உலகில் வாழும் 150 கோடி முஸ்லிம்களின் உணர்வைக் காயப்படுத்தியுள்ளான் சாம் பெஸிலி என்னும் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சார்ந்த ஒரு கயவன். இவனது இயர்பெயர் நகூலா பெஸெலி நகூலா எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காப்டிக் கிறிஸ்தவப் பிரிவை சார்ந்த இந்த அயோக்கியனின் படம் Innocence of Muslims திரையிடப்பட்டு 2 வருடங்கள் ஆகிய நிலையில் எகிப்தில் வசிக்கும் மோரிஸ் சாடெக் என்னும் ஒரு காப்டிக் கிறிஸ்தவ பாதிரி (எகிப்திலும் அமெரிக்காவிலும் வாழும் ஒரு கிறிஸ்தவப் பிரிவு காப்டிக் என அழைக்கப்படுகிறது) தான் இப்படத்தை எகிப்தியர்கள் பேசும் அரபியில் மொழிமாற்றம் செய்து உலகம் முழுதும் பிரச்சனையாக்கியுள்ளான். கலிபோர்னியாவில் வசித்து வரும் சாடெக் எகிப்தில் தற்போது அதிபர் மூர்ஸி தலைமையில் ஆட்சி செய்துவரும் இக்வான்களின் ஆட்சிக்கு களங்கமுண்டாக்கவே இதைச் செய்த்தாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன்.
இப்படம் 5 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டு 59 நடிகர்களைக் கொண்டு 2011 -ல் தயாரிக்கப்பட்டது. அதிர்ச்சி என்னவெனில் 100 யூதர்கள் இப்படம் தயாரிப்பதற்குப் பணம் வழங்கியுள்ளார்கள் என்பதாகவும் யூடியூப் இணையதளம் பெஸெலியை மேற்கோள்காட்டி கூறியிருக்கிறது.
படத்தை தயாரித்த பெஸெலி என்னும் படுபாவி இஸ்லாம் ஒரு வளரும் புற்றுநோய் என்றும் முஹம்மத் ஒரு பொய்யர் என்றும் ஒழுக்கங்கெட்ட உதவாக்கரை என்றும் குழந்தைப் பாலியலை ஏற்றுக் கொண்டவர் என்றும் (அல்லாஹ் அக்கயவனின் கூற்றை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக) உலக முஸ்லிம்களின் கொந்தளிப்பைக் கண்டு ஓடி ஒளிந்த நிலையிலும் யூடியூப் இணையதளத்திற்கு அமிலத் திமிரோடு பேட்டியும் கொடுத்துள்ளான்.
பெஸெலி ஒரு அமெரிக்கப் பிரஜை. எனவே தான் உலகில் அனைத்து அமெரிக்கத் தூதரகங்களும் முஸ்லிம்களால் முற்றுகை இடப்பட்டு வருகின்றன. ஒரு தனி நபர் செய்த குற்றத்திற்காக ஒரு நாட்டையே குற்றவாளியாகப் பார்ப்பது எவ்வகையில் நியாயம் எனக்கேட்டால் நிச்சயமாக சந்தேகத்திற்கிடமின்றி நியாயங்கள் உள்ளன. கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படையில் ஒரு தனி நபர் எத்தனைக் கோடி பேரின் உள்ளத்தை வேண்டுமானாலும் காயப்படுத்தலாம்; அவர்கள் தங்கள் உயிரை விடவும் மேலாக நேசிக்கும் ஒப்பற்றத் தலைவரை, இறைவனால் அனுப்பப்பட்ட தூதரைக்கூட தராதரமின்றி கொச்சையாகவும் கீழ்த்தரமாகவும் விமர்சிக்கலாம் என்ற அளவுக்கு தனிமனித சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் மேற்கத்திய நாடுகளில் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதே நேரம் யூத சியோனிஸ வாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு முன் நடந்ததாகக் கூறும் ஹோலோகாஸ்டை (சர்வாதிகாரி இட்லரால் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப்படும் யூத இனப்படுகொலை) எதிர்த்துப் பேசுவதும் எழுதுவதும் விமர்சிப்பதும் பெறுங் குற்றமாகவே பல மேற்கத்திய நாடுகள் சட்டமியற்றி பாதுகாத்து வருகின்றன.
இப்படி உலகில் வெறும் ஒன்றரை கோடி (1.50 கோடி) மக்கள் தொகையாக இருக்கும் யூதர்களின் உணர்வை மதித்து, மிகைப்படுத்தப்பட்ட வரலாற்றைச் சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் இந்நாடுகள் உலகில் பரவி வாழும் 150 கோடி முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் உலக மக்களுக்குப் பொதுவாகவும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறுதித் தூதரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசவும் எழுதவும் படமெடுக்கவும் உரிமை அளிப்பதைத் தான் முஸ்லிகள் உலகம் முழுவதும், பெரு நகர வீதிகளிலும் அமெரிக்கத் தூதரகங்களின் முன்பும் ஆர்ப்பாட்டங்கள், உணர்ச்சிக் கொந்தளிப்பின் மூலமாகத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
அல்லாஹ் கூறுகிறான் :
இந்த (முஹம்மத்) நபி இறை நம்பிக்கையாளர்களுக்கு (முஃமின்களுக்கு) அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும் அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (அல் குர்ஆன் - 33:6)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எந்த ஒரு இறை நம்பிக்கையாளரும் (முஃமினும்) தம் பெற்றோரை விடவும் பிள்ளைகளை விடவும் என்னை நேசிக்காத வரை (உண்மையான) நம்பிக்கையாளராக ஆகமாட்டார். (நூல் : புஹாரி)
மேலும் யூத கிறிஸ்தவர்கள் தங்களது தூதர்கள் எனக் கூறும் மோசே (மூசா அலைஹிஸ்ஸலாம்) மற்றும் ஏசு (ஈசா அலைஹிஸ்ஸலாம்) உட்பட ஒரு இலட்சத்திற்கும் மேல் அல்லாஹ்வால் உலக மக்களுக்கு வெவ்வேறு காலக்கட்டத்தில் அனுப்பப்பட்டதாகக் குர்ஆனில் கூறப்பட்ட இறைத்தூதர்களை நம்புவதும் மதிப்பதும் அவர்களின் பெயர்கள் உச்சரிக்கப்படும் போதெல்லாம் “இறைவன் அவர்கள் மீது அருள்செய்வானாக” எனப் பிரார்த்திப்பதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். சங்கை மிகுந்த இறைத்தூதர்களில் எவரொருவரையாவது யாரேனும் அவமதித்தாலோ கொச்சைப்படுத்தினாலோ உலகின் அனைத்து முஸ்லிம்களும் வெகுண்டெழுவர். அவ்வாறு செய்யும் அயோக்கியர்களை முஸ்லிம் அரசாங்கங்களும் அமெரிக்காவைப் போன்று வேடிக்கைப் பார்க்காமல் உடனுக்குடன் சட்டத்திற்கு முன்பாக நிறுத்தித் தண்டிக்கவும் செய்யும்.
அது மட்டுமன்றி முஸ்லிமல்லாதவர்கள் வணங்கும் பிற கடவுள்களைத் திட்டக்கூடாதென குர்ஆன் தெளிவாக ஆணைப் பிறப்பிக்கிறது.
அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்போரை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அப்போது அவர்கள் அறிவில்லாமல், வரம்புமீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்; இவ்வாறே, ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம். (அல் குர்ஆன்- 6:108)
இப்படித்தின் டிரெய்லரை வெளியிட்ட யூடியூப் ஒரு கூகுல் இணையதளமாகும். ஒரு நாட்டின் தூதுவரே பலியாகும் அளவிற்கு இந்த இணைய தளம் Innocence of Muslims என்னும் படத்தைப் பரப்பிய நிலையிலும் அந்நிறுவனம் அதற்காக வருத்தமும் தெரிவிக்காமல் தனது தளத்திலிருந்து அதை நீக்கவும் செய்யாமல் எதிர்ப்புகள் வலுத்த நாடுகளில் படத்தைக் காணமுடியாதவாறு மட்டும் தடுத்து வைத்துள்ளது. இதற்குக் காரணமும் அமெரிக்காவில் வழங்கப்படும் கருத்துச் சுதந்திரம்தான்.
இதனைத் தயாரித்தவர்கள், வெளியிட்டுப் பரப்பியவர்கள் மற்றும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அரசாங்கங்களுக்கு மத்தியில் உள்ள ஒற்றுமை ஒன்றேயொன்றுதான். அது இஸ்லாத்தை எப்பாடு பட்டாவது பரவாமல் தடுக்க வேண்டும் என்பதுதான்.
இஸ்லாத்தின் கருத்துக்களையும் குர்ஆனின் வசனங்களையும் கருத்தால் எதிர்கொள்வதில் நிராசையடைந்து விரக்தியில் ஆழ்ந்துள்ள நிலையில் அவர்கள் முன்புள்ள ஒரே யோசனை முஸ்லிம்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அதனால் அவர்கள் கிளர்ந்தெழும்போது அவர்களைத் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்துவதுதான். வானலாவிய அதிகாரமும் செய்தி ஊடகங்களின் மீதான ஆதிக்கமும் இதனை அரங்கேற்றுவதற்கு அவர்களுக்குத் துணையாகவுள்ளது.
இன்று உலகில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஒரு நூல் குர்ஆனாகும். இஸ்லாத்திற்கெதிரான சூழ்ச்சிகள் அதிகரிக்க அதிகரிக்க அதை ஆச்சரியத்துடன் உற்றுநோக்கும் முஸ்லிமல்லாதோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதன் விளைவாக உலகில் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பா முதலிய கண்டங்களில் இஸ்லாம் வேகமாகப் பரவிவருகிறது.
இச்சூழலில் முஸ்லிம்கள் மீதும் நிறைய பொறுப்புகள் உள்ளன. முஸ்லிமல்லாத அனைவரும் நமது எதிரிகளல்ல. நுன்னோக்கி கொண்டு பார்த்திடுமளவிற்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள்தான் இஸ்லாத்திற்கெதிரான செயல்பாடுகளை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உரியமுறையில் பாடம் கற்பிப்பதற்கு நாம் நமது உயிரைவிட மேலாக நேசிக்கும் உத்தமத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பின்பற்றுவதே ஒரே வழி. அதிகாரத்தாலும் படைபலத்தாலும் தமது கொள்கையை எதிர்த்து நின்றபோதெல்லாம் வெகுண்டெழுந்து அவ்வெதிரிகளை வீழ்த்தினார்கள் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். அதே வேளையில் வாழ்க்கை முழுவதும் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் கூரிய அறிவோடும் வாழ்ந்து காட்டி ஒரு ஒப்பற்ற முன்மாதிரியையும் தந்தார்கள் அண்ணல் நபியவர்கள்.
போர்களத்தில் கூட நியாயமின்றி உயிரைக் கொல்வதையோ, பொதுச்சொத்தை சேதப்படுத்துவதையோ, பெண்கள் குழந்தைகளைக் கொள்வதையோ மானபங்கப் படுத்துவதையோ, சாலையோர மரங்களை வெட்டுவதையோ, கிணற்றில் உள்ள நீரைப் பாழ்படுத்துவதையோ, வரம்புமீறிச் செயல்படுவதையோ தம் தோழர்களிடம் தடுத்தார்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். அதேசமயம் தமது தூதுச்செய்தியை எத்திவைப்பதிலும் இணைவைப்பதால் ஏற்படும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் மக்களிடம் தோலுரித்துக் காட்டுவதிலும் மாபெறும் வெற்றியும் கண்டார்கள்.
இறையச்சத்தையும் மறுமை வாழ்வையும் முன்வைத்தே தம் தோழர்களையும் முஸ்லிம் சமூகத்தையும் உலகவாழ்வில் நெறிப்படுத்தினார்கள். இத்தகைய அழைப்புப் பணிகள் மூலம் தான் இஸ்லாம் வளர்ந்தது. இப்பணியை முன்னெடுத்துச் செல்வதின் மூலமும் அதில் நமது வாழ்வையே முன்மாதிரியாக்கிக் காட்டுவதின் மூலமுமே இஸ்லாத்தின் எதிரிகளைத் மென்மேலும் நிராசையடையச் செய்யலாம். |