மனித நேயம், மனிதாபிமானம் கொண்டதாக நம் வாழ்க்கை அமைவதே அந்த வாழ்க்கை உயர்ந்த நிலையை அடைகிறது என்பதற்கு சீரிய அடையாளம் ஆகும். வாழ்க்கை என்பது சேவை மனப்பான்மை கொள்ளும் போது அன்பு. பாசம், நேசம் எல்லாம் பளிச்சிட்டு மலைமேல் இட்ட ஒளி விளக்காக நிற்கும்! மலை உச்சியில் விளக்கு வெளிச்சம் எப்போது முடியும்? மனதை ஒருமுகப்படுத்தி தன்னார்வம் கொண்டு மலையேற முயற்சி செய்து வெற்றிக் கண்டால் தானே முடியும்!
“காற்றிழுக்கப் பழகியதால் தான் உயிர் வாழ்க்கை
காலத்தோடு சேவை செய்ய பழகினால் தான் உயர் வாழ்க்கை”
இந்த மானுடத்தில் மனித குலத்தின் துளிகளுள் துளியாக உள்ள நாம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும், இன்பத்தைத் துய்க்க வேண்டும், குறையின்றி நிறைவாழ்வு வாழ வேண்டும் என்று என்னுவது இயல்பு – நியாயமும் கூட! அதை எப்படி அடைவது? இலக்கு அதுவாக இருப்பினும் கூட அந்த இலக்கினை நீங்கள் இருந்த இடத்திலோ அல்லது வெறும் கற்பனை சிந்தனையிலோ, உறக்கத்தின் கனவுகளிலோ அடைந்து விட முடியுமா?
ஊருக்குப் போகும் பாதை இது தான் என்று வழிகாட்டும் கைகாட்டியின் கீழ் நின்றுவி;ட்டால் எந்த ஊருக்குப் போக நினைத்தோமோ அந்த ஊரைப் போய் சென்றடைந்து விட்டதாக எண்ணினால் அதைவிடப் பேதமை ஏது? பசியில்லாத போது அறுசுவை உணவாக நம் முன் இருந்தாலும் அது சுவைக்குமா? அதை நாம் சுமப்பதாகவே ஆகிவிடும்.
“பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது
சேவை குணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது”
காலம் நதியைப் போன்றது அது பிறக்கும் இடத்திற்கு ஒரு போதும் திரும்புவதில்லை சென்ற காலத்தின் அருமையை உணரும். நாள் வருவது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நிச்சயம் ஆனால் அதுவரை அந்த காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. உயர்ந்த கருத்துக்களால் இந்த உலகம் நிறைந்து விட்டது. ஆனால் உயர்ந்த மனிதர்களுக்கான இடமோ இன்னும் நிறைய வெற்றிடமாகவே உள்ளது.
உயர்ந்த சிந்தனைகளால் தான் மட்டும் மகிழ்ந்தால் போதாது. தன்னுடன் பிறரையும் நல்ல சமுதாய கண்ணோட்டத்தில் ஒன்றிணைந்து செயலாக்கி மகிழ்விக்க வேண்டும். எந்தவொரு சேவை மனப்பான்மை கொண்ட பழக்கமும் தொடக்கத்தில் சிலந்தி வலை போலத்தான் தோன்றும். பின் அதையே நாம் பிறர் மனங்கள் குளிர தொடர்ந்து செய்தால் அது இரும்புச் சங்கிலி போன்று ஆகிவிடும்.
“ஒரு முறை கேட்டு பலமுறை சிந்திப்பவன் ஞானி
பல முறை கேட்டு ஒருமுறை கூட சிந்திக்காதவன் மூடன்”
எதைச் செய்கிறோம் என்பதை விட எதற்காக செய்கிறோம் என்பது தான் முக்கியம். நம்மைச் சுற்றி நடக்கும் தவறுகள் நமது எண்ணத்தின் கண்களை உறுத்தவில்லை, குத்தவில்லையென்றால் நாமும் அந்த தவறுக்குள் மூழ்கி முத்தொடுக்கிறோம் என்பது தான் நிதர்சனம். ஒரு மனிதன் தான் செய்த தவறை தார்மீக பொறுப்பேற்று ஒத்துக் கொள்ளும் போது மனம் பக்குவப்படுகிறது. அதை ஏற்றுக் கொள்ள மறுப்பவனின், மறைப்பவனின் மனமோ பழுதடைகிறது. மீண்டும் அந்த தவறை செய்ய அவன் துணிந்துவிடுவான்.
உலகில் வாழ்வதற்கு வழி சொல்வோர் ஏராளம். ஆனால் தன்னார்வ தொண்டு செய்து வாழ்வில் வாழ்ந்து காட்டி வரலாறு படைத்தோர் மிக குறைவு. நம்மிடம் உள்ள குறைகளை காண நாம் தவறும் போது தான். பிறர் நமது நிறைகளை காண தவறுகின்றனர். உலகை பார்த்து வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் சாதாரண மனிதர்கள் இந்த உலகம் அன்னார்ந்து பார்க்க வாழ்ந்தவர்கள் சாதனை மனிதர்கள்.
“மலருக்கு அதன் மனமே விளம்பரம் - நல்ல
மனிதனுக்கு அவனது சேவை குணமே படைபலம்”
ஒவ்வொருவரும் தன்னை தகுதியுடைய மனிதனாக ஆக்கிக் கொள்வதே இன்றைய சூழலில் மிக முக்கியம் உங்களை நீங்களே உயர்ந்த மனிதர்களின் நெருக்கத்தில் இருப்பதாக அடிக்கடி நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒரு சுயநலவாதியாக இருப்பதாக உணர்ந்தால் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு முதலில் ஆபத்தில் உதவிகரம் நீட்டுங்கள். நிச்சயமாக ஒரு பொது நலவாதியாக உங்களால் மாற முடியும். இந்த உலகத்தில் மாறாதது எதுமேயில்லை. உங்களின் வளர்ச்சி என்பதே மாற்றம் தானே! உங்கள் அடிப்படை குணங்களில் எங்கெல்லாம் வளர்ச்சி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். அதன் மூலம் உங்கள் சேவையின் லட்சிய கனவு நிறைவேர உங்களை தகுதியாக்கி கொள்ளுங்கள்.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். அதைவிட சிறந்த தானம். ரத்த தானம் அதையும் விட சிறந்த தானம் கண் தானம். விழி இழந்தோருக்கு விழிக்கொடை என்று பதிவு செய்து
“மண்”-ணடியில் மறைந்தவர்கள் “மண்ணடியில்” கூட வாழ்வார்கள். மற்றவரின் விழியாக பார்வை ஒளியாக இந்த உலகை பார்த்து முன்மாதிரியாக வாழ்ந்துக் கொண்டு தானே உள்ளனர். விழி மட்டுமா? பல உடலுறுப்புக்களையும் கூட பயனுறு வகையில் இறந்த பின்பும் கொடுத்து “மறுவாழ்வு” பெறலாமே! நாம் கொஞ்சம் நல்லெண்ணம் கொண்டு சிந்திப்போமா?
“பொது சேவையை கடமையாக செய்தால் வெற்றி
பொது சேவையை கடமைக்காக செய்தால் தோல்வி”
“ஒளியால் பூமி விடிகிறது இருளில் நீந்திமுடிகிறது”. கண் விழித்து எழுந்திருக்கும் போது உங்கள் கையில் புத்தம் புதிதான 24 மணி நேரம் இருக்கிறது என்பதை நினைத்து ஆனந்தம் அடையுங்கள். நேரத்தை தவிர வேறு எதுவும் நமக்கு சொந்தமானதல்ல. ஒருவரின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூங்குவதிலும், பத்தில் ஒரு பங்கு உண்பதிலும் மற்றொரு பத்தில் ஒரு பங்கு கழிப்பறையிலும் கரைந்து விடுகிறது. இன்னுமொரு பங்கு உறவினர்கள், நண்பர்களுடன் பொழுதுபோக்குவதில் போய் விடுகிறது. இப்படியாக மொத்தத்தில் எழுபது சதம் நேரம் நம் வாழ்வை விட்டு அழிந்து விடுகிறது.
“வெயிலடிக்கும் போதே காயப்போட்டு விடு”. மீதியிருப்பது முப்பது சதம் இதில் தான் அவரவர் படிப்பை பணியினை செய்தாக வேண்டும். கனவுகளை நனவாக்க வேண்டும், சாதனைகளை சரித்திர கல்வெட்டாக்க வேண்டும் எனவே உங்கள் பாதங்கள் சேவையை நோக்கி நடப்பதற்கு தயாராக இருந்தால் பாதைகள் ஏதும் மறுப்புச் சொல்லப் போவதில்லை. இந்த வினாக்களுக்கு இன்றே விடை தேட நடை போடுங்கள்.
“தினசரிக் காலண்டர் தாள் கூட என்னை கிழிப்பவனே! நீ என்ன செய்து கிழித்தாய்” என்று சில சமயங்களில் கேலி செய்யலாம். மறுபடியும் காலைப்பொழுது மலர்களைச் சுமர்ந்தபடி நமக்காகவே வருகிறது எனதருமை சகோதரர்களே! இன்று என்பது ஒரே ஒரு முறை தான் வருகிறது. வாழ்வில் திரும்ப வருவதே இல்லை எனவே நிகழ்கால நிமிடங்களில் சேவைகள் பல செய்து பயனடையப் போது நீங்கள் மட்டும் என்று நினைக்காதீர்கள். இந்த சமூகமும்தான் என்ற உயர்சிந்தனையின் உயிர் துடிப்பு மிக்க நேரத்தை விரயமாக்கி விடாதீர்கள்.
பணத்தை மட்டும் உயிராக நேசிப்பவன்
இருக்கையில் இறக்கிறான்.
சேவையை உயிர் மூச்சாக நினைப்பவன்
இறக்கையில் இருக்கிறான்.
பணம் என்பது வாழ்க்கைக்கு தேவைதான் அது நமக்கு “எஜமானன்” ஆகிவிட்டால்? நாம் அதற்கு அடிமையாகி விடும் போது சில மனிதர்களிடத்தில் இன்று பாசப்பிணைப்பு குறைந்துவிட்டன என்று என்னும் போது இது ஓர் அவலப்போக்கு ! சொத்து சேராத வரையில் பாசம், அன்பு, தியாகம், சேவை என்பதில் ஒருவருக்கொருவர் போட்டி போட்ட குடும்பத்தில் “பாழாய்ப் போன சொத்து” கொஞ்சம் சேர்க்க வேண்டும் என்று எண்ணிவிட்டால்... உறவினரின் கஷ்டத்தில் அவரின் வீட்டை அடமானம் என்ற பெயரில் கொஞ்சம் பணம் கொடுத்து தன் பெயருக்கு கிரையம் செய்து கொள்வதும் பணம் திருப்பி தந்தால் தருவதாக வாக்குறுதி கொடுப்பதும் (அரசியல்வாதி போல) சில வருடங்கள் கழித்து அவர் தன் வீட்டை பணம் அதிகம் கொடுத்து திருப்பிக் கேட்கும் போது (ஆசை யாரை விட்டது) தர மறுப்பதும் இந்த சமுதாயத்தில் தற்போது நடைமுறையில் அத்தனையும் தலை கீழ்தான் உறவுகள் பேசிய நாக்குகளில் உரிமைகள் என்பது அநீதமாய், அதீத்தமாய் ஒலிக்கத் தொடங்கி பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் மலிந்து விட்டது.
திருமணங்கள் கூட இன்று அழகையும், பணத்தையும் கொண்டே ஒப்பந்தம் செய்யப்படுகின்றன. எனவே தான் நாட்டின் கோட்டிலும், வீட்டின் ப+ட்டிலும் நிலுவையில் தூக்கிலிடப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கின்றன. நல்ல குணங்கள் மட்டுமே மணவறையில் இருந்து மரண அறை முடிய, கடல் அலைகளைப் போல நினைவலைகளில் நீந்திக் கொண்டிருக்கின்றன.
“பணத்தை மட்டுமே நேசிக்கின்றவர்கள்
உறவுகளை வெறும் பொருள்களாக பார்க்கின்றார்கள்”
“இந்த பூமி ஒரு வாடகை வீடு இதில் நாம் பிறருக்கு செய்கின்ற சேவை தான் ப+மிக்கு நாம் தரும் வாடகை” என்ற உயர் சிந்தனை தான் நம்மை சிகரத்தின் சொந்தகாரனாக அழைத்துச் சென்று அமர வைத்து அழகு பார்க்கும். மனித நேயத்தின் திறவுகோல் சேவை செய்வதில் தான் இருக்கிறது. முதியவர்களுக்கு சேவை செய்வது கடமை…இளையவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சேவை செய்வது கருணை...
“கருவறையில் நீ வாழ காற்று உள்ளது
கல்லறையில் நீ வாழ சேவை உள்ளது”
இன்றைய சூழலில் மதங்களைத் தாண்டி மனித நேயம் தழைக்கவும், தளிர்க்கவும் அவசரம், அவசியம் ஆனால் இன்றோ மதங்கள் ஜாதிக் கலவரங்களால் மனித நேயம் கண் முன்னே தூரல் போல ஆங்கங்கே மடிந்து கொண்டிருக்கின்றன. எல்லா மதங்களின் மூல கரு அன்பு –அம்பு அல்ல. ஜாதியின் உயிர் மூச்சு நட்பு – வன்முறையல்ல. பண்பின் வெளிப்பாடு பரந்த மனம், குணம் - குறுகிய சிந்தனையல்ல. இரண்டு இதயங்கள் ஒன்றுபட்டால் இரண்டு மதங்கள் ஒற்றுமை பெறும். மதங்கள் ஒன்றுப்பட்டால் நம் தேசம் நன்றாகும். அது என்றாகும்?
“ ஒரு தாயின் சேய் என்பது தவம் - நம்
தாய் நாட்டின் சேவை என்பது வரம்”.
மனிதர்கள்...
மனித நேயம்...
மனிதாபிமானம் கொண்டு வாழ படைத்தவனிடம் பிரார்த்திப்போமாக…
அன்பின் அலாவுதீன்
anbinala@yahoo.com
அலைபேசி: 09351225454
|