கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்யைத் தேடி அலைவது மனிதனின் இயல்பு. மாற்றான் தோட்டத்து மல்லிகை தான் மணக்கும் என்பது காலவிதி! இக் கட்டுரை உள்ளூர்வாசிகளுக்குப் புதுமையாகத் தோன்றாது! எனினும், கடல்கடந்து வாழும் காயலர்களுக்கு ஓர் மலரும் நினைவாகவும், வெளியூர் நண்பர்களுக்கு ஓர் அறிமுகமாகவும் அமையட்டும் எனும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
- ஹிஜாஸ் மைந்தன்.
|
நொறுங்கத்தின்றால் நூறு வயசு என்பார்கள். அதாவது சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்பதல்ல இதற்குப் பொருள். உண்ணும் உணவை நன்றாக சவைத்து (நொறுங்க)ச் சாப்பிட்டால் அது ஜீரன சக்திக்குப் பெரிதும் உதவுவதோடு அதன் சத்துக்கள் நம் உடலில் நன்றாகப் போய்ச் சேரும் என்பதுதான் இதற்கு அர்த்தம். நாம் உண்னும் உணவுகளில் சுவைகளைக் கூட்டுவதற்காக மனிதன் பல வழிகளைக் கையாண்டு பல்சுவை பதார்த்தங்களை உலகிற்கு இன்றளவும் அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றான். பொதுவாக யாராக இருந்தாலும் தம் சொந்த ஊர் உணவைத்தான் பெரிதாகக் கருதுவர். கடல் கடந்து வாழும் இடத்தில் கூட பல உணவகங்களை நிறுவி தம் பாரம்பரிய உணவுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து உண்டு மகிழ்கின்றனர். தம் சொந்த மண்ணில் ரசித்துப் புசித்த அனைத்து வகை உணவுகளையும் வந்த மண்ணில் வாங்கி உண்பதற்கு அவர்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. நண்பர்களின் ஒன்றுகூடல், இன்பச்சுற்றுலா, வீட்டு விஷேச வைபவங்கள் என பல் வேறு நிகழ்வுகளிலும் பாரம்பரிய உணவுக்கே முதலிடம்.
சரித்திரப் புகழ் வாய்ந்த நம் காயல்பதியும் இதற்கு விதி விலக்கல்ல! நமதூருகென்றே பல வகைவகையான அருசுவை உணவுகள் இருந்த போதிலும் காயலின் களறி சாப்பாட்டுக்கு நிகர் வேறெதுவுமில்லை எனலாம். காயலின் பாரம்பரிய உணவுகள் எனும் தலைப்பில் ஒரு கட்டுரையே எழுதலாம் அந்த அளவிற்கு மணம், சுவை நிறம் கொண்ட ஏராளமான உணவு வகைகள் இன்றளவும் நம் காயலின் வீடுகளில் கமகமக்கின்றது. காலை பத்து முதல் பன்னிரெண்டு மணிவரை வீடுகளில் இருந்து வரும் விதவிதமான சமையல் வாசனையை வீதிகளில் உணரமுடியும். குக்கர் சத்தமும், தாளிப்பு வாடையும் பக்கத்து வீட்டில் என்ன சமையல் என்பதைக் காட்டிக் கொடுத்து விடும். இத்தனை சுவைமிக்க உணவுகள் இருந்தும் திருமண விருந்தில் களறிச் சாப்பாடு (கறியும் சோறும்) என்றால் உயர் இரத்த அழுத்தத்தை (பிர்ஷர்) கூட பொருட்படுத்தாமல் போய் உண்டு மகிழ்ந்து தினத்தந்தி பேப்பரில் கை துடைத்து கசக்கியெறியாமல் வருவதில்லை!
பொதுவாக முஸ்லிம் சமுதாயத் திருமணங்கள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். வெறும் சடங்கு சம்பிரதாயத்தில் மட்டுமின்றி திருமண விருந்தில் கூட வேறுபாடுகளைக் காணலாம் .பிரியாணியிலேயே பல விதங்கள், ஆம்பூர், ஹைதராபாத், தலைப்பாக்கட்டு பிரியாணி என அடுக்கிக் கொண்டேபோகலாம். பல ஊர்களில் குஸ்க்கா, தால்ச்சா (முள் சாம்பார்) போன்ற அசைவ உணவுகள் பரிமாறப் படுவதும் இயல்பான ஒன்றே! எனவேதாம் இஸ்லாமியர்களின் திருமண விருந்து என்றாலே உணவுப் பந்திகள் களைகட்டும்! இதில் எல்லா ஊர்களை விடவும் நம் காயல்பட்டணத்தின் களறிச் சோறுக்குதான் மவுசு அதிகம்.
இஞ்சி, பூண்டு, தயிர், பாதம், பிஸ்த்தா, பட்டைக்கருவா, ஏலம், கசக்கசா என்று அரைத்த விழுதுகளுடன் நன்றாக வேகவைத்த ஆட்டிறைச்சியை சுண்ட வற்ற வைத்து நெய் கோர்த்துக் கொண்டு சிவந்த நிறத்திலும் அத்துடன் கத்திரிக்காய், மாங்காய் எனும் கட்டியான பருப்பும் காயலருக்கே உரித்தான ஸ்டைலில் கம,கமக்கும் புளியாணம் ரஸமும், வெறுஞ்சோற்றுடன் பரிமாறப்படும்.
பிளாஸ்டிக் கப்புகளின் (டிஸ்போஸபுள்) வருகைக்கு முன்புவரை மண் சிட்டிகளில் தான்,கறி, பருப்பு, ரஸமும், மண் களையங்களில் குடிநீரும் பரிமாறி வந்தனர். சஹன் எனும் பரந்த தட்டுக்களில் அவைகளை வைத்து இருவருக்கு ஒரு ஸஹன் என்று உண்மையான சமபந்தி உணவு முறையக் கையாளுவதோடு ஏழை முதல் பெரும் கோடீஸ்வரர்கள் வரை பந்தலில் விரிக்கப்பட்ட பனை ஓலையால் நெய்த பாய்களில் தான் அமர்ந்தே ஆக வேண்டும்.
காலத்தின் சுழற்சிக்கேற்ப நாகரீக உலகில் ப்ஃபே, கஃபே என டேபிள் சேர் போட்டு உபசரித்தாலும் நமதூர் களறி சாப்பாட்டின் மகிமையேத் தனி! அதன் மணமும், சுவையும், பார்த்தமாத்திரத்திலேயே நாவில் எச்சில் ஊறும்! பாரம்பரியமான இந்த உணவுப் பழக்கமும், உபசரிக்கும் விதமும், பந்தி விளம்பும் முறையும் இன்றளவும் புதுமைதான்! கல்யாண வீடுகளில் விருந்துக்கு முதல்நாள் இரவிலேயே செம்மறி ஆடுகள் அணிவகுத்து அழைத்துவரப்பட்டு வெட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். ஆடு அறுப்பதைக் காண கொட்டாக் கொட்ட கண்விழித்திருக்கும் குட்டீஸ்கள். வெறும் ப்ளைன் டீயைக் குடித்துக் கொண்டு தலைப்பாகையுடன் அங்குமிங்கும் உலவும் சில பொறுப்புள்ள பெரிசுகள். இஞ்சிப்பூண்டுக்கு தோலுரிக்கும் ஒரு கூட்டம், வெங்காயம், தக்களி, புதினா, மல்லி, மாங்காய், கத்திரிக்காய் எனக் காய்கறிகளை அரிந்து பீடி வாசனையோடு விறகுப் புகை மண்டலத்தில் விறுவிறுப்பாக செயல்படும் மறு கூட்டம்.
நள்ளிரவில் ட்யூப் லைட் வெளிச்சத்தில் களைக்கம்புகளைக் குறுக்காகக் கட்டி ஆடுகளை அறுத்து தொங்க விடப்படும். அறுப்பவர்க்கு பல்குத்தி (சுவரொட்டி) இலவசம். வீட்டுச் சொந்தக்காரர், தெருவழிக்காரர் ஒன்றிரண்டு ஆடுகளை முதலில் அறுப்பதும் அதன் பின்னர் வரிசையாக அறுக்கப்பட்டு தோல் உரித்துக் கறியை வெட்டிக் குவித்து கடவாபெட்டி, தண்ணீர் டப்பாக்களில் அள்ளிச் சென்று கயிற்றுக்கட்டிலில் பரப்பி தண்ணீர் ஊற்றிக்கழுவி சுத்தம் செய்து பெரிய பெரிய சட்டிகளில் தாளிப்போடு போட்டு காயலின் சிறப்பு மசாலா (ஊர் மசலா) வைக் கிளறி வேகவைத்தபின் அதன் மூடியைத் திறந்தால் போதும் நெய்யும், நெருப்புமாக வாசனை மூக்கைத் துளைக்க, நாக்கில் எச்சி ஊற சும்மா! தளதளவென்றிருக்கும் களறிக் கறி! விருந்து உண்டு வீட்டிற்கு வந்த பின் பல மணி நேரமானாலும்கூட நம் விரல் இடுக்களில் பதிந்திருக்கும் மஞ்சள் நிறமும், கையின் மணமும் மறைந்து போவதில்லை! தொடர்ந்து வரும் கல்யாண சீசனில் அடுக்கடுக்காக விருந்துகளுக்கு அழைப்பு வந்தாலும் அலுப்பு தட்டாமல் உண்டு மகிழும் எம் காயலின் களறிச்சோற்றுக்கு முன்னில் ஆம்பூர் என்ன? ஆயிரம் ஹைதராபாத் பிரியாணி வந்தாலும் ஈடாவதில்லை!
என்ன? இனி காயலரின் வீட்டுத் திருமண விருந்துக்கு அழைப்பு வந்தால் மிஸ்பண்ணிடாமெ போய் ஒரு கட்டுகட்டிட்டு வாங்க...!!!
|