1857 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் நடந்த ஒரு துயர கடல் நிகழ்வு. சென்றல் அமெரிக்கா என்ற அமெரிக்க நாட்டு வணிகக்கப்பல் வட கரோலினா கடலில் மூன்று நாள் சூறாவளியில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டது. அது தறி கெட்டு மூழ்கத்தொடங்கிய போது அதிலிருந்த 152 பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக உயிர் காக்கும் படகுகளில் ஏற்றி அனுப்பினான் அந்த கப்பலின் மாலுமி.
கப்பலில் எஞ்சியுள்ள 400 பயணிகளையும் காப்பாற்ற வழி வகை தெரியவில்லையே என்ற ஏக்கத்தில் தவித்தார் அந்த மாலுமி. அந்த கப்பலோட்டிகளுக்கு தங்களது உயிரும் உடலும் அல்லது வீட்டில் தங்களின் வருகைக்காக காத்திருக்கும் வயதான பெற்றோரின், இளம் மனைவியரின், பால் வடியும் குழந்தைகளின் முகங்களும் நினைவிற்கு வரவில்லை.
அவனுக்கும் அவனது சக கப்பலோட்டிகளுக்கும் சற்று நேரத்தில் நீரிலேயே சமாதியாகப்போகும் சக மனிதர்கள் நானூறு பேரின் சுவாசம் முட்டும் காட்சி மட்டுமே வானிற்கும் கடலுக்கும் இடையே நிழலாடியது.
தன்னை சாட்சியாக வைத்து நிகழப்போகும் அந்த பேரிடர் பற்றிய துயர நினைவுகளில் அவர்கள் ஆழ்ந்திருக்கும்போதே வாழ்க்கை பற்றிய மனிதர்களின் எத்தனையோ விதமான கனவுகளுடனும் நனவுகளுடனும் ஆசைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் ஹடீராஸ் முனையில் அந்த கப்பல் ஒட்டு மொத்தமாக கடலுக்குள் மூழ்கியே விட்டது.
முடிந்த வரை காப்பாற்றி விட்டோம். இனி நாம் தப்புவதில் தவறில்லை என அவனும் அவனது சக கப்பலோட்டிகளும் முடிவு செய்து நீந்தி வெளியேறி இருந்தாலும் உலகம் அவர்களை பழித்திருக்காது.
மனித உயிர்களின் மீதுள்ள எல்லையில்லாத நேசத்தின் விளைவாக மட்டுமே கடலிலும் கரையிலும் அந்த பெயர் 175 ஆண்டுகள் கழிந்த பிறகும் நன்றியுடனும் பெருமிதத்துடனும் நினைவு கூறப்படுகின்றது. 44 வயதே நிரம்பிய அந்த தலைமை மாலுமியின், மாமனிதனின் பெயர் கமாண்டர் வில்லியம் லேவிஸ் ஹெண்டன் (William Lewis Herndorn).
--------------------------------------------------------------------
பிறப்பும் இறப்பும் எப்படி ஒரு மனிதனுக்கு மிக உறுதியான விஷயமோ அதே போல் ஒழுக்க வீழ்ச்சிகளும் தவிர்க்க இயலாத ஒரு வாழ்வியல் நிகழ்வாக நாம் வாழும் பகுதி உட்பட எல்லா ஊர்களிலும் மாறி வருகின்றது. 100 மீட்டர், 200 மீட்டர், மராத்தான் ஓட்டப்பந்தயம் போல் ஒரு நாள், ஒரு வாரம், ஆயுள் என ஒழுக்க வீழ்ச்சி ஓட்டங்கள் அன்றாட விஷயங்களாகி விட்டன.
முன்பெல்லாம் வயதிற்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்திருக்கும் பெற்றவர்கள் அந்த பெண்ணிற்கு திருமணம் பண்ணிக்கொடுத்தால்தான் நிம்மதி என கூறுவதை நாம் அறிவோம். ஆனால் இன்றோ மண முடித்துக்கொடுத்தோம் நிம்மதியாக இருந்தோம் என்றில்லை. குமரிகள் கிழவிகளாகும் வரை மன சமாதானத்திற்கு உத்திரவாதமில்லை.
--- பெற்றோரின் அந்தஸ்திற்கு இணையான ஆசிரியை, பேராசிரியர்
--- நோய் தீர்க்கும் மருத்துவர்
--- இல்லறம் தவழும் இல்லம் வனையும் மேஸ்திரி
--- ஆத்திர அவசரத்திற்கு வரும் ஊர்தி ஓட்டுனர்கள்
--- உணவுப்பொருள் விற்கும் வணிகன்
இவர்கள் யாவரும் இரவும் பகலும் அடங்கிய ஒரு நாளை இயக்குபவர்கள். கண்ணை விட்டு பிரிய முடியாத இமை போன்றவர்கள்.
இன்றோ ...
கண்ணை குத்தி குருடாக்க முயலும் இமைகளாக இவர்கள் மாறி விட்டிருக்கின்றார்கள். எதிர் பார்க்க இயலாத திசைகளிலிருந்தும் இதயத்தை குறி வைத்து கத்திகள் வீசப்படுகின்றன. எல்லா இடங்களிலும் நம்பிக்கைகளின் மரணம்.
கண நேரமே பீறிடும் உணர்வுகளுக்காக மானம், மரியாதை, குடும்பம், அந்தஸ்து என ஒவ்வொன்றாக தொலைத்து கடைசியாக மார்க்கத்தையும் தொலைக்கின்ற நிகழ்வுகள் யாவும் ஈ பறப்பது போல ஒரு சாமானிய செய்தியாகி விட்டிருக்கின்றது. சமூகமும் கப்பலை போன்றததுதான்.
கடல் சீற்றம், புயல், கொட்டும் மழை என்பன போன்ற அமைதியற்ற சூழல் சமூகத்திற்கும் நேரிடும். இத்தகைய கால கட்டங்களில் இறையச்சமும், கூர்மதியும், துணிவும், தன் இழப்பை துச்சமென கருதும் தீரமும் கொண்ட தலைமை மாலுமிகளால்தான் சமூகத்தை பாவத்தில் மூழ்குவதிலிருந்து காப்பாற்ற முடியும்.
ஹரியானா மாநிலத்தில் காதல் காமம் என ஓடிப்போகும் இளசுகளுக்கு காப் என்றழைக்கப்படும் சாதி பஞ்சாயத்தினர் மரண தண்டனையை நிறைவேற்றுகின்றனர். ஏன் அவ்வளவு தொலைவு போவானேன்? இங்கும் கூட உறுப்பு வெட்டுதல் தலை வெட்டுதல் என கூடா ஒழுக்கத்தின் எதிர் விளைவுகள் அவ்வப்போது தன்னிச்சையாக வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. காதல், ஓடிப்போதல் என்பது எந்த ஒரு சமூகத்தினரும் அவ்வளவு எளிதில் சீரணிக்கக்கூடிய விஷயம் இல்லை. அவை ஒழுங்கை அமைதியை கண்ணியத்தை நல்லிணக்கத்தை சமூகங்களுக்கிடையேயான உறவுகளை சீர்குலைப்பதாக உள்ளதே இதற்கு காரணம்.
ஒரு ஊரில் பாரதூரமான செயல்கள் நடை பெறும்போது எல்லாரும் அதை ஒரே மாதிரி தரத்தில் வைத்து பார்க்கவோ அணுகவோ மாட்டார்கள்.
பெருவாரியான மக்களின் மன உணர்வில் இது போன்ற பிறழ்வுகள் சில மணித்துளிகள் உறுத்தலை ஏற்படுத்துவதோடு சரி. தீர்வை பற்றிக்கவலைப்படாமல் அவர்கள் அதை எளிதாக வெறுமனே பேசிப்பேசியே கடந்து விடுவார்கள் என்பது வேதனையான ஒரு சமூக உண்மை.
எனினும் அநீதி, ஒழுக்கக்கேடு, வரம்பு மீறல்களை கண்டு புழுங்கும் மிகச்சிறு குழுவினர்கள் எல்லா இடத்திலும் இருப்பர். மனமானது அவர்களை அமைதியாக இருக்க விடாது. அவர்களுக்கு உணவும் தூக்கமும் இல்லாமல் போகும். அவர்களின் ஆன்மா கண்ணீர் வடிக்கும்.
சமூகத்தை வழி நடத்தக்கூடியவர்கள் கடமை தவறும்போதும் அவலங்களுக்கு மௌன சாட்சியாக மாறும்போதுதான் துடிக்கும் மன உணர்வுடைய சிறு குழுவினர் தங்களுக்கு தோன்றிய விதத்தில் எதிர் நடவடிக்கை எடுப்பர். அது பல சமயங்களில் சட்டம் ஒழுங்கை சமூக அமைதியை உறுத்தி வன் செயல்களிலும் போய் முடியும்.
நீர் நிலையில் விட்டெறியப்பட்ட கல்லானது அந்த நீர் பரப்பின் மீது பல வளையங்களை உருவாக்கி விரிந்து கொண்டே போகும். அது போலவே வன்செயலானது குறுகிய, நீண்ட கால நோக்கில் பொது சமூகத்திற்கு பல பாதகங்களை உருவாக்கி விட்டுத்தான் ஓயும்.
எந்த ஒரு பிரச்சினைகளுக்கும் வன்செயல் ஒரு தீர்வல்ல. குறிப்பாக ஒழுக்கக்கேடு என்ற பிரச்சினைக்கு வன்முறை மட்டும்தான் தீர்வு என்பதாக சுருக்கிப்பார்ப்பது பிரச்சினை தீர உதவாது. இதற்கு கடந்த காலங்களிலிருந்து பல எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.
இது போன்ற தீமைகள் புயலாக வீசும் கால கட்டத்தில் ஒரு சமூகத்தின் தலைவர்கள், மதிப்பிற்குரிய பிரமுகர்கள், முக்கியமாக ஆலிம்கள் களமிறங்க வேண்டும். தீர்விற்காக உழைப்பவர்களுடன் ஒன்றாக நிற்க வேண்டும்.
அப்படி உழைக்க ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் தீய வினைக்கும் அதற்கெதிரான ஒழுங்கற்ற எதிர் வினைக்கும் மொத்தமாகவும் சில்லறையாகவும் அவர்கள் தான் பொறுப்பாவார்கள்.
இதல்லாமல் சில இயக்கங்களும், நிறுவனமும் இந்த ஒழுக்கக்கேட்டிற்கெதிராக களமிறங்கி பணியாற்றியுள்ளனர். ஆனால் அவை யானைப்பசிக்கு சோளப்பொறிதான்.
இருண்ட வாழ்வை சகிக்க இயலாமல் இறப்பு நேர்ந்தாலும் பரவாயில்லை என ஒளியை நேசிக்கும் விட்டில் பூச்சிகளைப்போல வாழும் மனிதர்கள் இந்த அசிங்கத்திற்கு எதிரான போரில் சிறை செல்கின்றனர். அவர்கள் மேல் அம்பாரமாய் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. தொழிலை இழந்து இதம் தரும் இல்லமும் துறந்து பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க அவர்கள் மட்டும் என்ன நேர்ந்து விட்ட பலியாடுகளா?
இறைவனின் ரோஷத்தை தூண்டக்கூடிய பெரும்பாவத்தை கண்டிக்கும் வெறுக்கும் பணியை யாரோ பார்த்து விட்டு போகட்டும் நமக்கென்ன ஆயிற்று என ஒதுங்கி இருப்பது பார தூரமான விஷயமாகும். ஆலிம் பெருந்தகைகளுக்கும் இது அழகல்ல. அவர்கள் ஏன் முறையற்ற உறவு , ஓடிப்போதல் விஷயங்களை அழுத்தம் திருத்தமாக கண்டிக்க மறுக்கின்றனர்? நாம் குற்றஞ்சாட்டுவதெல்லாம் மௌனிகளாக இருக்கும் ஆலிம்களை நோக்கித்தான்.
இது எதில் கொண்டு போய் விடும் என்பதை நம்மை விட கண்ணிய மிக்க ஆலிம்களே நன்கறிவர்.
பெரும்பாவங்கள் இழைக்கப்படும்போது வரலாற்றில் நடந்த கேடுகளின் பட்டியல்:
இறைவனின் தண்டனை பல வித வடிவங்களில் சமூகத்தின் தலை மீது வந்து விடியும்.
எடுத்துக்காட்டாக சூறைக்காற்று, பெருமழை, நிலநடுக்கம், ஆழிப்பேரலை உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள், கொடிய உயிர் கொல்லி நோய்கள் பரவுதல், வறட்சி, கொடுங்கோல் ஆட்சியாளர்கள், அழிச்சாட்டியம் செய்யும் தனவந்தர்கள், வறுமை, இன மத கலவரங்களில் கொல்லப்படுதல், மான பங்கப்படுத்தப்படல், வீடின்றி நாடின்றி உணவின்றி அகதிகளாக விரட்டப்படல் ...
இந்த தண்டனை பாவிகளை மட்டும் குறி வைத்து தாக்குவதில்லை. நல்லவர், கெட்டவர், ஆலிம்கள், செல்வாக்கு மிக்கோர் என அனைத்து பிரிவினரையும் உருட்டி புரட்டி விடும்.
இன்னும் சொல்லப்போனால் இறை நாமம் துதித்து உயர்த்தப்படும் இறையில்லங்கள் கூட இறைவனின் கோபப்பார்வைக்கு தப்புவதில்லை.
இஸ்லாமிய தொன்மங்களை வாசிக்கும் எந்த ஒரு சாமானியனுக்கும் இதற்கான சான்றுகள் பரவி விரவிக்கிடப்பதை காண முடியும்.
--- ஒழுக்கக்கேடுகளின் ஊற்றுக்கண்கள்
--- ஒழுக்க கேட்டில் மூழ்கி இருப்போருக்கு காத்திருக்கும் தண்டனை
--- பாவங்களிலிருந்து விலகி நிற்பவர்களுக்குரிய கண் குளிர்ச்சியான வெகுமதிகள்
--- குற்றங்களிலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு விடிய திறந்திருக்கும் பாவ மீட்சியின் அகன்ற வாசல்
--- இத்தகைய மானக்கேட்டிற்கு எதிராக களங்காணுபவர்களுக்கு தைரியமும் நற்செய்தியும் அளித்து தங்கள் மீட்பர் பணியை செவ்வனே
ஆற்ற வேண்டியவர்கள் உலமா பெருமக்கள்.
பொதுவாக இங்கொன்றும் அங்கொன்றுமாக சமூக ஆர்வலர்களால் களப்பணியாளர்களால் எடுத்துரைக்கப்படும் நல்லுரைகள் சமூகத்தின் பெரும்பாலானவர்களுக்கு போய் சேர்ந்திடுவதில்லை.
காரணம் அவர்களால் அனைத்து மக்களின் செவிகளுக்கும் செய்திகளை எட்டச் செய்திட முடிவதில்லை.
ஆலிம்களுக்கு இந்த சிக்கல்களில்லை. அவர்களின் கையில்தான் வெள்ளி மேடைகளும் மார்க்க மேடைகளும் மத்ரஸாக்களும், மக்தப்களும் இருக்கின்றன. சமூகத்திற்கு நல்லது கெட்டது சொல்லிட இதை விட சிறந்த ஊடகம் கிடையாது.
அதை அவர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பு.
மொத்த சமூகமும் செயலின்மையிலும் தன்னலத்திலும் புதைந்து கிடக்கும்போது போராடும் கரங்களோடு ஒத்துழைக்காமல் உலமாக்களும் ஆழ்ந்த அமைதி காப்பதுதான் கசக்கின்றது.பாரம்பரிய மிக்க ஊர் என்ற கப்பலை வழி நடத்தும் கப்பலோட்டிகள் குழுவில் ஆலிம் பெருமக்களும் இடம் பெற வேண்டும். அப்போது மட்டுமே கப்பலையும் ஆட்களையும் முடிந்த வரைக்காவது காக்க முடியும். |