ا ب ت ث ... அலிஃப், பே, தே, ஸே
இந்த எழுத்துகள் பள்ளிக்குப் போய் ஆலிம்சாவிடம் ஓதியதையும் காலை மாலை மக்தப் பள்ளியையும் ஞாபகமூட்டுகிறதா?
அட வாப்பா… எழும்பி சுபுவு தொழுவுமா… தொழுவீட்டு பள்ளிக்கிப் போமா என்ற உம்மாமார்களின் குரல் பிள்ளையை எழுப்பிவிடும்.
தேயிலை குடித்து, வாடா கடித்து பிள்ளைகளை பள்ளிவாசல்தோறும் இயங்கிய மக்தப் பள்ளிக்கு அனுப்பியதையும் குர்ஆன் கல்வியுடன் தொடங்கியதையும், மாலை நேரம் ஸ்கூல் விட்டு வந்தவுடன் மீண்டும் குர்ஆன் ஓதுவதற்காக பள்ளிக்கு விரைவது. பின்னர் விளையாட்டு என அந்தக் காலத்தை சற்று மனக்கண்முன் கொண்டுவருவோம்.
டேய் எழும்புடா… ஸ்கூலுக்கு டைமாகிவிட்டது… சீக்கிரம் கிளம்பு என்று ஏழு அல்லது எட்டு மணிக்கு பிள்ளைகள் எழுப்பப்பட்டு, அது சோம்பல் முறித்து அரைகுறையாக ஆயத்தமாகி சுப்ஹும், குர்ஆன் ஓதலும், காலை துஆ, திக்ருகள் இல்லாத நிலையில் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பும் சிறார்களின் இந்தக் காலத்தையும் எண்ணிப்பார்ப்போம்.
ஸ்கூல் விட்டு மாலை வீடு வந்தும் வராமல், சீக்கிரம் ரெடியாகு… ட்யூஷனுக்குக் கிளம்பு… என கொண்டுவந்த பொதிமூட்டையை மீண்டும் சுமந்துகொண்டு ட்யூஷனுக்கு செல்லும் பரிதாபமான சூழல். இத்தகைய சூழலில் உருவாகும் நம் பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
இப்படித்தான் இன்றைய இளம் பிஞ்சுகளின் காலைப்பொழுது அமைந்துள்ளது. இப்படித் தொடங்கும் காலைப் பொழுதில் எவ்வாறு ‘பரக்கத்’ எனும் அருள்வளம் இறங்கும்? இத்தகைய கல்வி முறையால் எவ்வாறு வாழ்க்கையில் வெற்றிபெற இயலும்? இத்தகைய சூழலில் குடும்பங்களில் எவ்வாறு அமைதி தவழும்? நோய் நொடியற்ற ஆரோக்கியமான வாழ்வு எவ்வாறு கிடைக்கும்? இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதுவல்ல இக்கட்டுரையின் நோக்கம்.
கோளாறு எங்கே? அதை சரி செய்வது எவ்வாறு? மாற்று வழி என்ன? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். இதைவிட சிறந்த வழிமுறைகளை உங்கள் கருத்துகளின் வாயிலாக பதிவு செய்யுங்கள். சிறந்த ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதே இதன் தீர்வாக இருக்க வேண்டும்.
1980களில் எனது மக்தப் கல்வியை காட்டுத் தைக்கா தெரு அரூஸிய்யா பள்ளியில் தொடங்கினேன். அப்போது அரபி எழுத்துகளையும், குர்ஆன் ஓதுவதற்கான பயிற்சியையும் அளித்தவர் பேட்டை ஹஸ்ரத் என்ற பெரியவர்.
எளிய முறையில் அழகிய விதத்தில் எங்களைப் பயிற்றுவித்தார். குர்ஆன் ஓதித் தரும்போதே அதில் வரும் வினைச் சொற்களை ‘ஸர்ஃப்’ எனப்படும் ‘ஃபஅல’ ‘ஃபஅலா’ ‘ஃபஅலூ’ வாய்ப்பாட்டை போதித்தார். இப்படித்தான் அன்றைய பள்ளிவாசல்களில் குர்ஆன் மக்தப் மதரஸாக்கள் சிறப்பான முறையில் உயிரோட்டத்துடன் இயங்கிவந்தன.
விளைவு அதிகாலை (ஸுப்ஹ்) வேளையிலும் அந்தி சாயும் (மஃக்ரிப்) வேளையிலும் இல்லங்கள்தோறும் இறைமறையின் இனிய ஓசையை செவியுறலாம். வாழ்க்கை முறையில் ‘பரக்கத்’ எனும் வளமும் செழிப்பும் பொங்கிய பொற்காலமது.
காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இந்நிலை மாறி தொலைக்காட்சி பெட்டிகள், இண்டர்நெட், மொபைல் போன் ஆதிக்கமும் உலகியல் கல்வியின் முன்னுரிமையும் அளவுக்கதிகமாக வழங்கப்பட்டு, பிள்ளைகளிடம் குர்ஆன் மக்தப் கல்வி இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்ட பரிதாப நிலை. இதனால் குடும்பங்களில் ஒரு விதமான மனஇறுக்கமும் அழுத்தமும் அதிகமாகி நோய்கள் பெருகியுள்ள காலமிது. வாழ்வியலில் ஏகப்பட்ட குளறுபடிகள்.
தனிநபர், குடும்பம், சமூகம் சார்ந்த ஒழுக்க விழுமியங்களின் மூலக்கூறு அல்லது அடிப்படை திருக்குர்ஆனிய வாழ்வியல் முறையே. அதனால் வார்த்தெடுக்கப்பட்ட சமூகம் காலமெல்லாம் வசந்தத்தையே சுவாசிக்கும்.
இன்று நம் பிள்ளைகளின் உலகியல் கல்வி குறித்து எதிர்காலத் திட்டத்துடனும் கனவுகளுடனும் பல திட்டங்களை வகுக்கிறோம். அதில் தவறேதும் இல்லை. அவ்வாறு கவனமாகத் திட்டமிடும் நாம், பிள்ளையின் வாழ்வியல் மற்றும் மார்க்க விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் சற்று கவனக்குறைவாக இருக்கிறோம்.
இதனால் பிள்ளைகளிடம் காணப்படும் சில தவறான பழக்கங்கள் குடும்பத்தின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதை அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள் நம்மை கவலையடையச் செய்கிறது. இதில் குடும்பப் பாரம்பரியம் கவுரவம் என்ற நிலை கடந்து சமூக சீரழிவுகள் இளம் வயதினரிடம் தாக்கம் செலுத்திவருவதை கண்கூடாகக் கண்டுவருகிறோம்.
காரணம், அவர்களுக்கான அடிப்படைக் கல்வியான தீனிய்யாத்தை சரிவரக் கொடுப்பதில் நாம் காட்டிய அலட்சியம்தான். நவீன தொடர்பு சாதனங்கள் இன்று குடும்பங்களிடையே கலாசார சீரழிவை புற்றுநோய் போல் பாய்ச்சியுள்ளது. அலைபேசியால் (Mobile) அலைக்கழிக்கப்பட்டு, முகநூலால் (Facebook) முகம் காட்ட முடியாமல் ஆக்கப்படுகின்றோம்.
இந்தியாவில் இஸ்லாத்தின் வருகையை வரலாற்றில் நோக்கும்போது, அது நமதூருக்கு மிகவும் தொன்மையானது; மார்க்க அறிவு நிறைந்த ஊர் என்றெல்லாம் பேசிக்கொள்கின்ற நம்மிடையே இந்த அவலங்கள் அரங்கேறுவது ஏன்? என்பதை சற்று நிதானமாக சிந்தித்து வினா எழுப்ப வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.
அண்மைக்காலமாக மார்க்க அறிவைப் போதிக்கும் அரபி மதரசாக்களில் மாணவர்கள் குறைந்துபோகும் நிலையை எண்ணும்போது வேதனையாக உள்ளது. சில அரபிக் கல்லூரிகள் சப்தமின்றி தம் பணிகளை நிறுத்திக்கொண்டன. சில அரபிக் கல்லூரிகளில் மாணவர்களைவிட ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. இப்படியே போனால் பள்ளிவாசல்களில் தொழுவிப்பதற்கு இமாம்கள் கிடைப்பது கஷ்டமாகிவிடும் என்று பேசப்பட்டுவருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் வடமாநிலத்தவர்தான் பள்ளிவாசல்களில் பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
அதே வேளையில், நவீன காலத்திற்கேற்றவாறு பாடத்திட்டத்தை அமைத்துள்ள கல்லூரிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம். நமதூரில் நவீன பாடத்திட்டத்துடன் கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் ஆர்வப்பட்டனர். ஆசிரியர் கிடைப்பதில் பிரச்சினையில்லை; தரமான பாடத்திட்டமும் தயார்; மாணவர்கள் கிடைப்பார்களா…? என்ற ஓராயிரம் கேள்விகளுடனும் மலைப்புகளுடனும் இத்திட்டம் தற்போது நிலுவையில் உள்ளது.
காயல்பட்டினத்தின் கடந்தகால சரித்திரத்தைச் சற்று திரும்பிப் பார்க்கிறோம். நமதூர் பாரம்பரியத்தை பேணிக் காத்ததில் பெரியவர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது.
காயல்வாசிகள் சர்வதேச வணிகச் சமூகமாக இருந்துவந்துள்ளனர். அவர்கள் வணிகத்திற்காக சென்ற இடங்களிலெல்லாம் மார்க்கப் பணிகளை பொதுநலத்துடன் செய்துவந்துள்ளனர் என்பது வரலாறு.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை சென்றிருந்தோம். பயணத்தின்போது இலங்கையில் உள்ள இஸ்லாமியக் கலாசாலைகளைத் தரிசித்தோம். காயல்பட்டினத்திலிருந்து வந்துள்ளோம் என்றவுடன் அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு. தமிழகத்திலிருந்து அதிலும் குறிப்பாக காயல்பட்டினத்திலிருந்து அவர்களுக்குக் கிடைத்தவற்றை பெருமையுடன் நினைவுகூர்ந்தனர்.
இன்றைய சூழலில் மார்க்க அறிவு வறண்டுபோய் காணப்படுகிறது. அறிஞர்களிடையே நடைபெற வேண்டிய கலந்துரையாடல்கள் பாமர மக்களிடையே சகஜமாக விவாதிக்கப்படுகிறது. அறிஞர்களிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகள் சமூகத்தில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவர் கருத்தை மற்றவர் சீரணிக்கத் தயாரில்லை.
மார்க்கச் சட்ட விவகாரங்களில் எப்போதும் மோதல் போக்கே தொடர்கிற நிலை. இதனால் ஒரு நற்செயலை செய்வதற்கு பதிலாக அவற்றை எவ்வாறு செய்வது என்ற கருத்துமோதல் முன்னே வந்து நிற்கிறது. அதனால் அது அடிபட்டுப்போய்விடுகிறது. அவரவர் மார்க்கத் தீர்ப்பு வழங்கி ‘முஃப்தி‘யாகும் கவலைக்கிடமான போக்கு.
எந்தக் கருத்து முன்வைக்கப்பட்டாலும் அதில் அதி தீவிர நிலைப்பாடு. இதனால் நடுநிலை சிந்தனையாளர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி என்பது போல நடுநிலை சிந்தனை, நடுநிலைப் போக்கு என்ற பார்வையே நம்மில் காணப்படாமல் உள்ளது.
இவை அனைத்துக்கும் தீர்வாக நமது மஹல்லாக்காளில் குர்ஆன் மக்தப் மதரசாக்களை துரிதமாக தொடங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதன் மூலம் நம் சந்ததியினரை சரியான தீனுடைய வார்ப்பில் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. காயல்பட்டினத்திலிருந்து இஸ்லாமிய அறிவுஜீவிகள் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் மார்க்கச் சேவை ஆற்ற வேண்டும். சமூகக் கவலை கொண்ட ஒவ்வொருவரும் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இது பற்றி சிந்திக்க வேண்டும்.
தமிழகத்தில் குர்ஆன் மக்தப் மதரசாக்களை உருவாக்கும் பணியை சென்னையைச் சார்ந்த ஓர் அறக்கட்டளை அழகிய முறையில் பணியாற்றிவருகிறது. அச்சிடப்பட்ட தெளிவான பாடத்திட்டத்துடன் திறம்பட பாடநூல்களை வெளியிட்டுள்ளது. மக்தப் + தீனிய்யாத் இணைந்த பாடத்திட்டத்தில் இளம் சிறார்களை ஈர்க்கும் வண்ணம் நவீனமயப்படுத்தப்பட்ட முறையில் சீருடையுடனும் சிறந்த சூழலுடனும் இம்மக்தப் மதரசாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. காண்க இணைப்பு: www.deeniyat.com
தொலைநோக்குப் பார்வையுடன் அமைத்துள்ள இதுபோன்ற மக்தப் மதரசாக்களை நமது மஹல்லாக்களிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அமல்படுத்திட உலமாப் பெருமக்களும் ஜமாஅத் பொறுப்பாளர்களும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.
ஊருக்கு வெளியே வசிக்கும் காயல்வாசிகள் தம் பிள்ளைகளின் மார்க்கக் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த இதுபோன்ற செயல்களுக்கு ஊக்கமும் ஆலோசனைகளும் அளித்து தம் பிள்ளைகளை அனுப்பிவைக்க தாய்மார்களைத் தூண்ட வேண்டும்.
எதிர்காலத் தலைமுறையினர் கலிமாவுடனும் இஸ்லாத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழ்வதற்கான அடித்தளம் இதுபோன்ற மக்தப் மதரஸாக்கள்தான். எனவே, இதில் நமது கவனத்தைக் கூடுதலாகக் குவிப்போம். பெற்றோர் தம் பிள்ளைகளை இஸ்லாமியச் சூழலில் வார்த்தெடுப்பதற்கான சிறந்ததோர் அமைப்பு இம்மக்தப்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
படைத்த உமதிறைவனின் பெயரால் நீ ஓதுவீராக! (அல்குர்ஆன், 96:1)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனைத் தாமும் கற்றுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவர். (அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி); நூல்: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 5027)
எனவே, நம் தலைமுறையினரை மார்க்கத்தின் தூண்களாக்குவோம். ஒவ்வொரு மஹல்லாவிலும் குர்ஆன் மக்தப் – காலத்தின் இன்றியமையாத தேவையாகும். |