ஏலே, இங்க ஃபுல்லா கருப்புலே, அங்கப் பாருலே…. நீலக்கலர்ல….. என சென்ற நோன்புப் பெருநாளன்று மாலை காயல்பட்டணம் கடற்கரைக்கு பர்தா அணிந்து கூட்டம் கூட்டமாக நெரிசலோடும் தள்ளுமுள்ளுகளோடும் சென்ற பெண்கள் கூட்டத்தைப்பார்த்து பேசிச்சென்றது ஒரு கயமைமிக்க வாலிபர் கூட்டம். அதை முறைத்துப்பார்த்த ஒருவரை நோக்கி ‘ஏலே இவர் நம்மல பார்க்குறார்ல, அடிச்சிருவார் போல இருக்குதுல’ என ஏலனமாய்வேறு பேசிச்சென்றனர். கையில் குழந்தையுடன் சென்ற அவரால் வேரொன்றும் செய்யமுடியவில்லை.
மற்றொரு காட்சியில் ஒரு ஆணும் பர்தா அணிந்த ஒரு பெண்ணும் தனித்தனியே ஊர்வீதியில் நடந்து சென்றபின் கடற்கரையை நெருங்கியதும் கணவன் மனைவி போல ஒருவருக்கொருவர் ஒட்டிச்சென்ற போது சிலரால் பிடிக்கப்பட்டனர்.
இதுவல்ல நமது பெருநாள் ஒன்றுகூடல் என்பதை உணர்த்தவும் ஒரு உண்மை முஸ்லிம் பின்பற்றவேண்டிய கலாச்சாரம் பற்றியும் அறிவுருத்தவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.
ஒரு காலம் உண்டு.
பெண்கள் வெறும் போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்ட காலம் அது.
திருமணம் என்றால் அது வீட்டோடு முடிந்துபோகும் ஒரு இல்லறச்செயலாக மட்டுமே பார்க்கப்பட்டது அக்காலத்தில்.
வெளியில் யாருடன் வேண்டுமானாலும் எந்தப்பெண்ணும் சுற்றித்திரிய முடியும். ஏன், கணவன் மனைவி போல வாழவும் வழியுண்டு.
அப்படிச் செல்பவர்கள் மனம் மட்டும் ‘செய்யும் செயலுக்கு’ ஒருமித்து இருக்க வேண்டும், அவ்வளவுதான். அப்படியெனில் குழந்தை கருவுற்றால் அவமானமாயிற்றே.
ஹூம், அதற்கும் வழியுண்டு.
யாருக்காவது குழந்தை பிறக்கும். எல்லோரும் கேட்பார்கள் அதன் தந்தை யார் என. அப்போது தான் அவள் ஒரு காரியம் செய்வாள். தன்னுடன் கூடிய அனைவரையும் பட்டியலிட்டுக் அழைப்பாள். வரிசையாக அவ்வனைவரும் நிறுத்தப்படுவர். இவன் என ஒருவனைக் காட்டுவாள். அவன் அதற்கு தந்தை என அக்குலப் பஞ்சாயத்தார் அறிவித்து விடுவார்கள். அவனும் அதை ஏற்றுக்கொள்வான்.
வெட்கம் அது மறக்கடிக்கப்பட்டுப்போன ஒரு மளிகைச்சரக்கு போல இருந்தது அன்று.
அக்காலப் பெண்களுள் மிகுதமானவர்களுக்குச் சொத்தில் பங்கு இல்லை.
பாகப்பிரிவினையும் இல்லை. அடிமைத்தலைக்குள் அகப்பட்டவர் நிலை இன்னும் கொடுமையானது. அவள் பெற்ற பிள்ளை அவள் பெயரோடேயே என்றென்றைக்கும் அழைக்கப்படும்.
உடலைத் திறக்கவே ஆடைகள். ஆடைக்கென எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
ஆடல், பாடல் கூடல்களுக்கெல்லாம் எந்தத் தடையுமே இல்லை.
பாலுணர்ச்சிக்குத் தீனிபோடும் எந்திரமாக (SEX ENGINE) மட்டுமே பெண் பார்க்கப்படுவாள் அன்று.
ஆணின் அமர்வுகளில் பெண் சகஜமாக பங்கேற்பாள். குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதானாலும் போர் வெறியைத் தூண்டுவதானாலும் ஒரு
பெண்ணுக்கு அன்று நிறைய நேரம் தேவைப்படவில்லை.
மதுவை அவனுக்கு ஊற்றிக்கொடுத்து அவளுமே கூட குடிப்பாள்.
காரிருள் சூழ்ந்த நாட்கள் அவை.
அகவொளி கிடைக்காமல் மாண்டு போனவர் வெறும் ஆயிரமல்ல.
இலட்சோப லட்சம் அல்லது கோடானு கோடி.
அய்யாமுல் ஜாஹிலிய்யா………. ஒரு 400 ஆண்டு கால வரலாறு.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) ஆகியோருக்கு இடைப்பட்ட காலம் இம்மடமைக் காலம்.
அல்லாஹ்வின் வழிகாட்டல் அன்று இருந்தது. இஞ்சீல் என்னும் இறைவேதம் இருக்கவே செய்தது. ஆனால் அவ் இறைவேதம் பல்வேறு கூட்டல்களுக்கும் கழித்தல்களுக்கும் செருகல்களுக்கும் மாற்றங்களுக்கும் உள்ளாகியது.
இக்காலத்தைப் பற்றி குர்ஆன் கூறுவதைப் பாருங்கள் :
அதற்கு அவர்கள்: “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பிவிட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக்கொண்டு எங்களை பயமுருத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டுவாரும்” என்று கூறினார்கள். அதற்கவர்: “(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது; மேலும், நான் எதைக்கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ, அதையே நான் உங்களுக்கு (சேர்ப்பித்து,) எடுத்துரைக்கின்றேன்; எனினும், நான் உங்களை அறிவில்லாத சமூகத்தவராகவே (கவ்மன் தஜ்ஹலூன்) காண்கிறேன்” என்று கூறினார். குர்ஆன் 46:22-23
…………….உங்களில் எவரேனும் (ஜஹாலத்) அறியாமையினால் (யாதொரு) தீமையைச்செய்து விட்டு, பிறகு அதற்குப்பின், (பாவத்தைவிட்டும்) வருந்தி (அதிலிருந்து விலகி) சீர்திருத்திக்கொண்டாரோ, (அவருடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிடுவான்; ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். –குர்ஆன் 6:54
பிறகு, நிச்சயாமாக உம் இறைவன், எவர்கள் அறியாமையினால் (பிஜஹாலதின்) தீமைசெய்து, அதற்குப் பின்னர் (அவற்றிலிருந்து விலகி) பாவமன்னிப்புக்கோரி, தங்களை சீர்திருத்திக்கொள்கிறார்களோ அவர்களுக்(கு மன்னிப்பதற்)காகவே இருக்கின்றான். –குர்ஆன் 16:119
…………..மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்கு கவலையை உண்டுபண்ணி விட்டன. அவர்கள் அறியாமைக்கால எண்ணம் போன்று (ளன்னல் ஜாஹிலிய்யா), உண்மைக்கு மாறாக அல்லாஹ்வை சந்தேகம் கொள்ளலாயினர். அதனால் அவர்கள் கூறினார்கள்: “இக்காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?”………. குர்ஆன் 3:154
…………அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக (மினல்ஜாஹிலீன்) நீர் ஆகிவிடவேண்டாம். குர்ஆன் 6:35
நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முந்தைய அறியாமைக்காலத்தில் (ஜாஹிலிய்யதில் ஊலா) (பெண்கள் ஒப்பனையையும் ஒய்யாரத்தையும்) வெளிப்படுத்தி திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் வெளிப்படுத்தி திரியாதீர்கள்; தொழுகையை கடைபிடியுங்கள்; ஜகாத்தும் கொடுங்கள்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். –குர்ஆன் 33:33
அறியாமைக்காலத்து தீர்ப்பையா (ஹுக்முல் ஜாஹிலிய்யா) அவர்கள் தேடுகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்? குர்ஆன் 5:50
ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு சுதந்திரம் வழங்கியபோது இந்தியர்கள் தோலின் நிரமும் அவர்களின் உடலில் ஓடும் இரத்தமும் தவிர அவர்களது ஒவ்வொரு செயலும் சிந்தனையும் நடையுடை பாவனையும் நம்மைப் பின்பற்றுவதாகவே அமைந்திருக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்களாம். அதை அவர்கள் அரங்கேற்றுவதிலும் வெற்றி கண்டுவிட்டார்கள்.
அதுபோலவே இஸ்லாம், நமது உயிரினும் மேலான உத்தமத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு அவர்கள் குர்ஆன், சுன்னாஹ் என்ற இரண்டு விஷயங்களை (அம்ரைனி) நம்மிடம் விட்டுச் சென்றார்கள். வெறும் 23 ஆண்டுகாலத் தமது தூதுப்பணியில் சில நூற்றாண்டுகளாக இருள்சூழ்ந்துகிடந்த அரேபியாவை ஒளிமயமாக்கியதோடு மட்டுமன்றி அடுத்த ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே மாபெரும் சாம்ராஜ்யங்கள் இஸ்லாத்தின் கீழ் மண்டியிடும் நிலையையும் உருவாக்கினார்கள்.
அல்லாஹ்வும் அதைவிடுத்து இங்ஙனம் கூறுகிறான்:
மனிதர்களு(டைய நல்வாழ்வு)க்காக வெளியாக்கப்பட்ட சிறந்த சமுதாயத்தினராக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்,) நீங்கள் நன்மையைக்கொண்டு ஏவுகிறீர்கள்; தீமையை விட்டும் (மனிதர்களைத்) தடுக்கிறீர்கள்; அல்லாஹ்வைக்கொண்டு நம்பிக்கை கொள்கிறீர்கள்; (இவ்வாறே) வேதக்காரர்களும் நம்பிக்கை கொண்டால் அவர்களுக்கு அது நன்மையாகும்; அவர்களில் (உண்மை) நம்பிக்கையாளர்களும் இருக்கின்றனர்; (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் (இறைகட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். –குர்ஆன் 3:110
இவ்வளவுக்குப் பின்னரும் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்கள் என ஒரு புறமும் சடங்கு சம்பிரதாயம் அல்லது பூஜை புனஸ்காரம் என்ற அடிப்படையில் மட்டும் இம்மார்க்கத்தைப் பின்பற்றுவோர் மறுபுறமுமாக, ஏனைய ஏவல் விலக்கல்களையும் சட்டத்திட்டங்களையும் புறக்கணித்து வாழும் முஸ்லிம்களே முஸ்லிம் சமூகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
உதாரணமாக, சென்ற ரமளான் மாதத்தை எடுத்துக்கொள்வோம்.
30 நாட்கள் நோன்பிருந்து, இரவு நேர வணக்கங்களில் மூழ்கி, தானதர்மங்களும் புரிந்து இறையச்சத்தை நிறைவாக மனதில் ஏற்றிய பலபேர் பெருநாளன்று அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு ஆண், பெண் என சகஜமாக கடற்கரைக்குச் சென்ற காட்சி இது இரண்டாம் அய்யாமுல் ஜாஹிலிய்யாவா என எண்ணுமளவிற்கு நல்லவர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
“மஸ்ஜிதுகள் தோறும் பிலாலின் பாங்குகள்; ஆனால் பிலாலோ இன்று நம்மிடம் இல்லை” என்னும் கருத்தில் அல்லாமா இக்பால் பாடுவார்.
பின்வரும் செய்திகள் பிலால்கள் இல்லாத பாங்கொலியையே நினைவுபடுத்துகின்றன.
பெண்ணிற்கு வீடுதான் முதல் பர்தா. மிகவும் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே தன்னை மூடிக்கொண்டு வெளியில் செல்ல அவளுக்கு அனுமதியுண்டு. ஆனால் இக்காலத்தில் பர்தா என்னவோ அவர் கையில் கொடுக்கப்பட்ட உரிமம் (ஓட்டுனர் உரிமம்) போல பேருக்கு அதை அணிந்துகொண்டு (பர்தா என்னும் பெயரில் அதற்கு எதிர்மறையான ஆடைவடிவங்கள் மற்றும் வேலைப்பாடுகள் ஒரு பக்கம்) முகம்பூராவும் மேக்கப் போட்டு, அடுத்த தெருவில் செல்வோரையும் அதிரடியாய் ஈர்க்கும் வண்ணம் உடல் முழுதும் மனம்பூசி, போதாக்குரைக்கு மல்லிகைப்பூவும் சூடிக்கொண்டு, அமைதியாக தெருவோரம் செல்லவேண்டியவர் சாலையின் நடுவே கலகலவெனப் பேசிக்கொண்டு செல்வதை நம் கண்களால் பார்க்கும் போது ஒரு இரண்டாம் அய்யாமுல் ஜாஹிலிய்யாவை(OR RETURN OF AYYAMUL JAHILIYYAAH)யே நினைவுபடுத்துகின்றன.
வெட்கம் என்பது பேச்சுக்குகூட அங்கே பார்க்கமுடியவில்லை. (ஹூம், அது இருந்தால்தான் இப்படி சுற்றித்திரியவே மாட்டார்களே). இதன் நடுவே பலதரப்பட்ட குழந்தை விளையாட்டு சாதனங்கள் வேறு. சென்ற பெருநாளில் அசுர பலூன் (GIANT BALLOON) ஒன்று வந்திறங்கி கடற்கரையையே இரண்டாக்கியது. இது போல இன்னொரு அசுரம் ஏதாவது சேர்ந்து ஹஜ்ஜுப்பெருநாளில் வந்திறங்கினால் கடற்கரை தாங்காது. காயல் கலாச்சாரத்தையும் இனிமேல் கடலில்தான் கரைக்கவேண்டும்.
இளம்பயிர்களை வேலியிட்டுப் பாதுகாக்க வேண்டிய நிலையில் தாமே அவற்றைக் கால்நடைகள் மேய அனுமதிப்பதைப் போன்றுதான் இம்மாதிரியான
கொண்டாட்ட தினங்களில் ஆண்கள் சந்திக்கும் பகுதிகளுக்குள் பெண்களும் குடும்ப சகிதமாகப் பிரவேசிப்பது அமைந்துள்ளது.
குழந்தைகளுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டி சிறந்த சமூகமாகத் திகழ்ந்தவர்(சாபிகூனல் அவ்வலூன்)கள் வரலாறுகளை எடுத்துக்கூறி பாழாய்ப்போன தொலைக்காட்சிப் பெட்டியை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி அதனால் கிடைக்கும் மிகுதியான நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டு அவர்களின் உள்ளத்தோடும் உணர்வோடும் இறைஉவப்பைப் பெற்றிடும் நோக்கில் நெறுங்கி உரவாடும்போது மட்டும்தான் முடைநாற்றம் வீசும் மேலும் பல புதுப்புது தீமைகள் ஊற்றெடுத்து உருவாகாமல் வருங்கால சமுதாயத்தை அழிவிலிருந்து தடுக்கமுடியும்.
பின்வரும் இறைவசனங்களை நினைவில்கொள்வோம் :
“நீங்கள் வேதத்திலுள்ள சில கட்டளைகளை விசுவாசித்து சில கட்டளைகளை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கின்றார்களோ அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத்தவிர, வேரொன்றும் கிடையாது. மறுமை நாளிலோ அவர்கள் கடுமையான வேதனையின்பால் விரட்டப்படுவார்கள். –குர்ஆன் 2:85
“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கு விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும், அவர்களை சபிப்ப(பதற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
எவர்கள் பாவமன்னிப்புத்தேடி (தங்களை) சீர்திருத்திக்கொண்டு, அவற்றை (மனிதர்களுக்கு) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத்தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்); அவர்களை நான் மன்னித்துவிடுகிறேன்; நான் மன்னிப்பவனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
–குர்ஆன் 2:159-160
இவர்கள் தான் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக்கொண்டவர்களாவர். ஆ! (நரக) நெருப்பை (இவ்விதம்) அவர்கள் சுகித்துச் சகிக்கும்படி செய்தது எதுவோ? –குர்ஆன் 2:174”
|