| |
ஆக்கம் எண் (ID #) 57 | | | சனி, செப்டம்பர் 29, 2012 | | "ஹஜ்" அன்று பிறந்த பாலகனாக...! சமூக பார்வையாளர்
|
| இந்த பக்கம் 4409 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய | |
அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த கட்டுரை ஹஜ்ஜுடைய சட்டங்களையோ அதன் செய்முறை விளக்கங்களையோ குறிப்பிடுபவை அல்ல. பொதுவாக ஹஜ் செய்பவர்களிடம் ஏற்படக்கூடிய கவனக்குறைவையும் மற்றும் தவறுகளையும் சுட்டிக் காட்டி ஹஜ்ஜுடைய கிரியைகளை இஹ்லாசான முறையில் செய்து ஹஜ்ஜை நிறைவேற்றி , " அன்று பிறந்த பாலகனாக திரும்ப வேண்டும் " என்ற நோக்கில் எழுதப்பட்டதாகும் - வஸ்ஸலாம்.
- கட்டுரை ஆசிரியர்.
|
இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் "ஹஜ்" செய்வது வசதி படைத்தவர்களுக்கு கட்டாயக் கடமையாகும். பண வசதி படைத்தவர் , ஹஜ்ஜுக்கு பிரயாணம் செய்ய உடல் பலமும், மன தைரியமும் பெற்றிருந்தால் அவர் ஹஜ்ஜை அவசியம் நிறைவேற்ற வேண்டும் என்பது அவர் மீது விதியாக்கப்பட்ட கடமையாகும்.
எவர் ஒருவர் ஹஜ்ஜை பரிபூரணமாக நிறைவேற்றுகிறாரோ அவர், "அன்று பிறந்த பாலகனைப் போல் ஆகிவிடுகின்றார்" என்ற நபி மொழிக்கொப்ப ஒவ்வொருவரும் ஹஜ்ஜு கடமையை அதன் முறைப்படி பரிபூரணமாக செய்ய வேண்டும். அப்படி முறையாக எவ்வித குறையுமின்றி செய்தால்தான் ஹஜ்ஜு ஒப்புக்கொள்ளப்பட்ட , ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகும். அதன்றி ஹஜ்ஜு செய்தால் , ஹஜ்ஜு கடமை நிறைவேறுமே தவிர - அதன் பூரண பலனும் கிடைக்குமா என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்!
ஆகையால் ஒவ்வொருவரும் தன்னுடைய ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இஹ்லாசான முறையிலே ஹஜ் கிரியைகளை நாம் செய்ய வேண்டும். தொழுகை, இபாதத் என்று அமல்களை மட்டும் சரியாக செய்து விட்டால் போதாது. எல்லா நேரங்களிலும், பொறுமையை கடைப்பிடித்து அமல்களை செய்ய வேண்டும்.
முந்தையக் காலங்களில் ஹஜ் செய்வது இன்று இருப்பது போல் மிகவும் வசதி வாய்ந்தது அல்ல மேலும் குறுகியக் காலப் பயணமுமல்ல. முன்பெல்லாம் ஹஜ் பயணம் செய்வது என்றால் கால் நடையாகவும், ஒட்டகம் போன்ற வாகனங்களிலும் பிரயாணம் செய்து ஹஜ்ஜை நிறைவேற்றி, வீடு திரும்ப வருடமாகும் அல்லது பல மாதங்கள் ஆகும். அதன் பின் கப்பல்களிலே சென்று வர மாதக்கணக்கில் , வாரக்கணக்கில் ஆனது. ஒவ்வொருவருக்கும் பிரயாணங்கள் சிரமம் நிறைந்ததாகவும் , பயம் மிகுந்ததாகவும் இருந்தது. ஆனால் ஹஜ்ஜுடைய கிரியைகள் மிகவும் சுலபமாகவும் வசதி வாய்ந்ததாகவும் அமைந்திருந்தது. அதனால் ஒருவர் ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வீடு திரும்பும்வரை அது இபாதத் நிறைந்த பயணமாகவே அவருக்கு அமைந்தது.
ஆனால் இன்று அது தலைகீழாக இருக்கிறது , பிரயாணம் என்பது மிகவும் வசதி வாய்ந்ததாகவும் , குறுகிய காலமாகவும் ஆகிவிட்டது. மாதம் , வாரம் என்பதெல்லாம் போய் ஓரிரு நாட்களாகவும், சில மணி நேரங்களாகவும் சுருங்கி விட்டது. அதே நேரத்தில் இபாதத் செய்வதிலும், தங்குவதிலும் சில, பல சிரமங்களும், கஷ்டங்களும் ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது. முன்பு பிரயாணத்தில்தான் அதிக பயம் ஏற்படும் மற்றபடி ஹஜ்ஜுடைய கிரியைகள் சுலபம் வாய்ந்ததாகவே அமைந்தது. ஆனால் இன்று பிரயாணம் சுலபமாகவும் , ஹஜ்ஜுடைய கிரியைகள் சோதனை நிறைந்ததாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தியிருக்கும் இந்த சோதனைகளை, பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் வென்றால் இன்ஷா அல்லாஹ் நம்முடைய " ஹஜ் " பரிபூரணமடையும். ஆகவே சிலதை தவிர்த்து, சிலதை பொறுத்து , சிலதை கடை பிடித்தால் நாம் செய்யும் ஹஜ்ஜை வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.
பொதுவாக ஒவ்வொருவரும் ஹலாலான சம்பாத்தியத்தையே பெற்று செலவு செய்ய வேண்டும், அதுவும் ஹஜ்ஜுக்கு செல்வதென்றால் கண்டிப்பாக ஹலாலான பணமாக இருக்க வேண்டும். தவறான வழியில் சம்பாதித்தது , இலஞ்சம் , வட்டி போன்ற பணம் கலந்தது இருக்கக் கூடாது. எனவே ஹஜ்ஜுக்கு செல்லக்கூடியவர்கள் தங்களுடைய பணம் இறைவனால் ஏற்றுக்கொள்ளக் கூடிய வழியில் சம்பாதித்ததா என்பதை நன்கு அறிந்தே ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும். ஹஜ்ஜுக்கு போய் வந்தால் பாவம் எல்லாம் அழிந்து விடும் என்ற தப்பான எண்ணம் கூடாது.
ஹஜ்ஜுக்கு செல்வோர் கடன் வாங்கி செல்கின்றனர் , அதை அடைக்க கூடிய வசதி இல்லாதவர்களும் கடன் வாங்கி செல்வதுண்டு. வசதி இல்லாதவருக்கு ஹஜ் கடமையே இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். ஹஜ் செய்ய வேண்டும் என்ற மிகுந்த ஆசையின் காரணமாக கடனை வாங்கி ஹஜ் செய்ய வேண்டாம்.
மேலும் ஒவ்வொருவரும் ஹஜ்ஜு பயணம் தொடங்கும் முன்பாக உற்றார், உறவினர் , சுற்றத்தார் மற்றும் நண்பர்களிடம் சென்று அவர்களுக்கும் ஹஜ் செய்பவர்களுக்கும் இடையில் உள்ள மனக்கசப்புகளை மறந்து , மன்னிப்புகளை பரிமாறிக்கொண்டு முழு ஒற்றுமையுடன் புறப்பட வேண்டும். எனவே ஒவ்வொருவரும் அழுது, புலம்பி , கெஞ்சி மன்னிப்பு பெற்றே ஹஜ்ஜு பிரயாணம் மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்வது நம் ஊரில் வெகு காலமாக நடை பெற்று வந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் அது வெகுவாக குறைந்து விட்டது , ஹஜ் பிரயாணம் என்பது ஏதோ சாதாரண பிரயாணம் செய்வது போலாகிவிட்டது.
வல்ல அல்லாஹ் நம் பாவங்களை எல்லாம் மன்னித்து நமது " ஹஜ் " ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக , ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக வேண்டும் என்று விரும்புபவர்கள் அன்று பிறந்த பாலகனைப் போல ஒரு பாவமும் இல்லாதவராக இல்லம் திரும்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக மனக்கசப்புகளை நீக்கியே புறப்பட வேண்டும். எவ்வளவு மோசமான பிரச்சனையாக இருந்தாலும் சரி மன்னிப்புக் கொடுத்தே / மன்னிப்பு பெற்றே ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் ஹஜ் கடமை நிறைவேறலாம் - ஆனால் பரிபூரண பலன் கிடைக்குமா என்பதை அல்லாஹ்வே அறிவான்.
" எவர் ஹஜ், உம்ரா பயணத்தில் இருக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் ஆஜராகும் விருந்தாளிகள் ஆவர். இவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால் பாவம் மன்னிக்கப்படும் " என பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்துள்ளார்கள் ( நூல் : இப்னு மாஜா ) . ஆகையால் , அல்லாஹ்வின் விருந்தினர்களாக அவனுடைய இல்லத்திற்கு சென்று வரக்கூடிய ஹாஜிகள் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து புறப்பட்டது முதல் வீடு திரும்பும் வரை உள்ள பயணங்கள் பொறுமையுடன் இபாதத் நிறைந்ததாக இருக்க வேண்டுமே தவிர வழியனுப்புதல் என்ற பெயரில் 100 , 200 பேர்கள் ஏர்போர்ட் , இரயில்வே ஸ்டேஷன் வரை வந்து வழி அனுப்பி வைப்பதும் , அதை ஒரு சடங்காக ஏற்படுத்தி பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவதுடன், வழியனுப்ப வராதவர்கள் மீது குற்றம், குறை ஏற்பட செய்யவும் வழி வகுக்கக் கூடாது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு ஹாஜிமாரையும் வழி அனுப்ப வரும் பெருங்கூட்டத்தினால் ஏர்போர்ட்டிலும், இரயில்வே ஸ்டேஷனிலும் பிரயாணம் செய்கின்ற மற்ற பிரயாணிகளுக்கு அந்த நிகழ்வுகள் மிகுந்த இடையூறுகளை ஏற்படுத்துகின்றது. ஹஜ்ஜுக்காக பிரயாணம் செய்பவர்கள் அவைகளை உணர்ந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும். பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளிலேயே பிரயாண நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ள வேண்டும். புனிதத்தைத் தேடி பிரயாணிக்கின்றவர்கள் அடுத்தவர்களுக்கு கஷ்டத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்த வழி வைக்கக் கூடாது.
மேலும் ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லும் ஹாஜிமார்களுக்கு உற்றார், உறவினர் மற்றும் சுற்றத்தார்கள் விருந்து கொடுக்கின்றோம் என்ற பெயரில் தடபுடலாக விருந்துகளை ஏற்பாடு செய்கிறார்கள் , சில இடங்களில் வீண், விரயமும் செய்யப்படுகிறது. மேலும் தொடர் விருந்துகளால் ஹாஜிமார்களுக்கு பயண நேரத்தில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எனவே விருந்து உபசாரங்களை தடபுடலாக நடத்துவதை மக்கள் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஹாஜிமார்கள், பயணம் புறப்பட பத்து நாட்களுக்கு முன்பே விருந்துகளுக்கு செல்வதை நிறுத்தி ஆரோக்கியமாக , ஆனந்தமாக ஹஜ் பயணம் மேற்கொண்டு திரும்ப வேண்டும்.
இஹ்ராம் கட்டியவர் நிக்காஹ் ( திருமணம் ) செய்யவோ, திருமணம் செய்து வைக்கவோ, இன்னும் பெண் பேசவோ கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ( நூல் : முஸ்லிம் ). நம்மவர்கள் திருமணம் செய்யவில்லை, திருமணம் செய்து வைக்கவில்லை என்றாலும் கூட, பெண் / மாப்பிள்ளை பேசுவது நடைபெறுகிறது அவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் இஹ்ராம் அணிந்த பின் தடுக்கப்பட்டவைகளை கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும் - கணவன் , மனைவி உறவு , மனைவியை முத்தமிடுதல் , கெட்டப் பேச்சுக்கள் பேசுதல் , குதர்க்க வாதம் புரிதல், இச்சையூட்டும் விசயங்களை பேசுதல் , தைத்த உடைகளை ஆண்கள் அணிதல் அல்லது தலையில் எதையாவது போட்டு மறைத்தல் போன்றவைகள் கூடாது. ஹஜ்ஜின் போது சம்போகம், கெட்ட வார்த்தை பேசுதல், வீண் சச்சரவு ஆகியவை கூடாது என்று வல்ல அல்லாஹ் தனது திருமறையிலே சூரா அல்பகராவில் கூறுகிறான்.
கணவன் மனைவி உறவு , மனைவியை முத்தமிடுதல் என்பது தனியறை (SPECIAL ROOM) எடுத்து தங்குபவர்கள் சிலரிடம் ஏற்பட்டுவிடுகிறது. மேலும் ஹஜ்ஜுக்கு வந்த இடத்தில் குழந்தை தரித்தால் அது பிறந்து சிறந்த குழந்தையாக , பரக்கத் நிறைந்த குழந்தையாக வளரும் என்று நினைக்கின்றனர் இது தவறு. ஹஜ்ஜுடைய சட்டம் அறியாமல் இந்த தவறுகளை செய்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : " மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்த பாவமும் செய்யாமல் யார் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார் " என்று . இதை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல் : ஸஹீஹுல் புஹாரி ). ஆகவே மக்கள் இது விசயங்களில் மிகவும் கவனமாக இருந்து ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.
இஹ்ராம் அணியும் முன்பு நகங்களை வெட்டுதல் , மீசை முடியை கத்தரித்தல் , அக்குள், மர்ம உறுப்பின் முடிகளை களைதல் சுன்னத்தாகும். இவை " சுன்னத் " தானே என்று மெத்தனமாக இருக்க வேண்டாம் - இஹ்ராம் அணிந்த பின் அவைகளை களைவது தடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கீழே உள்ள ஹதீதுகளை படித்தால் அவைகளை இஹ்ராம் அணிவதற்கு முன்பு அவசியம் அகற்றப்பட வேண்டும் என்பது புரியும்.
நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : " விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக்கத்தியை உபயோகிப்பது , அக்குள் முடிகளை அகற்றுவது , நகங்களை வெட்டிக்கொள்வது , மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும் " என்று. இதை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் - நூல் ஸஹீஹுல் புகாரி.
மேலும் ஸஹீஹுல் முஸ்லிமில் அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : " மீசையை கத்தரிப்பது , நகங்களை வெட்டுவது , அக்குள் முடிகளை அகற்றுவது , மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது " என்று.
இதில் நாற்பது நாட்கள் என்பது அதிகபட்சமான நாளை குறிக்கிறது. அதாவது வளர , வளர அகற்றிவிட வேண்டும் - நாற்பது நாட்களுக்கு மேல் விட்டுவைக்க கூடாது என்பதே இதன் கருத்தாகும். ஆகவே ஹஜ்ஜுக்கு செல்லக்கூடியவர்கள் அவசியம் இவைகளை கடைபிடிக்க வேண்டும்.
பெண்கள் இஹ்ராமில் இருக்கும்போது முகத்திரை , கையுறைகளை அணியக்கூடாது , முகம் திறந்தே இருக்க வேண்டும். அந்நிய ஆண்கள் வரும்போது ஹிஜாபை பேண வேண்டும் , அப்போது தலையின் மேல் ஏதாவது வைத்து அதன்மேல் துணியைப் போட்டு முகத்தை மறைக்க வேண்டும் துணி முகத்தில் படக்கூடாது. மேலும் தேவையில்லாத பேச்சுகளை பேசும்போதும், ஹாஜிகளை சந்திக்க வருகின்ற சொந்த, பந்தங்களிடம் உரையாடும்போதும்தான் கெட்டப் பேச்சுக்கள் , குதர்க்க வாதங்கள் வருகின்றன - இவைகளில் அதிகம் கவனம் செலுத்தி தவிர்க்கப்பட / தடுக்கப்பட வேண்டும் - ஹாஜிகள் ஹஜ்ஜு கிரியைகள் முடிந்து வீடு திரும்பும்வரை " ஹஜ் " சம்பந்தமான பேச்சுகள் அல்லாது வேறு எந்த பேச்சும் பேசாமல் இருப்பதே ஏற்றமானது.
வெயில் , மழையின் காரணமாக சில ஆண்கள் தலையை மூடுகின்றனர் , இது கூடாது. தேவைப்படின் தலையை தொடாதவாறு குடையை உயரமாக தூக்கிப் பிடித்து செல்லல் வேண்டும். செருப்பு அணியும்போது பாதத்தின் மேல்புறத்தில் இருக்கும் எலும்பை மறைத்தல் கூடாது, எனவே பட்டையான " வார் " உள்ள செருப்பை அணியாமல் அகலம் குறைந்த( மெலிதான ) " வார் " உள்ள செருப்பை அணிய வேண்டும் அப்போதுதான் மேல் புறத்து எலும்பு மறையாது.
ஹாஜிகள் எல்லோரும் ஒவ்வொரு வேளையும் ஹரம் ஷரீஃப் சென்று ஜமாஅத்'துடனே தொழவேண்டும். பாங்கு சொல்வதற்கு முன்பாகவே ஹரம் ஷரீஃப் சென்று விடுவது நல்லது அப்போதுதான் முழுமையான ஜமாஅத் கிடைக்க வாய்ப்பாகும். ஹரம் ஷரீஃபில் செய்யப்படும் ஒவ்வொரு நல் அமலுக்கும் ஓர் இலட்சம் நன்மைகள் கிடைக்கும் அதனால் சுன்னத்தான , நஃபிலான தொழுகைகளை தொழுவதும், குர் ஆன் ஷரீஃபை ஓதுவதும் , ஸலவாத் சொல்வதும் , திக்ர் செய்வதுமாக இபாதத்துகளை செய்து கொண்டிருக்க வேண்டும். ஓய்வுத் தேவையான நேரங்களில் ஒய்வு எடுத்துக்கொள்ளவும் , உணவுகளை சாப்பிட்டுக்கொள்ளவும் வேண்டும் - ஓய்வும் , உணவும் இல்லை என்றால் இபாதத் செய்ய முடியாது.
சிலர் ஐந்து வேளையும் ஹரம் ஷரீஃப் சென்று தொழுவதில்லை ஏதோ 2 , 3 வேளை மட்டுமே ஹரம் ஷரீஃபில் தொழுவதும் மற்ற வேளைகளில் ரூமிலேயே தொழுது கொள்கிறார்கள். ஏன் என்று கேட்டால் பகல் நேரங்களில் வெயில் அதிகம் என்றும் இரவு நேரங்களில் கை, கால் உளைச்சல் என்றும் ஏதாவது சப்பை காரணங்களை சொல்கிறார்கள் - இதெல்லாம் சோம்பலால் ஏற்படுபவைகளே, இது தவிர்க்கப்பட வேண்டும். ஹரம் ஷரீஃப் சென்று ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்ற தூய (இஹ்லாசான) எண்ணம் நம்மிடம் இருந்தால் எந்த வலியும், வெயிலும் நம்மை அணுகாது என்பது உறுதி.
ஹஜ்ஜுடைய காலங்களில் எங்கும், எதிலும் பொறுமை தேவை. ஹஜ் செய்வதற்காக உலகின் பல மூலைகளிலிருந்தும் பல தரப்பட்ட மக்கள் வருவர். அவர்கள் நிறத்தாலும் , மொழியாலும் , குணத்தாலும், மாறுபட்டவர்களாக இருப்பார்கள். அதிலே படித்தவர் , படிக்காதவர் - நகரத்தவர் , கிராமத்தவர் என்று பல வகைப் பிரிவினரும் கலந்து இருப்பதால் சோதனைகள் பல ரூபத்திலும் வரும். தெருக்களில் நடப்பது தொடங்கி தவாஃப் செய்தல், ஸயீ செய்தல் என்று அரஃபா மைதானம் சென்று திரும்புவது வரை ஒருவரை ஒருவர் முந்துவது , இடித்துவிட்டு போவது , காலால் மிதிப்பது , சில நேரம் கை கொண்டு தள்ளிவிட்டு போவது என்று பலவாறான தொல்லைகள் (சோதனைகள்) அங்கே உண்டாகும் - எல்லாவற்றுக்கும் தேவை பொறுமையை கடைப்பிடிப்பதே.
ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது சுன்னத். அதை முத்தமிட முடியவில்லையே என்பதற்காக வேண்டி முண்டியடித்துக்கொண்டு செல்வது தடுக்கப்பட்டுள்ளது (ஆகவே இங்கேயும் பொறுமை தேவை). தஹஜ்ஜதுடைய வேளை போன்ற ஆட்கள் குறைவாக இருக்கும் சமயங்களில் சென்று முத்தமிட்டுக் கொள்ளலாம்.
மேலும் பொறுமையை சோதிக்கக் கூடிய இடங்கள் ஷைத்தானுக்கு கல் எறியுமிடங்கள் இங்கேயும் நாம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். மினாவில் பொறுக்கி எடுக்கப்பட்ட சிறிய கற்களை எறிய வேண்டும் அதல்லாது பெரும் ,பெரும் கற்களை வீசுவதோ, செருப்பு, பெப்சி டின், பாட்டில் போன்றவைகளை எறிவதோ கூடாது - இவைகள் எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.
எல்லா நேரங்களிலும் பொறுமையை மேற்கொள்ள வேண்டும் , ஹஜ்ஜுடைய காலத்தில் பொறுமை மிகவும் சோதிக்கப்படும். மிக முக்கியமாக ஒழுச்செய்யக்கூடிய இடங்களிலும் , பாத் ரூமுக்காக நிற்கும்போதும் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் வரிசையாக நிற்போம் இடையிலே சிலர் புகுவர், அடுத்தது நாம்தான் என்றிருப்போம் பின்னால் நிற்பவர் அல்லது பக்கத்தில் நின்றவர் நம்மை முந்திக்கொண்டு சென்றுவிடுவார். ஒரு வேளை அவருக்கு அவசரமாக இருந்திருக்கலாம் அல்லது நினைவற்று சென்று இருக்கலாம் , இதில் நியாயம் பேச ஒன்றுமில்லை நம்மை முந்தியவருக்கும் - நமக்கும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட சோதனை என்பதை மனதில் நிறுத்தி பொறுமையை மேற்கொண்டால் நமக்கு நன்மைகள் அதிகமாக பதியப்படும். இந்த பொறுமையின் காரணமாக ஜமாஅத் தொழுகை விடுபட்டால்கூட அதன் பலனை இறைவன் நமக்கு அருள்வான்.
ஹஜ் செய்வதற்கு குரூப் , குரூப்பாக வந்திருப்பவர்கள் சமையல் மற்றும் தேவையான வேலைகளை ஒற்றுமையாக இருந்து எல்லோரும் சமமாக பகிர்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சண்டை சச்சரவு இல்லாது செய்து கொள்ள வேண்டும். மேலும் நம்மிலே சில பெண்கள் என்ன செய்கிறார்கள் என்றால் , அவர்களுடன் ஒன்றாக ஹஜ்ஜுக்கு வந்து ஒரே இடத்தில் தங்கி இருக்கும் நபர் யாருக்காவது கை, கால் பிசகு , எலும்பு முறிவு அல்லது உடல் நிலை சரியில்லாதிருந்தால் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டியும், அல்லது சமையல் வேலைகளை செய்ய வேண்டியும் ஏதாவது ஒருவரை பெரும்பாலும் அறையிலேயே இருக்க வைத்துவிட்டு , மற்றவர்கள் அதிகமான முறை ஹரம் ஷரீஃப் சென்று தொழுது வருவார்கள். அந்த வெகுளிக்கு ஏதோ சில நேரம் மட்டும் ஹரம் ஷரீஃப் செல்ல அனுமதிப்பார்கள். இப்படி செய்வது மகாத் தவறு, ஒன்றாக வந்திருக்கும் அனைவரும் சமமாகவே நடந்து கொள்ள வேண்டும். இப்படி செய்வது புத்தி சாலித்தனம் என்று நினைக்காதீர்கள் , உங்களுடைய அத்தனை இபாதத்களின் பலனும் அந்த வெகுளிக்கு கிடைக்கும் என்றாலும் உங்களுக்கு அந்த பலன்கள் கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதை மனதில் நிறுத்தி செயல்படுங்கள்.
ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திருப்பவர்கள் அந்த கடமையை நிறைவேற்றுவதிலேதான் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமே தவிர, பொருட்கள் வாங்குவதிலே உங்கள் கவனத்தை செலுத்தக்கூடாது - ஏன்! பொருட்களே வாங்காதீர்கள் அதுதான் சிறந்தது - பொருட்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டால் தொழுகை , இபாதத்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்டுவிடும். கடைகளிலேயே நேரம் அதிகம் போகும் - தொழுது கொண்டிருக்கும்போதே ஷைத்தான் கெடுப்பான் ஸலாம் வாங்கிய உடனே அந்த கடைக்கு போகனும் , இந்த பொருளை வாங்கனும் , கொஞ்சம் தாமதித்தாலும் கூட்டம் கூடிவிடும் அதனால் அந்த பொருளை வாங்க முடியாமல் போய்விடும் என்று. மேலும் உடன் வருபவர்களுக்கும் இது சிரமமே. பொருள் வாங்குபவருக்காக வேண்டி மற்றவர்களும் துணைக்கு போக வேண்டியுள்ளதால் இருவரின் இபாதத்துகளும் வீணடிக்கப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக , ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : " பூமியில் அல்லாஹ்விற்கு மிகப்பிரியமான இடமாகிறது , மஸ்ஜித்களாகும். பூமியில் அவனுக்கு மிக வெறுப்பான இடமாகிறது , கடை வீதிகளாகும் - (நூல் : முஸ்லிம் ). எனவே பொருட்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விடுவது நல்லது.
மக்களில் பலர் வீடியோ கேமராவை கண்டால் தங்கள் கைகளை அசைப்பதும் , குடை, துணி, பேக்' களை உயர தூக்கி காட்டி தங்களை அடையாளப்படுத்துவார்கள் டெலிவிசனில் நம் சொந்தம், பந்தங்கள் பார்த்துக்கொண்டிருப்பார்களே என்று எண்ணியவர்களாக இப்படி செய்கிறார்கள். இவைகளும் தவிர்க்கப்பட வேண்டும்.
மிக முக்கியமாக செல்போன்களில் பேசுவதை ஹரம் ஷரீஃபிலும், அரஃபாவிலும் மேலும் இபாதத் செய்யக்கூடிய இடங்களிலும் முழுமையாக தவிர்த்து விடுங்கள். ஊருக்கும் , உறவினர்களுக்கும் பேச வேண்டும் என்றால் தாங்கள் தங்கி இருக்கும் இடங்களில் இருந்து பேசுங்கள். மற்ற நேரங்களில் " சைலண்ட் " டில் வைத்துக் கொள்ளுங்கள் , மிக அவசியமான போன் எதுவும் வந்து இருந்தால் ஹரம் ஷரீஃபிற்கு வெளியில் சென்று பேசுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
இன்றையக் காலத்தில் ஹஜ்ஜு செய்ய செல்பவர்களுக்கு செல்போன் மிக,மிக உதவியானது என்றாலும் கூட, ஹஜ்ஜு கிரியைகளை பாழாக்குவதில் முதலிடத்தை பிடிப்பது அந்த செல்போன்கள்தான். ஹஜ்ஜின் கூட்ட நெரிசலில் வழி தவறி செல்வதை தவிர்க்கவும் , தங்குமிடங்களின் வழியைத் தேடவும் மேலும் பல வகையிலும் செல்போன் மிகவும் இன்றியமையாததுதான். ஆனால் ஹஜ் செய்ய வருபவர்கள் அவசியமான தேவைகளுக்கு மட்டுமா செல்போனை உபயோகிக்கிறார்கள்?? . அங்கிருந்தே சொந்தம் , பந்தங்களுடன் போனில் பேசுகிறார்கள். தவாஃப் சுற்றும்போது போன் வரும் அல்லது சிலர் அவர்களாகவே போன் செய்து பேசுவார்கள் 4 வது சுற்று முடிந்துவிட்டது 5 வது சுற்று தொடங்குகிறோம் என்றோ அல்லது 7 சுற்றும் முடிந்துவிட்டது ஸயீ செய்யப் போகிறோம், இந்தா மச்சிக்கிட்டே பேசு, மாமாக்கிட்டே பேசு என்பதும் வீடியோ எடுப்பதும் போட்டோ எடுப்பதுமாகவேதான் இருக்கிறார்கள்.
இங்கே மட்டுமா அரஃபாவிலும்கூட, எங்கே , எந்த இடத்தில் ஒரு செகண்ட் கூட தவற விடாமல் அல்லாஹ் இடம் மனம் உருகி , கண்ணீர் வடித்து நம் பாவங்களை பொருத்தருள வேண்டனுமோ அங்கேயும்கூட இந்த செல்போனை விட்டதில்லை. அங்கிருந்து சொந்தம் பந்தங்களுக்கு செல்போன் மூலம் நேரடி ஒளிபரப்பு ... நல்லா கவனியுங்க அரஃபா மைதானத்திலே இருக்கிறோம் ... " துஆ " நடந்து கொண்டிருக்கிறது நல்லா தெளிவா கேட்கிறதா ?. இந்த செயல்கள் அவர்களுடைய இபாதத்துக்கு மட்டுமல்ல இடைஞ்சல், மற்றவர்களின் இபாதத்துக்கும் இடைஞ்சல்தான். எனவே செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவும். நாங்கள் மட்டுமா பேசுகிறோம் மற்ற நாட்டுக்காரர்களும் , நம் மக்களும் நிறையப்பேர் பேசத்தானே செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டாம்.
" அல்லாஹு தஆலா அரஃபாவின் நாளில், தன் அடியார்களுக்கு நரகிலிருந்து விடுதலை அளிக்கும் எண்ணிக்கை அளவு வேறு எந்த நாளிலும் அளிப்பதில்லை" ( நூல் : இப்னு மாஜா ). ஆகையால் நம்முடைய ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்றால் தேவையற்றவைகளை தவிர்த்து இபாதத்துகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இன்னும் மக்களிலே சிலர் சோம்பலின் காரணமாகவும் கூட்ட நெரிசலில் ஏற்படும் சிரமத்தை தவிர்ப்பதற்காகவும் தவாஃப் செய்யவும், ஸயீ செய்யவும் ( WHEEL CHAIR ) சக்கர நாற்காலிகளை வாடகைக்கு அமர்த்தி அதில் உட்கார்ந்து செல்கின்றனர் - இது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. உங்களால் முடியும் மட்டும் அந்த சிரமங்களை பொறுத்துக்கொண்டு சக்கர நாற்காலிகளின் உதவி இல்லாமலே தவாஃபும் ஸயீ யும் செய்ய வேண்டும். எந்த வகையிலும் உங்களால் சக்கர நாற்காலியின் அல்லது தூக்குபவரின் உதவியின்றி அந்த கிரியைகளை செய்ய முடியாது என்ற நிலை வந்தால் மட்டுமே நீங்கள் அவைகளை உபயோகிக்க வேண்டும். அன்று பிறந்த பாலகனை போல் திரும்ப வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
தவாஃப் செய்து கொண்டிருக்கும்போது தொழுகைக்கான இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அல்லது அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டால் , தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்த உடன் விட்ட இடத்திலிருந்து தவாஃபை தொடர வேண்டும். எனவே இகாமத் சொல்லும்வரை காத்திராமல் , பாங்கு சொல்லி முடித்ததும் சுற்றிக்கொண்டிருக்கும் சுற்றை முடியுமானால் பூர்த்தி செய்துவிட்டு அல்லது பாங்கு சொன்ன உடனேயே தொழுகைக்கு ஆயத்தமாகி விடுவது நல்லது.
" துஆ " ஒப்புக்கொள்ளப்படும் இடங்களான அரஃபா , முஜ்தலிஃபா போன்ற இடங்களில் அதிகமதிகம் " துஆ " கேட்பதும் , தஸ்ஃபீஹ் , குர்ஆன் ஓதுதல் இவைகளில் ஈடுபடுதல் மேலானதாகும். எங்கெங்கு "துஆ" க்கள் கபூலாகுமோ அங்கெல்லாம் மிகுந்த இபாதத்துடன் " துஆ " கேட்க வேண்டும். ஹஜ் கபூலாக வேண்டும் , அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்ப வேண்டும் என்பதே ஹாஜிகளின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
ஹஜ்ஜு செய்வதற்கு முன்போ அல்லது ஹஜ்ஜு செய்த பின்போ ஹாஜிகளின் பிரயாண அட்டவணைப்படி புனித மதீனா நகரத்திற்கு ஜியாரத்திற்காக வந்து சில நாட்கள் அந்த புனித பூமியிலே தங்கி திரும்புவீர்கள் - இங்கே தங்கி இருக்கும் காலமெல்லாம் இபாதத்துடனே இருக்க வேண்டும். அதிகமதிகமாக குர்ஆன் , ஸலவாத் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு வீடு திரும்பும்வரை உங்கள் பயணத்தை இஹ்லாசானதாக அமைத்துக் கொள்ளுங்கள்.
ஹாஜிகள் அனைவரும் புனித மதீனாவில் உள்ள மஸ்ஜிது நபவிக்குச் சென்று அடக்க ஒடுக்கத்துடன் ஜியாரத் செய்வதோடு அங்குள்ள மஸ்ஜித் கூபா , மஸ்ஜித் கிப்லத்தைன் போன்ற புனித மிக்க மஸ்ஜித்களுக்கு சென்று இரண்டு ரக்அத் காணிக்கைத் தொழுகை தொழுது வருவதுடன் , ஜன்னத்துல் பகீஃ , உஹது ஷுஹதாக்கள் அடக்கஸ்தலங்களுக்கும் சென்று மார்க்கம் அனுமதித்த முறைப்படி ஜியாரத் செய்து வாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
" மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர, ஏனைய பள்ளிகளில் தொழுவதைவிட எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். " இதை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல் : ஷஹீஹுல் புகாரி ) ஆகையால் கடமையான தொழுகைகளை தொழுவதுடன், சுன்னத், நஃபீலான தொழுகைகளையும் மஸ்ஜித் நபவியிலேயே தொழுது அதிகமான நன்மைகளை பெற வேண்டியது.
மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : " எனது இல்லத்திற்கும் எனது மிம்பருக்கும் இடைப்பட்டப் பகுதி சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்! எனது மிம்பர் எனது ஹவ்ள் (அல்கவ்ஸர் தடாகத்தின் ) மீது அமைந்துள்ளது " என்று. எனவே, முடிந்தமட்டும் ஹாஜிகள் இந்த இடத்தில் காணிக்கைத் தொழுகையை தொழவும் - முடியாவிட்டால் மஸ்ஜிதில் எந்தப் பகுதியிலும் காணிக்கைத் தொழுகையைத் தொழுதுக்கொள்ளலாம்.
ஹஜ்ஜுக்கு சென்று வந்தவரை " ஹாஜி " என்று ஓர் அடைமொழியை வைத்து அழைக்கிறோம் - இது மார்க்கத்தால் அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம் இல்லை என்றாலும் கூட, " ஹாஜி " என்று அழைப்பவருக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் முந்தையக் காலங்களில் இருந்தது. இப்பொழுது எல்லா ஹாஜிகளுக்கும் அந்த மதிப்பும் , மரியாதையும் இல்லை என்பதையும் ஏதோ சிலருக்கு இருக்கிறது என்பதையும் உணரலாம்.
முப்பது , முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்தியா, இலங்கை போன்ற நமது நாடுகளில் ஹாஜி என்றால் ஒரு தனி மரியாதையே இருந்தது. ஹாஜியார் சொன்னால் சரியாகத்தானிருக்கும் என்பார்கள் - காரணம் ஹஜ் கடமையை முடித்து பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு வந்திருக்கிறார் என்பதால். ஏதாவது பிரச்சனையா , பாகப்பிரிவினையா, பள்ளிவாசல் நிர்வாகமா, பொது நிர்வாகமா அந்த பொறுப்புக்கு ஹாஜியாரை தலைவராக போடுங்கள் என்று யாராவது ஒரு ஹாஜியாரைப் நியமிப்பார்கள். அவர் பணக்காரரா , ஏழையா என்று பார்ப்பதில்லை - ஹஜ்ஜை முடித்து வந்திருக்கிறாரா அவர்தான் அதற்கு பொருத்தம் என்று முடிவு செய்வார்கள். காரணமென்ன , அன்று ஹஜ் கடமையை நிறைவேற்றி வந்தவர்கள் எல்லோரும் அல்லாஹ்வுக்கு மிகவும் பயந்தவர்களாக செயல்பட்டார்கள். நமது பாவங்கள் எல்லாம் மன்னிக்கபட்டுவிட்டது என்ற உறுதி அவர்கள் மனதிலே மேலோங்கி இருந்து, இனிமேல் எந்த சிறு பாவம்கூட செய்யக்கூடாது என்ற எண்ணமும் குடிகொண்டிருந்ததால் அவர்கள் எல்லோரும் நீதமாகவே நடந்தார்கள்.
அவர்களை போன்றே நாமும் பொறுமையைக் கடைப்பிடித்து , தேவையற்றவைகளை விட்டும் நீங்கி , இஹ்லாசான முறையில் இபாதத்களை செய்து ஹஜ்ஜை நிறைவேற்றுவோமாக.
ஹாஜிகள் அனைவரும், மறக்காமல் நம் ஊருடைய ஒற்றுமைக்கும் , ஊரிலே நிலவிக்கொண்டிருக்கும் கொடிய உயிர்க்கொல்லி நோயிலிருந்து விடுதலை பெறுவதற்கும் மற்றும் கலாச்சார சீரழிவிலிருந்து நம்ம ஊரை காக்கவும் வல்ல ரஹ்மானிடம் " துஆ " கேளுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ்! நாம் செய்யும் ஹஜ்ஜை ஏற்றுக்கொள்ளபட்ட, ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கிவைத்து அன்று பிறந்த பாலகனைப் போல திரும்ப கிருபை செய்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம். |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|