நண்பர்கள் நால்வரடங்கிய அணி ஈகைத்திருநாள் முடிந்த அய்ந்தாவது நாள் ஒரு சிறிய சுற்றுலா கிளம்பினோம். பேருந்து மகிழ்வுந்து என மாறி மாறி பயணித்த ஒரு அனுபவம்.
தேக்கடியில் உள்ள மரச்சிற்பம் (மரக்கிளையில் அமர்ந்திருக்கும் புலி) ...
வறுத்த மீனையும் பாஸ்மதி அரிசியில் ஆக்கிய புலவுச்சோற்றையும் , தீட்டிய பருத்த சிவப்பரிசிசோற்றையும், வறண்டாற் போல ஆணமுள்ள கோழி இறைச்சித்துண்டங்களையும் உள்ளே தள்ளி விட்டு இவற்றை செரிக்கும் வேலையில் வயிற்றிற்கு உதவியாக இருக்க ஒரு வெறுந்தேயிலையையும் (மலையாளத்தில் சொல்வதானால் சுலைமானியா அல்லது கட்டஞ்சாய்) குடித்து விட்டு உணவகத்தை விட்டு வெளியே வந்தோம்.
தேக்கடியின் வனச்சூழல் ...
தேனி மாவட்டம் கம்பம் நகரோடு முடிகின்றது தமிழக எல்லை. அதைத்தாண்டும் வரை ஆகஸ்ட் மாதத்திற்குரிய மழையையோ அல்லது மழை சார்ந்த இதம் பதமான வானிலையையோ காண முடியவில்லை. மகிழ்வுந்தின் உரிமையாளரான எங்கள் நண்பர் மழையில்லாத இந்த வானிலையிலா கேரளம் செல்ல வேண்டும் என அரை மனதாக இருந்தார்.
ஏலக்காய் செடி ...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் வழமையான இடங்களை கண்டு களித்த பின்னர் அருகிலுள்ள மஸ்ஜிதில் லுஹரையும் அஸரையும் ஜம்உ கஸ்ரு செய்து தொழுது விட்டு உணவகத்திற்குள் நுழைந்தோம். இக்கட்டுரையின் தொடக்க வரிகளே அந்த உணவக அனுபவங்கள்தான்.
அருவி விழத்தொடங்குமிடம். ஆள் நிற்குமிடத்திற்கப்பால் 1500அடி பள்ளத்தாக்கு ...
உண்ணுதலை முடித்த பிறகு கடைகளை நோட்டமிட்டோம். ஏலக்காய், குறு மிளகு உள்ளிட்ட வாசனை & மசாலா திரவியங்கள், தேங்காய் எண்ணை, வீட்டில் செய்த சாக்லேட் வில்லைகள், நெல்லிக்காய் மிட்டாய், தலையில் நீர் கோர்க்காமலிருக்க உதவும் மூலிகை என வீட்டிற்கான பொருட்களை தேக்கடி அங்காடியில் வாங்கிக்கொண்டோம். உணவகத்தில் வயிறு நிரம்பினாலும் கண்களுக்கான தேடுதல் அடங்கவில்லை.
மலையில் கேரள தமிழக எல்லைகள் முட்டுமிடம் ...
அருகிலுள்ள வேறு ஏதாவது இயற்கை காட்சித்தலங்களுக்கு செல்லலாம் என தீர்மானித்து விசாரித்தோம். 8 ஆவது மைல் என்ற இடத்திற்கருகில் அணக்கரா பஞ்சாயத்தில் நீர்வீழ்ச்சி ஒன்று உண்டு என்ற தகவல் கிடைத்தது. போகும் வழியில் ஒரு நடுத்தர வயது கேரளீயரிடம் வழியைக் கேட்டோம்.
கொஞ்ச தூரம் சென்றால் அந்த நீர் வீழ்ச்சிக்கு சென்றடையலாம். அதன் பெயர் அருவிக்குழி என சொன்னார்.
அருவிக்குழி மலையை அடுத்துள்ள பசுமை போர்த்திய சிகரங்கள் ...
அருவிக்குழி என்ற பெயரை எச்சில் தெறிக்க உச்சரித்த அவரின் அழுத்தத்திலேயே குழி உண்டாகி விடும்போல இருந்தது. நாங்கள் தேக்கடியில் இருக்கும்போதே மழை இதமாக தூறத் தொடங்கியிருந்தது. மழையில்லா வானிலை என குறைப்பட்டுக்கொண்டிருந்த எங்கள் நண்பருக்கு விடை சொல்வது போல மழைத்துளிகள் பூ போல உதிர்ந்து கொண்டிருந்தன.
பெட்டிக்கடைக்கு முன்பு மலர்களின் வரவேற்பரை ...
பாம்பின் நாக்கு போல நீண்டு வளைந்த பாதையின் வழியே எங்கள் வண்டி விரைந்தது. வழியெங்கும் வீட்டு வளாகங்களில் ஏலக்காயும்.குறு மிளகும் பயிரிடப்பட்டிருந்ததைக்கண்டோம். வாசனைப்பயிர்களின் மணம் பொதுவாகவே தேக்கடியில் உலவும் காற்றை நிறைத்திருந்தது.
வளைந்து நெளிந்த பாதை முடிந்த இடத்தில் கேரளீயருக்கே உரிய தூய்மையுடனும், நேர்த்தியுடனும் ஒரு சிறிய பெட்டிகடைதான் இருந்தது. அருவியும் இல்லை அழுத்தந்திருத்தமாக உச்சரிக்கப்பட்ட குழியும் இல்லை. என்னடா இது என குழப்பமாக இருந்தது. பெட்டிகடைக்கருகே சென்று விசாரிக்கலாம் என்றால் அங்கு யாருமில்லை.ஆள் அரவமில்லை. அங்கு மனிதர்கள் என நாங்கள் நால்வர்தான்.
மேடொன்றில் வீடு ...
மனிதர்களின் ஆக்கிரமிப்பில்லாத அந்த சூழல் என்பது சுற்றுலா தலங்களில் அரிதான ஒன்று. மனிதர்களின் ஆராவாரத்தால் இயற்கையின் மௌனம் குலையாத புது சூழலாக அது இருந்தது. அருகில் இருந்த சிறிய மேடொன்றில் வீடொன்று இருந்தது. அந்த வீட்டிலிருந்து பெட்டிகடைக்கு ஒற்றையடிப்பாதையை விட சிறிய பாதையொன்று இருந்தது.
அந்த அரையடிப்பாதையிலிருந்து அழகிய சின்னஞ்சிறுமியொருத்தி ஓடி வந்தாள்.அவளின் ஓட்ட வருகையை பார்க்கும்போது சிட்டுகுருவி விர்ரென பறந்து வந்து மின்கம்பிகளில் அமர்வதைப்போல இருந்தது. அவளிடம் அருவிக்குழி எங்கே எனக்கேட்டதற்கு அருகில் இருந்த ஒரு தாழ்வான பகுதியை நோக்கி கையை காட்டினாள். ஆனால் எங்கள் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. சரி இறங்கி நடந்துதான் பார்ப்போமே என வட்ட வட்டமாக கிடந்த பாறைகளில் இறங்கி நடந்தோம்.
சிறிய அளவில் நீரோடையானது பாறைகளின் இடுக்குகளின் வழியே முடுக்குகள் வழியே மறைந்து செல்லும் பெண்கள் போல ஒலித்தோடிக்கொண்டிருந்தது. அருவியைத்தேடி முன்னும் பின்னுமாக நடந்த போதுதான் திரை விலகியது. நாங்கள் நின்ற இடம் நீர் வீழும் இடமல்ல. மாறாக அருவி தொடங்கும் இடம்.
பாறைகளுடன் இணங்கியும் பிணங்கியும் ஓடும் நீரோடை மலை முடிவடையும் இடத்தில் அந்தர வெளியினோடு சங்கமிக்கின்றது.
மலைப்பாறைகளின் குளிர்ச்சியையும் உள்வாங்கிக்கொண்டு போதாதற்கு அந்தரத்தை நிறைத்துள்ள காற்றின் உறவால் ஏற்படும் சில்லிப்பையும் உள்ளிழுத்துகொண்டு மொத்த குளிர்ச்சியுடன் 1500 அடி அதல பாதாளத்தில் அருவியாக பாய்ந்து தமிழக மண்ணில் மோதி ஆறாகப்பெருக்கெடுக்கின்றது.
அருவிகளுக்கு நீர் வீழ்ச்சி எனப்பெயரிடுவது பிழையானதோ எனத்தோன்றுகின்றது. பிரபஞ்சத்தின் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீருக்கு வீழ்ச்சியும் இல்லை அழிவுமில்லை. அது கடந்து செல்லுமிடங்கள் மலையாக,காற்றும் மேகமும் சஞ்சரிக்கும் அந்தர ஆகாய வெளியாக,சம நிலப்பரப்பாக,ஆர்ப்பரிக்கும் கடலாக இருந்தாலும் அவற்றினோடு ஒட்டி உறவாடி ஈர்த்துக்கொண்டும் ஈந்து கொண்டும் தன் சுழற்சியை விடாது செய்து கொண்டே இருக்கின்றது. மலை நீரோடை தனது ஓட்டத்தை உரு மாற்றும் கடைசிப்பாறையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அந்த பாறைக்கு அந்த பக்கம் 1000-1500 அடி ஆழம் மிக்க கிடு கிடு பள்ளம். கேரளம் முடிவடைந்து தமிழகம் தொடங்கும் இடம்.
எதிரேயும் பக்கவாட்டிலும் மலையும் சிகரங்களும் சூழ்ந்திருக்க நடுவே இளம்பச்சை நிறத்தில் விரிந்த பள்ளத்தாக்கு . அந்த பள்ளத்தாக்கினுள் கம்பம்,உத்தம பாளையம்,தேனி என்ற தமிழக நிலப்பரப்புகள் துச்சமில்லாது உறைந்து கிடந்தன. நாங்கள் அமர்ந்திருந்த பாறைக்கு சம உயரத்தில் இடப்புறமாக கரிய நிறத்தில் நிமிர்ந்து நின்ற மலைச்சிகரங்களை மேகத்துண்டுகள் ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தன ஒப்பனை செய்த பின்னர் துணியை வைத்து லேசாக முகத்தை ஒற்றி எடுப்பது போல அந்த காட்சி மிக ரம்மியமாக இருந்தது.
இந்த அரிய காட்சிகளையும்,காட்சிப் பின்புலங்களையும் நிலை & சலனப்படப்பிடிப்புகருவிகளால் (ஸ்டில்&வீடியோ கேமராக்கள்) முழுமையாக உள்வாங்க இயலாது. மனித கண்களுக்கும்,புலனுணர்வுகளுக்கும் மட்டுமே சாத்தியப்படும் அற்புதமிது.
தலைக்கு மேலே மழையைச்சுமந்த இளம் கரிய நிறத்திலான மேகங்கள் மிதக்க ,மெல்லிய தூறல் விழுந்து கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் கண்களை மூடினோம். நீரோடையின் சலசலப்பு மட்டுமே எங்கள் காதுகளை நிறைக்க அண்ட வெளியின் மொத்த சூழலுமே நிசப்தமாக ஒரு புள்ளியில் குவிந்திருந்தது. எங்களது இருப்பே எங்களுக்கு சுமையாக தோன்றியது. துன்பமும் நெருக்கடிகளும் மிகுந்த இந்த வாழ்விலிருந்து விடுபட்டு அந்த புள்ளியில் கலந்து கரைந்து விடுதலையாகி விட மாட்டோமா எனத்தோன்றியது. அல்லாஹ்வின் படைப்பாற்றலின் அழகிய சாட்சிகளைக்கண்டு உடல் சிலிர்த்த்து.
நாங்கள் கிளம்பும் நேரமாகி விட்டபடியால் அந்த பெட்டிக்கடையில் இஞ்சிச்சாயா வாங்கிக்குடித்தோம். கிளம்பும்போது அந்த மேட்டு வீட்டுக்காரர் ஒரு தகவல் சொன்னார். அணக்கரா பஞ்சாயத்தின் சார்பாக அருவிக்குழியில் ஒரு தடுப்பணை கட்டி படகு குழாம் அமைக்கப்போகின்றார்களாம்.
தடுப்பணையின் அரசியலில் கேரள*தமிழக நீர்ப்பகிர்வு காழ்ப்புணர்வு ஏதும் உண்டா என நமக்குத்தரியாது. ஆனால் தடுப்பணை கட்டிய பிறகு இன்றிருக்கும் தங்கு தடையற்ற இயற்கைக்கோலம் அங்கு எஞ்சுமா? என்ற விடை தெரியாத கேள்வியுடன் கிளம்பினோம். ஏறத்தாழ ஒன்றரை மணி நேர பயணத்திற்குப்பின் வறண்ட வானிலையுடன் கூடிய தமிழக எல்லைக்குள் நுழையும்போது பசுமைப்பயணம் மொத்தமுமே ஒரு கனவு போல தோன்றியது நம் வாழ்வைப்போல....
படங்கள்: ஹாஃபிழ் புகாரீ |