குவாஹத்தி என்ற தலைவாயிலில் இருந்து வடகிழக்கின் ஆழத்திற்குள் எப்படி குதிப்பது ?
வடகிழக்கைப் பொறுத்தவரை அரசு போக்குவரத்து பேருந்துகள் என்பது வெறும் பெயரளவில்தான். ரயில் பாதைகளும் வடகிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்போதுதான் துளிர்க்கத் தொடங்கியுள்ளன.
படா காடி, சோட்டா காடி எனப்படும் தனியார் பேருந்துகள், சுமோக்கள், விங்கர்கள் என்பனதான் போக்குவரத்தின் நாடி நரம்புகளாக இங்கு இருக்கின்றன.
இரண்டு மூன்று தனியார் பயண ஏற்பாட்டாளர்கள்தான் வடகிழக்கின் போக்குவரத்தை தொடர்ச்சியாக இயக்கி வருகின்றனர். சுற்றுலா & பயண ஏற்பாட்டு நிறுவனம் ஒன்றை அணுகினோம். அவர்கள் சொன்ன பயண நேரங்களும் தொலைவும் எங்களை புதிய குழப்பத்திற்குள் ஆழ்த்தின. அவர்களின் வண்டி நேர அட்டவணைகளுக்கேற்பவே தகவல்களை வளைக்கின்றனர் என்பதை பின்னர் புரிந்து கொண்டோம்.
கேரள உணவகத்தில் தமிழக இளைஞர்கள் இருவரை சந்தித்தோம். அவர்கள் தொலைத் தொடர்பு பணித்திட்டம் தொடர்பாக குவாஹத்தியில் தங்கியிருப்பவர்கள். அவர்கள் தந்த திட்டத்தின்படி சிறிய வண்டியில் ஷில்லாங்கிற்கு சென்ற பின் அங்கிருந்து ஒவ்வொரு பகுதியாக பயணத்தை தொடருவது என தீர்மானித்தோம்.
காலையில் குளித்து ஆயத்தமாகி காரில் கிளம்பினோம். குவாஹத்தியிலிருந்து ஷில்லாங் செல்லும் பாதையில் வண்டி நுழைந்த போது ஓட்டுனர் சொன்னார், ‘இந்த பாதையின் வலது பக்கம் மேகாலயா இடது பக்கம் அஸ்ஸாம்’ என சொன்னார்.
அப்படித்தான் பெயர்ப்பலகைகளிலும் எழுதியிருந்தது. சாலை தடுப்பை எடுத்து விட்டால் என்ன ஆகுமோ தெரியவில்லை….!?
மலை ஏற்றம் எனத் தெரியாத அளவிற்கான சாலை. இன்பமான பயணம். முதுகுக்குப்பின்னே இந்தியா விலகி செல்ல செல்ல குளிர்ந்த காற்றின் இளம் வருகையைப்போல வடகிழக்கானது மெல்ல தன் மூடலை விலக்கிக் கொள்ளத் தொடங்கியது.
மார்பின் குறுக்காக தோளில் முடிந்திருக்கும் வண்ண துவாலைகளுடன் மேகாலாயப் பெண்கள். வண்ணங்களை சுமக்கும் வண்ணங்கள்.
ஷில்லாங்கில் நாங்கள் போய்ச்சேரும்போது மழை பூச்சொரியலாக பொழிந்து கொண்டிருந்தது.
விடுதியில் சிறிது ஓய்வெடுத்து விட்டு மிஜோரம் ஹவுஸ் சென்றோம்.
மௌனம் நிரம்பி வழியும் ஒரு பூந்திடலுக்குள் நின்றிருந்தது மிஜோரம் ஹவுஸ். எந்த பணியும் இல்லாத ஒரு ஓய்வுச் சூழலில் அங்குள்ள அலுவலர்கள் இருந்தனர். நடுத்தொண்டை குரலில் சன்னமாக தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.இடம் தூய்மையாக இருந்தது. முதியவர் ஒருவர் தனது கைபேசியில் மும்முரமாக கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
மிஜோக்கள் அல்லாத யாராக இருந்தாலும் மிஜோரத்திற்குள் நுழைய இன்னர் லைன் பர்மிட் எனப்படும் உள் நுழைவு அனுமதிச்சீட்டைப்பெற வேண்டும்.
பதினைந்து நாட்களுக்கான அனுமதி என இணைய தளத்தில் போட்டிருந்தாலும் ஏழு நாட்களுக்கான இசைவு மட்டுமே கிடைத்தது. அன்று தலைமறைவு இயக்கமாக இருந்த மிஜோ தேசீய முன்னணிக்கும் இந்திய அரசுக்கும் இடையே முப்பத்தோரு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி இந்த அனுமதிச்சீட்டு முறை நீடிக்கின்றது.
வெள்ளையர்கள் தங்கள் வணிக நலன்களுக்காக போட்ட சட்டமானது இந்திய விடுதலைக்குப்பிறகு வடகிழக்கின் தனித்தன்மையை பாதுகாக்க நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தற்சமயம் மிஜோரமிலும் அருணாச்சல் பிரதேஷிலும்தான் இந்த நடைமுறை உள்ளது.
அரை மணி நேரத்திற்குள் அனுமதி சீட்டு வேலையை முடித்து விட்டு Don Bosco Centre for Indigenous Cultures (DBCIC) என்ற கிறிஸ்தவ நிறுவனத்தின் வடகிழக்கு தொடர்பான அருங்காட்சியகத்திற்கு சென்றோம்.
கேரளத்தை நினைவிற்கு கொண்டு வரும் மேடு பள்ளமான சாலைகள். அடுக்குத்தட்டு வீடுகள். வீட்டின் கொடிகளில் காயப்போட்டிருந்த துணிகளிலிருந்து கிளம்பிய நீராவிப்படலமானது சிறு வெண் துவாலை போல மடங்கி உயர்ந்து திவலைகளாக கரைந்து கொண்டிருந்தது.
இந்திய நகரங்களின் தலையாய சாலை சந்திப்புகளில் காணப்படும் பரபரப்பு ஒழுங்கின்மை கூச்சல் புழுதி தாறுமாறான போக்குவரத்து அலங்கோலங்கலை ஷில்லாங்கில் அறவே பார்க்க முடிவதில்லை.
பொது வெளிகளில் மக்களின் நடமாட்டமானது தோல்பாவைக்கூத்தின் வண்ண சலனம் போல இருந்தது
மூடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் அருங்காட்சியகம் போக முடிந்தது. துரித கதியில் பார்க்கத் தொடங்கினோம்.
ஏழு தளங்களைக் கொண்டது. 1985 இல் பாதிரியார் ஒருவரின் கனவுக்குள் இருந்து முளைத்த இந்த அருங்காட்சியகத்தை 2010 ஆம் ஆண்டு சோனியா காந்தி திறந்து வைத்திருக்கிறார். பன்னாட்டு தரத்தில் பல்ஊடக வசதியுடன் கூடிய அருமையான காட்சியகம்.
நூஹ் நபியின் ஊழிப் பிரளய கப்பலிலிருந்த எல்லா உயிரிகளின் வகை மாதிரிகளிலிருந்து உலகத்திற்குள் உயிர் மீட்கப்பட்டது போல மொத்த வடகிழக்கும் இல்லாமல் போனாலும் கூட இங்கிருக்கும் காட்சிப்பொருட்களின் வழியாக திரும்பவும் கட்டி எழுப்பலாம் போலிருந்தது.
கடின உழைப்பும் நேர்த்தியும் நுட்பமும் வடிவழகும் ஒவ்வொரு தளத்திலும் மின்னியது. தலைக்கு நூறு ரூபாய்கள் கட்டணம் வாங்குகின்றார்கள். அனைத்து தளத்திலும் நன்கு பராமரிக்கப்படும் குடிநீர் வசதிகள், கழிவறைகள். எல்லா அரங்குகளும் ஒலி ஒளி அமைப்பு மின்னணு உணரிகள் மூலம் இயக்கப்படுகின்றன. நாம் உள்ளே நுழைந்தவுடன் உறைந்து கிடக்கும் கால இடவெளிகள் உறக்கம் கலைத்து திடுமென எழுந்து நம்முன் நின்றன.
தனியார் அருங்காட்சியகமாக இருந்தாலும் இதன் கட்டுமானத்தில் அரசு துறைகளின் உதவியும் உள்ளது.
வடகிழக்கு பழங்குடி வாழ்வின் அன்றாட துணுக்குகளை முழுமையாக சித்தரித்திருக்கின்றனர். கிறிஸ்தவத்திற்கு முந்திய அந்த மக்களின் வழிபாட்டு முறைகளைப்பற்றிய சித்தரிப்பையும் இடம் பெறச் செய்திருக்கலாம்.
அருங்காட்சியகத்தின் மொட்டை மாடியில் ஸ்கை வாக் என்ற பெயரில் உலோக தடுப்புகளுடன் கூடிய படிகளை நகர காட்சிக்காக அமைத்திருக்கின்றனர். மாலை வெளிச்சத்தில் கால் பங்கே மீதமிருந்த நிலையில் தலையில் வெள்ளி முளைத்த மரங்களின் தொகுதி போல ஷில்லாங் நின்றிருந்தது.
ஷில்லாங்கில் நல்ல தரமான மரக்கறி உணவும் ஹலால் இறைச்சி உணவும் கிடைக்கின்றது. சந்தைகளில் கூட்டம் அலைமோதுகின்றது. மக்களின் வாங்கும் ஆற்றல் வலுவாக உள்ளது.
மேகாலயாவில் கசி இனக்குழுதான் பெரும்பான்மை என்ற போதிலும் ஜைந்தியா, கரோ என மற்ற இரண்டு பழங்குடியினரும் இருக்கின்றனர். மியான்மர், திபெத், தென் சீனம் உள்ளிட்ட தென் கிழக்காசியாவின் பரவலான மூலைகளில் இம்மூன்று பழங்குடியினரின் ஆதி வேர் உள்ளது.
இவர்களின் உள்ளூர் பண்பாட்டு மரபின் சேகரத்தில் முதலில் புதிய தீற்றல்களை சேர்த்தது பௌத்தமும் ஹிந்து மதமும்தான். அந்த வகையில் கிறிஸ்தவ மத தழுவல் என்பது கடைசியாக நிகழ்ந்ததுதான்.
இடப்பெயர்வு, கால மாற்றம், சிந்தனை வளர்ச்சி போன்றவை பல்வேறு நாகரீகங்களின் முயக்கத்திற்கும் புதியனவற்றின் மலர்ச்சிக்கும் வித்திட்டுள்ளது.
ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டு கிறிஸ்தவமானது பழங்குடிகளின் வாழ்க்கையை முறையை வலுக்கட்டாயமாக அழித்து விட்டது எனக் குற்றஞ்சாட்டுவது அநீதியானதும் உள் நோக்கம் உடையதும் கூட.
கசி, ஜைந்தியா, கரோ பழங்குடியினர் தனித்தனியாக மேகாலயாவின் நிலப்பரப்பை ஆண்டிருக்கின்றனர். பிரிட்டிஷ், இந்திய ஆதிக்கங்களின் வழியாக மேகாலயா இன்றைய ஒன்றிணைந்த வடிவத்தை அடைந்துள்ளது.
வடகிழக்கில் உள்ள எதிர்மறை அம்சம் என்பது பழங்குடி இனக்குழுக்களுக்கிடையே உள்ள அளவுக்கதிகமான இனக்குழு தன்னுணர்வுதான்.. காலங்காலமாக இவர்களுக்கிடையே நடந்து வரும் மோதல்களும் குருதி சிந்தல்களும் கிறிஸ்தவத்தின் பரவல், இந்தியப் பெரு நிலப்பரப்பினுடனான தொடர்பு போன்றவை ஏற்பட்ட பிறகு பெருமளவில் மட்டுப்பட்டுள்ளன.
மேகாலயாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆனால் முதன்மை மொழிகளாக கசி, நார், கரோ மொழிகள் உள்ளன. தென் கிழக்காசியாவின் மன்கெமெர் இனக்குழு குடும்பத்தின் எஞ்சியிருக்கும் மிகச்சில மொழி வடிவங்களில் கசியும் ஒன்று
இந்த மூன்று பழங்குடி மொழிகளும் இன்று வளர்ச்சியடைந்து நீடிக்கின்றது என்றால் அதற்கான காரணம் இங்கு வந்த கிறிஸ்தவ பரப்புரையாளர்களின் கரிசனமும் கடின உழைப்பும்தான்.
18 ஆம் நூற்றாண்டின் நடுவில் இங்கிலாந்தின் பிரெஸ்பெடேரியன் சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் மேகாலயாவிற்கு வந்துள்ளனர். தங்களது சொந்த வாழ்வின் எல்லா கூறுகளையும் தாங்கள் பின்பற்றும் நம்பிக்கைக்கு மொத்த காணிக்கையாக்கி அளித்துள்ளனர்.
வளர்ந்து வரும் இந்தியாவில் தங்களுக்குரிய பங்கை பெறுவதற்கான விழிப்புணர்வும் முனைப்பும் உழைப்பும் அதன் விளைவாக ஈட்டிய ஓரளவு வெற்றியும் வடகிழக்கிந்தியர்களிடம் இருக்கிறது. சட்டியின் அடியில் ஒட்டி வரும் கரிப்பிசுக்கு போல வளர்ச்சியினடியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மேலாதிக்கத்தை அடையாளங்கண்டு கொள்கின்றனர். இவையனைத்தும் அவர்களிடம் இருக்கும் பழங்குடி தன்னுணர்வு, கிறிஸ்தவம், நவீன கல்வி என்ற மூன்று காரணிகளின் விளைவாகத்தான் சாத்தியமாகியுள்ளது.
இந்தியாவின் ஏனைய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடிகளைப் பாருங்கள்.
பெரும்பான்மைச் சமூகம், நடுவண், மாநில அரசுகளின் தொடர் புறக்கணிப்பு, அரச படைகளின் வன்முறை, பெரு வணிக நிறுவனங்களின் இயற்கை வளச்சுரண்டல் போன்றவற்றின் காரணமாக அகதிகளாகவும் நகரத்து எச்சங்களாகவும் உதிரித்தொழிலாளர்களாகவும் குற்ற மரபினராகவும் அவர்கள் சீரழிக்கப்பட்டதுதான் மிச்சம்.
(பயணம் தொடரும்….)
இக்கட்டுரையின் முந்தைய பாகங்களைப் பின்வரும் இணைப்புகளில் சொடுக்கிக் காணலாம்:-
முன்னுரை || பாகம் 1 || பாகம் 2 |