சிறு குழந்தைகளிடம் எதிர்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய் என்று கேட்டால்… நான் ஒரு டாக்டர் அல்லது சயின்டிஸ்ட், பைலட், கலெக்டர் ஆக போகிறேன் என்று பதில் சொல்வார்கள். அப்படி கூற கேட்பதில் நம் எல்லோருக்கும் ஒரு ஆனந்தம். அதே கேள்வியை அவர்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும்போது கேட்டு பாருங்கள். ஹ்ம்ம்... என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழிப்பார்கள்.
அவர்களின் சிறுபிராய ஆசையை / கனவை நனவாக்குவதட்க்கு முறையான வழிகாட்டுதல், தொடர் நினைவூட்டல், அதற்க்கான அடித்தளத்தை சரியான பருவத்தில் அமைக்க தவறியதும், இளம்பிராயத்திலேயே திட்டமிட்டு உழைக்க கற்று தறாததும், எவ்வித நோக்கமின்றி படிக்கும் படிப்பும் மிக முக்கிய காரணங்கள்.
பொதுவாக ப்ளஸ் டூ முடித்த பின்புதான் மிகப் பெரியதாய், அடுத்தது என்ன? என்ற ஒரு கேள்வி எழும். 10th முடித்தவுடனே அக்கேள்வியை கேட்டு பாருங்கள். +2 முடிக்கும் போது ஒரு தெளிவான பதில் கிடைக்கும். ஏனென்றால் பிளஸ் 1 -ல் என்ன குரூப் எடுத்து படிக்கிறோமோ அதுதான் அடுத்தது மருத்துவம், இன்ஜினியரிங் என முடிவு செய்ய உதவுகின்றது. அதை சரியாக தீர்மானித்துவிட்டால், சரியான / விருப்பமான படிப்பைத் தொடரமுடியும். தவறான முடிவெடுத்துவிட்டால் பின்னர் அதிலிருந்து மீள்வது கடினம்.
எதற்காக இந்த குருப்பை எடுத்து படிக்கின்றோம் என்று தெரியாமல் படிப்பவர்களும், ஒரு குருப்பை எடுத்து படித்தால் வருங்காலத்தில் தான் 'என்னவாக' ஆக அது வழிவகுக்கும் என்று கூட தெரியாமல் படிப்பவர்களும் இன்று வரை இருக்கிறார்கள்.
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு, பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல்நிலை பள்ளி (+1, +2) படிப்பு தான். பொறியியல், மருத்துவம், சட்டம் என தங்கள் மேற்படிப்பை விரும்புபவர்கள் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவை (First or science Group) யும்… தாவரவியல், விலங்கியலில் ஆர்வம் உள்ளவர்கள் ‘ப்யூர் சயின்ஸ்’ எடுக்கலாம். ‘ப்யூர் சயின்ஸ்’ எடுத்தால் பொறியியல் படிக்க இயலாது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முந்தைய காலங்களில், விபரமறியாமல் ‘ப்யூர் சயின்ஸ்’ எடுத்து ஒரு சில மார்க்ஸ் குறைவாக எடுத்ததினால் டாக்டர் ஆக முடியாமலும்... இன்ஜினியரிங் படிக்க விருப்பம் / திறமை இருந்தும் வேறு வழியில்லாமல் ஆர்ட்ஸ் & சயின்ஸ் படித்தவர்களும் உண்டு. முதலில், நாம் என்னவாக விரும்புகிறோமோ அதற்கான சரியான குரூப் என்ன என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
பயாலஜி சரிபட்டு வராது என்றால்… கணிதம், வேதியில், இயற்பியல், கணினி அறிவியல் பிரிவை எடுக்கலாம். C.A, B.Com, கம்பெனி செகரட்டரிஷிப் போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள், ‘காமர்ஸ்’ பிரிவைத் தேர்வு செய்யலாம்.
எதிர்காலதில் B.A. M.A படித்து அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் என விரும்புபவர்கள் வரலாறு, பொருளாதாரவியல் படிக்கலாம். பொதுவாக மற்ற குரூப்களை எடுத்து படித்தால் நேரம் கிடைக்காது. கலெக்டராராகும் கனவுள்ளவர்கள் கூட கடினமில்லாத டிகிரியை படித்துக்கொண்டே 'சிவில் சர்விசஸ் - க்கும்' தயாராகி கொள்கிறார்கள்.
உயர்கல்வியில் பொறியியல் / மருத்துவம் எடுக்கப் போவதில்லை என்று தீர்மானித்து விட்டால் அல்லது ப்ளஸ் டூ முடித்தவுடன் ‘ஆலிமா’ ஆவதில் விருப்பம் உள்ளதென்றால்... எல்லோரும் படிக்கின்றார்களே என்று Science group - ஐ எடுத்து ப்ராக்டிகல் / ரெக்கார்ட் நோட் என்று கஷ்டப்படாமல் சிரமமற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்து அதில் ஒளிந்திருக்கும் அறிவுத் திறனை வெளிக்கொணர்ந்து மாநில முதல் மாணவ - மாணவியாக நமதூருக்கும், பயின்ற கல்விக்கூடத்திட்க்கும் பெருமை தேடி தரலாம். அதற்க்கு தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவாகிய vocational குரூப் எடுத்து படிப்பது உதவும்.
சயின்ஸ் அல்லது கம்புயுட்டர் சம்பந்த படிப்பு மட்டும் என்றில்லாமல், தனித் திறமையுடன் கூடிய கலை திறன் / ஆர்வம் உள்ளவர்கள்.. எந்த குருப்பை எடுத்து படித்தால் வாழ்வில் சாதிக்க முடியுமோ அது சம்பந்த பட்ட குருப்பை எடுத்து படிப்பது ... அத்துறையில் தலை சிறந்த வல்லுனராக விளங்க வழிவகுக்கும்.
மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் விரும்பும் சில பாடப்பிரிவுகள் இல்லாத நிலையில் விருப்பமின்றி வேறு பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் நிலையை பள்ளி நிர்வாகங்கள் கவனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும் அல்லது கனவை நனவாக்கும் பாடப்பிரிவுகள் கிடைக்கும் திசையை நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும்.
ஒரு வேளை மேல்நிலை படிப்பு முடியவில்லையென்றால், டிப்ளோமா - வில் Automobile, EEE, ECE, Mechanical, civil படிக்கலாம். ஒரு சிலர் மூன்று வருடம் டிப்ளோமா படித்து விட்டு பொறியியல் படிக்க செல்கின்றனர். பொறியியல் படிக்க முடிவெடுத்து விட்டால் 12th படித்து விட்டு அதை படிப்பது நல்லது.
குறைவான மதிப்பெண்கள் அல்லது குடும்ப சூழ்நிலையால் படித்து முடித்து ஓராண்டுக்குள் ஏதாவாது வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளவர்கள் (கல்வி உதவி எதுவும் கிட்டாதவர்கள்), ஓராண்டு சான்றிதழ் படிப்பாகிய ITI யில் சேரலாம். போட்டி நிறைந்த இன்றைய சூழலில் மேற்படிப்புக்கும் (வேலைக்கான) முதற் தகுதியான குறைந்த பட்சம் ஒரு 'டிகிரி' யாவது படித்து முடிப்பது நல்லது. அதற்க்காக Diploma / ITI படிக்காதீர்கள் என்று அர்த்தம் அல்ல. ஒவ்வொருவருடைய ஆர்வம் / சூழ்நிலையை பொருத்து முடிவெடுத்து கொள்ளலாம்.
ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை ஒளிந்திருக்கிறது. அதனை உணர்ந்து சுயமாக முடிவுகளை எடுக்க பழக வேண்டும். நமது நாட்டின் கல்வி முறையை பொறுத்த மட்டில் மாணவர்களின் வாழ்க்கை பாதையை எழுதப்போவது... பிளஸ் டூ பொதுத் தேர்வுகளும் அதனை தொடர்ந்து நடைபெறும் நுழைவுத்தேர்வுகள் தான். அதற்க்கு தயாராவதட்க்கு மிகச்சிறந்த தருணம் மேல்நிலை பருவத்திலேயே திட்டமிடுவது... கனவை நனவாக்க போகும் வாழ்க்கை பாதையை அமைத்து கொள்ள உதவும்.
நமதூர் மக்கள் தொகையில் (ஒட்டு மொத்த) கல்வியில் இன்று 20 - 25 % கல்லூரி வரை படித்த சமுதாயாமாக நாம் உள்ளோம். இளைய தலை முறையினர் அனைவரும் நமதூரில் ஏற்பட்டுள்ள கல்வி விழிப்புணர்வையும், தன்னை தேடி வரும் கல்வி உதவிகளையும், ஊக்கங்களையும் தங்களுக்கு சாதகமாக்கி ஒட்டுமொத்த இளைய தலை முறையினரும் நன்கு படித்து முன்னேறும் போதுதான்... இன்னும் அடுத்த 15 to 20 வருடத்திற்குள் (அதாவது அடுத்த தலை முறைக்குள்) நமதூரை கல்வியில் 100 % விழுக்காடு கொண்ட ஊராக மாற்ற முடியும்.
பெரும்பாலான படித்த மேல் தட்டு மக்கள், இந்த மேல்நிலை பள்ளி பருவத்தை மிகச்சரியாக பயன்படுத்தி வாழக்கையை முறையாக திட்டமிட்டு, நினைத்ததை அடைந்து வாழ்வில் முன்னேறி வருகிறார்கள். ஆனால் நாம், ஏதோ பெயருக்கு 11 - ஆம் வகுப்பு படிக்கின்றோம். பின்னர் 12 - ஆம் வகுப்பு பொதுத் தேர்வாக இருப்பதால் கொஞ்சம் கடுமையாக படித்து 'பாஸ்' ஆவதையே குறிக்கோளாக கொண்டுள்ளோம். இவைகளை இளைய தலை முறையினர் 'மாற்றி' காட்டவேண்டும்.
நமது நீண்ட நாள் கனவாகிய State Topper - ஐ அடைவதற்க்கு ஒரு சிறு கூட்டு முயற்ச்சியாக, ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் மிக நன்றாக தொடர்ந்து படிக்கும் ஒன்றிரண்டு மாணவர்களை அடையாளம் கண்டு, ஆசிரியர்கள் மற்றும் ஊர் பர்ஸ்ட் எடுத்த பழைய மாணவர்களின் அனுபவத் துணை கொண்டு அவர்களை நன்றாக ஊக்கப்படுத்தி (முடிந்தால் 11 ஆம் வகுப்பிலேயே), செம்மை படுத்தினால் நம்மால் அக்கனவை அடைய வாய்ப்பிருக்கிறது. அதற்க்காக மற்ற மாணவர்களை 'அம்பேல்' என்று விட்ட விட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. நடைமுறையில் குறைவாக / சுமாராக படிக்கும் எல்லா மாணவர்களையும் இந்த அளவுக்கு கொண்டுவருவதில் சிரமம்.
இவைகளை அடைய நம் சமுதாயமும் எப்பொழுதும் மாணவர்களுக்கு ஒரு ஊண்டுகோலாக இருக்க வேண்டும். மாற்றத்தை காணப்போகும் விடியலை நோக்கி பயணிப்போம்!! |