பள்ளிப் பருவம் அது. அஞ்சல்காரரிடம் கடிதங்களைப் பெறுவதில் அப்படியொரு ஆனந்தம் ஏற்படுவதுண்டு. அதிலும், வான்வழி அஞ்சலில் வரும் சின்ன மாமாவின் கடிதங்களுக்கு, சற்று கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். குவைத் நாட்டிலிருந்து வரும் அவற்றின் உறையே, தனி அழகுதான்! நானும் அதுபோன்று கடிதங்களை எழுதிட ஆவல் கொள்வதுண்டு.
கடுதாசிக் கனவுகள்
மட்டைப் பந்து விளையாடி களைத்து - மீதமிருக்கும் நேரங்களில், சிறார் இதழ்களைத் தேடித்தேடி படிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தேன். பள்ளி முடிந்ததும், அரசு பொது நூலகம் சென்று - கதை நூல்களை புரட்டுவதை வழமையாக்கியதோடு, நாளிதழ்களில் வரும் பேனா நண்பர்களுக்கான விளம்பரங்களையும் ஆசையாசையாய் படிக்கலானேன்.
பெரிய மாமாவின் வீட்டுக்கு வரும் ஆங்கில நாளிதழை, அவர்களுக்கு அடுத்தபடியாக நான்தான் கூடுதலாக வாசித்திருப்பேன். அதில் வரும் பேனா நண்பர்களுக்கான விளம்பரங்கள் அனைத்தும், எளிதில் இளையவர்களை கவரும் வண்ணம் அமைந்திருக்கும்.
நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்து இடப்படும் இவ்விளம்பரங்களின் ஒற்றுமை & வேற்றுமைகளை உற்று நோக்கி, சக வயது அழைப்புகளை முறையே வகைப்படுத்துவேன். அதில், மனதிற்கு பிடித்த ஒரு சிலரது தொடர்பு விபரங்களை மட்டும் குறித்துவைத்துக் கொள்வது வாடிக்கை.
இவ்வாறாக, நாளிதழ்களில் எடுத்த குறிப்புகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போனது. ‘என்றாவது ஒரு நாள் நானும் கடிதங்களை எழுதுவேன்’, என்னும் நம்பிக்கையோடு கழிந்தன நாட்கள்!
பேனா வழி அன்பு
நான் பிறப்பதற்கு முன்னர் - கண்ணப்பா (தாய் வழித் தாத்தா) இலங்கையில் இருந்த காலங்களில், கடிதப் போக்குவரத்து மிகுதியாக இருந்ததையும் & சுவிட்ஸர்லாந்து நாட்டிலுள்ள கடிகார நிறுவனத்துக்கு அவர்கள் வாடிக்கையாக கடிதம் எழுதியதையும், எனது கண்ணும்மா (தாய் வழிப் பாட்டி) அவ்வப்போது பெருமைப்பட்டுக் கூறுவது, சிறுபிள்ளையான எனக்கு உத்வேகத்தை அளித்தது.
காலமும் கனிந்தது. நானும் கடிதங்களை எழுதலானேன். தமிழகத்தை தாண்டி - மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் & குஜராத் என பல மாநிலங்களிலிருந்தும், இந்த சிறுவனைத் தேடி கடிதங்கள் வரத் துவங்கின. எனது கண்ணப்பா & வாப்பாவை (அப்பா) போன்று, எனக்கும் கடிதம் எழுதுவதில் ஆர்வம் மிகுதியாக உள்ளதென வீட்டில் பேசத் துவங்கினர்.
அஞ்சல்காரரிடம் கடிதங்களைப் பெறுவதிலுள்ள மகிழ்ச்சி, முன்பிருந்ததை விட இரட்டிப்பானது. பள்ளிக்கூட கதைகள், குடும்பத்தாரின் உடல் நலம், ஊரின் மகிமை & பிடித்த பொழுதுபோக்குகள் என பலவிதமான செய்திகளோடு தூது போயின அந்த மடல்கள்.
மனதிற்கினிய பொழுதுபோக்கு
கடிதங்களின் மீதான எனது ஈர்ப்பானது – அவற்றுள் பரிமாறப்படும் தகவல்களோடும் & வலிந்தோடும் வாஞ்சையோடும் முற்றுப்பெற்று விடாமல், அவற்றின் உறைகளுக்கு மேலே ஒட்டப்படும் அழகிய அஞ்சல் தலைகளின் மீதும் திரும்பியது. நண்பர்களின் கடிதங்களிலும் & சின்ன மாமாவின் அயல்நாட்டு கடுதாசிகளிலும் ஒட்டப்பட்ட அஞ்சல் தலைகளை, பக்குவமாக கிழித்தெடுத்து – கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்கலானேன்.
தனது சிறுபிராயத்தை இலங்கையில் கழித்த பெரிய மாமா, அஞ்சல் தலைகளை சேகரிப்பதில் தேர்ந்து விளங்கினார்கள். அவர்களின் அஞ்சல் தலை செருகேட்டை (Stamp Album) கண்ட பின்புதான், எனது சேகரிப்பை இன்னும் வேட்கையோடு தொடரலானேன்.
அஞ்சல் தலைகளை ரசிக்கத் துவங்கினேன். துளையிடப்பட்ட அவற்றின் விளிம்புகள் என்னை பெரிதும் கவர்ந்தன. பெரிய பெரிய உலகின் குட்டி குட்டி சாளரங்களான அவை, புதுப்புது நாடுகளின் பெயர்களை எனக்கு அறிமுகம் செய்தன.
நான் வளர்ந்து பெரியவனானதும், எனது கையிருப்பிலுள்ள அஞ்சல் தலைகளை வெளியிட்ட அனைத்து நாடுகளையும் பார்த்திட ஆசைக்கொண்டேன். பள்ளிக் கல்வியில், ஆங்கிலத்தைப் போன்றே - புவியியலும் ஒரு விருப்பப் பாடமாக மாறியது.
நாடு, வடிவம், பெருமானம், அளவு, அழகு & உள்ளடக்கம் என பல்வேறு விதமாக, அஞ்சல் தலைகளை வகைப்படுத்துவேன். உள்ளடக்கங்களின் கருப்பொருளைக் கொண்டு - மனிதன், விலங்கு, கடல்வாழ் உயிரினம், பறவை, கட்டிடம், பாலம், நினைவுச் சின்னம், ஊர்தி, மரம், மலர், இலை, விளையாட்டு & தேசக் கொடி என பல வகைகளாக அவற்றை பிரித்தெடுப்பேன்.
தெருக்கார நண்பன் ஒருவனும் இதில் ஆர்வம் கொண்டிருக்க, எங்களுக்குள் அஞ்சல் தலைகளை கைமாற்றிக் கொள்வோம். ஒரே மாதிரியான அஞ்சல் தலை - ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்டவை இருக்குமானால், அவற்றை முதலில் மாற்றி - அதற்கு பகரமாக வேறு புதுமையான ஒன்றை பெற்றுக்கொள்வோம். வெகுநேரம் நடக்கும் இந்த பேரங்களில், முக்கோண வடிவில் இருக்கும் அஞ்சல் தலைகளுக்கு மவுசு கூடுதலாக இருக்கும்.
காலம் உருண்டோடியது. நான் மிகவும் ரசித்த ‘அஞ்சல் தலைப் பருவத்தை’, எனது கல்லூரி வாழ்க்கை மறக்கச் செய்தது. அதற்கு பிந்தைய வருடங்களில், வீடு கட்டுதல், மண முடித்தல் & கடனை திருப்புதல் எனும் முப்பெருங்கடமைகளில் மூழ்கி - மீண்டெழுவதற்குள், வயது முப்பதை கடந்தது!
தேடல் துவங்கியது…
ஒவ்வொரு வளர்ந்த மனிதனுக்குள்ளும் - ஒரு சிறு குழந்தை ஒளிந்திருப்பதை எனக்கு உணர்த்துவதற்காக, ஓர் பெண் பிள்ளையை பரிசளித்தான் வல்ல இறைவன்!
இன்றைய உலகின் அற்புதக் குழந்தைககளில் பெரும்பாலானோர், கையடக்க கருவிகளுக்கு - தங்களின் குழந்தைமையை இரையாக்குகின்றனர். தலைவிரித்தாடும் இந்த தொழில்நுட்ப பிசாசிடம் - என் மகளும் சிக்கிடாதிருக்க விரும்பினேன்.
‘உங்களின் குழந்தையிடம், ஒரு கைபேசியை கொடுப்பதும் - ஒரு கிராம் போதைப் பொருளைக் கொடுப்பதும், ஒப்பீட்டளவில் ஒன்றுதான்’, என லண்டனை சேர்ந்த ‘தொழில்நுட்ப போதை தடுப்பியல்’ நிபுணர் திருமதி மாண்டி சாலிகரி (Mandy Saligari) எச்சரிக்கிறார். கையடக்க கருவிகளைப் பற்றி கவலையுற்றால் மட்டும் போதாதென தீர்மானித்து, அதனை விட்டும் தப்புவதற்கான மாற்று வழிகளை தீவிரமாக சிந்திக்கலானேன்.
சிறுபிராயத்தில் நான் ரசித்தவைகளையும் இழந்தவைகளையும் ஒருசேர அவளுக்கு அளித்திட நினைத்தேன்; அதே வேளையில், எனது விருப்பு-வெறுப்புகள் ஒருபோதும் அவளது தனித்துவத்தையோ தன்விருப்பத்தையோ பாதிக்கக் கூடாது என்னும் தெளிவினையும் பெற்றிருந்தேன்.
பரிசோதனை முயற்சியாக, முதலில் இஸ்லாமிய சிறார் நூல்களை தேடியோடினேன். அந்த சிறுபிள்ளையை வெகுவாக கவர்ந்த அவை - கைபேசிக்கு மாற்றாக விளங்குவதோடு, கதைகேட்டல் என்னும் நற்பண்பையும் அவளுக்கு வளர்க்கத் துவங்கின. இஸ்லாமிய நூல்களோடு, பொதுவான சிறார் நூல்களையும் பெருமளவு சேர்த்த பின்னர், மற்றுமொரு முயற்சிக்கான நேரம் நெருங்கியதை உணர்ந்தேன்.
இதயத்தின் ஆழத்தை கிளரித் தோண்டி - உறைந்து போயிருந்த எனது ஆக விருப்பமான செயல்களுள் ஒன்றுக்கு, புத்துயிர் கொடுத்திட எண்ணினேன். அஞ்சல் தலைகளுக்கான எனது தேடல், அக்கணமே மீண்டும் தொடங்கிற்று!
மாற்றத்தை ஏற்படுத்திய பயணங்கள்
இப்போதுள்ள அஞ்சல் தலைகள், நம் மரபுசார்ந்த விசயமாகக் கருதப்படுபவை இல்லைதான். அது எங்கோ ஓர் அயல்தேசத்தில் தோன்றிய பண்பாடுதான். இருப்பினும் இன்றைய குழந்தைகளுக்கு, நம்பிக்கையூட்டும் ஒரு மாற்று வழியினை இந்த ‘அஞ்சல் தலைகள் சேகரிப்பு’ (Philately) வழங்குகிறது.
அஞ்சல் தலைகள் வெளியான காலத்திலிருந்தே, அவற்றை சேகரிப்பவர்களும் (philatelists) உருவாகினர். அவர்களுள் சிலர், ஒரு குறிப்பிட்ட நாட்டின் அஞ்சல் தலைகளை மட்டும் சேகரிக்க; ஏனைய சிலரோ, பறவைகள் - விலங்குகள் என ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து சேகரிக்கலானர்.
அஞ்சல் தலைகள் சேகரிப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் தங்களை இருத்திக் கொள்ளாது, அவற்றின் மூலம் ஒரு தேசத்தின் கலை, பண்பாடு, அறிவியல், சாதனை & வரலாறு ஆகியன குறித்த கல்வியினை பெற்றிடும் ஆர்வம் ஒன்றே, இவர்கள் அனைவருக்குமான ஒற்றுமையாகும்.
இன்றைய நிலையில், அஞ்சல் துறையின் வேலைகளை - தனியார் விரைவு தூது நிறுவனங்கள் அடாவடியாக பரித்துக்கொள்ள, அஞ்சல் தலைகளின் பயன்பாடும் அவற்றை சேகரிப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகவே குறைந்து போனது.
ஆக, சிறார் கதை நூல்களைப் பெறுவதை விடவும், அஞ்சல் தலைகளுக்கான எனது தேடல் - சற்று கடினமாகவே இருந்தது. ஆயின், வழமைக்கு மாற்றமான இருவேறு பயணங்கள் - இத்தேடலின் வேகத்தையும் போக்கையும் முற்றிலுமாக மாற்றியதோடு, என்னை மீண்டும் குழந்தையாக்கியது!
[பயணங்களின் பாதைகள் விரியும்… (இறைவன் நாடினால்)]
முக்கிய மேற்கோள்கள்:
1. Giving your child a smartphone is like giving them a gram of cocaine, says top addiction expert Independent UK
2. Stamps & Collectors – A Little History American Philatelic Society |