| |
ஆக்கம் எண் (ID #) 35 | | | ஞாயிறு, மே 13, 2012 | | நாய்கள் ஜாக்கிரதை...!!! சமூக ஆர்வலர்
|
| இந்த பக்கம் 6108 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய | |
நாய்கள் ஜாக்கிரதை...!!!
தற்போது புறநகர் பகுதிகளில் குடியேற்றம் அதிகரித்து வருவதால் நாய் வளர்ப்பும் அதிகரித்து வருகின்றது. இஸ்லாமியர்கள் வசிக்கும் வீடுகளில் நாய் வளர்ப்பு 99% சதவிகிதம் இருப்பதில்லை. அறியாமையால் வளர்ப்பவர்கள் 1% கூட இருக்க வாய்ப்பில்லை எனலாம். அசைவ உணவுகளை விரும்பி உண்ணும் நம்மவர் வசிப்பிடம் தேடி நாய்கள் வருவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை! இதனால் ஏதேனும் விரும்பத்தகாத விளைவுகள், விபரீதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் தான் இக் கட்டுரை வடிக்கப்பட்டுள்ளது.
-ஹிஜாஸ் மைந்தன்.
|
இக் கட்டுரையின் தலைப்பு பல வீடுகளின் கம்பிகேட்டில் தொங்க விடப்பட்டிருக்கும். ஆதிகால மனிதன் வேட்டைக்காக நாய்களைப் பழக்கியும் பயன்படுத்தியும் வந்தான். அதுவே காலப்போக்கில் வீட்டுக்காவல், காவல்துறை, இரானுவம் எனப் பல்வேறு துறைகளிலும் நாய்களின் பயன்பாடு வியாபித்து விரிவடைந்து போயிற்று. செல்லப்பிராணியாக நாய்களுக்கு அந்தஸ்த்தை வழங்கியதும் தம் சொந்தப் பிள்ளைகளை விடவும் மேலாக அதனிடம் நெருங்கிப் பழகி ஒட்டி உறவாடி மகிழும் மனிதர்கள் ஏராளம். விதவிதமான நாய்களைக் கலப்பின முறையில் உருவாக்கி பல இலட்சங்கள் சம்பாதிக்கும் நிறுவனங்கள் முளக்கத் துவங்கின.
நாய் வளர்ப்பது தமக்குப் பெருமை என வசதியுள்ளவர்கள் வசதியற்றவர்கள் என்ற பாரபட்சமில்லாமல் பரவலாக எல்லோரும் நாய் வளர்ப்பில் ஆர்வம் காட்டத் துவங்கினர். அதற்காக தங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவழித்து இறைச்சி, மீன், எலும்புத்துண்டுகள் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவு, மருந்து, சோப்பு ஷாம்பூ என அதனை பராமரிக்கும் செலவும் நாய்களுக்குத் தனி கவனிப்பும், மரியாதையும் மனிதனிடத்தில் ஒன்றிப் போய் விட்டன. இஸ்லாமிய பார்வையில் நாய் நஜீஸ் என ஒதுக்கப்பட்டுள்ளதால் நம்மவர் அதை வாங்கவோ? வளர்க்கவோ? முன்வருவதில்லை. ஈரப்பதம் உள்ள ஒரு நாயைத் தொட்டுவிட்டாலோ? அது நம்மேல் உரசிவிட்டாலோ? ஏழு முறை (தண்ணீரில்) பட்ட இடத்தைக் கழுவ வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! வசதி படைத்தவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக சில சட்ட திட்டங்களுக்குட்பட்டு நாய்களை வளத்துக்கொள்ளலாம் எனும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆடு,மாடு,குதிரை.ஒட்டகம்,கழுதை இவைகளை நாம் தீண்டுவதால் கிருமிகளோ? நோய்களோ? நம்மைத் தாக்குவதில்லை. நாய்களிடம் மட்டுமே மனிதனைத் தாக்கியழிக்கும் பாக்ட்டீரியாக்கள், வைரஸ்கள் இருப்பதை பல்வேறு ஆராய்ச்சிக் கூடங்கள் உறுதிபடுத்தியுள்ளன. இஸ்லாம் தடை செய்திருக்கும் அனைத்தும் மனித வாழ்வியலுக்கு ஊறுவிளைக்கக் கூடியவைகளாகவே இருக்கும். உதாரணமாக பன்றி இறைச்சி மது, சூது, கொலை, களவு, விபச்சாரம், வட்டி, என அடுக்கிக் கொண்டே போகலாம்.
யானைக்கு மதம் பிடிப்பதைப் போன்று நாய்களுக்கும் வெறிபிடிக்கும். வெறி பிடித்த நாயின் கடி அல்லது எச்சில் மூலம் உருவகும் நோய்க்கு வெறிநோய்(Rabies) என்று பெயர். வெறிநோய் வைரஸின் பெயர் லைஸா(Lyssa) என்பதாகும். இந்த வைரஸ் தான் வெறிநோயை ஏற்படுத்துகின்றன. மிக நுன்னுயிரியான கண்ணுக்குப் புலப்படாத இந்த வைரஸ் மனிதனின் மூளையை(Encephalitis) அளவுக்கதிகமாக வீங்க வைத்து அதன் செயல்பாடுகளை தன்னிஷ்டத்திற்கு மாற்றியமைத்து வைரஸின் போக்கில் செயல்பட வைக்கும். இதனால் நம் இயல்பு நிலை பறி போய் பைத்தியம் பிடித்ததைபோல் நம்மை ஆட்டிவைக்கும்.
நாய்க்கடி என்றால் முதலில் நாம் தெரிய வேண்டியது அது சாதாரன நாயா? அல்லது வெறிபிடித்த நாயா? என்பதுதான். வெறிநாய் என்றால் உடனடியாக சிகிட்சையை ஆரம்பிக்க வேண்டும். சில வேளை அந்த நாய்க்கு வெறிநோய் இருப்பது கூட நமக்குத் தெரிவதில்லை. ஒரு வேளை அந்த நாய்க்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் நாம் தப்பித்தோம். இல்லையெனில் ஆபத்து தான்! நாய் கடித்தவுடனே அந்த இடத்தை நன்றாகக் கழுவி உடனே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். நாயில் குட்டி நாய் பெரிய நாய் என்றில்லை! எந்த நாய் கடித்தாலும் பாதிப்பு ஒன்றுதான். இது எந்த இடத்தில் கடித்து என்பதைப் பொறுத்தே அதன் பாதிப்பும், நோய் வரும் காலமும் மாறுபடும். நம் உடலில் ஒரு புண் இருந்து அதில் வெறிநோய் உள்ள நாய் நக்கினாலும், அல்லது நாயின் நகம், பல் ஏதனும் ஒன்று நம் உடலில் ஒரு கீறல் ஏற்படுத்தினாலும் கூட வெறிநோய் நமக்கு வர வாய்ப்புள்ளது. வெறிநோயின் அறிகுறிகள் ஒருவரிடம் தோன்றி விட்டால் அவரைக் காப்பாற்றுவது கடினம்.
பொதுவாக நாய்க்கடி மூலம் மனிதனுக்கு ஏற்படும் வெறிநோயின் அறிகுறிகள் தீவிரமாகும் முன்பே அதற்காகான தடுப்பு சிகிச்சைகளை நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள் செய்தே ஆக வேண்டும். தவறி விட்டால் அக் கிருமியானது அவனின் மைய நரம்பு மண்டலத்தையும் பின்னர் மூளையயும் தாக்கி மரணத்தை ஏற்படுத்தி விடும். கடிபட்ட துவக்கத்தில் உடல்வலி, பின்னர் தலை வலி, அதன்பின் காய்ச்சல் என்று கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றி பின்னர் பொறுக்க முடியாத வலி, கட்டுக்கடங்காத உடல் பிரச்சனைகள், மன அழுத்தம், நீரைக்கண்டால் பயமும், வெறியும் ஏற்படும். உணவை விழுங்க முடியாமல் தண்ணீர், தண்ணீர் எனக் கத்துவார்கள். தண்ணீரைக் கொடுத்தால் மன பிரம்மைக்காரர் போல் அலறுவார்கள். வாயில் எச்சில் அதிகமாக ஊற்றெடுத்து ஒழுகும். பிறரைக் கண்டால் நாய் போலவே குரைப்பார்கள். ஓடி வந்து கடிக்கவும் முற்படுவார்கள். அவர்களின் உடல் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். படிப்படியாக இவர்களின் உடல் கூறுகள் செயலற்று சித்தம் மாறிய நிலையில் கோமா ஸ்டேஜ்ஜுக்குப் போய் சுவாசிக்க முடியாமல் இறுதியில் அவரது உயிர் பிரியும் நிலையும் ஏற்படும்.
இக் கட்டுரையை நான் பதிவு செய்துகொண்டிருக்கும் வேளையில் என் மனைவி என்னிடம் கூறிய ஒரு உண்மை சம்பவம் என் உள்ளத்தை உலுக்கியது. சில வருடங்களுக்கு முன்பு பாளயங்கோட்டையில் ஒரு பிரபல டாக்டரிடம் எட்டு வயது மதிக்கத் தக்க ஒரு பெண் குழந்தையை சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தனர். அதன் முக பாவணைகளும், செயல்களும் வித்தியாசமாகவே தோன்றியது. நாக்கு தொங்கிய நிலையில் எச்சில் ஒழுக ஒரு நாய்க்குரிய இலட்சணங்கள் அனைத்தும் அக் குழந்தையிடம் காணப்பட்டது. டாக்டர் அவர்கள் பரிசோதனை செய்த பின்னர் ஓர் அகன்ற பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரை வர வழைத்து அக் குழந்தையின் முன் வைத்தார். அதைக் கையில் எடுத்துப் பருகுவதற்கு பதிலாக நாக்கால் நக்கி குடிப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியுற்றனர். இது வெறிநோயின் உச்சகட்டம் வெறி நாய்கடித்து நாளாகி விட்ட நிலையில் இனி இதற்கு சிகிச்சையளிப்பது சாத்தியமில்லை. இக் குழந்தை யாரையும் கடிக்காமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தி அக் குழந்தையைப் பெற்றோரோடு அனுப்பி வைத்தாராம். இச் சம்பத்தை நேரில் பார்த்த என் மனைவி அந்த அதிர்ச்சியிலிருந்து மீள பல நாட்களாயிற்று. இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகின்றது எனக் கூறி பெரு மூச்சு விட்டாள்.
வெறிநாய் கடித்த உடன் அதன் கடி மற்றும் எச்சிலில் இருந்து மிக வேகமாக பரவும் தன்மை கொண்ட வைரஸ் நம் உடலுக்குள் ஊடுருவியபின் சிலருக்கு உடனேயே அதற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. மாறாக அது ஓராண்டு வரை அமைதியாக இருந்து விட்டு படிப்படியாக நரம்பு மண்டலத்தை ஆக்கிரமிக்கத் துவங்கி மூளையின் செயல்பாட்டுகளை சீர் குலைத்து தன் மனம் போன போக்கில் மூளையைக் கண்னாபிண்னாவென செயல்படுத்த முனையும். இதனால் தான் மனிதன் அல்லது கடிபட்ட விலங்கினங்கள் பைத்தியம் பிடித்ததைப் போல் ஆகிவிடுகின்றனர். எனவே, எந்த நாய் கடித்தாலும் நாம் கடிபட்ட இடத்தை சோப்புமூலம் நன்றாகக் கழுவி உடனேயே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். வெறிநோயின் அறிகுறிகள் மனிதனிடம் தென்படத் துவங்கி விட்டால் பின்னர் எந்த சிகிச்சையும் பலனளிக்காது.
இத்தகையக் கோரக்கொடூர நோய் குடி கொண்டிருக்கும் தெரு நாய்களை நம்மால் தரம் பிரித்து அடையாளம் கண்டு கொள்ளவா முடியும்? கேட்பாரற்று ஆடு மாடுகளைப் போல் நம் நகரில் முக்கிய வீதிகளிலும். குழந்தைகள் விளையாடும் தெருக்களிலும், இறைச்சிக் கடைகளிலும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையத்திலும், ஏன்? நம் நகராட்சியின் கனிப்பொறி அலுவலகத்தின் பிரதான வாசல் வரை நாய்களின் நடமாட்டம் இருந்து வருகின்றதே? நம் நகர் என்ன நாய்களின் சரணாலயமா? எனக் கேட்கும் அளவிற்கு நாய்கள் பெருத்து விட்டன. இதைத் தடுக்க நாமும் நாய் படாத பாடுபட்டு பல முறை நகராட்சியின் கதவுகளை பலமாகத் தட்டிய போது அவர்கள் தந்த பதில், “மிருகவதை தடைச் சட்டம், புளூ கிராஸ் அமைப்பின் சட்ட திட்டம் மற்றும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய மட்டுமே அனுமதி” எனும் அதிகாரிகளின் வாதங்கள் தாம் மிச்சம்! நகர்மன்றக் கூட்டங்களில் நாய்த் தொல்லை அதிகரித்து விட்டதைக் குறித்து உறுப்பினர்கள் குரலெழுப்பிய போதிலும் இது வரை ஒரு முடிவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. உண்டான பணிகளுக்கே நகராட்சியில் பணியாளர்கள் இல்லை! ஒருவேளை இருந்தால் கூட லீவில் தான் இருப்பார்கள்! இதில் நாய்களைப் பிடித்து ஃபேமிலி பிளானிங் பண்ணுவதற்கு இவர்களுக்கே எங்கே நேரமிருக்கப் போகின்றது? என நாமும் அசிரத்தையாக இருந்து விடாமல் நமதூரைச் சார்ந்த சமூக நல அமைப்புகள், நற்பணி மன்றங்கள், இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கஜினி முகம்மதைப் போல பல முறை நகராட்சியை நோக்கி படையடுத்து பறைசாற்றினால் மட்டுமே இதற்கோர் முடிவு கட்ட இயலும்.
நகராட்சி செய்ய வேண்டிய முக்கிய பணிகள்:
*வீட்டு நாய்களுக்கும், தெரு நாய்களுக்கும் முறையான தடுப்பூசி போடப்பட்டு அதன் கழுத்தில் பட்டி அல்லது ஏதேனும் ஓர் அடையாளம் இடுதல் வேண்டும்.
*அலைந்து திரியும் சொறி நாய்களை உடனடியாகப் பிடித்து அதற்கு கருத்தடை செய்து அப்புறப் படுத்த வேண்டும்.
*நாய்க்கடி, வெறிநோய் தாக்குதல், அதற்கான முதலுதவி, சிகிச்சை முறை பற்றிய விழிப்புணவை மக்கள் மத்தியில் சுகாதார ஆய்வாளர் எடுத்துரைக்க வேண்டும்.
*நாய் வளர்ப்பதையும் அதனுடன் நெருங்கிப் பழகுவதையும் கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும்.
*குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோரிடம் நாயின் தன்மை மற்றும் அதன் குணாதிசயங்களை எடுத்துரைத்து அதனுடன் விளையாடுவதோ அல்லது கல்லால் அடிப்பதோ கூடாதன்று கூறிவைத்தல் வேண்டும்.
*இக்கட்டுரையைப் படித்த பிறகாவது “நாய்கள் ஜாக்கிரதை” என்றில்லாமல், தெரு நாய்களிடம் இருந்து நாமும், நம் மக்களும் ஜாக்கிரதையாக இருக்க முன்வர வேண்டும்.
“வரும் முன் காப்பதுவே சிறப்பு. வந்த பின் நொந்து பலனில்லை”
-ஹிஜாஸ் மைந்தன்.
|
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|