உலகில் மனிதர்கள் பேசுகின்ற மொழிகள் எதுவானாலும் அம் மொழிகள் யாவும் நாட்டுக்கு நாடு, மாநிலத்திற்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடுவது இயல்பு. ஒரே மாநிலத்தில் ஒரு மொழியினை பல மாவட்டங்களில் பலவிதமாகப் பேசுவதை வட்டார வழக்கு என்பர், ஒரு சமுதாயம் அல்லது ஓர் சமூகம் தமக்கென்றே தனிப்பட்ட முறையில் சில பிரத்தியேக வார்த்தைகளால் தமது குழுவினரோடு பேசுவதை குழுவுக்குறி என்பார்கள். உதாரணமாக நம் தாய் மொழியினை சென்னையில் ஒரு விதமாகவும், சேலத்தில் ஒரு விதமாகவும், கோவை, நெல்லை, மதுரை ஆகியவற்றில் வேறு விதமாகவும் பேசுவார்கள். இந்த வகையில் நம் காயல்பட்டணத்து தமிழ் வார்த்தைகள் பெரும்பாலும் தூய தமிழில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் நாம் பேசும் பல வார்த்தைகள் நம் பக்கத்து ஊர்க்காரர்களுக்குக் கூட புரிவதில்லை. அது போன்ற வார்த்தைகளை நாம் ஓர் அகராதி போல் தொகுத்தால் என்ன? என்பது எனது நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது. இதற்கான வாய்ப்பை எழுத்து மேடையின் வாயிலாக எமக்களித்த இந்த இணையதளத்திற்கு நன்றிகள் பல... சரி, இனி காயல் தமிழ் பேசலாம்...வாங்க...!!!
ஈக்கிது = இருக்கின்றது
இன்னங்கோ = என்னங்க? மனைவி கணவனை அழைக்கும் சொல்
இன்னாஸ்குனா = வியப்பை வெளிப்படுத்துதல்
பசியாற = நாஷ்டா (சிற்றுண்டி)
தேயிலை = சாயா (டீ)
பண்டம் = தின் பண்டங்கள் (நொறுக்குத் தீணி)
பாவு = காய்ச்சிய பதநீர்
வட்டி = வட்டில் பாத்திரம்
வலந்து = பண்ட பாத்திரங்கள்
தூக்குப்போனி = தூக்குச்சட்டி
வாளி = பக்கெட்
அசப்பலகை = தட்டு(ஷெல்ஃப்)
மாடாக்குழி = வெட்டிய முடி, நகம் புதைக்குமிடம்
ஜான்ஸ் = வரவேற்பறை
திண்ணை = வீட்டின் நடுப்பகுதி (ஹால்)
ஊட்டங்களை = உள்ளறை
மெத்தை = மாடி
முடுக்கு = சந்து
வெட்டை = திறந்தவெளி
ஓடை = உள்சந்து
பாந்து = தடுப்புச்சுவர்
தொட்டிக்கட்டு = வீடுகளின் தொகுப்பு
வானக்குழி = அடிக்கல், (ஃபவுண்டேஷன்)
பலாய் = சச்சரவு
முழுமாடு = வயதுக்கு வந்தும் பொறுப்பற்றவன்
முகமாத்து = தன் வசப்படுத்துதல்
சுத்து = விளிம்பு, முனை
முத்தல் = முதிர்ந்த காய்கறிகள்
வதுவாப்பர் = அநியாயம். கொடுமை
கலாமுறை = அபாயகரமான
ஹயா = வெட்கம்
சூதானம் = பாதுகாப்பற்ற நிலை
சொங்கி = சுறுசுறுப்பின்மை
உரியாணம் = நிர்வாணம்
பொம்ஸ் = குண்டு, தடிமன்
அப்புதல் = அபகரித்தல்
தொட்டாம்பள்ளி = தொட்டாச்சினுங்கி
சேவுஸன் = திருடன், ஏமாற்றுப் பேர்வழி
கபகபா = கொள்ளைக்காரன், திருடன்
பில் போட்டது = திருடியது
செருமுதல் = அபேஸ்பண்ணுதல்
சுட்டது = திருட்டுப்பொருட்கள்
சிரிச்சிட்டு= உடைந்துவிட்டது
பள்ளிக்கூடம் விட்டுடும் = பழுதடைந்துப் போய்விடும்
இஸ்க்கு = தர மறுத்தல்
சல்லமை = உடல் நலக்குறைவு
மாதிரியா வருதல் = மயக்கமுறுதல்
கொளறுதல் = அலறுதல்
தருக்கு = மலம்
சீப் பெய்தல் = சிறுநீர் கழித்தல்
சீ = மர்ம உறுப்புக்கள்
சேப்பாளை = கோழை
பச்சை = மக்கு, மங்குளி
பேக்காத்து = பாமரன் (பட்டிக்காட்டான்)
பலமாத்தம் = புத்தி சுவாதீனம்
பவுட்டி = பகட்டுபவள்
பவுத்தி = விளம்புதல்
படுதல் = விருந்துக்கான அழைப்பு
மரவனம் = மாப்பிள்ளை வீட்டிற்கு சில மணிநேரம் போகுதல்
அழைப்பு = திருமண வரவேற்பு
அடாப்பு = அழைப்பிற்கான பெயர் பட்டியல்
பைத்து = திருமண ஊர்வலம்
நாள்குறித்தல் = திருமணத் தேதியை முடிவு செய்தல்
பாலும், சீனியும் = சம்பந்தம் கலப்பது
களறி = திருமண விருந்து
ஸஹன் = உணவுத்தட்டு
தட்டிடுச்சு = தீர்ந்து போயிற்று
சிட்டி = மண் பாண்டத்தினாலான கறிப் பாத்திரம்
பூச்செப்பு = சீர்வரிசை
தலைவாசல் மொத்தம் = குடும்ப சகிதம்
சாட்டுமாத்து = மாப்பிள்ளை கொடுத்து மாப்பிள்ளை எடுத்தல்
சூலி = கர்ப்பிணிப்பெண்
சாக்கோட்டி = மசக்கை
வருத்தம் = பிரசவ வேதனை
கருமாலி = பிரசவம்
கஞ்சி ஆச்சா = பிரசவம் பார்க்கும் பெண் (தாய்,சேய் பராமரிப்பவள்)
தொட்டி வேஷ்ட்டி = தூளி (தொட்டில்)
கொமஞ்சான் = சாம்பிராணி
அணையாடை = குழந்தைக்கான பருத்தித் துணி
கைமருந்து = நாட்டு வைத்தியம்
பூச்சு மாவு = பவுடர்
உக்கு குடித்தல் = பால் குடித்தல்
போச்சி = பால்புட்டி
கண்ணூரு = ஊரார் கண்படுதல்
காலுக்கு வைத்தல் = குழந்தையை மலம் கழிக்கச் செய்தல்
காக்காநாட்டி, மச்சி = அண்ணி
அப்பாநாட்டி = தாயின் தாய் மாமன் மனைவி
அப்பமாமா = தாயின் தாய் மாமன்
சாச்சி = தாயின் தங்கை
காக்கா = அண்ணன்
சாச்சப்பா = தகப்பனின் தம்பி
கம்மா = பாட்டி
அப்பா = தாத்தா
வாப்பிச்சா = தப்பனின் தாய்
வாச்சோட்டப்பா = தப்பனின் தந்தை
வாந்தவம் = உறவு முறை
தாய் பிள்ளைகள் = உறவினர்கள்
பறாக் பார்த்தல் = வேடிக்கைப் பார்த்தல்
எழுத்தைப் பார்த்து ஓது = உணவைக் கவனமாக உண்
இஞ்சிக்குடித்தல் = கோபப்படுதல்
டோங்கா = பருப்பு அள்ளப் பயன்படுத்துவது
சொளவு = முறம் (சுழவு)
தலாக்கம்பு = தண்ணீர் இறைக்கும் ஏற்றம்
தாவளம் = கிணறுப்பகுதி
சதுக்கை = பெரியோர்கள் கூடுமிடம்
குறடு = அமருமிடம், வெளித் திண்ணை
கிட்டங்கி = மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
சலாதிற்குப் போகுதல் = மரணித்தவர் வீட்டிற்குப் போவது
மய்யத்துக்காடு = மயாணம் (மய்யவாடி)
ஓதுதல் = திருமறையை வாசித்தல்
பள்ளி = குர்ஆன் ஓதிக்கொடுக்குமிடம்
லெப்பை = ஓதிக்கொடுப்பவர்
கம்ச துட்டு = வியாழக்கிழமை ஆசானுக்கு கொடுக்கும் காசு
குட்டை = மரத்தடி, கால் விலங்கு
வட்டா = சம்மானம், அன்பளிப்பு, லஞ்சம்
மாளா = சுண்ணாம்பு போன்றது பலகை அழிக்கப் பயன்படுத்தும் பொருள்
கைமடக்கு = அன்பளிப்பாக கொடுக்கும் பணம்
குடிப்பு = பாணங்கள் பருகுவது
மாவு = மாற்று நம்பிக்கையளர்கள்
சீனி = முஸ்லிம்கள்
பலாப் பெட்டி = ஓலைப்பெட்டி
கடவாப் பெட்டி = பனை ஓலையினால் ஆன பெரிய பெட்டி
மிட்டாய் பெட்டி = இனிப்புப் பலகாரம், நெய்ச்சோறு வைக்கப் பயன்படுத்துவது
அஞ்சறைப்பெட்டி = கை மருந்து வைக்கும் பெட்டி
புளியாணம் = ரசம்
ஆணம் = குழம்பு
பலாத்தண்ணி = புலால் தண்ணீர் மீன் கழுவிய நீர்
கான் = கழுவு நீர்த்தொட்டி
மடை = நீர் வெளியேற்றும் துளை
கூலக்கடை = பல்பொருள் விற்பனைக்குடம்
கொள்ளக்கடை = பெண்களுக்கான சந்தை
தொண்டு வாசல் = கடைகளில் பெண்களுக்கான தனிப் பகுதி
துப்பட்டி = போர்வை
ஃபுருக்கா = வெள்ளை நிற வேஷ்ட்டியை சேலைக்கு மேல் உடுத்துதல்
பிரளி = சேட்டை
கட்டக்கிதாபு = சூது
சுருபு = மது, சாராயம்
பாஸ்போர்ட்டு = தொப்பி
தடுமல் = ஜலதோஷம்
நார்ஷா = நேர்ச்சை (தப்ரூக்)
மாயனஉளுவான் = மயானம் கொள்வான்(மறைந்து போவான்)
ஹயாத்தை வாங்குதல் = தொந்திரவு செய்தல்
தெறிப்பான் = திமிரானவன்
ஷெய்த்தான் வந்துடும் = கோபம் வந்துவிடும்
கெப்பர் = ஆணவம் (கிபுர்)
அக்குருவம் = திமிர்
முசீவத்து,மூதி,முடுமை = ஆத்திரத்தில் வெளிப்பத்தும் ஏச்சுக்கள்
அறுத்த கைக்கு உப்பு வைக்காதவன் = உதவி செய்ய மறுப்பவன்
கள்ளக்குட்டி = செல்லப்பிள்ளை
தொழுவாமல் இருத்தல் = மாதவிலக்கு காலம்
தலமுழுகாட்டுதல் = தண்ணீர் ஊற்றுதல்,நீராட்டுதல்
கட்டி விழுதல் = கருச்சிதைவு(அபார்ஷன்)
சந்தனக்குச்சி = ஊதுபத்தி
சல்லாப்பாய் = தொழுகை விரிப்பு
வாரூல் = துடைப்பம்,விளக்குமார்
தும்புக்கட்டை = ஒட்டடைக்குச்சி
கருப்பட்டி பாச்சான் = கரப்பான்பூச்சி
பாபா = கோழி
உம்பு = ஆடு
தோத்தா, லொள்ளா, சாச்சப்பா = நாய்
கட்டக்கால் = பன்றி
பெருசு = மாட்டிறைச்சி
சிறுசு = ஆட்டிறைச்சி
அஸ்பல் பணாட்டு = மோசமான, உபயோகிக்க இயலாதவைகள்
டப்பா = தரம் குன்றிய
பரப்பு = பேராசை
கப்பல் = அதிகமாக உண்ணுபவர்
கொதி = கண்னேறு,கண்படுதல்
களிப்பு = செய்வினைப்பொருட்கள்
களிம்பு = க்ரீம் (ஆயின்மெண்ட்)
அத்துமுறிதல் = சண்டையிட்டுப் பிரிதல்
கத்து = பேசாமல் இருத்தல்
கைலேஞ்சி = கைக்குட்டை
லேஞ்சி = டவல்
வட்டுவம் = சுருக்குப்பை
வார் = பெல்ட்
ஜேப்பு = சட்டைப்பை
மக்கனா = தலைத்துணி
கிதுபு, கப்சா = பொய்
குளுந்தறைத்தல் = குளிரடித்தல்
வாடை = குளிர்
வெக்கை = வெயில்.வெப்பம்
தவித்தல் = தாகம்
தார்ஸ் = காங்க்ரீட்
ஜொக்கு = தண்ணீர் அள்ளும் பாத்திரம்
புட்டுவம் = நாற்காலி
ஒக்குடுதல் = பழுதுபார்த்தல்
கோட்டான் = காவலர், போலீஸ்
கலவாடை = வளவளவென பேசுபவன்(சட்டிக்கு அடியில் வைக்கும் பொருள்)
கஸம் = அழுக்கு
கசப்பு மாற்றுதல் = மரணித்தவரின் ஆடையை மாற்றுதல்
கசு = துர்வாடை
அசத்தி = அயர்வு, சோர்வு
சத்தி = வாந்தி
கக்கம் = இடுப்பு
கம்காடு = அக்குள்
டிங்கி = சதா சண்டையிடுபவள்
காடையன் = சும்மா ஊர் சுற்றித்திரிபவன்
ஈச்சான் = பல் இளிப்பவன்
குத்துப்புடி = முந்திடியடித்தல்
ஆமஹல்க்கு = முட்டாள்
குடிபுகுதல் = புது மனைப்புகுதல்
சந்தூக்கு = பாடை
பள்ளமாக்குதல் = அடிக்கடி வருதல்
பழுத்துவிட்டது = கைகூடிவிட்டது
கோந்து = பசை
கை இளவாது = கஞ்சத்தனம்
நப்பி = கருமித்தனம்
நெட்டக் கொக்கு = உயரமானவர்கள்
குட்டத் தாரா = உயரம் குறைந்தவள்
உக்குதல் = உம்மென்று இருத்தல்
வெள்ளப் பாச்சான் = வெள்ளை நிறத்தோர்
கருப்பட்டி பாச்சான் = கருமை நிறத்தோர்
பொண்ணையன் = பெண் சுபாவம் கொண்டவன்
தடுக்குப்பாய் = சாப்பாடுக்கான விரிப்பு
அருமாந்த = அரியவை
வெட்டுதல் = வயிறு புடைக்க உண்ணுதல்
வெசுவாயில்லை = வசதியாக இல்லை
அன்னம்பாருதல் = அடம்பிடித்தல்
இருட்டுக்கசம் = கும்மிருட்டு
நசல் = தீண்டத்தகாத, வெறுக்கத்தக்க (நோய்)
போலா= = கோலி
படுதூறு = அவதூறு (ஃபஸாது)
கழுவிக்குடித்தல் = அவதூறு பேசுதல்
கலர் = குளிர்பாணம் (இனிப்பு சோடா)
நசுவுதல் = தோல்வியை ஏற்காமை
கொடி = பட்டம்
மாராயம் = வண்ணத்துப்பூச்சி
இன்னும் இது போன்ற ஏராளமான சொற்கள் நம் வழக்கத்தில் உள்ளன. உணவுப் பொருட்கள், ஆடை, அணிகலன்கள், உறவுமுறைகள், கேலிப்பேச்சு, நக்கல், நையாண்டி வார்த்தைகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். பொதுவான சில வார்த்தைகளை மட்டும் இங்கு தொகுத்துள்ளேன். இனி அச்சிலேற்ற அருகதையில்லாத அநேக வார்த்தைகளைத் தவிர்த்துள்ளேன். வருங்காலங்களில் யாராவது காயல் தமிழ் அகராதி தொகுப்பை நூல் வடிவம் கொடுக்க முனைந்தால் தாராளமாக இச் சொற்கலவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விடுபட்டுப்போன வார்த்தைகள் இன்னும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகளை வாசகர்கள் கருத்துப்பதிவின் மூலம் தெரியப்படுத்தினால் அது இக் கட்டுரைக்கு இன்னும் மெருகூட்டுவதாக அமையும். இன்ஷா அல்லாஹ் எழுத்து மேடை மூலம் வேறொரு தலைப்பில் உங்களைச் சந்திக்கிறேன். வஸ்ஸலாம்.
-என்றும் அன்புடன்,
உங்கள் ஹிஜாஸ் மைந்தன்.
|