இணையதள வாசக நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது தலைப்பில் வழிகாட்டும் பேரறிஞனாக இருப்பவர் யார்? நமக்கு வழிகாட்டியான சன்மார்க்க போதகரான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்பதை மறுக்க முஸ்லீம்கள் யாராலும் முடியாது. நான் எடுத்துக்கொண்ட தலைப்பின் உட்கருத்து இதுவல்ல. வேறு கருத்தை புதைந்து அல்லது புதைத்து அதன் பின்னணியில் ஒரு அறிஞரை அல்ல, பல அறிஞர்கள் எழுதிய புத்தகத்தை வழிகாட்டியாக வைத்து கீழ்க்காணும் கருத்துக்குள் புகுந்து உங்களையும் அழைத்துச் செல்ல விரும்புகின்றேன்.
வழிகாட்டும் பேரறிஞராக புத்தகமே!
செப்டம்பர் இறுதிவாரம் நமதூர் அரசு கிளைநூலகத்தில் பொன்மொழிகளின் நிர்வாகம் ஆயிரம் பொன்மொழிகள் அடங்கிய அறிவூற்று. அதில் ஒன்று நம்பர் 48-ல் வரும் பொன்மொழியாவது “இறந்தபிறகும் நீங்கள் நினைவில் நிற்க வேண்டும் என்றால் உருப்படியானவற்றை எழுதுங்கள். அல்லது எழுதப்படும் அளவுக்கு எதையாவது செய்யுங்கள்” என்றார் பெஞ்சுமின் பிரான்களின். இதைப் படித்ததும் என்னைப்பற்றிச் சிந்தித்தேன்….. நான் எனக்கு பிறகு விட்டுச் செல்லும் சொத்தாக கல்வியின் உயிர்நிலையை வெளிகாட்டும் அறிவுநூல்களை தேர்வு செய்து சுமார் 35 வருடங்கள் பாதுகாத்து வரும் நூல்குறித்து நமதூர் மக்களுக்கு எழுதி காட்ட ஆசைப்பட்டேன். நமதூரிலுள்ள ஏதாவது ஒரு இணையதளத்தில் எழுதி வைத்தால் எனது மரணத்திற்கு பின்னும் அது பின்தொடர வழியாகும் என்று என் உள்ளத்துடன் பேசிக்கொண்டேன். எழுதி விட்டேன். ஜீரணிப்பது, வெளியே கக்குவது அல்லது மறந்து விடுவது உங்களிடம் விட்டு விடுகிறேன். நான் சாதாரண எழுத்தாளர்தான் சுமார் 40 ஆண்டுக்கும் அதிகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இணையதளத்தில் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் ரஹ்மானியா பள்ளி தலைமை ஆசிரியர், எனது கட்டுரையை வெளியிட்டவர் இந்த இணையதளம் தான் இணையதளத்தில் எழுதிட ரஹ்மானியா பள்ளி ஹாஸ்டலில் உள்ள லாப்டாப் எனக்கு உதவியது. இருவர்களுக்கும் நன்றி அல்ஹம்துலில்லாஹ். எப்படி எழுதினேன்…… எப்படி எழுதுவது?
சென்னையில் 2006-வரை எனது எழுத்துப்பணி நடந்து வந்தது. சென்னையிலுள்ள அனைத்து பெட்டிக்கடைகளிலும் தின, வார, மாத இதழ்கள் விற்பனைக்கு வைக்கப்படும் புதியஇதழ் என்றால் வாங்கி வந்து எழுதுவேன். இந்த முறையை எனக்கு கற்றுத்தந்தவர் ஒரு சமயம் சொல்லி தந்தவர் பத்திரிகை ஆசிரியர் ஜெ.எம்.சாலிஹ் அவர்களும், இலங்கை வானொலி கலைவாதி கலீல் அவர்களும் ஆவார்கள். கலைவாதி கலீல் அவர்களை 1979-ல் கொழும்பிலுள்ள சென்ட்ரல் பள்ளியில் சந்திக்கச் சென்றேன். பகல் உணவு அளித்தார்கள். அடுத்த நாள் ஞாயிறு மாலை கொழும்பு மெயின் வீதியில் சம்மன் கோர்ட்டு பள்ளி மறுபக்கம் உள்ள கட்டிடத்தில் இயங்கிவரும் முஸ்லீம் வாலிபச் சங்கத்தில் அழைத்துப் போய் கௌரவித்தார்கள். அதற்கு உதவியது நான் முத்துச்சுடரில் எழுதிய கட்டுரைகள். முத்துச்சுடர் பிரதிநிதி என்றே அறிமுகப்படுத்தினார்கள். அந்த செய்தி இலங்கை தினபதியில் வெளியானது. அந்தக் காலத்தில் பேனாநட்பு என்ற பகுதி எல்லா பகுதிகளிலும் வரும். தினபதி தினகரன் மூலம் இலங்கை தர்ஹா ரோடு என்ற ஊரைச்சேர்ந்த பெண் எழுத்தாளர் சுலைமா ஏ.சமீம் கடிதம் எழுதினார்.
இந்தக் காலத்தில் கடிதங்கள் விமானத்தில் வரும் ஆட்கள் மூலமே வரும் வந்து சென்னையின் மூலம் தபாலில் வந்து சேரும். பேனாநட்பு தோழி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டே சதாசினிமா செய்திகளை எனக்கு எழுதுவார்கள். நான் அவளை திருத்தி மார்க்கவழியில் வரச்செய்தேன். நடிகைகளையும், நடிகர்களையும் பார்க்க சென்னை வர ஆசைப்பட்டு எழுதிய எனது இலங்கை பேனாதோழியை திருத்தினேன். அதில் எனக்கு ஓர் திருப்தியாக இருந்தது. எழுதுவதின் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது.
நல்ல நூல்கள் நம்மை நேர்வழிப்படுத்துமா?
புத்திசாலித்தனம் பிறவியில் அமையும். திறமை என்பதை நாம் அமைத்துக்கொள்வது, அதற்கு சிறந்த கல்விமுறை தேவை என்ற ஓர் பேரறிஞரின் சொல்லை படித்துள்ளேன். புத்திசாலியாகவோ, திறமைசாலியாகவோ நாம் மாற வேண்டுமானால் அறிஞர் (ஆலீம்) உடன் இருக்க வேண்டும். நல்ல அறிவு நூலைப் படிப்பதினாலும் வாரத்தில் ஒரு ஞாயிறுதோறும் நூலகம் சென்று உங்களுக்கு தேவையான சிந்தனை ஓட்டநூல்களை வாங்கிப் படித்து வரவேண்டும்.
1967-ல் எனது புத்தக வழிகாட்டியான இருவரில் ஒருவர் எஸ்.கே.சாலிஹ் -ன் தந்தை சாகுல் ஹமீது பெரிய எஸ்.கே.மற்றொருவர் சின்ன நெசவுத்தெரு, ஜெ.சாகுல் ஹமீது, இரண்டு ஹமீதுகளும் என்மீது மிகுந்த பாசம் கொண்டு எந்த மாதிரி நூல்களை படிக்கவேண்டும் என்று கோடிட்டு காண்பித்தார்கள். இதற்குமுன் நான் படித்த நூல்கள் தமிழ்வாணன் பி.டி.சாமி, மதுபாலா, பி.வி.ஆர். போன்றோரின் துப்பறியும் நூல்களும் வேனுகோபால் என்ற புஷ்பாதங்கத்துரை, லட்சுமி, ஜெயகாந்தனின் குடும்பநாவல்களையும் படித்து வந்த என்னை திசைத்திருப்பினர்.
சென்னை பிளாட்பாரத்தில் முப்பது பைசாவுக்கு 150பக்க துப்பறிவு நாவல்கள் கிடைக்கும். சில சமயம் ஒரு ரூபாய்க்கு நான்கு நூல் வாங்கப் போய் ஒரே இரவில் படித்து அதே பிளாட்பார கடையில் அடுத்த நாள் நான்கு புத்தகத்தை கொடுத்து இரண்டு புத்தகமாக வாங்கிப் போய்விடுவேன். இதன் காலம் 1965-ல் சென்னையில் 1970-ல் சந்தித்த பர்மா அகதியான தண்டையர்பேட்டை மணி அவர்கள் மூலம் தான் எம்.ஆர்.எம். அப்துர்ரஹீம், டாக்டர் மு.வா, கி.ஆ.பெ. விஸ்வநாதன் போன்ற அறிஞர்கள் நூலைப்படிக்க ஆரம்பித்தேன். படித்த நூலில் சுவைத்த பகுதியை எழுதி வைக்கும் முறையை அவர்தான் எனக்கு கற்றுத்தந்தார். 2012-வரை அதை கடைப்பிடித்து வருகிறேன். பத்திரிக்கைக்கும், இணையதளத்திற்கும் ஏதாவது எழுத அது உதவியாக உள்ளது. இணையதள வாசகர்களை நான் கேட்டுக்கொள்வது இதுபோல நீங்களும் படித்த நூல் குறித்து குறிப்பு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மக்கள் எந்த துறைக்குறித்து கேட்டாலும் நாளைக்கு சொல்றேன் என்று கூறிவிட்டு நமது அரசு கிளை நூலகத்தில் அதற்கான நூல் உள்ளது. அடுத்தநாள் போய் நூலகர் முஜீபு அவர்களிடம் விபரம் கூறினால் உடனே அந்தக் குறிப்பிட்ட நூலைப் பெற்றுக் கொள்ளமுடியும். உங்கள் பிள்ளைகளுக்கு விடையளிக்க முடியும். இதனால் உங்களை உங்கள் பிள்ளை ஓர் அறிஞர் என்று எடைப் போடும். அதை புத்தகங்கள் உங்களுக்கு செய்து பெருமை சேர்க்கும்.
(இன்ஷாஅல்லாஹ் காயல்பட்டணம் கலாச்சாரபெருமை எந்த நூலில் படிக்கலாம்? இன்ஷாஅல்லாஹ் வளரும்.)
|