“எல்.கே.மேனிலைப்பள்ளி காவலர் சுடலை காலமானார்!” என்ற செய்தியைப் படித்தவுடன் மனதில் தோன்றியது... பொறுமையான மனிதர்... மாணவப்பருவத்தில் செய்த சேட்டைகளையெல்லாம் சகித்துக்கொண்டு... தேர்வு காலங்களில் மாணவர்கள் கண்விழித்து படிக்கின்றார்களா என்று கண்காணித்து... ஒரு காவலர் என்பதனையும் தாண்டி மாணவர்கள் பரிட்சைகளில் பாஸாக - வாழ்வில் முன்னேற ஒரு மறைமுகக் காரணமாக இருந்தவர்.
இதனை கமெண்ட்டாக பதிவதற்கு முன், என் மனதில் ஒரு கேள்வி தோன்றியது. இவற்றை ஒருமுறை கூட அவரிடம் நேரில் பரிமாறியது கூறியது கிடையாதே என்று. ஒருவரின் நற்செயல்களை ‘உளப்பூர்வமான’ கருத்துக்கள் வாயிலாக நினைவு கூறுகின்றோம். இன்னும் சிலரோ மனித நேயர்களின் (உதாரணத்திற்க்கு ஆனந்தன் டாக்டர்... எஸ்.கே. மாமா...) மரணத்துயரம் தாங்காது சொட்டு கண்ணீர் கூட சிந்துகின்றனர். ஆனால் நம்மில் எத்தனை பேர் நம் உணர்வுகளை சம்பந்தபட்டவர் வாழ்நாளிலேயே அவரிடமே கூறுகின்றோம் ?
இன்று அவைகளை அறிய / காதால் கேட்டுணர அப்புண்ணியவாளர்களுக்கு வாய்ப்பில்லையே. அப்புண்ணியவாளர்கள் நமது பெற்றோராக, உறவினராக, நண்பராக, பக்கத்து வீட்டுக்காரராக, பணியாளனாக கூட இருக்கலாம். நன்றியுடன் இன்று நினைவுகூர்வனவற்றை அவர்களிடமே நேரில் கூறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...?
நம்மைப் போன்று மிகச் சாதாரண நிலையிலிருந்த அம்மனிதர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்...? நம்மை மற்றவர்கள் இவ்வளவு உயர்வாக நினைக்கின்றார்களே, நம் சிறு உதவிகளையும் நினைவு கூறுகின்றார்களே அல்லது நம்மை சுற்றியுள்ளவர்கள் உயர்வாக நினைக்கும் அளவுக்கு அடியேனும் வாழ்கின்றேனே என்று!
மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி சொல்லுதல். அப்பழக்கம் நம்மிடம் பரவலாக காணப்படுகின்றதா?
பொதுவாக பிற நாட்டு பிரவேசத்தில் அந்நாட்டு மக்களின் சில நல்ல பழக்கங்கள் நம்மை ஈர்க்கும். தினசரி வாழ்க்கையில் இங்கே (அமெரிக்காவில்) அதிகம் பயன்படுத்தும் ஒரு வார்த்தை என்றால் அது Thank You / Thanks என்பதாகவே இருக்கும். ஒருவர் செய்த உபகாரத்துக்கு 'நன்றி' என்று கூறாவிட்டால் அவரை மரியாதையற்றவர் (Rude) என்று எண்ணுகின்றனர்.
காரில் பயணிக்கும் போது ஒருவர் மற்றவரை முந்திச் செல்ல வழிவிட்டால், அவர் உடனே 'நன்றி' என்று ரியர் வீவ் வழியாக சைகை செய்வார். பாதசாரி சாலையை கடப்பதற்காக நம் வாகன வேகத்தை குறைத்துச் சென்றால் அவர் 'நன்றி' என்பார். கடையில் ஒரு பொருள் வாங்கும் போது கூட கடைக்காரருக்கு `நன்றி' சொல்வார்கள். இதுபோன்ற வழக்கம் பிற நாட்டின (மனித)ரிடத்தும் கூட இருக்கலாம்.
நன்றி சொல்லும் வழக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு கலாச்சாரமாகவே உள்ளது எனலாம். இவ்வார்த்தையை ஒருசிறு உதவி / பணிவன்புகளுக்கெல்லாம் கூட பயன்படுத்துகிறார்களே என்ற வியப்பும், “அட போங்கப்பா! சப்பை மேட்டர்கெல்லாம் போய் நன்றி சொல்லனுமா?” என்று ஆரம்பத்தில் தோன்றியதுண்டு.
நன்றி சொல்வதற்கு கூச்சப்பட்டு பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விடுகிறோம். காலம் கடந்து ‘நன்றி’ என்று உரக்க கத்திக் கொண்டிருப்போம். ஆனால் அவர் நம்மை விட்டும் பிரிந்திருப்பார். சில நேரங்களில், நன்றி கூறும் அளவுக்கு அப்படியென்ன ஒரு உதவி உபகாரம் செய்துவிட்டார்? என்று எண்ணுவோம். பின்னொரு தருணத்தில் அதனை நினைத்துப் பார்க்கும்போது மிகப்பெரிய ஒன்றாகக் கூட அது திகழ்ந்துவிடும்!
சிறுபிராயத்தில் புறையூருக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றிருந்தபோது டேமில் நின்று கொண்டு, மற்றவர்களைப் போல் நானும் டைவ் அடித்தேன். டேமின் மரப்பலகை (தண்ணீரில்) அருகே வந்தவுடன் யாரோ ஒருவர் என் தலை அம்மரப்பலகையில் மோதிவிடாதவாறு தண்ணிக்குள் அமுக்கிவிட்டார். பின்னொரு காலத்தில் அதை நினைத்தபோது முகமறியா ஒருவர் செய்த உதவி எவ்வளவு பெரியது என்று நினைக்க தோன்றியது.
காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப்பெரிது
என்றார் வள்ளுவப் பெருந்தகை.
நன்றி, பாராட்டு, நேசத்தையெல்லாம் மனதில் நினைத்தால் மட்டும் போதாது! உடனே அதை வெளிப்படுத்த வேண்டும்!! அதனை தள்ளிப்போடவே கூடாது. “உனக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது என்றால், அதனை அவரிடம் வாய்விட்டுச் சொல்லிவிடு!” என்ற கருத்தில் நபிகளாரின் பொன்மொழி கூட இருப்பதாக அறிந்துள்ளேன்.
நன்றி என்பது ஒரு சின்ன வார்த்தைதான். ஆனால் அது மனதளவில் தரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அளவிட முடியாதது. அது ஒரு வார்த்தையாய் நின்று விடாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுத்து வெளிவர வேண்டும்.
சின்னச் சின்ன விஷயங்களில் நன்றி சொல்லத் தெரியாதவர்களால் பெரிய விஷயங்களிலும் நன்றி சொல்ல முடியாது என்கிறது எஸ்தோனிய பழமொழி ஒன்று. நம்முடைய நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவருக்கு அதை உடனே தெரிவித்துவிட வேண்டும். நன்றி, பாராட்டு மற்றும் மதிப்பை உரியவருக்கு கொடுக்கும் போதுதான் அவர்கள் மீண்டும் அதை கூடுதல் மதிப்புடன் திருப்பிக் கொடுப்பார்கள்.
ஜசாக்கல்லாஹ் / நன்றி என்று சொல்லும்போது அதை உளமார - உண்மையாக - தெளிவாக - திருத்தமாக - மகிழ்ச்சியுடன் - நேருக்கு நேர் பார்த்துச் சொல்லுங்கள்.
நன்றியைச் சொல்ல இந்த நவீன யுகத்தில் ஏகப்பட்ட வழிகள் உண்டு. ஓர் எஸ்.எம்.எஸ், ஒரு சின்ன மின்னஞ்சல் வரி கூட போதும். ஓர் ஆய்வின் படி 'நன்றியுடையவர்களாய் நன்றி பாராட்டுபவர்களாய் இருப்பவர்கள் மன அழுத்தமற்றவர்களாகவும், நிம்மதியான தூக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள்' என்கின்றது.
நாம் செய்யும் மிகப்பெரிய தவறு… கூட இருப்பவர்களுக்கு நன்றி பாராட்டாமல் / சொல்லாமல் விடுவதுதான். உதாரணத்திற்க்கு, தாயாரிடமோ அல்லது மனைவியிடமோ, சிரத்தையுடம் சமைக்கும் உன் சமையல் ருசியாக உள்ளது என்று நன்றி பாராட்டாமல் இருப்பது.
நம் கூடவே இருப்பதால் அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லக்கூடாது என நினைத்து விடுகிறோம். நன்றி (Thanks Note) என்பது அலுவல் சமாச்சாரங்களுக்கு மட்டுமானது அல்ல. கணவன், மனைவி, பெற்றோர், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள், ஆசான்கள் பணியாட்கள் என எல்லோருக்கும் கூட பொருந்தும்.
இளம்பருவத்திலே குழந்தைகளுக்கு, யாருக்கும் எதற்கும் நன்றி சொல்ல பழகிக் கொடுங்கள்! அதற்கு முன்னுதாரணமாக முதலில் அக்குழந்தைகள் முன் பெற்றோரும் சொல்லிப் பழகுங்கள்!! அது மற்றவருடைய இறுக்கத்தைத் தளர்த்தி முகத்தில் புன்னகையை கொடுக்கும். ஒரே ஒரு வார்த்தை பிற மனிதரை ஒரு கணம் மகிழ்வுறச் செய்கிறது என்றால், ஒரு நன்றி என்ன... ஆயிரம் நன்றி சொல்லிகொண்டே இருக்கலாம்.
அட... இதுபோன்ற பழக்கங்கள் நமது நாட்டிற்க்கு ஒவ்வாத - நடைமுறை படுத்த முடியாத ஒன்று அல்லது பிறர் கேலியுடன் நம்மைப் பார்ப்பார்கள் என்று கூட எண்ணலாம். எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு முறையும் 'நன்றி' என்று சொல்லாவிட்டால் கூட பரவாயில்லை. வாழ்வில் ஒரு முறையாவது 'ஜசாக்கல்லாஹு கைரா... உங்களால்தான் இந்தச் செயல் நிறைவேறியது அல்லது இந்த நற்குணத்தைக் கற்க முடிந்தது” என்று கூறுவதில் தப்பு ஏதும் இல்லையே...?
மனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி பகர்வது, பாராட்டுவது, இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கு அடிப்படையாய் அமையும். மனிதனுக்கு மனித நன்றி பாராட்டாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டியவனாக மாட்டான் என்பது நபிமொழி. சரியான இடத்தில் முறையாக நன்றி சொல்லும் பழக்கம் வாழ்நாள் முழுமைக்குமான ‘சொத்தாக’ இருக்கும்.
ஒரு நல்லவரை நல்லவர் என அவர் மரணத்திற்குப் பின்னர் நன்றி பாராட்டுவது நினைவுகூர்வது, பிறர் அறிவதற்கான ஓர் அழகிய வாய்ப்பாக இருந்தாலும் அவற்றை சம்பந்தபட்டவர் நம்முடன் இருக்கும்போதே அவரின் நற்பண்புகள், செய்த உபகாரங்கள் அல்லது நாம் செய்த சேட்டைகளை தீமைகளை அமைதியாகப் பொருந்திக் கொண்டமைக்காக அவர்களிடமே நன்றி பாராட்டுவது நினைவுகூர்வது அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு இனிமையாக உணர்வுப்பூர்வமானதாக இருக்கும்...? சிந்தியுங்களேன் !!
இறந்தோரின் நலவுகளை நினைவுகூருங்கள் என்று சொன்ன நபிகளார்தான், இருப்போரிடம் உங்கள் நேசத்தை வெளிப்படுத்துங்கள் என்றும் போதித்திருக்கிறார்கள்... எனவே, இரண்டையும் நாம் கருத்திற்கொள்வோம்.
நன்றி சொன்னால் பேரழகு... நன்றி செய்தால் பாரழகு !! |