அமெரிக்காவில் AT&T நிறுவனத்தில் பணியாற்றி வந்த சூசன் என்பவர், இஸ்லாத்தை தழுவி ‘ஹிஜாபுடன்’ பணிக்கு வரத் தொடங்கிய போது மதப் பாகுபாட்டுத் தொல்லைகள் (religious discrimination) சக பணியாளர்கள் மூலம் வர ஆரம்பித்தது. இதனை அவர் ‘Equal Employment Opportunity (EEOC)’ கமிசனிடம் முறையீடு செய்ததை அறிந்த சூசனின் மேலதிகாரி, ஆத்திரத்துடன் அவருடைய ஹிஜாபை பிடித்திழுத்தார். அவ்வளவுதான்… ஈமானில் உறுதி பூண்ட பெண் சிங்கம் அசூர பலம் கொண்டு அந்நிறுவனத்தை நோக்கி கர்ஜிக்கத் தொடங்கிற்று!!
நீதிமன்ற முறையீடு செய்ததில், அந்நிறுவனம் அவர் இழந்த வேலை மற்றும் தண்டனைத் (Punitive) தொகையாக 6.4 மில்லியன் டாலர் தர வேண்டும் என்ற தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது. ஈமானின் உறுதியால் எதிர்நீச்சல் போட்டு வந்த சூசன் பஷீர் போன்றவர்களை எண்ணி பெருமைபட்டுக் கொள்ளும் அதே வேளையில், கலாச்சார பாரம்பரியமிக்கதாக முஸ்லிமல்லாத சமூகத்தாலும் அறியப்பட்ட (மதிக்கப்படுகின்ற), கனிசமான பிறவி முஸ்லிம்கள் வாழும் நமது ஊரில் / நாட்டில்
'ஹிஜாபின்' நிலை என்ன என்பதனை நாம் சிந்திக்க வேண்டும்.
ஷாப்பிங்-க்காக வெளியூர் பயணம் செல்பவர்கள், கல்லூரி படிப்பு மற்றும் வேலைக்காக நகரங்களில் தங்கி வசிப்பவர்கள் சினிமா / நகரத்து கலாச்சார மோகம் மற்றும் அதீத கல்வி / வேலையே பெற்று விட்டதாக எண்ணி... “நாம் எப்படி உடையணிந்தாலும் யாருக்கு அது தெரிய போகின்றது... யார் கண்காணிக்கப் போகிறார்கள் அல்லது நவீன காலத்தில் இதெல்லாம் சகஜம்தானே?” என்று, பெற்றோர்கள் / கணவர்கள் தன்னை
'நம்பி' தந்த சுதந்திரத்தை தனிமையை தனக்கு சாதகமாக்கி ஹிஜாபை கல்லூரிகளிலும், பணி / பொது இடங்களிலும் துறந்திருக்கின்ற நிலை.
எதற்காக ஹிஜாபை அணிகின்றோம்? இளம் பிராயத்திலேயே பிள்ளைகளை அணிய சொல்லுகின்றோம் என்பதனை உணர்த்தாத பெற்றோர், படைத்தவனின் உன்னத வலியுறுத்தலை, ஹிஜாப் தரும் சுய பாதுகாப்பை உணராது... இன்று அதனை வெறும் மார்க்கக் கடமையாக (உடலை மட்டும் மறைத்து மனதைக் காற்றில் பறக்க விட்டு), நவீன கலாச்சாரத்தின் பேஷனாக (பல டிசைன்களில்) வடிவமைத்து அணிந்து வருகின்றனர்.
அதிகம் படித்து வேலைக்கு போகின்றவர்கள் (குறிப்பாக உருது / நகரத்து மக்கள்) ஹிஜாபை பொது மற்றும் பணியிடத்திலும் பின்பற்றாததற்குக் காரணமாக கூறுவது,
'வீட்டு பெரியவர்கள் ஹிஜாப் அணிந்தாலும் இளம் பருவத்தினரை ஹிஜாப் அணிவதற்கு கட்டாய - பழக்கப் படுத்தவில்லை' என்பார்கள். தான் அணியும் ஹிஜாபை பிள்ளைகளிடமும் பழக்க படுத்த தவறிய பெற்றோரையும், 'ஹிஜாப் - வயதான காலத்தில் மட்டும்’ என்று எண்ணும் படித்த (?) சமுதாயத்தையும் தான் குறை சொல்ல வேண்டும்.
வேலைக்காக அல்லது கணவர்களின் விசாவில் வெளிநாடுகளுக்கு வரும்
‘மேற்கூறியவர்களின்’ ஹிஜாபின் நிலை, ஒன்றிரண்டு நாட்கள் ஹிஜாப் அணிந்து விட்டு இது இந்நாட்டு கலாச்சாரத்துக்கு ஒவ்வாதது அல்லது ஹிஜாப் பற்றிய குர்ஆனின்
அத்தியாயங்கள் 'தலையை மறைப்பதை' கட்டாயபடுத்த வில்லை என்று ஒரு சிலரின் வாதங்களை அடிப்படையாக வைத்து… தொழுகையில் மட்டும் ஹிஜாபை பேணி, மறுகணமே டைட் ஜீன்ஸ் டி-ஷர்ட்ஸ் பறக்கும் கூந்தல் என்று மாறிவிடுவதை மேலைநாடுகளில் காணலாம்.
‘Get –together’ பொது நிகழ்ச்சிகளின் போது, எங்கே தனது விலையுயர்ந்த பகட்டான ஆடை உடல் அலங்காரத்தை பிறர் கண்டு மெச்ச அல்லது போட்டோ-க்களை ஃபேஷ்புக்கில் போட்டு பிறர் கமன்ட் எழுத வேண்டும் என்பதற்க்காக கூட, ஹிஜாபை துறக்கும் சில ஓதி படித்தவர்களும் இருக்கின்றார்கள்.
கலாச்சார பாரம்பரியமிக்க தனது ஊரில் / நாட்டில் கட்டுக் கோப்புடன் வாழ்ந்து விட்டு வெளியூர் மேலைநாடுகள் சென்றவுடன் கலாச்சார மற்றும் இட சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக்கி நம்மவர்களே முறையாக பேணாதிருக்கும்போது... இஸ்லாத்தின் வாசனையே அறியாத ‘ஹிஜாப் அணிபவர்களை பழமைவாதிகள்’ என்று விமர்சிக்கும் மேலைநாட்டினர் மாற்று மதத்தவர்களை மட்டும் குறைகூறி என்ன பயன்?
முஸ்லிம்கள் மிக குறைவாக வாழும் ஊருக்கோ / தேசத்துக்கோ செல்லும்போது... ஹிஜாப் அணிந்து சென்றால், வகுப்பில் - அலுவலகங்களில் - பொது இடங்களில் வித்தியாசமாக பார்ப்பார்களோ...? அச்சுறுத்துவார்களோ...? தனிமைபடுத்தப்
படுவோமோ...? என்று எண்ணுவது இயல்பு. ஆனால் பெரும்பாலான நாடுகளில்
பணியிடத்தில் - பொது இடங்களில் தனி நபருடைய உடை மார்க்க வழிபாடு விசயத்தில்
தலையிட எவருக்கும் உரிமை கிடையாது. எவ்வித மத - மொழி மற்றும் இன வேறுபாட்டிற்கு இடமே இல்லை. மாறாக அதனை மதிக்கத்தான் வற்புறுத்துகின்றது
.
உதாரணத்துக்கு, அமெரிக்க நாட்டு சட்டப்படி (According to the Civil Rights Act of 1964, it is illegal for public establishments to deny service based on someone's
race, color, religion, sex, or national origin) என்று பொது இடங்களில் கூட மத
இன பேதமை கூடாதென்றுதான் கூறுகின்றது. இதற்க்கு விதிவிலக்காக ஒரு சில நாடுகள் (பிரான்ஸ்) இருக்கலாம்.
இஸ்லாம் - உடலுக்கு & மார்க்கத்திற்க்கு புறம்பான எண்ணங்களுக்கு திரையிட சொன்னதே தவிர, அறிவிற்கு தனி மனித ஆற்றலுக்கு திரையிட சொல்லவில்லை. 2008-ன் ஒலிம்பிக்கின் போது வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்தபடியே பங்கெடுத்தார்கள்.
ஹிஜாப் அவர்களின் வெற்றியை துளி அளவும் தடுக்கவில்லை. பளு தூக்கும் போட்டிகளில் ஹிஜாப் அணிந்து பங்கேற்க 'IWF' அனுமதி வழங்கியுள்ளது. ஹிஜாப் அணிந்து கால்பந்து விளையாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து 'ஃபீஃபா' மறுபரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளது.
இரட்டை கோபுரங்களின் தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்காவிலே ஹிஜாப் அணியும் பெண்களுக்கு சோதனைகள் பல வந்தது. அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றித்தான் இஸ்லாம் வேகமாக பரவி வருகின்றது.
‘உங்கள் அறிவுக்கும் (ஹிஜாப்) ஆடைக்கும் தொடர்பில்லையே?’ என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவரான தவக்குல் கர்மன், ‘நான் இன்றைக்கு யார், என்ன உடுத்தியிருக்கின்றேன் என்பது மனிதன் எத்தனை உயரம் அறிவிலும் நாகரித்திலும் உயர்ந்திருக்கிறான் முன்னேறியிருக்கிறான் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே தவிர பின்னேற்றத்துக்கு அல்ல’
என்றார்.
மேற்கத்திய கலாச்சார நாட்டிலே பிறந்து வாழ்ந்து வரும் ஸ்வீடனின் பெண் காவலதிகாரி ‘டோன்னா எல்ஜம்மால்’ போன்றவர்கள் கூட ஹிஜாபை முழுமையான விருப்பத்துடன் அதனை பணி இடங்களிலும் நடைமுறை படுத்தும் போது, பிறவி முஸ்லிம்களாகிய நமக்கு மட்டும் ஏன் அவ்வளவு கடினமாக தோன்றுகிறது? பலவீனப்பட்டு வரும் நமது இஸ்லாமிய சிந்தனையும், வாழ்வியலும், ‘காம்ப்ரமைஸ்’ என்ற தேவையற்ற மனபோக்கும்தான் அதற்குக் காரணம்.
(நபியே!) உம்முடைய மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும் முஃமின்களின் பெண்களுக்கும், அவர்கள் தலை முந்தானைகளை இறக்கிக் கொள்ளும்படியும் நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாமல் இருக்க இது எளிய வழியாகும். அல்லாஹ் மன்னிப்பவன் கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 33:59)
நமது சமுதாயம் (ஆண்களும் பெண்களும்) நன்கு படித்து தலையெடுக்க ஆரம்பித்து
விட்டனர். வேலை மற்றும் கல்லூரிக்காக வெளியூர் மற்றும் மேலைநாடுகளில் மனைவி
-மக்களுடன் செட்டில் ஆகும் சூழ்நிலை 'இன்னும் அதிகம்' வருங்காலங்களில் ஏற்படும்.
பெண்கள் அதிகம் படித்த சமுதாயித்தினராக மாறும் போது, ஹிஜாபை அறியாமையினால் ‘மேற்க்கூறியவர்களை’ போன்று புறக்கணிக்கும் அலட்ச்சியபடுத்தும் அவல நிலைகள் ஏற்படுவதட்க்கு முன்… பெற்றோர்களும் சமுதாயத்தினர்களும் இதன் அவசியத்தை பாதுகாப்பை நம் இளைய தலைமுறையினருக்கு ‘தொடர்ந்து’ வலியுறத்தி, அதனை முறையாக முழுமையாக ‘எவ்விடத்திலும்’ நடைமுறை படுத்தும்போது தான்… ஒரு சில நாடுகள் துவேசிகள் அதற்க்கு விதித்துள்ள தடைகளும் & ஹிஜாப் என்றால் ஒரு ‘பிற்போக்குத்தனம் / அடிமைத்தனம்’ என்ற மாயை முற்றிலுமாக ஒழியும் !!
|