பட்டன. அஸ்ஸாம் கண பரிஷத் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியது. அதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகளில் மனித கவுச்சி.
மதிய உணவிற்காக உணவக அலைச்சல். கடைசியில் ஒரு மார்வாடி கடைக்கு வந்து சேர்ந்தோம். . தில்லி ஜய்ப்பூரை விடவும் இந்த உணவகத்தில் விலை மிகவும் கூடுதல். அதே போல இரவுணவிற்காக ஒரு கேரளீயரின் கடைக்கும் சென்றோம். தென்னிந்திய உணவு வகைகள் அனைத்துமே கிடைக்கின்றன. பொதுவாகவே இங்கு நல்ல உணவுகளுக்கு மிகக் கூடுதலாகவே விலை கொடுக்க வேண்டியுள்ளது.
பிரம்மபுத்திரா படகு பயணத்திற்காக சென்றோம். குவாஹத்தியை தெற்கு வடக்காக பிளந்து போட்டிருக்கும் மாபெரும் நீர் பரப்பு. வானத்தையும் நிலத்தையும் நீராக உருக்கி பெருந்தட்டு ஒன்றில் பரத்தி வைக்கப்பட்டது போல இருக்கின்றது.
ஐந்து ருபாய் கட்டணத்தில் இக்கரைக்கும் அக்கரைக்குமான படகு பயணம். கட்டணப்பலகையில் மனிதர், பன்றி, மிதிவண்டி, மோட்டர் சைக்கிள், ஆடு, சரக்குகளுக்கு என தனித்தனியாக கட்டணத்தை எழுதி வைத்திருந்தார்கள். மனிதருக்கான கட்டணம் ஐந்து ரூபாய்கள்தான்..
மேல்தட்டில் இரு சக்கர ஊர்திகள் சரக்குகள், கீழ்தட்டில் மனிதர்கள் என சுமந்து கொண்டு புறப்பட்டது படகு. மெல்லிய பழுப்பு கலந்த நீர் குமிழ் விட்டு விலகியது. தன்னைத்தானே முழு மூச்சுடன் இழுத்துக் கொண்டு ஓடும் நதியின் நிறப்படலம். அதன் ஆழத்தையும் வேகத்தையும் கள்ள சிரிப்புடன் தனக்குள் ஒளித்தே வைத்திருக்கின்றது .
ஒரு முறை பீஹாரி தொழிலாளர்களை ஏற்றிசென்ற படகு கவிழ்ந்திருக்கின்றது. ஆட்களும் இல்லை படகும் இல்லையாம்.
அஸ்ஸாமின் வாழ்வும் இறப்பும் அழகும் அலங்கோலமும் பிரம்மபுத்திரா நதிதான். மற்ற மாதங்களில் குமரி நடை பயில்பவளுக்கு பருவ காலங்களில் ஊழித்தாண்டவம்தான்.
இருள் கவிழும் முன்னர் மா காமாக்யா மந்திரை பார்த்து விடலாம் என கிளம்பினோம்.
51 சக்தி பீடங்களில் அன்னை காமாக்யா கோயிலும் ஒன்று. 8 ஆம் நூற்றாண்டைசார்ந்தது. கீழ் அஸ்ஸாமின் ஷிகாரா பாணி கட்டிடக்கலை. கல்லால் ஆன தேன் கூடு.
நமதூர் கோயில்தலங்களில் ஆக்கிரமித்திருக்கும் கடைக்காரர்களின் ஒழுங்கற்ற தனத்தை இங்கு பார்க்க முடியாது.. கோயிலுக்கு செல்லும் பாதை தொடங்கி உள் வளாகம் வரை எவ்வித வெளிக்கட்டுப்பாடுகளும் இல்லாமல் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கப்படுகின்றது.
தாந்த்ரீக மரபையொட்டி இங்கு கால் நடைகளை பலியிடுகின்றனர். நேர்த்திக்கடனுக்கான குட்டை ஆடுகள் கோயிலுக்குள் சுருட்டை முடிகளுடன் ஓடியாடிக்கொண்டிருந்தன பலி பீடத்தை போய் பார்த்தோம். ஈரக்காற்றில் கலந்து வீசும் குருதி வாடை. காலை வேளைகளில்தான் பலி நடக்கும் என்றார்கள்.
பயணம் தொடரும்...
இக்கட்டுரையின் முந்தைய பாகங்களைப் பின்வரும் இணைப்புகளில் சொடுக்கிக் காணலாம்:-
முன்னுரை || பாகம் - 1 |