| |
ஆக்கம் எண் (ID #) 36 | | | புதன், மே 16, 2012 | | ஒலிபெருக்கியின் - ஒலி மாசு! (பாகம்-3) சமூக பார்வையாளர்
|
| இந்த பக்கம் 2533 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய | |
அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
என்னுடைய கட்டுரைகளை கொள்கை ரீதியாக சிந்திக்காமல் , பொதுவான சிந்தனையோடு படித்து, பார்த்து - எந்த கொள்கையையும், பகுதியையும் குறிப்பிடாமல் மேலான தங்களுடைய சொந்தக் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள். - கட்டுரை ஆசிரியர்.
|
ஒலிபெருக்கிகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து ஒலிப்பதினால் பல விதமான பாதிப்புகள் உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் ஏற்படுகிறது என்பதை மறைக்கவும் முடியாது - மறுக்கவும் முடியாது. ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன், இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டில் ஒருவருடன் மற்றவர் சாதாரணமாக பேச முடிவதில்லை என்பது மட்டுமல்லாது அவசர, அவசியமாக போன் பேச வேண்டும் என்றால் கூட பேச முடியுமா? இல்லை அவசியமான, அவசரமான போன் வந்தால் பேச முடிகிறதா ?.
வீட்டின் உள்ளே இருப்பவர்கள், ஒலிபெருக்கிகள் சத்தமாக இயங்கிக் கொண்டிருக்கும்போது போன் பேசவேண்டும் என்றால் வெளியில் சென்றா பேச முடியும் ? - அப்படி பேச வேண்டும் என்றாலும்கூட அரை மைல் தூரம் சென்றுதான் பேச முடியும் என்ற நிலை உள்ளது - மொபைல் அல்லாமல் லேண்ட் லைனில் பேச வேண்டியதாக இருந்தால் என்ன செய்வது?. ஒலிபெருக்கியின் சத்தம் மிக அதிகமாக இருப்பதால்தான் இந்த சிரமம் ஏற்படுகிறது என்பதை நிகழ்ச்சியாளர்கள் அவசியம் உணர வேண்டும்.
மேலும் ஒலிபெருக்கியின் உச்சநிலை சத்தத்தினால், இரைச்சலினால் மனிதன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் மிகுந்த கோபத்திற்கு ஆளாகிறான் . அதன் காரணமாக அவனின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சில அசம்பாவிதங்கள்கூட ஏற்படுகிறது / ஏற்பட்டிருக்கிறது.
வெளியூர்களில் ஒலிபெருக்கியினால் ஏற்படும் பாதிப்பை நம்மால் கணக்கிடமுடியவில்லை என்பது வேறு - ஆனால் நம் ஊருக்குள் எவ்வளவு பாதிப்புகள் இருக்கிறது என்பதை நாம் உணராமல் இருப்பது தவறு.
விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் - நம் ஊரிலே வழமையாக ஒவ்வொரு வருடமும் ஒலிபெருக்கி வைத்து அதிகமான சத்தத்துடன் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளை நினைவில் கூர்ந்து கவனித்துப் பாருங்கள் தெரியும். அங்கே குறிப்பிடப்பட்ட சில
ஏரியாக்களிலே பிறக்கக்கூடிய குழந்தைகள் மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளாக இருப்பார்கள். காரணம் சில குறிப்பிட்ட மாதம் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு ஒலிபெருக்கியின் தாக்கம் ஏற்படுவதால்தான் மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கிறது என்பதை அறியலாம். இந்த உண்மையை உணர்ந்தீர்களானால் நிச்சயமாக ஒலிபெருக்கியே வைக்க மாட்டீர்கள் - அந்த அளவுக்கு பாதிப்புகள் உண்டாகியிருக்கிறது.
வல்ல இறைவனால் அருளப்பட்ட நம் மார்க்கம் மிகவும் மென்மையான , மேன்மையான மார்க்கம் அதிலே எவருக்கும் எந்த ஒரு கஷ்டத்தையும் இறைவன் ஏற்படுத்தவில்லை - மாறாக அதை முறையாக பின் பற்றாத மனிதன்தான் தனக்குத்தானே கஷ்டத்தையும் , நஷ்டத்தையும் ஏற்படுத்திக்கொள்கிறான் - இதை மனிதன் உணர்ந்தால் கஷ்டமுமில்லை, நஷ்டமுமில்லை.
மார்க்கத்திலே தொழுகையைவிட சிறந்த அமல் இல்லை - அந்த தொழுகையை கூட நின்று தொழ முடியாதவருக்கு உட்கார்ந்து தொழவும் அதற்கும் இயலாதவருக்கு படுத்துக்கொண்டு சைகையின் மூலம் தொழவும் அனுமதிக்கின்ற இறைவன் , மார்க்க நிகழ்ச்சிகளையும் , உபநியாசங்களையும் நடத்த ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைவாக வைத்தால் ஏற்றுக்கொள்ளவா மாட்டான் என்பதை சிந்திக்க வேண்டும்.
மார்க்க நிகழ்ச்சிகளாகட்டும் , உபநியாசங்களாகட்டும் அதன் மூலம் எவர் ஒருவருக்கும் இடைஞ்சல் ஏற்படக்கூடாது - அது மனிதருக்கு என்றில்லை ஒரு மிருகத்திற்கோ அல்லது ஒரு பறவைக்கோ கூட இடையூறு ஏற்படக்கூடாது - அப்படி இடையூறு ஏற்படுமானால் நிச்சயமாக அந்நிகழ்ச்சிக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்காது என்பதை மக்கள் உணர வேண்டும்.
நம்மிடையே எவ்வளவுதான் ஒற்றுமைக் குறைவுகள் இருந்தாலும் பிற ஊர்களை ஒப்பிடும்போது நாம் மேலானவர்களாகவே தெரிகிறோம் - அப்படியிருக்க நாம் ஏன் சிந்தித்து செயல்படக்கூடாது, ஒலிபெருக்கியின் சத்தத்தால்தான் இத்தனை கெடுதல்களும் வருகிறது என்பதை அறிந்திருந்தும் நாம் ஏன் அதற்கு மாற்று வழியை ஏற்பாடு செய்யாமல் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.
ஒன்று மட்டும் தெளிவாகிறது , இந்த ஒலிபெருக்கியின் தொல்லைகளுக்கு மூலக்காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தலைமைகளோ அல்லது ஆலிம்களோ அல்ல. ஏற்பாட்டாளர்களில் உள்ள சில ஆர்வக்கோளாறு உள்ளவர்களும் , அரைகுறை ஞானமுள்ளவர்களும்தான் என்பது - இதில் கொள்கை வித்தியாசமில்லை அத்தனைக் கொள்கையில் உள்ளவர்களும் சமம்தான்.
தலைமைகள் , நிகழ்ச்சிகளை எப்போதும்போல் தொய்வின்றி சிறப்பாக நடத்த வேண்டும் என்ற செண்டிமென்டின் காரணமாக ஆர்வமுள்ள மக்களின் பொறுப்பில் விடுகிறார்கள். அவர்களோ ஆர்வத்தின் காரணமாகவும் அரைகுறை ஞானமுள்ளவர்களாக இருப்பதாலும்தான் " ஒலிமாசு " உண்டாகிறதை பற்றி கவலைப்படுவதில்லை / சிந்திப்பதில்லை.
ஆலிம்களும் , அறிஞர்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து அலுத்துப்போய் விட்டார்கள் - அவர்களை குறைக் கூறுவதற்கில்லை. ஆகவே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தலைமைகள்தான் ஒலிபெருக்கி விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி , மக்களையும் மற்றவர்களையும் பாதிக்காத வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்தி அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.
எவர் ஒருவர் ஒரு நன்மையான காரியத்தை தொடங்கி வைக்கிறாரோ அது அவருக்கும் , அதற்கு உதவி ஒத்தாசை செய்தவர்களுக்கும் கியாமநாள் வரை அதன் மூலம் பயனடைந்தவர்களின் கூலி கிடைக்குமோ - அது போல் ஒலிபெருக்கியின் அதிக சத்தத்தால் கியாமநாள் வரை பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகள் அத்தனைக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதை மறந்திட வேண்டாம்.
ஒலியின் அளவு கூடும்போது மனிதர்களுக்கு மட்டும் என்றில்லை மிருகங்களுக்கும் கூட கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . இதனால்தானோ என்னவோ சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகள் கூட அழிந்து வருகின்றன.
சிலர் கூறுவர் சிட்டுக்குருவிகள் அழிவதற்கு காரணம் " மொபைல் டவர் " என்று, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் இருந்தாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் மூன்று வருடங்களுக்கு முன்பு நாங்கள் சவுதி அரேபியாவில் இருக்கும் காலத்தில் எங்கள் வீட்டை சுற்றிலும் பல மொபைல் டவர்கள் இருந்த போதிலும் சிட்டுக்குருவிகள் நூற்றுக்கணக்கில் எங்கள் வீட்டு காம்பௌண்டுக்குள் நிற்கும் - புறாக்களும் கணிசமான அளவில் வந்து செல்லும் ஆகவே மொபைல் டவர் மட்டும்தான் சிட்டுக்குருவியின் அழிவுக்கு காரணமில்லை - " ஒலிமாசு " அடைவதே காரணம் எனலாம்.
இன்று நம் ஊரிலே இதய நோய் பாதிப்புகள் உள்ள மக்கள் வசிக்கும் வீடுகளை அல்லது அவர்கள் பணி புரியும் இடங்களை உற்று நோக்குங்கள் கண்டிப்பாக அங்கே " ஒலிமாசு " அடைந்திருக்கும். அவ்விடங்கள் ஒலிபெருக்கியின் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய இடங்களாகவே இருக்கும். இதனால்தானோ என்னவோ இன்று பைபாஸ் சர்ஜரி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
மேலும் நரம்பு தளர்ச்சி , நரம்பு தளர்ச்சி என்று பலருக்கு அதிலும் மிகுதமாக பெண்களுக்கு ஏற்படுகிறதே அதற்கும் ஒலிமாசு முக்கிய காரணமாகிறது. வீட்டிலே டிவி' யை மிக அதிகமான சத்தத்தில் வைப்பதினாலும், அதன் இடர்பாடுகளினாலும் - ஒலிபெருக்கியின் அதிக சத்தத்தினாலும், அதன் இடர்பாடுகளினாலும் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் வீடு கட்டுமான பணிகள் இரவு , பகலாக நடைபெறுகிறது அதிலே அதிர்ச்சியையும், அதிக சத்தங்களையும் தரக்கூடிய மெஷின்களை உபயோகிக்கிறார்கள் அதனால் ஒலிமாசு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் ஆசாரிவேலைகள் , மார்பிள் , டைல்ஸ் இவைகளை அறுப்பதற்காக மெஷின்களை உபயோகப்படுத்தும்போது அதிகமான சத்தம் தொடராக வரும் இதனால் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு ( கட்டிடம் கட்டுபவர்களின் வீடாக இருந்தாலும் சரி ) பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆகையால் மெஷின்களை கொண்டு செய்யும் வேலைகளை இரவு நேரத்தில் செய்யாமல் , பகலிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் - அதன் மூலம் ஒலிமாசு அதிகம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
" ஒலிமாசு " என்பது பல வகையிலும் , பல வழியிலும் ஏற்பட்டு மக்களை பாதித்தாலும் கூட நம்ம ஊரைப் பொறுத்தவரை அதிகமான பாதிப்பு என்பது ஒலிபெருக்கியின் மூலமே ஏற்படுகிறது என்பதை உணர்ந்ததால் ஒலிபெருக்கியை மையமாக வைத்தே பாதிப்புகளை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
இந்த கட்டுரைகள் வெளியாவதற்கு முன்பே அதாவது சென்ற மாதமும், அதற்கு முந்தைய மாதமும் நமதூரில் நடத்தப்பட்ட மார்க்க சம்பந்தமான 2 நிகழ்ச்சிகளிலும், மார்க்க உபநியாசம் ஒன்றிலும் மக்களை பாதிக்காத வண்ணம் ஒலியின் அளவை குறைத்து வைத்து " ஒலி மாசு " ஏற்படாதவாறு நிகழ்ச்சிகளை மிக சிறப்பாக நடத்தினார்கள் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
முந்திய வருடங்களிலெல்லாம் ஒலிபெருக்கியை சத்தமாக வைத்தவர்கள் இந்த வருடம் சத்தம் குறைவாக வைத்ததன் காரணம் ஒலிபெருக்கியினால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை நிகழ்ச்சியாளர்கள் உணர்ந்து இருப்பதே ஆகும்.
ஆகையால் இன்றுமுதல் நாம் அனைவருமே எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஒலிமாசு ஏற்படாவண்ணம் ஒலிபெருக்கியை உபயோகிக்க சபதம் ஏற்போமாக - வல்ல அல்லாஹ்! அதற்கு அருள் செய்து மக்கள் அனைவரையும் நோய் நொடிகளிலிருந்தும் , குறைபாடுகளிளிருந்தும் காப்பாற்றுவானாக ஆமீன்.
வேண்டுகோள் :
இந்த கட்டுரையை மக்கள் அனைவரும் குறிப்பாக ஒலிபெருக்கியை உபயோகபடுத்துபவர்கள் அனைவரும் படிப்பார்களா? அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா? என்பது தெரியாது.
ஆகையால் இந்த கட்டுரையை படிக்கும் அனைத்து சகோதரர்களும் அவரவர் பகுதிகளிலே எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒலிபெருக்கியை வைத்து நடத்தினால் அவர்களுக்கு தயவு செய்து ஒலிபெருக்கியினால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி சொல்லி " ஒலிமாசு " ஏற்படாதவாறு நிகழ்ச்சிகளை நடத்தி நம் மக்களையும் , வருங்கால சந்ததியினர்களையும் பாதுகாக்க முயலுமாறு கேட்டுக்கொள்கிறேன். - கட்டுரை ஆசிரியர்.
[முற்றும்] |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|