சுத்தம் ஈமானில் பாதி என்பதை ஹதீது வாயிலாக அறிகிறோம் . சுத்தத்தை ஈமானில் ஒரு பகுதி என்றோ, ஓர் அம்சம் என்றோ கூறவில்லை ஈமானில் பாதி என்றே மார்க்கம் போதிக்கிறது. அப்படியானால் நாம் சுத்தத்தை பேணுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட கடமைப்பட்டிருக்கிறோம்.
இன்று நம்மிலே எத்தனை மக்கள் தன் வீட்டையும் , சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்திருக்கிறார்கள் ?. " சுத்தம் சோறுபோடும் - சுத்தம் சுகம் தரும் - சுகாதாரம் பேண வேண்டும் " என்றெல்லாம் சுத்தமாக, சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பள்ளிக்கூடத்தில் படித்தோமே , அதன்படி எத்தனை பேர் செயல்படுகிறோம். தன் வீட்டிலே குப்பை சேர்ந்து விட்டால் அதை எந்தவித தயக்கமும், வெட்கமுமின்றி ரோட்டிலே கொட்டிவிடுகிறார்கள். நகராட்சியால் குப்பைத் தொட்டிகள் சில இடங்களில் வைக்கபட்டிருந்தாலும் அதில் குப்பையைக் கொட்டுவதில்லை , வெளியிலேதான் பெரும்பாலும் கொட்டுகிறார்கள். நகராட்சி நிர்வாகம் குப்பைக் கொட்டுவதற்கென்று குப்பைத் தொட்டிகளை பெரும்பாலான இடங்களில் வைக்கவில்லை என்பது மிகப்பெரிய குறைதான் அதை மறுப்பதற்கில்லை.
நகரில் வெகு காலமாக இருந்து வந்த குப்பைத் தொட்டிகள் இப்போது பல வருடங்களாக இல்லை என்பதும் அவைகள் என்னவாயிற்று ஏன் மீண்டும் அந்தந்த இடங்களில் அந்தக் குப்பைத் தொட்டிகள் வைக்கப் படவில்லை என்பதையும் கேட்பதற்கு ஆளில்லை. நம் நகர் மன்றமும் , நகராட்சி நிர்வாகமும் அதை பொருட்படுத்துவதில்லை.
நகராட்சி சுகாதாரத்துறை குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை, நகரில் பெரும்பாலான தெருக்கள் ஒவ்வொன்றுக்கும் குப்பை எடுக்கும் லாரிகள் தினமும் வருவதில்லை என்றாலும் ஒருநாள் விட்டு மறுநாள் வந்து குப்பைகளை அள்ளிச் செல்வதை பார்க்க முடிகிறது. அவர்கள், குப்பைகளை தொய்வின்றி சேகரித்து செல்லத்தான் செய்கிறார்கள் என்பது உறுதியே. முக்கிய வீதிகளில் தினமும் வருகிறார்கள் ஆனால் நம் மக்கள்தான் ஒத்துழைப்பதில்லை.
குப்பை லாரிகள் ஒவ்வொரு தெருவிற்கும் வந்து, முடுக்கு, முடுக்காக சென்று குப்பைகளை சேகரிக்கத்தான் செய்கிறார்கள். முடுக்கிற்கு உள்ளே அவர்கள் வருவதில்லை ஆனால் வீடுகளிலிருந்து வந்துக் கொடுக்கப்படும் குப்பைகளை ஒவ்வொரு முடுக்கின் முனையிலும் வந்து வாங்கிச் செல்கிறார்கள். குப்பை லாரிகள் வருவதை அறிவிப்பதற்காக லாரியின் ஒலிப்பான்களை ( HORN ) ஒலித்துக்கொண்டேதான் வருகிறார்கள். அப்படியிருந்தும் நம் மக்களில் பலர் குப்பைகளைக் கொண்டு வந்து கொடுத்து, நகராட்சி ஊழியர்களுடன் ஒத்துழைப்பதில்லை.
குப்பை லாரி வருவதற்கு முன்பே குப்பைகளை ரோட்டில் கொட்டிவிட்டு செல்கிறார்கள் அரை மணி நேரம் அல்லது ஒருமணி நேரம் பொறுத்திருக்க இயலவில்லை போலும் அல்லது குப்பை லாரி வந்துவிட்டு போனப்பிறகு குப்பைகளை ரோட்டில் கொட்டுகிறார்கள், கேட்டால் குப்பை லாரி வரவில்லை என்று சொல்கிறார்கள் - வரவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் அவர்கள் எழுப்பும் ஒலிப்பான்களின் சத்தம் மிக, மிக அதிகமாக இருக்கிறது. 120 டெசிபலுக்கு அதிகமாக உள்ளது காதை கிழிக்கிறது, அதன் மூலம் ஒலிமாசு ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது.
ஒலிமாசு ஏற்படுவதை காரணம்காட்டி அவர்களை ஒலி எழுப்ப வேண்டாம் என்று சொல்ல முடிவதில்லை ஏனெனில் ஒவ்வொரு முடுக்கின் கடைக்கோடியில் உள்ள வீட்டிற்கும் குப்பை லாரியின் வருகையைத் தெரியப்படுத்தி, குப்பையை சேகரித்து செல்லவே அவ்விதமாக ஒலியை எழுப்புகிறார்கள். அவ்வளவுக்கு அதிகமாக ஒலியை எழுப்பியும் அந்த நேரத்திற்கு வந்து குப்பையை கொடுக்காமல் , தாமதமாக வந்து ரோட்டில் குப்பையை கொட்டி செல்கிறார்கள். அதுவும் அன்றைய தினத்து அல்லது முந்திய தினத்துக் குப்பை அல்ல , 4 - 5 நாட்கள் சேமித்து வைக்கப்பட்ட கெட்ட வாடை நிறைந்த குப்பை. ரோட்டில் போவோர், வருவோர் மூக்கை பொத்திக்கொண்டு செல்கிறார்கள் மேலும் அருகில் உள்ள வீடுகளுக்கும் காற்றின் மூலமாக அந்த துர்வாடை வந்து, அவர்களை கஷ்டப்படுத்துகிறது. இந்த விதமாக மக்களுக்கு கேடுகளை விளைவிக்கும் மக்களின் குணத்தை என்னெவென்று சொல்வது.
குப்பைகளை வீடுகளுக்கருகில் கொட்டினால் பக்கத்து வீட்டுக்கார்கள் சண்டைக்கு வருவார்களாம் அதனால் பள்ளிவாசல்களின் ( நுழைவு வாசலுக்கு ) அருகிலும் , பள்ளிக்கூடங்களின் ( வாசலுக்கு ) அருகிலும் கொட்டுகிறார்கள். அவ்விடங்களில் குப்பைகளை கொட்டுகிறதால் கோழி, ஆடு, மாடு என்பது மட்டுமல்லாது நாயும் அந்த குப்பையை கிளறுகிறதே! அது தொழப் போகும் மக்களுக்கு இடைஞ்சல் என்பதையும், பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறார்களுக்கு சுகாதாரக் கெடுதி என்பதையும் உணராத அல்லது உணர முடியாத இந்த மக்களின் குணத்தை என்னவென்று சொல்வது.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, ஒரு நாள் காலை வேலைக்காரப்பெண் ஒருவர், பள்ளிக்கூடத்தின் அருகில் குப்பையைக் கொட்டி விட்டு வந்தார். ஏனம்மா பள்ளிக்கூடத்திற்கருகில் கொட்டனும், குப்பை லாரிதான் வருகிறதே என்றதற்கு , லாரி வர இல்லைங்கோ, அதான் இங்கே கொட்டுகிறேன் என்றார். இதோ பாரும்மா ,எனக்கும் இந்த தெருவுதான் தினமும் குப்பை லாரி வருது , இப்பவும் குப்பை லாரி வந்துதான் போய் இருக்கிறது என்பதற்கு சாட்சி நீங்க இப்போ குப்பையை கொட்டின இடம். அங்கே , நீங்க கொட்டினதைத்தவிர வேறு குப்பை எதுவுமில்லை என்றதும், என்னை சொல்லி குற்றமில்லை அய்யா , வீட்டுக்கார அம்மாதான் கொட்ட சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று அந்த வேலைக்காரப்பெண் பதில் சொல்கிறார். இதே நிலைதான் பள்ளிவாசல் நுழைவு வாயிலருகிலும் ஏற்பட்ட அனுபவம்.
வீட்டு வேலைக்காரிகளை வைத்து கொட்டுவதல்லாமல் வீட்டுக்கார அம்மாக்களும் பள்ளிவாசலுக்கருகில் வந்து கொட்டுகிறார்கள் , அதை பார்க்கும் தெருவாசிகள் பலரும் கண்டிக்கத்தான் செய்கிறார்கள் - இருந்தும் பலனில்லை – நாங்க மட்டுமா கொட்டுறோம் எல்லாரும்தான் கொட்டுகிறார்கள் என்ற மறுமொழிதான் வருகிறதே தவிர , தான் செய்வது தவறு என்பதை புரிந்து, திருத்திக்கொள்ள மனமில்லை.
பள்ளிக்கூடத்திற்கு அருகில் மற்றவர்கள் குப்பைக் கொட்டுவது போக , பள்ளிக்கூடத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரே ( துண்டுத் துண்டாக கிழிக்கப்பட்ட பேப்பர் ) குப்பைகளை கொட்டி பறக்கவிட்டு சென்றார். பள்ளிக்கூடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளைகளிலும் அந்த பக்கம் குப்பையை சேகரிக்க லாரி வரத்தான் செய்கிறது - அந்நேரம் அவர்கள் கையில் கொடுக்கலாம் அல்லது அந்த துண்டுத் துண்டாக்கப்பட்ட பேப்பர்களை ஒரு பொட்டலமாக கட்டி பள்ளிக்கூட வாயிலில் வைத்துவிட்டால்கூட குப்பைகளை சேகரிப்பவர்கள் அதை எடுத்து செல்வார்கள். சுத்தம் சுகாதாரத்தை பேண வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியிலே வேரூன்ற வேண்டும் - அந்த எண்ணம் மக்களிடம் இல்லை என்றால் நோய்க்கு பஞ்சம் இருக்காது.
மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை, குப்பை லாரி வரும்போது அவர்களிடம் தவறாது கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்க தவறும் பட்சத்தில் அந்த குப்பைகளை தங்கள் வீட்டிலேயே வைத்திருந்து மறுநாள் கொடுக்கலாம். அது வீட்டிலிருந்தால் கெட்ட வாடை வரும் என்றால் வீட்டிற்கு வெளியே வைக்கவும். வீட்டிற்கு வெளியே வைத்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டைக்கு வருவார்கள் அல்லது பூனை மற்றும் மற்ற மிருகங்கள் நாசப்படுத்துமே என்று சொல்லாதீர்கள். அப்படி ஒரு சிரமம் உங்களுக்கு ஏற்படுவதை, நீங்கள் சகித்துத்தான் ஆக வேண்டும். காரணம் நீங்கள் அதை தெருவில் வீசி எறிந்தால் அதே கஷ்டம் மற்றவர்களுக்கு ஏற்படுகிறதல்லவா. ஆகையால் குப்பைகளை அள்ள வரும்போது சரியான நேரத்தில் அவர்களிடம் கொடுத்து நகராட்சி ஊழியர்களுடன் ஒத்துழையுங்கள்.
நகராட்சியால் குப்பைத் தொட்டிகள் பரவலாக எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டு அதில் குப்பைகளை கொட்டிச் செல்வதுதான் சிறந்த முறை. அதை நகராட்சி நிர்வாகம் விரைவில் செய்ய வேண்டும். அப்படி குப்பைத் தொட்டிகளை வைத்தாலும் குணங்கெட்ட மக்கள் தொட்டியின் வெளியேதான் கொட்டிச் செல்வார்கள் என்பதும் அறிந்ததே. குணங்கெட்ட மக்களுக்கு பயந்து, சுகாதாரத்தை பேணக்கூடிய நல்ல குணம் உள்ள மக்களுக்கு அசெளகரியம் ஏற்பட்டுவிடக்கூடாது. ஆகையால் விரைவாக குப்பைத் தொட்டிகளை ஆங்காங்கே முறைப்படி வைக்கத்தான் வேண்டும்.
மேலும், குப்பைத் தொட்டிகளில் திடப்பொருட்களைத்தான் போடவேண்டும் - திரவப் பொருட்களை போடக்கூடாது. அப்படி போடப்படும் திரவப்பொருட்களால் குப்பைகளை அள்ளக்கூடிய தொழிலாளர்களுக்கு அதிருப்தியையும், சுகாதாரக் கேடுகளையும் ஏற்படுத்துவதுடன் குப்பைத் தொட்டிக்கும், குப்பையை அள்ளிச் செல்லும் வாகனத்திற்கும் கேடு உண்டாகும். சுற்றுப்புறச் சூழலும் கெடும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்து திரவப் பொருட்களை குப்பையில் போடாது இருக்க வேண்டும்.
நகராட்சியிலிருந்து, குப்பைகளை அள்ளவரும் தொழிலாளர்களுக்கு முறையான சீருடை இல்லை. காலணி, கையுறை போன்ற சுகாதாரக் கேட்டிலிருந்து பாதுகாக்கக் கூடிய எந்த ஒரு சாதனமும் இல்லை என்பது தெரிகிறது. இவைகள் எல்லாம் நகராட்சியால் கொடுக்கப்பட்டு அவைகளை, அவர்கள் உபயோகிக்கவில்லையா? - இல்லை நகராட்சி நிர்வாகத்திடம் சுகாதாரத்தை பேணக்கூடிய வகையில் உள்ள செயல் திட்டங்கள் எதுவும் இல்லையா? என்பது கேள்விக்குறியாக இருக்க, அந்த தொழிலாளர்கள் தங்கள் சுகாதாரத்தை பற்றி கவலைப்படாமல் துர்நாற்றத்துடனே தங்கள் கடமையை செய்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.
தினமும் குப்பைகளை கொடுக்க, குப்பைத் தொட்டியில் கொட்ட பழகிக்கொள்ள வேண்டும். 2 - 3 நாட்கள் வைத்திருந்து கொடுப்பதால் அவைகள் துர்நாற்றைத்தை ஏற்படுத்துகிறது. இதிலே ஒரு விசயத்தை மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும் – இந்த குப்பைகளை அள்ளுபவர்கள் / சேகரிப்பவர்கள் “ மனிதர்கள் “ தான், அவர்கள் மெஷின்கள் அல்ல. அந்த மனித தொழிலாளர்கள், குப்பைகளை லாரியில் அள்ளிக்கொட்டுவதையும் அதன்மீதே நின்று, மக்கும் குப்பை – மக்காத குப்பை என்று தரம் பிரிப்பதையும் நேரில் பார்த்தால் நல்ல உள்ளம் படைத்த எவருக்கும் குப்பைகளை நாள் கணக்கில் தேக்கி வைத்திருந்து கொட்ட மனம் வராது.
ஊரெங்கும் குப்பைகள் நிறைந்துக் கிடக்கிறது, நகராட்சி நிர்வாகம் அதை அள்ளுவதில்லை என்று குறைகளை நகராட்சி மீது சுமத்துகிறோமே தவிர, நம் மக்கள் முறையாக குப்பைகளை கொட்டுகிறோமா ? அந்த ஊழியர்களுடன் ஒத்துழைக்கிறோமா ? என்பதை சிந்திப்பதில்லை. மேலும் குப்பை அள்ளப்படாததைப் பற்றி அவரவர் பகுதியில் உள்ள கவுன்சிலரிடம் சொல்கிறோமா என்றால் 90 சதவீதத்திற்கு மேல் இல்லை என்ற பதிலே கிடைக்கும்.
எனவே சுகாதாரத்தை பேணிக்காக்க, பொது மக்களாகிய நாம், குப்பைகளை ஒவ்வொரு நாளும் குப்பைத் தொட்டியில் கொட்ட அல்லது குப்பை லாரி வரும்பொழுது அவர்களிடம் கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும். மேலும் குப்பைகள் அள்ளப்படாமல் இருந்தால், நமது வார்டு கவுன்சிலரிடம் சொல்லி குப்பைகளை அள்ளிச்செல்ல ஏற்பாடு செய்யும்படி வற்புறுத்த வேண்டும்.
ஒவ்வொரு கவுன்சிலரையும் மக்கள் வற்புறுத்தினால்தான் அவர்கள், நகராட்சி நிர்வாகத்திடமும் , நகர்மன்றத்திலும் வாதாடி குறைகளை, அசெளகரியங்களை களைய ஏற்பாடு செய்வார்கள். ஆகையால் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டிய வழிகளை மக்கள் கடைபிடித்து சுகாதாரமான நகராக நம் நகர் திகழ நாம் ஒத்துழைப்போமாக.
|