அது ஒரு இனிய கனாக் காலம்! எல்லோருக்கும் பொருந்தும் ஓர் வாசகம் இது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தன் பிள்ளைப் பருவத்தின் நிகழ்வுகளும், நினைவுகளும் எப்போதும் பசுமை மாறாத பூஞ்சோலையாகத் தான் இருக்கும். அன்னையின் மடியிலிருந்து இறங்கி மெல்லத் தவழத் துவங்கும் மழலைக்கு முதன் முதலாகக் கொடுப்பது விளையாட்டுப் பொருட்கள் தாம். குழந்தைகள் அழும் போதும், சிரிக்கும் போதும் அன்னை தந்து உதவுவதும் இதைத்தான். வளரும் பருவத்திற்கேற்ப விளையாட்டும், விளையாட்டுப் பொருட்களும் மாறுபடும். இப்படி மனிதனின் மழலைப் பருவம் தொட்டு அவனோடு ஒன்றிப் போன விளையாட்டு, வளர்ந்தபின் அவனது வாழ்க்கையில் விதி எனும் ரூபத்தில் அவனுக்குச் சாதகமாகவும் சில வேளை பாதகமாகவும் விளையாடி விட்டுச் செல்கின்றது.
ஊருக்கு ஊர் மாநிலத்திற்கு மாநிலம் நாட்டுக்கு நாடு என பல்வேறு விளையாட்டுக்களும், இன்னும் உலகளாவிய பொது விளையாட்டுக்களும் உள்ளன. இதில் கிராமப்புற விளையாட்டுக்கள் யாவும் அர்த்தமும், ஆரோக்கியமும் நிறைந்ததாக இருக்கும். மனவலிமைக்காகவும், உடல் வலிமைக்காகவும் மாலை முழுவதும் விளையாடச் சொன்ன பாரதி. ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா என குழந்தைகளுக்கு அழைப்பு விடுவிக்கின்றான். சிறுவர், சிறுமியர்கள், பருவ மங்கையர்கள், ஆண்கள், பெண்கள், தாத்தா, பாட்டிகள் எனப் பலருக்கும் பல விதமான விளையாட்டுக்கள் இருக்கின்றன. மூலை, முடுக்குகள், தெருவீதிகள், மைதானங்கள், சங்கங்கள் என சங்கமித்துள்ள விளையாட்டு மெல்லச் சாகும் நிலை இந்த அவசர உலகத்தில் அடிகோளிவிட்டதை எண்ணும் போது நெஞ்சம் கனக்கின்றது.
அன்று, பள்ளிப் பருவத்தில் தெருக்களில் மெய்மறந்து சிறுவர்கள் விளையாடிய காலம் எங்கே? கூச்சலும், கும்மாளமும், கூடிக் களித்தலும் ஆட்டமும், பாட்டமும், ஆரவாரங்களுமாய் சின்னஞ்சிறார்கள் விளையாடி மகிழ்ந்து பின்னர் மஃரிப் பாங்கு சென்னதும் “ஆட்டம் க்ளோஸ்” எனக் கூறி களைப்போடு வீடு திரும்பும் அந்த இனிய கனாக் காலம் எங்கே? பைக்குள் திணிக்கும் புத்தகச் சுமையை பிள்ளைகளின் மூளைக்குள் திணித்து விட்டு அனுப்பும் இன்றைய பாடசாலைகள் ஒரு புறம், அவன் வீட்டிற்கு வந்ததும் அதே பாடத்தை அசை போட ஐந்து மணிக்கே ட்யூஷனுக்கு அனுப்பி அவனது மாலைப் பொழுதை பாழாக்கும் பெற்றோர்கள் மறுபுறம். இப்போதெல்லாம் நாம் விளையாடுவதை விட பிறர் விளையாடுவதைப் பார்ப்பதில் தான் ஆர்வம் செலுத்தி நம் நேரத்தையும் காலத்தையும் வீணடித்து வருகின்றோம். அதிலும் கூட ஃபிக்ஸிங், சூது, பந்தயம் என பலவித பாதகங்களை புகுத்தி உண்மைக்கும் உழப்பிற்கும் வேட்டு வைக்கும் நிலையே எஞ்சியுள்ளது.
நம் குழந்தைப் பருவம் அல்லது பள்ளிப் பருவத்தில் நாம் அனுபவித்த அற்புதமான பல விளையாட்டுக்கள் இன்று நம் வரிசுகளுக்கு தெரியாமலேயே மங்கி மறைந்து போயிற்று. படித்து பட்டம் பெறும் முன்பே அயல்நாட்டில் வேலைக்காக அப்ளிகேஷன் போட்டு அங்கேயே செட்டிலிலாகி தம் வாரிசுகள் சுதந்திரமாகத் துள்ளித்திரிந்து நண்பர்களுடன் விளையாடும் குழு விளையாட்டைக் குழி தோண்டிப் புதைத்தும் விட்டோம். இன்றைய தலைமுறையினர் தவம் கிடந்து பார்க்கும் “க்ரிக்கெட்”, நம் நாட்டின் அத்துனை விளையாட்டையும் புறந்தள்ளி தன்னாதிக்கம் செலுத்தி வருகின்றது. இனி வளரும் சந்ததிகளுக்காவும், நம் மலரும் நினைவுகளுக்காவும் இக் கட்டுரையின் போக்கினை சற்று திசை திருப்பி பார்ப்போம்.
சிறுமியர் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுக்கள்:
அன்று, நம் முடுக்கு மற்றும் வெட்டைகளில் சிறுமியர்கள், பருவப்பெண்கள் கட்டங்கட்டமாக ரெட்டாங்கோடு போட்டு நொண்டியடித்து தன் காலால் ஓட்டுச்சில்லையை தெறிக்கச் செய்து அதில் தாவிக் குதித்து கால் பதித்து தலையை வான் நோக்கி உயர்த்தி காயா? பழமா? எனக் கேட்டு விளையாடுவார்கள். போகிற போக்கில் நாங்கள் அக் கோடுகளை அழித்து விட்டுச் செல்வோம். தூய்மையாக முடுக்குகளை சுத்தம் செய்து மங்கையர்கள் குழுமி சின்னக் குழி பறித்து புளியங்கொட்டை முத்துக்களைத் தன் பெருவிலால் சுண்டி விடும் அழகே தனி! இதற்காக வீட்டு முற்றத்தில் அல்லது சிமெண்ட் தரையில் எங்காவது ஒரு பகுதியில் குழியும் பதித்திருப்பார்கள். பல்லாங்குழி விளையாட்டுக்காக ஓட்டை துட்டு, ஒரு அணா, கால் அனா மற்றும் செப்புக்காசுகளை சேகரித்து விளையாடியக் காலம் போக, இன்று சில பகுதிகளில் வெறும் சம்பிரதாயத்திற்காக இவ் விளையாட்டைத் திருமணத் தம்பதியினருக்கு மட்டுமே ஒதுக்கியும் வைத்து விட்டோம்.
மாலைப் பொழுதினில் மங்கையர்கள் கூடும்வெட்டைகளில் தோழிமார்கள் சேர்ந்து நடுவில் ஓர் கோடு போட்டுக் கொண்டு இரண்டு குழுக்களாகப் பிரிந்து கைகளைக் கோர்த்துக்கொண்டு, “பூப்பறிக்க வருகின்றோம், வருகின்றோம்”, எனப்பாடி அழைப்பதும் மறு குழுவினர் “யாரைக் கண்டால் ஆகாசம்? ஆகாசம்?” என வினவ, இருப்பதிலேயே நோஞ்சானான ஒருத்தியின் பெயரை குறிப்பிட்டு அவரைக் கண்டால் ஆகாசம், ஆகாசம் என பதிலுரைக்க பின்னர் அவர் கையைப் பிடித்து சுலபமாகத் தம் பக்கம் இழுத்து தமது அணிக்கு பலம் கூட்டி விளையாடி மகிழ்வர். இன்று வெட்டைகள் வீடுகளாகவும், முடுக்குகள் கதவு போடப்பட்டு தம் சொந்த பயன்பாட்டிற்காகவும் மாறி விட்டது. கூட்டாஞ்சோறு, கொழுக்கட்டைப் பெட்டி ஆட்டுதல், பொண்னு மாப்பிள்ளை விளையாட்டு இதில் சம்பந்தம் கேட்டு வருவதும் பின் சம்பந்தம் கலப்பதும், கல்யாணம், மறுவனம், சாப்பாடு, சீர்வரிசை என ரியல் மேரேஜ்ஜைப் போல் நடத்தி மகிழ்வர். பாம்புக்கட்டம், சோவிகள் இல்ல்லாத வீடுகளே இல்லை எனலாம். தத்தம் வீடுகளில் இருந்து தின்பண்டங்களைக் கொண்டுவந்து பண்டம் போட்டு விளையாடுவதும் உண்டு. கிணற்றுக் கயிறுதான் அன்றைய ஸ்கிப்பிங். சும்மா சுழற்றித் தள்ளி விடுவார்கள். கோ கோ விளையாட்டுக்கு நாம் GO,GO என்று குட்பை சொல்லி விட்டோம். குட்டிக் குட்டி மண்பானைகள், அடுப்பு, சட்டிக் கலையங்கள், அஞ்சறைப் பெட்டிகள் அனைத்தும் இன்று நம்மை விட்டு அகன்று போய் விட்டன.
சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள்:
யாராவது வீடுகட்ட தெருக்களில் குருத்தமண்ணைக் குவித்து விட்டால் ஒரேக் கொண்டாட்டம் தான். குழி தோண்டி கால் புதைப்பது, கோபுரம் கட்டி அதன் உச்சியில் மண் உருண்டயை வைத்தல், குகை தோண்டி காகிதங்களை எரித்தல், களிமண் சேகரித்து சக்கரம், வண்டி, அடுப்பு, தட்டு, கட்டில் என மனதில் தோன்றுவதை வடிவமைத்து காய வைத்து விளையாடி மகிழ்வர். வீட்டுக்கு வந்ததும் அப்படியே தோட்டம் அல்லது பாத்ரூமுக்குள் போய் சட்டைப் பை வேஷ்டி கட்டிய இடுப்பு கழுத்து என மண்ணின் மைந்தர்களாய் மாறிய நாம், நம் ஆடைகளைக் களைந்து முகம் கை கால் கழுவிய பின்னர் தான் அன்னையிடும் அன்னதானம். சிறுவர்களை அழத்துக்கொண்டு கயிறுகட்டி இரயில் ஓட்டுதல். கிராச்சி எனும் ஓடிப்பிடித்து விளயாடுவது, வித விதமான கலர்களில் பம்பரம் வாங்கி பள்ளிக்கூட பைக்கெட்டுக்குள் ஒளித்து வைத்து ஸ்கூல் விட்டதும் கொல்லன் பட்டறைக்குப் போய் புதிய ஆணி போட்டு சக்கை குத்தி கோஸ் பிடித்து விளையாடும் பம்பரம்! பம்பரமாகப் பறந்து போய் விட்டது! வீடுகளில் சிப்ஸ் தரை போடுவது அன்றைய நவீன நாகரீகம். அங்கு மிச்சம் மீதியுள்ள கற்களை எடுத்து வந்து அதன் சைடுகளைத் தேய்த்து சீராக்கி வட்ட வடிவில் தயார் செய்து விளையாடும் “கெண்டு” எனப்படும் விளையாட்டு.
ஏழுகல் நங்கூரி அல்லது கிளிப்பந்து, வித விதமான வண்ணங்களில் சிறிய பெரிய சைஸில் போலா (கோலி) க்கள் வாங்கி தெருப் படிகளில் அடித்தும், விரல்களால் சுண்டியும் ஜான் பார்த்து வெற்றி தோல்வியை நிர்ணயிப்போம். இன்னும் குச்சிக்கம்பு எனும் கிட்டிபுல், இரண்டு ரூபாய்க்கு சைக்கிள் டயர் அதுவும் டபுள் டயர் அதை ஓட்ட கையளவு கம்பு வேறு, வீட்டு ஓடையில் ஆணியடித்து டயரை அதில் தொங்க விட்டு ஏதோ மெர்சடீஸ் காரைப் பார்ப்பது போல பார்த்து மகிழ்ந்தோமே? அத்துடன் சைக்கிள் ரிம், அதைச் சுழற்ற வளைந்த கம்பியும் உண்டு. கூட்டளிமார்கள் சேர்ந்து யார்? யார்? வீட்டு ஓலைத் தோட்டங்களின் வேலிகளிலாவது களைக்கம்பு மற்றும் செத்தை ஓலைகளைத் திருடி வந்து பட்டாளம் கட்டி கும்மாளம் போடுதல், ரமலான் நோன்பு இரவுகளில் பால்மாவு டின்னின் அடிப்பகுதியில் ஆணியை வைத்து நிறைய துளைகளிட்டு கைப்பிடிகம்பி கட்டி உள்ளே மெழுகுதி ஏற்றிவைத்து ஒரு சாரார் போட்டுக்கொண்டு போன கோடுகளைப் பார்த்து அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபித்தல், கள்ளன் போலீஸ் விளையாட்டு, தெருவுக்குத் தெரு டீம் அமைத்து கேப்டனைத் தேர்ந்தெடுத்து கடலை மிட்டாய் பாக்கெட்டுக்காக கால்பந்து போட்டி நடத்துதல், (ஒரு போதும் போட்டி முழுமை பெற்றதில்லை! பாதியிலேயே சண்டை போட்டு பிரிதல் என்பது எழுதப்படாத விதி) பூவரசமரங்களின் செட்டிக்காய்களைப் பறித்து வந்து வாரியல் குச்சிகளை வளைத்தும் குறுக்காக சொறுகியும் கையால் சுற்றும் ஒருவகை சத்தமிடும் கை ராட்டினம் செய்தல், தென்னை ஓலைகளைச் சுற்றி குழாய் போல் அமைத்து ஊதி செய்தல், பனைஓலைகளில் காற்றாடி செய்தல், விடியற்காலையிலேயே இறைச்சிக்கடைகளுக்குப் போய் காத்துக்கிடந்து சவ்வுகளை வாங்கி வந்து கொட்டு செய்தல், பள்ளி விடுமுறை நாட்களில் க்ரூப் சேர்ந்து கொண்டு முன்னரே திட்டமிட்ட படி வேப்பமரத்தில் ஏறி காக்கை முட்டை எடுத்தல், இதற்கென்றே தனியாக ஸ்ப்ஷலிஸ்ட்டுகளும் உள்ளனர். தேன் கூடுகளைத் தேடிப் பிடித்து வெங்காயத்தை சவைத்து போர்வையால் உடலை மூடித் தேன் எடுக்கத் தெரியாமல் எடுத்து தேனீக்களின் கொட்டு வாங்கி ஓடி மறைதல். மழைக்காலங்களில் வீடுகளின் குழாய்களில் வழியும் தண்ணீர்ல் குளிப்பது, வண்ணத்துப்பூச்சிகள் பட்டுப்பூச்சிகள் இரயில் பூச்சிகளை பிடித்து வந்து சோறு போட்டு சாகடித்தல். பச்சைத் தட்டான் (வெட்டுக்கிளி) சொடக்குப்பூச்சி, சிட்டுக்குருவி, ஒரு ரூபாய் கலர் கோழிக்குஞ்சு, புறாக்களும் இதில் அடங்கும்.
வாலிபர்கள், பெரியவர்களுக்கான விளையாட்டுக்கள்:
இன்னும் கடற்கரைக்குப் போனால் குச்சியை ஒளித்து வைத்து கிச்சிக்கிச்சி தாம்பாளம், சதுர வடிவில் கட்டம் போட்டு குறுக்கு நெடுக்காக மூன்று கல் வைத்து விளையாடுதல், வாலிபர்கள், பெரியவர்கள் சங்கங்கள், சதுக்கைகள் ஆகியவற்றில் தாயம், சோவி போன்ற விளையாட்டுக்களை காலை, மாலைகளில் விளையாடுதல், இப்படி எத்தனையோ விளையாட்டுக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இன்றைய நவீன காலத்தில் விளையாட்டுக்களே இல்லை என்று சொல்வதோ அல்லது இக்கால விளையாட்டுக்களை கொச்சைப் படுத்துவதோ இக் கட்டுரையின் நோக்கமல்ல! ஆடி ஓடி வியர்த்து விளயாடிய அக்கால ஆரோக்கியமான குழந்தைகளைப் போன்று இக்கால குழந்தைகள் இல்லையே? காரணம், விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மாறிவரும் விளையாட்டுப் பொருட்கள் நம் மழலைகளுக்கு உகந்ததல்ல. மூன்று வயது குழந்தைகூட தன் தாயின் செல்போனை சுயமாக ஆன் செய்து கேம் பகுதியை தெரிவு செய்து அசாத்தியமாக விளையாடும் அதிசயம் தான் நிகழ்ந்து வருகின்றது. பாக்கெட் சைஸ்களில் கையடக்க கருவிகளான செல்போன், கேம்பாய், ப்ளேஸ்டேஷன் வீடியோ கேம் எனப் பல்வேறு விளையாட்டுப் பொருட்களால் உடல் அசைவின்றி உட்கார்ந்த இடத்திலேயே மணிக்கணக்கில் அதனோடு ஒன்றிப்போய் உலகம் மறந்து கண்கள் சிறுக்க சிவக்க காலத்தை வீணாக்கும் நம் வாரிசுகளை பலஹீனமானப் பாதாளப் படுகுழிகளில் தள்ளி விட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என நாம் இருப்பது எவ்விதத்தில் நியாயம்?
மாலை நேரம் மழலைகளின் மதிப்புமிக்க நேரம். அதற்கு தடை போடாமல் தாராளமாக விளையாட அனுமதியுங்கள். அவர்களின் உடல் தேறும், மனம் நிறையும், படிப்பிற்கான வேளை வரும் போது படிக்கவும் செய்வார்கள். குறிப்பாக அயல்நாட்டில் வாழும் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை நீங்கள் சாவிகொடுத்தால் ஆடும் பொம்மைகளாகவே ஆட்டுவிக்கின்றீர்கள். என்னதான் பள்ளிக்கூடங்களில் விளையாட்டு, யோகோ பயிற்சிகள் சொல்லித் தந்தாலும் பிள்ளைகள் வெளியில் சென்று தன் நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதைப் போன்று ஒரு போதும் வராது. வீடுகளில் அவர்களை அரவணைக்க ஆதரிக்க கம்மா, அப்பா(தாத்தா,பாட்டி)க்கள் உள்ளனர் அவர்கள் தம் பேரப்பிள்ளைகளை மடியில் போட்டுக்கொண்டு நீதிக்கதைகள், தாய் தந்தையரின் வரலாறு, குடும்ப உறவுகளின் அறிமுகம் என பல பயனுள்ள விஷயங்களை சொல்லிக் கொடுப்பார்கள் அதுவே மழலைகளின் மனதில் பசுமரத்தாணியைப் போல் பதிந்து நிற்கும். கடல்கடந்து கடிகார வாழ்க்கை வாழும் நீங்கள் உங்கள் மழலைகளின் இந்த உரிமைகளை மறுக்கின்றீர்கள். சொந்த தாய் மொழியைக் கூட சம்பளம் தந்து சொல்லிக் கொடுக்கும் அவலம்! பணமும், செல்வமும், வசதியும், வாய்ப்பும் உங்கள் வாரிசுகளுக்கு தாராளமாகக் கிடைக்கச் செய்ய அயல் நாடுகளில் நீங்கள் படாத பாடுபட்டுவருகின்றீகள். இவையெல்லாம் வாரிசுகளின் வளர்ச்சியின் ஒரு பகுதி மட்டுமே! மாறாக அவர்கள் பெற வேண்டிய, தெரிய வேண்டிய அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. அது உங்களிடமிருந்து ஒரு போதும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை! வளைகுடாவில் வாழ்நாளைக் கழித்து வரும் என் நண்பனின் நான்கு வயது மகன் முதன்முறையாக ஊர் வந்திருந்த போது பசுமாடுகளைக் கண்டு அதிசயத்துடன் பார்த்து வியந்தான். அவனைப் பார்த்து நாங்கள் வியந்தோம். இந் நிலை எதற்காக வர வேண்டும்? கூடுமானவரை சொந்த நாட்டிலேயே தொழில் செய்யுங்கள். பணிபுரியுங்கள். அல்லாஹ் பறக்கத்து செய்வான். உள்ளூரில் வசிக்கும் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை மாலையில் நன்றாக விளையாட அனுமதியுங்கள். கல்விக்காக கண்டிப்பு எப்படி தேவையோ? அதைப்போல் கண்டிப்பாக அவர்கள் மீது உங்களுக்கு கனிவும் தேவை!
காலப்போக்கில் காணாமல் போன காயலின் விளையாட்டுக்கள் இனி திரும்ப வருமா எனத் தெரியவில்லை! அனால், இக் கட்டுரையின் மூலம் கடந்தகால நினைவுகளை சற்றேனும் அசை போட வைத்தோமே? எனும் ஓர் மன நிறைவோடு நிறைவு செய்கின்றேன்.
-அன்புடன், ஹிஜாஸ் மைந்தன்.
|