அல்லாஹ்விற்கு விருப்பமானது இறை இல்லங்கள் . உலகில் இறை இல்லங்களாகிய பள்ளிவாசல்களைவிட மேன்மையானது, தூய்மையானது , அமைதியானது வேறு எதுவும் இல்லை.
இறை இல்லங்களில் உலக விசயங்களை பற்றி பேசாதிருப்பதும் , அதை எப்போதும் தூய்மையாய் வைத்திருப்பதும் , அதற்கு அதிக கண்ணியம் கொடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும்.
அதை போன்று இறை இல்லங்களில் பணிபுரிகின்ற இமாம்களையும் , முஅத்தின்களையும் மற்றும் இறை இல்லத்தையும் அதன் சுற்றுப் புறத்தை சுத்தம் செய்பவர்களையும் நாம் கண்ணியப்படுத்துவதும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதும் நம் மீது கடமையாகும். ஆனால் இந்த கடமையை நாம் முறையாக செய்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
முப்பது வருடத்திற்கு முன்பு ஓர் இமாம் 250 ரூபாய் , ஒரு முஅத்'தின் 150 ரூபாய் சம்பளம் வாங்கினார்கள் என்றாலும் பிள்ளைகளுக்கு "ஓதி" கொடுப்பது முதல் கோழி அறுப்பது மற்றும் சில, சில மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துவதில் சைடு வருமானங்கள் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. அன்றைய சூழ்நிலையில் அந்த வருமானம் பற்றாக்குறைதான் என்றாலும்கூட ஏதோ அவர்கள் வாழ்க்கை அல்ஹம்துலில்லாஹ்! என்று ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் இன்று அவர்கள் 6000 ரூபாய் 5000 ரூபாய் என்று சம்பளம் வாங்கினாலும் கூட இன்றைய விலைவாசியில் , கால சூழலில் அவர்கள் குடும்பத்தை கவனிப்பார்களா , நோய் நொடியை கவனிப்பார்களா என்பது புரியாத புதிராகவே உள்ளது. மேலும் அன்று போல் இன்று அவர்கள் மக்களுக்கு ஓதிக் கொடுப்பதோ , கோழி அறுப்பதோ இல்லை என்பதல்லாமல் வேறு எந்தவித மேலதிகமான சைடு வருமானமும் அவ்வளவாக இல்லை என்பது தெளிவாகிறது.
அவர்கள் , குடும்ப செலவுக்கும் நோய்க்கு பரிகாரம் பார்க்கவும் போதிய வருமானம் இல்லாத இந்த சூழலில் அவர்களுடைய குமர்களை கரை சேர்க்கவோ , அவர்களுடைய ஆண் மக்களை உயர்கல்விகள் / தொழிற்சார்ந்த கல்விகள் கற்க வைப்பதற்கோ அல்லது இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள அவர்களுடைய வீட்டை புதிதாக கட்டவோ , பழுது பார்க்கவோ என்ன செய்வார்கள் - யாரிடம் போய் கேட்பார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இறை இல்லத்தில் பணி செய்பவர்களில் சிலர் வேண்டுமானால் நல்ல நிலையில் இருக்கலாம் ஆனால் பலர் மிகவும் கஷ்டத்தில்தான் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்களிலே சிலர் வாய் திறந்து சொல்கின்றனர் - மற்றவர்கள் வாய்மூடி மௌனியாக இருக்கின்றனர். அவர்களுடைய ஆண் மக்களின் மேற்படிப்பிற்காக வேண்டியும், பழுதுபட்டிருக்கும் வீட்டை பழுது பார்பதற்காக வேண்டியும் அவர்கள் பல அமைப்புகளையும் , பல ஜமாஅத்' களையும் அணுகி, கூனி குறுகி நின்று கிடைத்தை பெற்று மற்றதுக்கு தெரிந்தவர்களிடமும் , பைத்துல் மாலிலும் கடன் பெற்று அதையும் சரிவர அடைக்க முடியாமல் சிரமம்படுவதை காண முடிகிறது.
இந்நிலை மாறவேண்டும் அதற்கு அந்தந்த ஜமாஅத்'தை , பள்ளிவாசல்களை சார்ந்தவர்களே பொறுப்பேற்க வேண்டும். இப்படி பொறுப்பேற்று அவர்களுக்கு உதவிடுவதில் சிரமம் இருப்பதாக தெரியவில்லை. அன்று பணம் சிலரிடம் மட்டுமே குவிந்து இருந்தது அதனால் உதவிகளை செய்ய எல்லோராலும் முடியவில்லை - பணம் குவிந்துள்ள சிலரிலும் மிகச் சிலரே உதவிகளை செய்தனர்.
ஆனால் இன்றோ பணம் என்பது மாஷா அல்லாஹ்! பரவலாக எல்லோரிடமும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை நல்ல வழியில் செலவு செய்யதான் " மனம் " இருப்பதில்லை அல்லது வழி தெரியவில்லை என்றே சொல்லலாம்.
அன்று ஏதாவது ஒரு நல்ல விசயத்திற்காக வசூல் செய்வதற்கு ஒரு கமிட்டியை ஏற்படுத்துவது சுலபமாக இருந்தது - ஆனால் பணம் உள்ளவர்களிடம் பணம் வசூல் செய்வதில்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் இன்று அது தலைகீழ் , கமிட்டி , கிமிட்டியில் எல்லாம் என்னை போட வேண்டாம், அது நமக்கு சரிபட்டு வராது வெளியூர் போகப்போகிறேன் , என்னால் முடிந்ததை தருகிறேன் என்று சொல்லி நாம் அவரிடம் எதிர்பார்ப்பதை விட கொஞ்சம் கூடுதலாகவே தந்து விட்டு நகன்று விடுவர். அதனால் வசூலுக்காக கமிட்டியை ஏற்படுத்துவது என்பது சிரமம் ஆனால் கமிட்டியை உண்டாக்கிவிட்டால் வசூல் செய்வது எளிது.
இன்றையக் காலகட்டத்தில் நம்ம ஊரைப் பொறுத்தவரை எந்த ஒரு பள்ளி வாசலும் / ஜமாஅத்'தும் ஏழ்மையானது என்று சொல்வதற்கில்லை. பள்ளியில் தொழுவதற்கு வரக்கூடியக் கூட்டம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம் - மற்றபடி எல்லா ஜமாஅத்'தினர்களும் அல்லாஹ் உதவியால் வசதியுள்ளவர்களாகவே உள்ளனர்.
அதனால் ஒவ்வொரு ஜமாஅத்'தவர்களும் அவரவர் பகுதியில் உள்ள ஏழ்மையானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவுவதே சிறந்தது. அதிலும் குறிப்பாக இறைவனின் இல்லத்தில் பணி புரிபவர்களை தயவு செய்து ஜமாஅத்'துக்கு வெளியே சென்று உதவி தேடி தவிக்க விடுவதை தடுத்து, அவர்களிடம் நாலுபேர் வசைப்பாடுவதை தவிர்த்து அந்தந்த ஜமாஅத்'தவர்களே உதவுவது மிகவும் சிறந்த செயலாகும்.
பள்ளிவாசல்களில் பணி புரிபவர்களைப் பற்றிய முழுவிவரமும் அந்தந்த பள்ளிவாசல்களைச் சார்ந்தவர்களுக்கே நன்றாக தெரியும். அதனால் அவர்களின் உண்மையான தேவையை அறிந்து அந்த தேவைக்கு மட்டும் வேண்டியதை அந்தந்த ஜமாஅத்'தில் வசூல் செய்து கொடுப்பது நல்லது.
மேலும் ஊருக்கு உபதேசம் செய்பவர்களும் , தங்களுக்குத்தான் மார்க்கம் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது அவர்களெல்லாம் தவறான வழியில் நடப்பவர்கள் என்றும் நினைத்து, தங்களையே தாங்கள் மேன்மையாக்கிக் கொண்டு திரிபவர்களும் நம்மிலே பலர் இருக்கின்றனர் அவர்கள் எல்லாம் தங்களுடையப் பள்ளிவாசல்களிலே பணி புரிபவர்களை நோட்டமிட வேண்டும் - அப்போதுதான் இறை இல்லத்தில் பணி புரிபவர்களின் கஷ்ட நிலை என்னவென்று அவர்களுக்கு தெரியும்.
அல்லாஹ்வுக்கு பிடித்தமானது இறை இல்லம் - ஷைத்தானுக்கு பிடித்தமானது கடைவீதி என்று வாய்க்கிழிய பிரச்சாரம் பண்ணக் கூடியவர்களும் சிந்திக்க வேண்டும் , தங்களுடைய ஜமாஅத்' தை சார்ந்த பள்ளிவாசல்களில் பணிபுரிபவர்களின் நிலை என்ன அவர்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வது நம்முடைய ஜமாஅத்'தவர்களின் கடமையா ? இல்லையா ? பள்ளிவாசல்களிலே தொழ வருபவர்களுக்கு அந்த ஏழ்மையானவர்களின் நிலை தெரியாதா , அந்த ஏழ்மையை போக்க வழி பண்ணக்கூடாதா ? ஊருக்குத்தான் உபதேசமா , உங்களுக்கு அதை செயல்படுத்த இயலாதா என்பதை எல்லாம் சிந்தித்தால் செயலாற்றலாம்.
இறை இல்லத்தில் பணிபுரிபவர்களின் நிலையை இதுநாள்வரை அறியாமல் இருந்திருந்தால் இன்று முதலாவது அவர்களில் கஷ்டபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மிகவும் அவசியமான உதவிகளை செய்ய ஆயத்தமாகுங்கள்.
ஒவ்வொரு முறையும் ஸஃபரிலிருந்து வரும்போது அவர்களுக்கு ஏதோ உங்களால் இயன்றதை கொடுத்து அவர்களை கையேந்தியே வாழ வேண்டிய நிலைக்கு ஆளாக்காமல் , உண்மையான தேவையை அறிந்து , தேவைக்கு கொடுத்து அவர்களின் வாழ்வை சீராக்க, அவர்களின் ஆண் மக்களை படிக்க வைத்து முன்னேற்றமடைய செய்ய , அவர்களில் எவருக்கேனும் வீடு விழக்கூடிய நிலையிலே இருந்தால் புதிதாக கட்டியோ , மராமத்து செய்தோ கொடுத்து உதவிட அந்தந்த ஜமாஅத்'தை சார்ந்தவர்கள் முயற்சி செய்ய வேண்டும் - அப்படி செய்தால்தான் முழுமையான பயனை அவர்கள் பெறுவார்கள்.
முஅத்தினுக்கு வேலை, " பாங்கு , இகாமத் சொல்வது - இமாம் வராதபோது இமாமத் செய்வது " இதுவாகத்தான் இருக்க வேண்டும் . ஆனால் அவர் அதை மட்டுமா செய்கிறார் - பள்ளிவாசலைக் கூட்டுவது , தூசியைத் தட்டுவது என்று அணைத்து பணிகளையும் செய்யத்தான் செய்கிறார்கள் இன்னும் ஒரு படி மேலே சொல்லவேண்டுமானால் ஒருசிலர் , ஒருசில பள்ளிகளிலே மூத்திரக்குழியையும்கூட துப்புரவு செய்கிறார்கள். முந்திய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுமிடங்கள் எல்லாம் மிகப் பெரியதாக இல்லாமல் அளவோடுதான் இருக்கும் - மற்றபடி வராண்டாக்கள்தான் பெரிய அளவில் இருக்கும் - பெருநாள் தொழுகைக்கும் , தராவீஹ் தொழுவதற்கும் மேலும் மார்க்க நிகழ்ச்சிகள் , உபநியாசங்களுக்காகவும் இடங்கள் பெரியதாக விடப்பட்டிருக்கும்.
மேலும் அன்றையக் காலத்தில் பள்ளிவாசல்களை பெருக்கி சுத்தம் செய்வது முஅத்'தின் மட்டுமல்லாமல் நம்முடைய முன்னோர்களான பெரியவர்களும் பெருக்கி சுத்தம் செய்தார்கள் - அவர்கள் ஆலிம்களாக , ஹாஜியார்களாக மட்டுமல்ல பணக்காரர்களாக இருந்தாலும் சரி அவர்கள் கெளரவம் பார்க்கவில்லை. இறை இல்லம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அவர்களிடம் மேலோங்கி இருந்தது. இன்று அந்த மாதிரி யாராவது பள்ளிவாசல்களை சுத்தம் செய்கிறோமா - இல்லை என்றே நினைக்கிறேன். மேலும் இன்று ஒவ்வொரு பள்ளிவாசல்களும் விரிவாக்கப்பட்டு வருகிறது , அந்த விரிவாக்கத்திற்கு தக்கப்படி மக்கள் அதிகமாக தொழ வருகிறார்களா என்றால் மிகுதியான பள்ளிவாசல்களில் இல்லை என்றே சொல்லலாம். பள்ளிவாசல்கள் விரிவாக்கத்தினால் துப்புரவு வேலைகள் அதிகரித்து இருக்கிறது முஅத்'தின் உடைய பொறுப்பும் கூடுகிறது என்பதையும் ஜமாஅத்'தார்கள் உணர வேண்டும்.
ஆக மொத்தம் ஊரிலே உள்ள இறை இல்லங்களில் பரவலாக இந்த நிலை இருக்கிறது இதில் கொள்கை வேறுபாடு இல்லை எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் இருக்கிறார்கள். மார்க்க விசயத்தில் கொள்கை வேறுபாடு உண்டே தவிர இறை இல்லப் பணியாளர்களை கவனிப்பதில் எல்லோரும் - பெரும்பாலும் ஒரே கொள்கையாகத்தான் இருக்கிறார்கள் இதில் கருத்து வேறுபாடுகூட கிடையாது - ஏனென்றால் இது பணம் சம்பந்தப்பட்ட விசயம் அல்லவா!
ஆகையினால் இதை படிப்பவர்கள் படித்துவிட்டு சும்மா இருந்துவிடாமல் அவரவர் ஜமாஅத்'தவர்களுக்கு நினைவூட்டி இறை இல்லப் பணியாளர்களின் வாழ்வை ஒளிரச்செய்யுங்கள் - இறை இல்லமும் ஒளிரும் - மக்களின் மனமும் குளிரும். |