அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்!
முதல் காட்சி. அன்றைய மக்காவில் ஓர் அவை. கோத்திரத் தலைவர்களும், வியாபாரப் பிரமுகர்களும், தனவந்தர்களும், சமூகத்தில் முக்கியமானவர்கள் பலரும் அந்த அவையில் கூடியிருந்தனர்.
கூட்டத்திலிருந்து வலீத் இப்னு முகீரா எழுந்து நின்றார். அனைவரையும் தீர்க்கமாகப் பார்த்தார். அன்றைய அரேபிய மண்ணில் மிகப் பிரபலமான கவிஞர் அவர். கூடியிருந்த அனைவரும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். வலீத் இப்னு முகீரா உரையாற்ற ஆரம்பித்தார்:
“சமுதாயப் பிரமுகர்களே! தனவந்தர்களே! அது நீங்கள் சொல்வதைப்போல் ஒரு கவிதையோ, கற்பனையோ அல்ல. அதை நான் என் இரு காதுகளாலும் கேட்டேன்.”
கூட்டத்தில் சிறு சலசலப்பு. ஒருவர் எழுந்து, “அப்படியென்றால் அது குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார். கேட்டவரின் குரலில் படபடப்பு தெரிந்தது.
வலீத் இப்னு முகீரா மௌனமாக இருந்தார். என்ன சொல்லப்போகிறாரோ என்ற எண்ணத்தில் அனைவரது கண்களும் அவரையே மொய்த்தன. வலீத் மீண்டும் தன் உரையைத் தொடர்ந்தார்:
“அது இனிமையானது. சுவையான தேனைப் போன்றது. உன்னதமான உரைநடை கொண்டது. அதன் மேற்பரப்பு மலையை விட உயரமானது. அதன் அடிப்பரப்பு கடலை விட ஆழமானது. ஆதலால் அது வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும். அதனை வெல்ல யாராலும் முடியாது.”
(நூருல் யகீன், ஹாகிம், பைஹகீ)
ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதுச் செய்தியை எத்தி வைக்க ஆரம்பித்தவுடன், அந்தப் பிரச்சாரத்திற்கு எதிராக கவிதை இயற்ற, அந்தப் பிரச்சாரத்தை முடக்க இறைநிராகரிப்பாளர்கள் முனைந்தார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நபர்தான் வலீத் இப்னு முகீரா. அவரை விட சிறந்த கவிஞர் அன்றைய மக்கா புழுதியில் வேறு எவரும் இருந்திடவில்லை. எனவே அண்ணல் நபிகளாரின் அழகிய பிரச்சாரத்தை முடக்கும் பொறுப்பை அவரிடமே கொடுத்தார்கள் மக்கா காஃபிர்கள்.
வலீத் இப்னு முகீரா நேரடியாக அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களிடம் சென்றார். அவ்வமயம் அண்ணலார் திருக்குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். எதேச்சையாக அதனைக் கேட்க ஆரம்பித்த வலீத் இப்னு முகீரா அதன் இனிமையிலும், கருத்தாழத்திலும் இலயித்துப் போனார். ஒன்றும் பேசாமல் திரும்பி வந்தவர் மக்கா பிரமுகர்களிடம் கூறிய வார்த்தைகள்தாம் நாம் மேலே கண்டவை.
அவர் கூறிய வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். அந்த வாக்குகளிலுள்ள வாய்மை புலப்படும்.
ஆம்! மலையை விட உயரமானதாகவும், கடலை விட ஆழமானதாகவும், சுவையான இனிமையும் கொண்ட அந்த இறைவேதம் வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும்!
காட்சி மாறுகிறது. இப்பொழுது இத்தாலிக்குச் செல்வோம்.
அன்றைய ரோம் நாட்டுச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸ் தன் பிரம்மாண்ட அரசவையில் வீற்றிருக்கிறார். அந்தச் சமயம் கடிதம் ஒன்று அவர் கையில் கொடுக்கப்படுகிறது.
திறந்து படிக்கிறார் மன்னர் ஹெர்குலிஸ். வளவள கொழகொழ வார்த்தைகள் அதில் இல்லை. நறுக்கென்று நான்கு வரிகளே இருந்தன.
“அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்…” என்று துவங்கி, இஸ்லாமை அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுக்கும் சில வார்த்தைகளே அதில் அடங்கியிருந்தன.
கடிதத்தைப் படித்த ஹெர்குலிஸ் சக்கரவர்த்தி அந்த இறைத்தூதரைப் பற்றி தகவல்கள் அறிந்த மக்கா தேசத்தைச் சேர்ந்த யாரும் தமது நாட்டில் இருந்தால் உடனே அழைத்து வருமாறு ஆணை பிறப்பித்தார்.
வியாபாரத்திற்காக ரோம் தேசம் வந்திருந்த அபூஸுஃப்யான் ஹெர்குலிஸ் மன்னர் முன் அழைத்து வரப்பட்டார். அன்று அபூஸுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.
ரோமச் சக்கரவர்த்தி நபி (ஸல்) அவர்களைப் பற்றிய செய்திகளை அபூஸுஃப்யானுடன் சிறிது நேர உரையாடலுக்குப் பின் தெரிந்துகொண்டார். பின்னர் கூறினார்:
“நீங்கள் சொல்வது உண்மை என்றால் எனது கால் பாதங்களுக்குக் கீழ் உள்ள இந்த இடத்தையும் அவர் வெற்றி கொள்வார்!” (புகாரீ)
மீண்டும் காட்சி மாறுகிறது. இப்பொழுது இங்கிலாந்துக்குச் செல்வோம்.
இங்கிலாந்து நாட்டின் 42வது பிரதமராக இருந்தவர் வில்லியம் ஈவார்ட் கிளாட்ஸ்டோன். இவர் 4 முறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்தார். அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்க கொடுங்கால்கள் உலகம் முழுவதும் கொடுங்கோல் புரியப் பரவும்பொழுது எகிப்தில் மட்டும் அது எளிதில் சாத்தியமாகாமல் இருந்தது.
இதனைக் குறித்து 1882ம் ஆண்டு இங்கிலாந்த் பாராளுமன்றத்தில் சூடு பறக்கும் விவாதம் நடந்தது. அப்பொழுது கிளாட்ஸ்டோன் அவரது கையில் உன்னதத் திருக்குர்ஆனை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இவ்வாறு கூறினார்:
“எகிப்து முஸ்லிம்களின் கைகளில் இந்தக் குர்ஆன் இருக்கும் வரை நாம் அவர்களை ஆதிக்கம் செலுத்த முடியாது! ஏனெனில் அவர்களின் வாழ்வும் வாக்கும் குர்ஆனாகவே இருக்கிறது. இந்தக் குர்ஆன் அவர்களை ஆதிக்கச் சக்திகளிடம் அடிபணிய தடை செய்கிறது.”
மக்காவில் வலீத் இப்னு முகீரா “இந்தத் திருக்குர்ஆன் வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும்” என்று கூறும்பொழுது அண்ணலாரும், அவர்களின் அருமைத் தோழர்களும் யாரும் உதவி செய்ய முடியாத நிலையில் இருந்தார்கள்.
ரோமச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸ் “எனது மண்ணையும் இஸ்லாம் வெற்றி கொள்ளும்!” என்று கூறும்பொழுது ஹிஜ்ரி 7ம் ஆண்டு. அவ்வமயம் மதீனாவில் அண்ணலாரும், அவர்களின் அருமைத் தோழர்களும் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு பலம் பெற்றிருந்தார்கள்.
மக்காவில் வலீத் இப்னு முகீரா, ரோமில் ஹெர்குலிஸ் மன்னர், இங்கிலாந்தில் பிரதமர் கிளாட்ஸ்டோன்… இவர்கள் அனைவரும் கூறியது ஒரே கருத்துதான்.
ஆம்! திருக்குர்ஆன் வெற்றியடைந்தே தீரும். வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும். அதனைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களை யாராலும் வெல்ல முடியாது.
அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் இன்று இஸ்லாத்தைக் கண்டு பயப்படுவதற்கு இதுதான் காரணம்.
திருக்குர்ஆனின் மகத்துவத்தை அறிந்த பிறகும் இஸ்லாமிய எதிரிகள் அதனை அணைத்துவிட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்கள். மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்கள் ஏன் திருக்குர்ஆனைக் கண்டு அஞ்சுகிறார்கள்? அதில் உள்ளது போன்றோ, அல்லது அதைவிட மேலான ஒரு வசனத்தை உருவாக்கியோ அவர்கள் இந்தக் குர்ஆனை வென்று காட்ட வேண்டியதுதானே! ஏன் இந்த நவீன விஞ்ஞான உலகில் இது சாத்தியமாகாமல் போகிறது?
அவர்கள் முயற்சி செய்யாமலில்லை. மாந்தர்களுக்கு நன்மை செய்யும் என்று எண்ணி அவர்கள் உருவாக்கிய பல இஸங்களும், பல கொள்கைகளும் இன்று தோல்வியைத் தழுவி நிற்கின்றன. இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று விழி பிதுங்கி நிற்கும் அவர்களைப் பார்த்து திருக்குர்ஆன் சவால் விடுகின்றது.
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்தச் சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (சூரா அல் பகரா 2:23)
திருக்குர்ஆனுக்கு எதிராக ஒரு வசனத்தைக் கூட உருவாக்க முடியாமல் தோல்வியைத் தழுவியவர்கள் அடுத்த முடிவுக்கு வந்தார்கள். அதுதான் அந்தத் திருக்குர்ஆனைப் பின்பற்றும் முஸ்லிம்களை அழிவுக்கு உள்ளாக்குவது.
இப்படிச் செய்து திருக்குர்ஆனுடைய ஒளியை ஊதி அணைத்து விடலாம் என்று இவர்கள் எண்ணுகிறார்கள்.
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (சூரா ஸஃப் 61:8)
திருக்குர்ஆனின் ஒளியை அணைந்து விடாமல் பாதுகாப்பது நம் மீதும் கடமையாக இருக்கிறது. அந்தத் திருக்குர்ஆனோடு நமது தொடர்பு எவ்வாறு இருக்கிறது?
சிந்திக்க வேண்டிய கேள்வி இது. இந்தத் திருக்குர்ஆனை யார் யாரெல்லாமோ வாசிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள், உடனே இஸ்லாமைத் தழுவுகிறார்கள். நமக்கு என்ன நேர்ந்தது?
திருக்குர்ஆன் குறித்து நமக்கு ஆறு கடமைகள் உள்ளன. அவையாவன:
1. முழுமையாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.
2. தினமும் பொருளறிந்து ஓத வேண்டும்.
3. சிந்திக்கவேண்டும்.
4. ஆராயவேண்டும்.
5. பின்பற்றவேண்டும்.
6. பிறருக்கு எடுத்து வைக்கவேண்டும்.
இந்தக் கடமைகளை நம்மில் எத்தனை பேர் நிறைவேற்றுகிறோம்? நம்மை நாமே கேள்வி கேட்டு திருக்குர்ஆனோடு நம் தொடர்புகளை வலுப்படுத்துவோம். வெற்றி பெறுவோம். |