தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்தை மறப்பதற்குள் அடுத்ததொரு மனித உயிர் பேரிழப்புகள் சிவகாசி பட்டாசு ஆலையில். லஞ்சம் வாங்கிவிட்டு FC/லைசன்சை தரும் அதிகாரிகளினால், பெருகி வரும் சாலை விபத்துகள், அரசாங்கத்தின் அலட்ச்சியத்தால் இரயில் விபத்துகள், அதிகார வர்க்கத்தால் பட்டாசு கோர விபத்துகளினால் எண்ணிலடங்காத விலை மதிப்பற்ற உயிர்களை நாள்தோறும் இழந்து வருகின்றோம்.
பத்தாம் நூற்றாண்டில் சீனாவில் தோன்றிய இப்பட்டாசு தொழில்1960 களில் மேற்கு வங்கம் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு சிவகாசியை தன் தொழில் கூடமாக அமைத்து கொண்டது.
பெரும்பாலான நாடுகளில் பட்டாசு விற்பதற்கும் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதற்கும் கடும் நிபந்தனைகள் தடைகள் உள்ளன. கிராமப் புறங்களில் வெடிக்காத வெடிகளை வெடிப்பதற்கும் அனுமதியளித்தாலும் நகர்புறங்களில் வெடிகள் வெடிப்பதற்கு எக்காலத்திலும் அனுமதி கிடையாது. அது சட்டப்படி குற்றமாக அங்கு கருதப்படுகின்றது.
மிக முக்கியமான தினங்களில் (சுதந்திர தினம்) நகர்ப்புறங்களில் உள்ள வெட்ட வெளிகளில் (பூங்கா அல்லது ஏரிகளில்) அந்நகர்ப்புற நிர்வாகமே பொதுமக்கள் பார்வைக்காக சில நிமிடங்கள் தகுந்த பாதுகாப்புடன் பேன்சி ரக பட்டாசுகளை வெடித்து (Fireworks) அத்தினத்தை கொண்டாடுகின்றனர். அதுதான் அந்நாட்டு மக்களுக்கு தெரிந்த பட்டாசு கலாச்சாரம். ஆனால் நமது நாட்டில் பண்டிகைகள் / கொண்டாட்டம் என்றாலே பட்டாசு வெடித்தல் என்று மாறிப் போனது.
மகிழ்ச்சியை தெரிவிப்பதற்கு எத்தனையோ நல்ல பல வழிகள் இருந்தும்… பண்டிகைகளாகட்டும், கிரிக்கெட், தனி மனித வெற்றியாகட்டும், கட்சி மாநாடு ஊர்வலம் தலைவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளாகட்டும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் பழக்கம் நம்மிடையே புரையோடி கிடக்கின்றது. ஒரு சில நிமிடங்களில் கரியாகப்போகும் கூத்துக்காக கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கி வெடிக்கப்படுகின்றன.
பெருநாளைக்கும் பட்டாசுக்கும் என்ன சம்பந்தம்? மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றுவதோடு மட்டுமன்றி பட்டாசு வெடித்து வீண்விரயம் செய்பவர்கள் இன்று வரை நமதூரில் நமது சமுதாயத்தில் உள்ளனர். சமீபத்தில் கூட இலங்கையில் உள்ள நுரைச்சோலை என்ற ஊரில் நோன்பு பெருநாளன்று பட்டாசு கொளுத்தி ஒரு பள்ளிக்கூடம் தீக்கிரையானது.
நமதூரில் பெருநாட்களின் போது பட்டாசுகள் மிக ஜோராக விற்கவும் வெடிக்கவும் படுகின்றன. முந்தைய காலங்களில் கூடுதல் ‘கிக்’ (அதிபயங்கர சப்தம்) வேண்டும் என்பதற்காக செரட்டைக்குள் (கொட்டாங்குச்சி) ஆட்டம் பாமை வைத்து வெடிப்பார்கள். பட்டாசு வெடித்ததும் செரட்டை பறந்துபோய் யார் தலையிலாவது விழுந்து மண்டையை ஒடைத்த சம்பவங்களும் உண்டு.
ஆட்டம் பாம், சர வெடிகளை வெடிக்கச் செய்து அந்த தெருவில் உள்ளவர்கள் / வயதானவர்களின் காதுகள் கிழியும் வரை விடுவதில்லை. வெடித்த வெடிகளில் ஒன்றிரண்டு சரியாக வெடிக்காமல் இருந்தால் அது ஏன் வெடிக்கவில்லை என்று கையில் எடுத்து பார்க்கையில் ‘டமார்’ என்று வெடித்து கைகளை கை கால் ஊனமானவர்கள் கூட சிலர் உண்டு. ராக்கட் போன்ற வெடிகளால் கூரை வீடுகளை தீக்கிரையாக்கிய நிகழ்வுகளும் உண்டு. பட்டாசுகள் வெடித்து முடித்துப் பார்த்தால் அந்த பகுதி முழுவதும் குப்பைக் காடாக கிடக்கும்.
பேன்சி ரக பட்டாசுகளுக்கு மக்களிடம் ஏற்பட்ட அதிக கிராக்கியால் பட்டாசு / மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட காற்றை மாசுபடுத்தும் வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன.
125 டெசிபலுக்கு மேலாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்திருந்தும் நாம் வெடிக்கும் ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி – 142 டெசிபல். இவைகளினால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் காற்று மாசுபாட்டால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றது.
பழைய சிரித்த படத்தையும் சிதறிப்போன உடல்களையும் காண்பித்து பத்திரிக்கைகள் எக்ஸ்க்ளூசிவ் ரிபோர்ட் தருவதும், நமது அரசு இயந்திரங்கள் தூக்கத்திலிருந்து சட்டென்று விழித்துக்கொண்டு ஆழ்ந்த அனுதாபத்தையும் நிவாரண நிதி, விசாரணைக் குழு என்று அறிவித்துவிட்டு மீண்டும் நித்திரைக்குச் சென்றுவிடுவதும் வழமையாகி போன ஒன்றாகி விட்டது.
நூற்று பத்து கோடியில் ஏதோ சில உயிர்கள் இது மாதிரி போய்விட்டால் கணக்கில் தெரியவா போகின்றது என்ற அலட்சிய பொடுபோக்கா? விலை மதிப்பற்ற உயிர்களின் மதிப்பு நிவாரணமாக தரப்படும் சில லட்சங்கள் தானா?
மரணங்கள் துயர சம்பவங்கள் இயற்கையினால் நடந்தால் கூட மனதை தேற்றிக் கொள்ளலாம்... ஆனால் தனி நபரின் விதிமீறல்களால் / பணப் பேராசையால் அரசாங்கத்தின் அஜாக்கிரதையால் தொடர்ந்து மற்றவர்களுடைய வாழ்வை பறிக்கின்றதே அதுதான் மிகக் கொடுமை.
ஒவ்வொரு வருடமும் இது போன்று ஏதாவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்பாவி மக்களின் உயிர்களும்
கருகி கொண்டு தான் இருக்கிறது. ஐம்பது ரூபாய் ஜேப்படி திருடனுக்கு ஆறு மாதம் ஜெயில். ஆனால் இது போன்று பல உயிர்களை குடிக்கும் பணக்கார முதலைகள் சுதந்திரமாக உலாவிக்கொண்டுத்தான் இருக்கின்றார்கள். இவர்கள் மீது மிகக் கடுமையான தண்டனைகள் பாயாதவரை இது போன்ற விபத்துக்களை குறைப்பது மிகக் கடினம்.
ஷேர் மார்க்கெட் சரிவிற்கும், பன்னாட்டு வியாபாரத்திற்கும், பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து பேசுகிற அமைச்சரவைக் கூட்டம் உடனடியாக பொது மக்கள் உயிரிழப்பு விஷயத்திற்கும் அமர்ந்து பேசி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்.
வளர்ந்த நாடுகளை போல், ஒரு உயிரிழப்பு ஏற்பட்டால் அதை அரசு கடுமையானதாக கருதி தடுக்க முனைய வேண்டும். மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும். என்றைக்கு மனித உயிரின் மதிப்பை நமது அரசாங்கமும் உணருகின்றதோ & பாதுகாப்பு விதி முறைகளை வியாபார சுய நலன்களுக்காக மீறுபவர்களும் உணருகின்றார்களோ கடுமையாக தண்டிக்கப் படுகின்றார்களோ அன்றுதான் இதற்க்கு ஒரு விடிவுகாலம் வரும்.
‘ரிஸ்க் எடுப்பது ரஸ்க் தின்பது மாதிரி’ என்ற டயலாக்குகள் கேட்பதற்க்கும் சொல்வதற்க்கும் வேண்டுமென்றால் இனிமையாக இருக்கலாம் ஆனால் அவைகள் தரும் (உயிர்) ஆபத்துகள் நேரும்வரை!!
பட்டாசைக் கொளுத்துவது பணத்தைக் கொளுத்துவதற்கு சமம் என்றுணர்ந்து பட்டாசுக்கு செலவு செய்யும் பணத்தை பண்டிகைகள் (பெருநாள் / தீபாவளி) தினத்தன்று நம்மைச் சுற்றியுள்ள ஏழை எளியவர்கள், நல்ல உடை / உணவுடன் சந்தோஷமாக நம்மை போன்று அந்நாளை அவர்களும் கொண்டாட செலவு (உதவி) செய்வோம்.
பட்டாசுகளுக்காக காசை கரியாக்காமல் குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், அறிவூட்டும் புத்தகங்களை வாங்கித் தருவதை பழக்கமாக கொள்ள வேண்டும்.
நம்முடைய பொழுது போக்கிற்காக நம் உயிர் மட்டுமன்றி பிற உயிர்களை பதம் பார்க்கும் அதிலும் குறிப்பாக இத்தொழில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் இந்த பாதுகாப்பற்ற பட்டாசுக் கலாச்சாரம் எத்தருணத்திலும் தேவையா என்பதனை சிந்திக்கவேண்டும்.
தமிழகத்தில் சில கிராமங்களில் பட்டாசின் நெடியைக் கூட தங்கள் ஊர் பக்கம் நெருங்கக் கூட விடுவதில்லை. அது போன்று பட்டாசு வெடிக்கும் கலாச்சாரத்தை முற்றிலுமாக புறக்கணிப்போம்… நமதூரை விட்டு முழுமையாக விரட்டுவோம் !!
|