அண்மையில் பொதிகை தொலைக்காட்சியில் பிரும்மம் என்கின்ற அரைமணி நேர கதை ஒன்றை பார்க்க நேர்ந்தது. அது பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய சிறுகதையின் தொலைக்காட்சி வடிவமாகும்.
குடும்பத்தலைவனால் ஆசையாக அவரது புதிய வீட்டின் முற்ற வெளியில் வளர்க்கப்படுகின்றது ஒரு முருங்கை மரம். பல போராட்டங்களிடையே அம்மரத்தை காப்பாற்றும் அவர் ஒரு நாள் இறுதிப்பயணம் சென்று விட்டார்.அடுத்த சில நாட்களில் அடித்த மழைக்காற்றில் முருங்கை மரமும் முறிந்து வீழ்கின்றது.
அதன் எஞ்சிய துண்டுகள் பூமியில் நடப்பட்டு பல காலமாகியும் முளைக்கவில்லை. இறந்த அந்த குடும்பத்தலைவரின் மணமான மகள் பல காலத்திற்குப்பின் கருவுறுகின்றாள்.அதே சமயம் முறிந்த அந்த முருங்கையின் ஊன்றப்பட்ட கட்டையிலிருந்து இலைகள் துளிர்க்கின்றன . அந்த முருங்கைக்கு பிரும்மம் என பெயரும் இடப்படுகின்றது.
மனிதன் என்பவன் தனித்தவன் அல்ல.அவனது வாழ்க்கை அவனது ஆயுள் காலத்தோடு முடிவடைவதில்லை. மாறாக அது அவனது மூதாதையரிலிருந்து தொடங்கி அவனது பெற்றோர் வழியாக அவனுக்கு கிடைத்து அதை அவன் தன் பிள்ளைகள் வழியாகத்தொடர்வதுதான் வாழ்க்கை. இதுதான் அக்கதையின் கரு. இக்கதையின் கருப்பொருளை ஒரு வீட்டு முற்ற வெளியில் வளர்க்கப்படும் ஒரு முருங்கையின் வடிவில் குறியீடாகச்சொல்லிச்செல்கின்றது அக்கதை.
நம்மில் நடுத்தர வயதை எட்டிய அனைவரும் நமது சிறிய வயதில் பெரும்பாலும் எல்லா வீட்டு கொல்லைப்புறத்திலும் பசுமை அலங்காரத்துடன் நின்ற தோட்டங்களைப்பார்த்திருக்கின்றோம். காற்றின் இதமான தாலாட்டிற்கு செல்லமாக தலையாட்டி நின்ற அந்த வீட்டுத்தோட்டங்கள் காகம்,குருவி போன்றவற்றின் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும்,அணில்,ஓணான் போன்ற சிறு உயிரினங்கள் விளையாடிக்களிக்கும் திடலாகவும் பல பரிமாணங்களுடன் நமது வாழ்வுடன் பிணைந்திருந்தன.
நமதூரின் பெண்ணுக்கொரு வீடு திட்டத்தில் இன்று அவை வெள்ளை வெளேரென்று கண்களை கூச வைக்கும் கான்கிரீட் மாடிகளாகி விட்டன.
பசுமை விடைபெற்றதால் நமதூரின் மழையளவும் குறைந்து வீடுகளுக்குள்ளும் வீதிகளிலும் வெப்ப அளவு உயர்ந்துள்ளது. ஒற்றைப்பைசா செலவில்லாமல் வீட்டாருக்கும் அண்டை அயலாருக்கும் இலவசமாக கிடைத்த ருங்கைக்காய், கீரை, கருவேப்பிலை, பப்பாளிப்பழம், பீர்க்கங்க்காய், புடலங்காய், எலுமிச்சங்காய், நாரத்தங்காய் உள்ளிட்ட மரக்கறிகள் இன்று பூச்சி மருந்தின் நச்சுத்தன்மை கலந்த விலைப்பொருட்களாக கடைகளில் வீற்றிருக்கின்றன.நம்மை பார்த்து சோகமாக புன்னகைக்கின்றன.
யாரைச்சொல்லி என்ன பயன்? பெண் பிள்ளைக்கு வீடு கொடுக்கும் ஊரின் மரபும், அதன் விளைவாக நஞ்சு போல் எகிறும் நிலத்தின் விலையும் நகர விரிவாக்கமும் வீட்டுத்தோட்டங்களை வரலாற்றின் பழைய பக்கங்களில் குடி பெயர வைத்து விட்டன. பழையதை நினைத்து வருந்துவதில் என்ன பயன்? இனி ஆகக்கூடிய விஷயத்தை பார்ப்போம்.
அகில இந்திய வானொலியின் சென்னை 1 அலைவரிசையில் அன்றாடம் ஒலிபரப்பாகும் காலை மலர் நிகழ்ச்சியில் நகர்வலம் என்ற தலைப்பில் மாடித்தோட்டம் அமைப்பது தொடர்பாக சில தகவல்களை ஒலி பரப்பினார்கள். அதில் தெரிவித்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்டபோது நிறைய தகவல்களை சொன்னார்கள்.
அதாவது வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வமுள்ள அதே சமயம் அதற்கான இட வசதி இல்லாதவர்களுக்கு ஏற்றதுதான் மாடித்தோட்டம். இது தொடர்பாகவும், இட வசதி உள்ளவர்களுக்கு வீட்டுத்தோட்டம் தொடர்பாகவும் ஒரு நாள் பயிற்சியை இணைந்து நடத்துகின்றன தமிழ் நாடு வேளாண்துறையும் தமிழ் நாடு வேளாண் பல்கலைகழகமும்.
பயிற்சியின் பெயர்: வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
காலை 10:00--- பிற்பகல் 3:00 மணி வரை.
பயிற்சிக்கட்டணம்: ரூபாய்.100/=.
25 பேர்கள் வரை குழு சேர்ந்த பின்னர் கீழ்க்கண்ட முகவரியை அணுகினால் ஒரு நாள் பயிற்சியை ஏற்பாடு செய்வார்கள். இப்பயிற்சி முகாமில் வேளாண் துறை வல்லுனர்கள் கலந்து கொண்டு பயிற்சியளிப்பார்கள்.
தொடர்பு விவரம்:
திரு.ப.நயினார்,
(பேராசிரியர், தோட்டக்கலை)
பொறுப்பாளர்,
வேளாண்மை உதவி மையம்,
வ.உ.சி. திடல் எதிரில்,
பாளையங்கோட்டை---627002.
தொலை பேசி எண்: 0462 2575552.
மேலதிக விபரங்களை: www.agritech.tnau.ac.in என்ற இணைய தளத்திலும் காணலாம்.
மேற்கண்ட முகவரியில் -
காளான் வளர்ப்பு,
மண்புழு உரம்
காய்கறி பழங்கள் பதப்படுத்துதல்
போன்ற வீட்டிலேயே சம்பாதிக்கக்கூடிய கைத்தொழில்களையும் ஒரு நாள் பயிற்சியாக பயிற்றுவிக்கின்றார்கள்.
நமதூரைப்பொருத்த வரை பெண்கள் மனித வளம் ஏராளமாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. மாடித்தோட்டத்தை அவர்களால் எளிதாக பராமரிக்கவியலும். சூழலுக்கும் இதயத்திற்கும் இதமாக இருக்கும். அழையா விருந்தாளியாய் வீட்டினுல் நுழையும் வெப்பத்தை குளிர்பதன சாதனத்தின் தேவையின்றியே வெளியே துரத்தலாம். மின் கட்டணமும் எகிறாது இதன் மூலம் நமது உணவிற்குத்தேவையான காய்கறிகளை புத்தம்புதியதாய் நம் வீட்டு மாடியிலேயே பெறலாம். அத்துடன் மூலிகை செடிகளையும் கூட வளர்க்கலாம்.
மாடித்தோட்டத்தின் விளைவாக வீட்டு மாடியில் வளம் ததும்பும் புல் தரையையும் காலை மாலை வேளைகளில் செடி கொடிகளை நாடி வரும் பறவைகளின் இனிய பூபாளத்தையும் ரசிக்கலாம். இந்த இனிய அனுபவத்தை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது.
இதற்கான முதலீடு மிகவும் குறைவு. அறுவடை செய்யும் பலன்களோ கூடுதல். இவை அனைத்தும் இக்கட்டுரைக்காக வரிந்து எழுதப்பட்ட வர்ணனைகள் அல்ல. வாழும் அனுபவங்கள்.
இந்த அனுபவங்கள் தொடர்பாகவும் வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் அமைப்பது தொடர்பான ஆலோசனைகளுக்கும் நமது இணைய தள வாசகர்கள் கீழ்க்கண்ட நபரையும் அணுகலாம்.
திரு.இந்திர குமார்,
EXNORA GREEN .
செல்எண்: 9941007057
பம்மல்,சென்னை
இணைப்பாக ஒரு தகவல்:
அண்மையில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நமது நகர்மன்றத்தலைவி ஒரு தகவலை சொன்னார்கள். நமது வீடுகளுக்கு வெளியே இடமிருந்தால் நகராட்சி சார்பில் மரக்கன்று ஒன்றை நட்டு அதை ஆடு மாடுகள் சேதப்படுத்திடா வண்ணம் காப்பரணும் அமைத்துத்தருவதாக சொன்னார்கள்.
ஆர்வமும் வீட்டுக்கு முன்னே போதிய இட வசதியும் உள்ள நமதூர் வாசிகள் நகராட்சி அலுவலகத்தையோ அல்லது உங்கள் பகுதி நகர்மன்ற உறுப்பினரையோ அணுகினால் ஆவன செய்வதாக சொன்னார்கள்.
|