| |
ஆக்கம் எண் (ID #) 51 | | | வெள்ளி, செப்டம்பர் 7, 2012 | | குடிநீரும், குழம்பிய மக்களும்! சமூக பார்வையாளர்
|
| இந்த பக்கம் 4817 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய | |
அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
குடிநீர் கிடைக்காது அவதிப்படும் மக்களின் ஆதங்கத்தை , கஷ்டத்தை, சிரமத்தை பார்த்ததன் , கேட்டதன் விளைவே இந்த கட்டுரை. மேலும் அல்லாஹ்வின் தண்டனையை நமது மக்கள் அனுபவிக்கக் கூடாது என்பதும் எனது ஆசை - அதனாலேயே திருக்குர்ஆன் மற்றும் ஹதீதை குறிப்பிட்டிருக்கிறேன். எனவே தயவு செய்து எவரேனும் குடிநீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுப்பவராக இருந்தால் அதை இந்நிமிடமே நிறுத்தி விடுங்கள் அல்லாஹ்! உங்களுக்கு ரஹ்மத் செய்வான்.
குறிப்பு:
குடிநீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுவதை நிறுத்துவதற்கான தீர்வு காண்பதற்கு நல்ல கருத்துக்களை எழுதும் வாசகருக்கு ரூபாய் ஓர் ஆயிரம் பரிசு தரப்படும். வஸ்ஸலாம். - கட்டுரை ஆசிரியர்.
|
இன்று பரவலாக குடிநீர் பஞ்சம் நாடு முழுவதும் இருக்கிறது , அதை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை அரசும் மேற்கொள்வதில்லை - மக்களும் அதற்கு முறையாக ஒத்துழைப்பதில்லை. நம்ம ஊரைப் பொறுத்தவரை 19 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் இருந்தும் தேவையான அளவுக்கு நமதூருக்கு தண்ணீர் வழங்கப்பட்ட போதும் , முறையான பராமரிப்பு, முறையான விநியோகம் இல்லாத காரணத்தினால் என்றும் குடிநீருக்கு பஞ்சமாகவே இருந்து கொண்டிருக்கிறது. தினமும் எவ்வளவு தண்ணீர் நமதூருக்கு வருகிறது , எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்பது நகராட்சியில் உள்ளவர்களுக்கு சரியாகத் தெரியாது. அதை தெரிந்து கொண்டு மக்களுக்கு குடிநீரை முறையாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அக்கறையும் நகர் மன்றத்திற்கு இருப்பதாக தெரியவில்லை - நகர் மன்றம் வலுவிழந்து கிடக்கின்றது.
ஊரிலே ஏறத்தாழ எண்ணாயிரம் குடிநீர் இணைப்புகள் இருக்கின்றதாக அறியப்படுகிறது. முறையாக இணைப்புகள் பெற்று , அதற்கான கட்டணங்களையும் ஒவ்வொரு மாதமும் செலுத்துபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தண்ணீர் கிடைக்கச் செய்யவேண்டியது நகராட்சி நிர்வாகத்தினுடைய கடமையாகும். அவர்கள் கடமையை செய்ய தவறினால் - அந்த கடமையை தூண்டி செயல்படுத்தச் செய்ய வேண்டியது நகர் மன்றத்தின் பொறுப்பு. நகர் மன்றத்தினர் பெரும்பாலோனோருக்கு அதில் அக்கறை இல்லை அவர்களை தட்டிக்கேட்க மக்களும் தயாராக இல்லை. காரணம் குடிநீர் திறந்து விடக்கூடிய நேரத்தில் மக்களில் பலர் மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்ற சுயநல செயலே.
இப்பொழுது நகரில் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது . 4 - 6 நாட்கள் என்ற இடைவெளியில் திறந்துவிடப்பட்ட குடிநீர் இப்பொழுது 8 - 10 நாட்களுக்கொருமுறை திறந்து விடப்படுகிறது என்பது மட்டுமில்லாமல் தண்ணீர் வரும் நேரமும் குறைக்கப்பட்டு விட்டதால் போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீர் திறந்து விடக்கூடிய நேரங்களில் நமது பெண்கள் குடங்களுடன் அங்குமிங்குமாக சென்று அலைந்து திரிந்து தண்ணீர் பிடிப்பதை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு காலம், நேரம் இல்லை. இரவு, பகல், விடியற்காலை என்று பல நேரங்களிலும் ஒரு முறையின்றி திறந்து விடுவதால் பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
மக்களை மேலும் , மேலும் அவதிக்குள்ளாக்குவது மின் மோட்டார் வைத்து குடிநீரை கள்ளத்தனமாக உறிஞ்சும் செயல்தான் - மின் மோட்டார் வைத்து உறிஞ்சாதிருந்தால் ஓரளவு எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. ஊர் முழுக்க பரவலாக மின் மோட்டார் வைத்து குடிநீரை கள்ளத்தனமாக உறிஞ்சுகிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. இதை சிலமுறை அடியேன் உணர்ந்திருக்கிறேன். ஒரு முறை எங்கள் வீட்டுக் குழாயில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும்போது திடீரென வேகமாகவும், அதிகமாகவும் வரத் தொடங்கியது - காரணத்தை ஆராய்ந்தபோது , அப்போதுதான் மின்சாரம் " கட் " ஆனது தெரிய வந்தது. சில சமயம் மின்சாரம் இல்லாத நேரத்தில் தண்ணீர் திறந்து விடுகிறார்கள் அப்போதும் தண்ணீர் வேகமாகவும் , அதிகமாகவும் வருகிறதை உணர முடிகிறது.
குடிநீரை மின் மோட்டார் வைத்து கள்ளத்தனமாக உறிஞ்சுவது என்பது ஏதோ அறியாத , தெரியாத நபர்கள் செய்யவில்லை, விவரம் அறிந்தவர்களே செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்த ஈனச்செயலை செய்பவர்கள் பணக்காரர் - ஏழை , படித்தவர் - படிக்காதவர் , ஆசிரியர் - மாணவர் , அறிஞர் - அரசியல் வாதி என்று மட்டுமல்லாமல் ஊருக்கு உழைப்பவர்கள் என்றும் பொது நலவாதிகள் என்றும் சொல்லி திரிபவர்களிலும் பலர் இருக்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரியதாகும்.
இப்படி மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவது தவறல்ல என்று சிலர் நினைக்கின்றனர் அது மிகவும் தவறாகும். ஆரம்ப காலத்தில் சிலபேர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவது கண்டுக்கொள்ளப் படவில்லை. அது படிப்படியாக அதிகரித்து பல டஜன் கணக்கானபோது அது தவறல்ல " தப்பு " என்றே பலரால் சுட்டிக்காட்டப்பட்டது, உணர்த்தப்பட்டது. இதை சிலர் உணர்ந்திருந்தும் மின் மோட்டார் உபயோகித்து குடிநீர் உறிஞ்சுவதை குற்ற உணர்வோடு தொடர்ந்தே செய்து வந்தனர்.
அவர்களுடைய இதயம் (மனசாட்சி) சொன்னது இப்படி செய்வது தப்பு, அடுத்தவருக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தடை பெறுகிறதே என்று - ஆனால் அவர்களுடைய மூளை (குறுகிய புத்தி ) சொன்னது மின் மோட்டார் வைக்காவிட்டால் நமக்கு தண்ணீர் கிடைக்காது , அவர்களுக்கு தேவை என்றால் அவர்களும் மின் மோட்டார் வைத்துக்கொள்ளட்டுமே என்று. ஆக மக்கள் மனசாட்சியை மறந்து குறுகிய புத்திக்கு மதிப்பளித்ததால் இன்று பல நூற்றுக்கணக்கானவர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீரை கள்ளத்தனமாக உறிஞ்சுவது பெருகிவிட்டது. அதன் காரணமாக மற்ற மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
பரவலாக அதிகமானோர் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவதால் அந்த செயல் " ஒக்க சிரித்தால் வெட்கமில்லை " என்ற பழமொழிக்கொப்ப மக்கள் மத்தியில் தவறாக கருதப்படவில்லை. இருந்தபோதிலும் இரக்கம் உள்ளவர்களும், மனிதாபிமானம் உள்ளவர்களும் இந்த ஈனச்செயலை செய்ய விரும்புவதில்லை. பல சிரமங்களையும் சகித்துக்கொண்டு , பணம் கொடுத்து வெளியில் தண்ணீர் வாங்கினாலும் வாங்குவோமே தவிர இந்த ஈனத்தனமான செயலை செய்ய மாட்டோம் என்று நம்மிலே பலர் உள்ளனர் - அவர்களை அல்லாஹ்! ஈருலகிலும் மேன்மையாக்கி வைப்பானாக ஆமீன்.
இரண்டாவது பைப் லைன் திட்டம் நிறைவேறி விட்டால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று மக்கள் மனப்பால் குடிக்கின்றனர். இரண்டாவது பைப் லைன் என்ன மூன்றாவது , நான்காவது பைப் லைன் திட்டங்கள் வந்தாலும் பிரச்சனை தீரப்போவதில்லை. முதலில் அடிப்படை செயல்கள் சரியாக இருக்க வேண்டும். இப்பொழுது நமக்கு வருகின்ற தண்ணீர், எவ்வளவு வருகிறது , எப்போது வருகிறது என்ன முறையில் விநியோகிக்கப்படுகிறது என்பது திட்டவட்டமாக புள்ளி விவரத்தோடு யாருக்கும் தெரியாது. மொத்தம் எத்தனை இணைப்புகள் அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அனுமதியின்றி எத்தனை இணைப்புகள் இருக்கிறது என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை. மின் மோட்டார் வைத்து குடிநீரை கள்ளத்தனமாக உறிஞ்சுபவர்களை தடுத்து நிறுத்தியபாடில்லை. முதலில் இந்த அடிப்படையான செயல்கள் சரியாக இருந்தால்தான் இரண்டாவது பைப் லைன் திட்டம் நிறைவேற்றபட்டால் பலன் கிடைக்கும். அதல்லாமல் எத்தனை புதிய திட்டங்கள் வந்தாலும் அது பயனளிக்கப் போகிறதில்லை.
இறைவனருளால் இரண்டாவது பைப் லைன் திட்ட வேலைகள் இப்பொழுது தொடங்கினால் அது முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர எப்படியும் இன்னும் 2 வருடங்களை கடந்து விடும். இரண்டாவது பைப் லைன் திட்டம் நிறைவடைந்து உபயோகத்திற்கு வந்தபின் , இப்போது உபயோகத்தில் உள்ள பைப் லைன் ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் - அதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் உண்டு - இயற்கையாக எங்கும் நடைபெறுகிற ஒன்றுதான். ஆக ஏதாவது ஒரு விதத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து கொண்டேதான் இருக்கும். காரணம் நகராட்சி நிர்வாகமும் பெரும்பாலான மக்களுடைய மனோபாவமும் சீராக இல்லை.
குடிநீர் ஓரளவு தட்டுப்பாடு இல்லாமல் சீராக கிடைக்க வேண்டுமென்றால் அவசியம் எல்லா இணைப்புகளுக்கும் மீட்டர் பொருத்தப்பட வேண்டும். இதை மக்கள் எதிர்த்தாலும் சரி, ஆதரித்தாலும் சரி கண்டிப்பாக மீட்டர் பொருத்தியே ஆக வேண்டும். ஏனோ , தானோ என்றில்லாமல் தரம் உயர்ந்த மீட்டர்களை வாங்கி பொறுத்த வேண்டும். அதுவும் நகராட்சி பணத்திலேயே வாங்கிப் பொறுத்தப்பட வேண்டும் அதற்கான செலவு இரண்டு கோடியல்ல மூன்று கோடி ரூபாயானாலும் கூட பாதகமில்லை. மீட்டர் பொருத்திய ஓரிரு வருடத்திலேயே , அந்த தொகையை உபரியாக உபயோகிக்கின்ற தண்ணீர் கட்டணம் மூலம் வசூலித்து விடலாம். இப்படி மீட்டர் பொருத்துவதன் மூலம் அதிகமாக தண்ணீர் பெறக்கூடிய (மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு அருகில் வசிக்கக் கூடிய ) நாங்களும் உபரியான தண்ணீர் கட்டணத்தை கட்டுவோம், மின் மோட்டார் வைத்து கள்ளத்தனமாக தண்ணீரை உறிஞ்சுபவர்களும் அதிக கட்டணம் கட்டுவார்கள் அல்லது தானாகவே மின் மோட்டாரை வைத்து குடிநீரை உறிஞ்சுவதை நிறுத்தி விடுவார்கள்.
பொதுவாக மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி அதை குளிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் உபயோகித்து பழக்கப்பட்டவர்களுக்கு வேறு எந்த தண்ணீரையும் உபயோகிக்க எளிதில் மனம் இடம் தராது. டிவியில் சீரியலை பார்த்து பழக்கபட்டவருக்கு அதை எளிதில் மறக்க முடியுமா? - இல்லை தொடர் புகைப் பழக்கம் உடையவருக்கு புகைப்பதை உடனே நிறுத்தத்தான் முடியுமா?. ஆகவே மின் மோட்டார் வைத்து பழக்கப்பட்டவரும் குடிநீரை அதிகமாக உபயோகித்து , உபரியாக தண்ணீர் கட்டணம் கட்டுவர். தண்ணீர் கிடைக்காமல் அவதிபட்டவர்களும் எளிதில் தண்ணீர் கிடைப்பதால் உபரியாக தண்ணீர் எடுப்பர் . உபரியாக எடுக்கும் தண்ணீருக்கு அதிக பணம் கொடுப்பதில் கவலைப்பட மாட்டார்கள்.
மீட்டர் பொருத்துவது நடைமுறை சாத்தியமில்லை என்று தயவு செய்து சொல்ல வேண்டாம். தரமான மீட்டர்களை வாங்கி வைத்து , தகுதி வாய்ந்த , நேர்மையானவர்கள் மூலம் கண்காணித்தால் நிச்சயம் சாத்தியப்படும். தரம் கெட்டவர்களும் , மின் மோட்டார் வைத்து கள்ளத்தனமாக குடிநீரை உறிஞ்சுபவர்களுமே மீட்டர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இந்த மீட்டர் முறை இரண்டாவது பைப் லைன் வரும்வரை என்றல்ல அதற்கு பிறகும் சீரான உபயோகத்திற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
மின் மோட்டார் வைத்து கள்ளத்தனமாக குடிநீரை உறிஞ்சுபவர்கள் அடுத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீரை உறிஞ்சவில்லை அடுத்தவர்களின் குருதியைத்தான் உறிஞ்சுகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளட்டும். அரசு அதிகாரிகள் வரும்போது அவர்களின் கண்களை நீங்கள் மறைக்கலாம் அல்லது அவர்களுக்கு நீங்கள் இலஞ்சம் கொடுக்கலாம் ஆனால் இறைவனின் பார்வையிலிருந்து நீங்கள் மறைய இயலாது - இறைவனுக்கு நீங்கள் இலஞ்சமும் கொடுக்க இயலாது என்பதை மறந்து விடாதீர்கள்.
"( தேவைக்கு மேல் ) எஞ்சியுள்ள தண்ணீரை தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால் அதை சுற்றியுள்ள புல் பூண்டுகளை ( மேய விடாமல் கால்நடைகளைத் தடுத்ததாகிவிடும் " என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்ற ஹதீதை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹீஹுல் புகாரியில் அறிவிக்கிறார்கள்.
நீர் நிலையின் உரிமையாளர் தம் தேவைக்கு மேல் உள்ள தண்ணீரை தடுத்து வைக்காமல் புல் பூண்டுகளை விளையச்செய்யவும் , கால் நடைகளுக்கும் கொடுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நம்மில் பலர் என்ன செய்கிறார்கள் அடுத்தவர்களுக்கு உரிமையான குழாய் தண்ணீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்து உபயோகிக்கிறார்கள் - இப்படி அடுத்தவர்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கி எடுக்கப்படும் தண்ணீர் " ஹராமா " இல்லையா என்பதை மக்களே! சிந்தித்துப் பாருங்கள்.
" மனிதனை நீரிலிருந்து படைத்தான் " என்றும், " தண்ணீரின் மூலம் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் நாம் உண்டாக்கினோம் " என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
மருத்துவ ரீதியாக பார்த்தால் மனிதனின் உடலின் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்தான் என்கிறது.
போரில் இறப்பவனும் தண்ணீர், தண்ணீர் என்கிறான் - வெயிலில் சுற்றுபவனும் தண்ணீரைத் தேடுகிறான் - ஆபரேஷன் செய்து
ஹாஸ்பிடலில் கிடப்பவனும் உணர்வு வந்ததும் தண்ணீரைத்தான் முதலில் கேட்கிறான்.
மேலும் நாம் குடிக்கும் தண்ணீர் நேரிடையாக , சிறுநீராக வெளியாவதில்லை , கிட்னிக்கு சென்று கிட்னியை சுத்தம் செய்துவிட்டுதான் சிறுநீராக வெளியேறுகிறது.
மொத்தத்தில் தண்ணீர் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கு மிக, மிக முக்கியானது. அந்த தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் மனிதனின் நிலை என்ன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
மனித உயிருக்கு முக்கியம் வாய்ந்த தண்ணீர் நேர்மையான வழியில் பெறப்படாமல் , மின் மோட்டார் வைத்து கள்ளத்தனமாக உறிஞ்ச ப்பட்டதாக இருந்தால் அந்த தண்ணீர் எங்ஙனம் மனிதனுக்கு சுகத்தையும், நிம்மதியான வாழ்வையும் தரும். சிந்திக்கக் கூடிய மக்களே சிந்தியுங்கள். இதுவரை மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சியது போகட்டும் இனிமேலாவது அந்த தவறை செய்யாதிருங்கள்.
ஓன்று மட்டும் நிச்சயம் " என்று ஒரு ஹராமான பொருள் உடலின் உள்ளே சென்று விடுகிறதோ அப்பொழுதே அந்த உடலுக்குரியவர் ஹராமான செயல்கள் மீது ஆர்வம் கொண்டு படிப்படியாக ஹலாலானவைகளை மறக்கத் தொடங்குவார் " அதன் காரணமாக அவர்கள் வாழ்விலே பல துயரங்களை அனுபவிக்கின்றனர் - இது பல நபர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்.
சிலர் நினைக்கலாம், " நாம் மட்டுமா குடிநீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுகிறோம் இன்னின்ன ஆட்கள் 15 , 20 வருடங்களாக குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சுகிறார்களே அவர்களெல்லாம் கெட்டாபோய் விட்டார்கள் " என்று, மக்களே அப்படி நினைப்பது தவறு. அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், கிருபை உடைவன் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நேரம் வைத்திருக்கிறான் அந்த நேரம் வந்து விட்டால் அதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. அந்த நேரம் வரும் முன்பே நாம் நம்மை திருத்திக்கொண்டு அவனுடைய தண்டனையிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் - குடிநீரால் மக்கள் குழம்பித் திரிய வேண்டாம்.
" நிச்சயமாக ( இஸ்லாம் எனும் ) நேர்வழியின் மீது அவர்கள் உறுதியாயிருந்தால், தாராளமாக ( மழை ) நீரை அவர்களுக்கு நாம் புகட்டுவோம் " என்று அல்லாஹ்! அருள் மறை குர்ஆனிலே கூறுகிறான்.
அதன்படி நேர்வழியின்மீது நாம் அனைவரும் உறுதியாயிருந்து இறைவனின் வாக்குப்படி தாராளமாக நீரை அவன் புறத்திலிருந்து பெறுவோமாக ஆமீன். |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|