சுவரிலும் காகிதத்திலும் வரையும் சித்திரங்களும், கோட்டோவியங்களும் எழுத்துக்களும் நாம் ஏங்கும் காண விரும்பும் ஒரு உலகின் கற்பனைப் பதிவுகள். அவை உடல் பெற்று இந்த நிலவுலகில் உலா வர துடிக்கும். ஆன்மாக்கள். பல வேளைகளில் அந்த ஆன்மாக்களின் கனவுகள் நெடுங்கனவுகளாகவே நீடித்து விடுவதுண்டு. சில வேளைகளில் மட்டுமே அந்த ஆன்மாக்கள் குருதியும் சதையும் கொண்ட மனித உடல் பெற்று இந்த பூவுலகில் கால் பதித்து குதூகலிக்கும் பேற்றைப் பெறுகின்றன.
அந்த வகையில் வீட்டுத்தோட்டம் / மாடித்தோட்டம் பற்றிய எழுத்துப்பதிவுகள் 18 பேரின் வடிவில் உருவம் பெற்றன. இம்மாதம் 17ஆம் தேதியன்று 18 பேரையும் வெயிலை எதிர்கொள்ள குடிநீர் & மோர் பொட்டலங்களையும் ஏற்றிக்கொண்டு காலை 08:00 மணிக்கு முன்னரே புறப்பட்ட எங்களது வாடகை ஊர்தி பாளையங்கோட்டை நீதிமன்ற வளாகங்களுக்கு எதிரே அமைந்துள்ள அன்னபூர்ணா உணவகத்தில் போய் நின்றது.
சுடச்சுட பூரித்து நின்ற பூரி, வடை, உண்மையிலேயே நெய் மணத்த நெய் ரோஸ்ட், பொங்கல், காஃபி என பசியாறே கனமாக இருந்தது. வந்த கட்டணமும் கனமாகத்தான் இருந்தது . இந்த உணவகத்தில் நாங்கள் டிப்ஸ் வாங்குவதில்லை என்ற அறிவிப்பு வேறு ஒட்டப்பட்டிருந்தது. “யானை வாங்கினால் துறட்டி இலவசம்” யாரோ முணுமுணுத்தார்கள்.
காலை 10:00 மணிக்கு முன்னதாகவே, பாளையங்கோட்டை வ.உ.சி. விளையாட்டரங்கம் எதிரிலுள்ள வேளாண் அலுவலகம் வந்து சேர்ந்தோம். எங்களை இன்முகத்துடன் வரவேற்றார் வேளாண் மைய பொறுப்பாளர் பேராசிரியர் முனைவர் ப.நயினார் .
வந்தோரின் பெயர், முகவரி பதிவு முடிந்து, கட்டணத்தைச் செலுத்திய பின் ஆளுக்கொரு பேனாவும், குறிப்பேடும் தந்தனர். அதன் பின்னர் வகுப்பு தொடங்கியது.
நமதூர் குழுவின் வருகையால் 4 வருடங்களுக்குப் பிறகு காய்கறித் தோட்டம் பற்றிய வகுப்பு உயிர் பெற்றதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்த பேராசிரியர், நாம் ஒரே அணியாக வந்தது குறித்தும் சிலாகித்துப் பேசினார் . பவர் பாயிண்ட் (ஒளித்திரை) மூலம் வகுப்புகள் விறுவிறுப்பாக நடந்தன. இடையில் தேனீரும், வடையும் தந்தனர். வகுப்பினிடையே மின்சாரம் தடைப்பட்டதால் நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு மின்சாரமின்றியே வகுப்புகள் மீண்டும் தொடங்கின. இம்முறை பவர் பாயிண்ட் விளக்கத்திற்கு மின்சாரம் இல்லாததால் எழுத்துப்பலகை மூலம் வகுப்புகள் நடந்தன. எனினும் அந்த பவர் பாயிண்டின் துலக்கம் இதில் இல்லை. பாடத்தின் இறுதியில், ஒரு வழியாக மின்சாரம் வந்து சேர்ந்தது.
அதன் பிறகு மதிய உணவிற்கான இடைவேளை விடப்பட்டது. ஊர்தி ஓட்டுநர் எங்கோயோ வண்டியை கொண்டு சென்று விட, கடைசியில் சண்டை போடாத குறையாக அவரை வரவழைத்து, பக்கத்திலுள்ள மஸ்ஜிதிற்கு சென்று தொழுகையை நிறைவு செய்து விட்டு மீண்டும் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தோம். உணவிற்காக நாங்கள் எடுத்த நேரம் கூடுதலாகி விட்டபடியால் மீண்டும் வகுப்புக்குள் நுழையும்போது மின்சாரம் போய்விட்டது. எங்களது தாமதத்தாலும், மின் வெட்டினாலும் சில பாடங்கள் எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.
பாடங்களின் இடையேயும், முடிவாகவும் நமதூர் பெண்கள் கேட்ட முடிவுறா அய்யங்கள், கேள்விகள் அவர்களின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் காட்டியது. அது மட்டுமின்றி நமது நோக்கமும், முயற்சிகளும் அதன் இலக்கை எட்டியதையும் சுட்டியது. வந்த பெண்களில் பலர் வீட்டுத்தோட்டமும், மாடித்தோட்டமும் வைத்து பராமரித்து வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக அனைவருக்கும் தேனீரும் வடையும் பறிமாறப்பட்டது . வயிறு நிரம்பியிருந்ததால் தேனீரை மட்டும் அருந்தி விட்டு வடையை பொட்டலமாக கட்டிகொண்டோம். பங்கேற்றவர்களில் சிலர் தம் வீட்டுத்தோட்டங்களுக்கு மண்புழு உர சிப்பங்களை வாங்கினர். ஒரு சிப்பத்தின் விலை ரூ.35/=. ஆகும். வேளாண் மைய பேராசிரியர்களிடமும், ஊழியர்களிடமும் நன்றி கூறிய கையோடு - வந்த வாகனத்தில் ஊருக்குக் கிளம்பினோம்.
எதிர்காலத்தில் இவ்வகுப்புகளில் பங்கேற்க விழைவோரின் வசதிக்காக சில குறிப்புகள்:
## மாடித்தோட்டம்/ வீட்டுத்தோட்டம் தொடர்பாக ஏற்படும் அய்யங்களை திங்கள்-- வெள்ளி வரை காலை 9:30--மாலை 5:00 மணி வரை தொலைபேசி வாயிலாகவும் (0462--2575552) பாளையங்கோட்டையில் உள்ள வேளாண் அலுவலகத்தை நேரடியாக அணுகியும் கேட்கலாம்.
## புதிய வகுப்புகள் ஏற்பாடு செய்வதற்கும் மேற்கண்ட முகவரியையே அணுகலாம்.
## இம்மையத்தில் காளான் வளர்ப்பு, மண் புழு உரம் தயாரிப்பு பற்றியும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.
## நமதூரிலேயே இந்த பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டுமெனில் நாம் அதற்கான கோரிக்கையை முன் வைக்க வேண்டிய முகவரி:
முதல்வர்,
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
கிள்ளிகுளம், வல்ல நாடு----- 628252.
தொலை பேசி எண்: 04630---261226
## இக்கல்லூரியில் இளமறிவியல் வேளாண்மைப்பட்டப்படிப்பு (bsc, agri) உட்பட பல வேளாண் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. ஆர்வமுள்ளவர்கள் கல்லூரி முதல்வரை அணுகலாம்.
## இக்கல்லுரியிலும், திருச்செந்தூரில் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வேளாண்மை விற்பனை நிலையத்திலும்,குரும்பூர் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள தனியார் கடைகளிலும் விதைகளையும்,ஊட்ட உரங்களையும்,பூச்சி மருந்தையும் வாங்கிக்கொள்ளலாம்.
*** வீட்டுத்தோட்ட பயிற்சி வகுப்பிற்காக தனி ஊர்தியில் செல்பவர்கள் 17 பேராக செல்வது நலம். 18 பேர் செல்லும்போது ஊர்தியில் இட நெருக்கடியும் அசௌகரியமும் உண்டாகும்.
*** மின் தடை இல்லாத காலமாக பார்த்து சென்றால் வகுப்புக்களை முழுமையாக அனுபவிக்கவியலும்.
*** பயீற்சி வகுப்பிற்காக செல்பவர்கள் மதிய உணவை ஊரிலிருந்தே ஆயத்தம் செய்து கொண்டு சென்றால் உணவிற்கென நல்ல விடுதியைதேடி அலையும் அலைச்சலும், நேரமும்,காசும் மிச்சமாகும்.
*** நமதூரில் வகுப்புக்களை ஏற்பாடு செய்வதைவிட பாளையங்கோட்டையில் நேரடியாக போய் பயிற்சி பெறுவதில்தான் பலன் கூடுதல் கிடைக்கும்.காரணம் அங்கு மாதிரித்தோட்டத்தையும் பார்வையிடலாம், மண்புழு உரத்தையும் வாங்கலாம். அத்துடன் கல்வியை தேடிச்செல்வதுதான் சிறந்தது.
மொத்தத்தில் நாங்கள் பங்கெடுத்த இந்த வகுப்பு ஒரு நல்ல அனுபவமாக் இருந்தது. வெறும் எழுத்து செயலாக மாற உதவி செய்த வல்ல ரஹ்மானுக்கே துதிகளும், நன்றிகளும்!!!
நமது இணைய தளத்தில் இக்கட்டுரை வந்தவுடனேயே இந்த வகுப்பினை ஏற்பாடு செய்யுங்கள் செலவுகளை நான் ஏற்கத்தயார் என முதன்முதலில் உற்சாகமூட்டி அனுசரணையளித்த அன்பு காக்கா - கரூர் ட்ரேடர்ஸ் எம்.எஸ்.ஸெய்யத் முஹம்மத் அவர்களுக்கும்,
தனது பரபரப்பான சமூக நலப் பணிகளுக்கு நடுவேயும் இந்த வகுப்பில் கலந்து கொண்ட பயணத்தலைவர் என்.எஸ்.இ மஹ்மூது காக்காவிற்கும்,
போட்டி போட்டுக்கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் இந்த வகுப்பில் கலந்து கொண்ட தாய்குலத்திற்கும்,
இணையதளத்தில் இது தொடர்பான கட்டுரையும், செய்திகளும் வெளியானபோது ஈடுபாட்டுடன் பின்னூட்டமும் எழுதி தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்ட நேயர்களுக்கும்,
இந்த பயணமும் வகுப்பும் சாத்தியமாக துணை நின்ற அருமைத் தோழர்கள் ஹாஃபிழ்.எஸ்.கே.ஸாலிஹ், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!
நம் அனைவரையும் வல்லோன் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!
நன்மையான செயல்கள் அனைத்திலும் நம்மனைவரையும் ஒன்று சேர்ப்பானாக! ஆமீன்!
|