நகராட்சி மன்றங்கள் - நகரை மேன்படுத்தவும் நகர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தனது முழுக் கவனத்தையும் செலுத்துவதை விட்டு தங்களுக்கிடையே தனிதனியாகவும், கூட்டாகவும் இதயங்களில் “பனிப்போர்” சுமந்து ஐந்தாண்டையும் காலவிரயம் செய்துக் கொண்டு வாழ்தல் தேவையா? என்ற கேள்வி எண்ணற்ற நல் இதயங்களின் மலைப் போன்ற சிந்தனைக்கும் சிதைவுக்கும் தள்ளப்பட்ட ஒன்றாகும்.
மனிதனாய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்த பிறப்பை தனக்கும் தன்னைச் சூழ்ந்துள்ள சமுதாயத்திற்கு பயன்யுள்ளதாய் மாற்றிக் கொள்ள – அவரவருக்கு உரிய பொறுப்புகளையும், கடமைகளையும் சரிவர நிறைவேற்ற வேன்டும். அவ்வாறு செய்வதின் மூலம் தனக்கும் தன்னைச் சார்ந்துள்ளோருக்கும், சமுதாயத்திற்கும் நன்மை செய்து, மக்கள் மனதில் நீங்காத இடம் பெறுகிறார்கள்.
அப்படிப்பட்ட சமுதாயத் தொண்டுகள் செய்ய ஏற்ற இடம் தான் – உள்ளாட்சி மன்றங்கள் எனும் பஞ்சாயத்து, நகராட்சி மன்றங்கள். பிரதமர், முதல்வர், எம்.பி., எம்.எல்.ஏ – போன்றோரை வாக்களித்த மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், தனக்கு வாக்களித்த மக்கள் அனைவரையும் இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே தான் மக்களால் எளிதில் தொடர்புக் கொள்ளக்கூடிய வகையில் – பாமர மக்களின் இன்னல்கள், தேவைகள் புரிந்தவர்களாக – ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாகப்பட்டது தான் இந்த உள்ளாட்சி அமைப்புகள்.
பண்பாக பலரோடும் பழக வேண்டும்.
ப(ணி)னித் துளிக்குள் ஊரை பார்க்க வேண்டும்.
நன்மைகளைச் செய்கின்ற நல் உள்ளம் வேண்டும்.
நாளைக்கு கலங்காத கண்ணியம் வேண்டும்.
பொய் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும்.
பொறாமை கொள்ளாத ஞானம் வேண்டும்.
கையிரண்டும் உழைக்கத்தான் கவனம் வேண்டும்.
காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும்.
சொன்னபடி நடக்கின்ற உண்மை வேண்டும்.
சொன்னால்தான் நடக்கின்ற மன்றம் வேண்டும்.
வீட்டு, குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. ஆனால் நகராட்சி மன்றத்திலோ “குழாயடி சண்டை” என்ற செய்திகள் ஒவ்வொரு நாளும் தலைப்பு செய்தியாக வருகின்றது. தொண்டு எனும் உயரிய நோக்கில் பொது சேவை செய்ய வருபவரை எவரும் நிர்பந்திப்பதில்லை. தலைவர், உறுப்பினர் என்று மன்றத்தில் கோலோச்ச அன்று தானாக முன்வந்து தங்களுக்கு வாக்களிக்கும்படி மக்கள் மன்றத்தில் ‘நாக்கு கொண்டு வாக்கு’ கேட்டோர், இன்று அந்த மக்கள் - ஏன் வாக்களித்தோம்? என எண்ணுகின்ற நிலைக்கு ஆளாக்கலாமா?. உங்கள் அனைவருக்கும் வாக்களித்தோர் வேறு யாரும் இல்லை. உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் தெரு-விசுவாசிகள் - என அறிந்தோர் தெரிந்தோர் தானே. அம்மக்கள் எந்த நம்பிக்கையில் உங்களுக்கு வாக்களித்தனர் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய கடமை, வாக்கு-பெற்றோருக்கு இருப்பதை எவரும் மறுக்க முடியாது.
ஒரு பறவை மற்றொரு பறவைக்கு கூடு கட்டித் தருவதில்லை. ஆனால் மனிதனோ, சக மனிதனுக்கு வீடு கட்டித் தருவதிலிருந்து இன்ன பிற தேவைகளை செய்து முடிக்கக் கூடிய தொண்டினை அடித்தளமாக கொண்டுள்ளான். இதனை நன்கு அசைப்போட்டு சிந்திதீர்கள் என்றால் தொண்டறம் என்ற அடித்தளத்தில் தான் மனித வாழ்வு என்ற கட்டிடமே எழுப்பப்பட்டுள்ளது என்பது புரியும். “அனுபவங்களிலிருந்து நல்ல முடிவுகள் தோன்றுகின்றன. மோசமான முடிவுகளிலிருந்து நல்ல அனுபவங்கள் தோன்றுகின்றன”.
நகர் மன்றம் ஒரு வீடு என்றால், உறுப்பினர்கள் தூண்களாகவும், தலைவர் மேல் கூறை-சுற்றுச் சுவர்களாகவும், அதிகாரிகள் கதவு ஜன்னல்களாகவும் அமைகிறார்கள். இவர்கள் அனைவரும் அவரவர் பொறுப்புகளை செவ்வனே செய்தால் தான் அந்த வீடு எனும் கட்டிடமும், அதனுள் உறையும் நகர்மக்களும், பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும், பலமாகவும் இருக்க முடியும் – நிலைக்க முடியும். இல்லையென்றால், நகர் மன்ற பதிவேட்டில் மட்டுமே உங்கள் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். மக்கள் மனதிலோ ஆறாத தழும்புகளை ஏற்படுத்திவிடும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.
ஒளி குறைந்த மன்றத்திக்குள் நீ இருக்கும் போது
உன் இதயத்தில் நல்-தீபம் எரிந்துக் கொண்டிருந்தால்
உன் விழிகளுக்கும் வழி தெரியும்... பணிகளுக்கும் வழி பிறக்கும்...
நாணயத்திற்கு இரு பக்கங்களைப் போன்று, எல்ல பிரச்சனைகளிலும், அவரவர் எண்ணத்தைப் பொறுத்தே நல்லதும் கெட்டதும் அமையும். ஆனால், நீங்கள் நாணயமாக (நடுவராக) எதை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பது தான் கேள்வி. பாதகங்களைக் கண்டு அஞ்சுகிறவன் மேற்கொண்டு இயங்க முடியாமல் முடங்கிப் போகிறான். சாதகங்களை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி சவால்களை ஏற்றுக் கொண்டு அதையே சாதனையாக மாற்றிக் கொள்கிறவன் மட்டுமே மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறான். நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
சில மனிதர்களிடத்தில் “தேவைக்கு முன் நேர்மை தோற்றுவிடுவதில்லையா! அது போல பணம் படைத்தவர்களின் எண்ணிக்கையை விட நல்ல-மனம் படைத்தவர்களின் எண்ணிக்கை பெருகவில்லையே ஏன் என்பதும் - இது போன்ற “பனிப்போர்” தோன்ற காரணமாகி விடுகிறதோ?
ஒருவருக்கு பெருஞ்செல்வம் வந்து சேர்தல் என்பது – கூத்தாடும் அவைக் களத்தில் வந்து கூடும் மக்கள் கூட்டம் போன்றதாகும். கூத்து முடிந்துவிட்டால், அந்த மக்கள் கூட்டம் கலைந்து போய் விடும். அது போல, கோடி கோடியாய் சேர்த்துவிட்ட மாடி மனிதர்களை நாடிச் செல்வதே நல்லது என எண்ணாமல், உண்மையாய் உழைத்து உயரும் உத்தமர்களையே உதாரணமாகக் கொண்டு வாழுங்கள்; வைரங்களாய் ஒளிவீசுங்கள்.
வெறும் பணத்தால் மட்டுமே எல்லா உறவுகளையும் நட்புகளையும் அடைந்து விடமுடியாது. நல்ல உறவுகளால் நட்பால் பணத்தை சம்பாதித்து விடலாம். ஆனால், நல்ல உறவுகளை நட்புகளை பணத்தால் விலைக்கு வாங்கிவிட முடியாது. மன்றத்திற்குள் எப்போதும் என்றென்றும் பரஸ்பர நல்லுணர்வு நிலவுவது உங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்தாகும். அதுவே உங்கள் சொத்தாகும்.
நம்மில் பலரும் சாம்பல் குவியலில் பானையை வரைந்து கொண்டே வளைந்த வாழ்க்கைக்கு சொந்தகாரர்களாகி விடுகிறோம். எனவே, இன்பச் சுரங்கமாக இருக்க வேண்டிய வாழ்வு துன்ப ஊற்றாக அமைந்து விடுகிறது. நேற்றையைப் பற்றிய சுமையும், நாளையைப் பற்றிய பயமும் இன்றைய சுகத்தை சுமையாக்கும் சொல்ல முடியாத உணர்வுகளை உங்களுக்குள் வரவழைக்கும்.
சரி ஒரு கரை; தவறு ஒரு கரை
இரண்டும் கொண்டது நகர்மன்றதின் குளக்கரை
இரண்டு கரையும் இல்லையென்றால்
வறண்டு போகும் பாருங்கள்
தெரிந்த உண்மை கூறுங்கள்
தெளிந்து கரை சேருங்கள்
ஒவ்வொருவரும் தாம் சொல்வது தான் சரி; மற்றவர் கூறுவது தவறு என்று நிரூபிக்கவே தங்கள் மூளை உழைப்பைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள் என்பதே அந்த வாக்குவாதம் செய்திடும் முறையின் தத்துவமாகும். வாக்குவாதம் செய்பவர்களை ஊக்கப்படுத்துவது என்பது உள்ளடக்கமாக உள்ளது என்ற போதிலும், அது மற்றவர்கள் மீது ஆக்ரோஷமாக பாயும் பாய்ச்சல் முறையாகுமா?. வாக்குவாதம் செய்யும் எவரும் இறுதியில் தனது நிலைதான் சரி, தான் தான் வெல்ல வேண்டும் – என்ற அற்ப ஆசையில், நியாயமான உண்மை தகவல்களை கூட மறைத்துவிட்டு தத்தம் பக்கம் மட்டுமே நியாய கூக்குரலிடுவது எவ்வகையில் நியாயம்?. ஒருவன் நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கும் அந்நாளில் தான் அவனுடைய முழு வாழ்க்கையும் மாறத் தொடங்குகிறது... தொடருகிறது...
வார்த்தைகள் ஒன்றை உருவாக்கவோ அல்லது அழிக்கவோ செய்யும், அவற்றை வளப்படுத்தவோ அல்லது தோய்ந்து போகவோ செய்யும். எனவே, வார்த்தைகள் பூப் போன்றவை. அதை தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் தான் நன்மதிப்பைப் பெற்றுத்தரும். நறுமணத்தை வீசி வரும்.
நல்லெண்ணமில்லாத செயல் - வரப்பற்ற வயல், செயல் இல்லாத எண்ணம் - இலக்கின்றி செல்லும் ஏவுகணை. நம் வாழ்க்கை இலக்கு நோக்கியதாக சிறக்க வேண்டுமே தவிர, விளக்கு நோக்கிய விட்டில்களாகி விடக்கூடாது. “நல்ல நோக்கம் எதுவும் இல்லாமல் இருக்கும் மனிதன் பாய்மரமில்லாத கப்பலைப் போன்றவன்”. காலம் அதன் கடமையை காலம் காலமாய் சரிவர செய்துதான் வருகிறது. அது போல அவரவர் கடமைகளை உரிய காலத்தில் சரிவர செய்து வந்தால், ஒவ்வொரு மனிதரும் அவரவர் ஏற்ற துறையில் மாமேதைகளே.
நகர்மன்றத்தின் வெற்றியின் சிகரத்தை எட்டப்போகும் உங்களுக்கு இனிய வார்த்தை பெற்றோர் இட்ட பெயரல்ல... உங்கள் பெயர். அது ஓர் அடையாளக்குறி அவ்வளவுதான். மேகத்திலிருந்து வரும் தூய்மையான மழையைப் போல, மலரிலிருந்து தவழ்ந்து வரும் நறுமணத்தைப் போல - உங்கள் பெயர் நீங்கள் நடந்துக்கொள்ளும் நேர்மையால், கனிவானப் பேச்சால், விட்டு கொடுக்கும் மனப்பாண்மையால் மக்கள் மன்றத்திற்காக உழைக்கின்ற வியர்வையால் - உயரட்டும். அந்த உயரும் வெளிச்சக்கீற்றில் உங்கள் முகவரி தெரியட்டும். நன்றாக புரிந்துக் கொள்ளூங்கள், உங்கள் வெற்றிக்கான வெளிச்சமும், வீரமும், விவேகமும் வெளியே இல்லை. மாறாக அது உங்களுக்குள்ளேயே தான் இருக்கிறது...
மன்றங்கள்
மாமன்றங்களாக
மனித குலத்திற்கு நன்மைகள் பல செய்திட படைத்தவனிடம் பிரார்த்திப்போமாக...
- அன்பின் அலா
|