பிளஸ் 2 மாணவ மணிகளுக்கு தேர்வு காலம் நெருங்கிவிட்டது. மாணவர்கள் அதிக மார்க்குகள் வாங்கி தேர்ச்சிப் பெற்று, தாங்கள் விரும்பியத் துறையைத் தேர்ந்தெடுத்து அதிலே சேர்ந்து , படித்து, தம் வாழ்வை வளமாக்கிக் கொள்ள களம் இறங்கி விட்டார்கள்.
இன்றைய மாணவர்கள் பலர் வருங்காலத்தை சிந்திப்பவர்களாக இருப்பதால் கல்வியை கற்பதில் மிகவும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர். அதனால் , அவர்கள் என்னதான் விளையாட்டும் , கேளியும், கூத்துமாக நேரத்தை கழித்தாலும் படிப்பிலே கவனமாக உள்ளனர்.
தேர்வு காலம் நெருங்கிவிட்டதால் இப்பொழுது அவர்கள் எல்லோரும் படிப்பதிலே கவனம் செலுத்துவதை காணமுடிகிறது. கடற்கரைக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்து விட்டது , இரு சக்கர வாகனங்களின் அனாவசிய , ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை காணமுடியவில்லை. அதுமட்டுமல்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக்கூடிய மாணவர்கள் தேர்வு முடியும்வரை ஃபேஸ்புக்' கையே பார்ப்பதில்லை என்று சபதம் ஏற்று இருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பொறுப்புணர்ச்சியை காட்டுகிறதல்லவா?.
மொத்தத்தில் மாணவர்கள் பலரும் உற்சாகமாக படித்து தேர்வுகளை சந்திக்க இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்திகள் ஒருபுறம் வந்தவண்ணமிருந்தாலும், மறுபுறம் சில மாணவர்களின் கவனக் குறைவையும் மறுப்பதற்கில்லை. அவர்களும் ஆர்வமாக, கவனமாக படித்து தேர்வை நல்லமுறையில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பதையே நன்மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.
இருந்த போதிலும் சில மாணவர்கள் தேர்வு காலம் நெருங்கி வருவதை பற்றி கவலை கொள்ளாமல் தேர்வுக்கு இரண்டொரு நாளைக்கு முன்பு படித்து பாஸாகி விடலாம் என்று மெத்தனமாக இருக்கின்றனர். தேர்வு நேரத்தில் மட்டும் கஷ்ட்டப்பட்டு படித்து பாஸாகலாம் அது சிலருக்கு முடியும் - ஆனால் கடைசி நேரத்தில் மட்டும் பாடங்களை படித்து தேர்ச்சி பெறுபவர்கள் அதிக மார்க்குகளை பெற முடிவதில்லை - முடியாது என்பதை நினைவு கூற வேண்டும்.
மேலும் தேர்வு நெருக்கத்திலே யாராவது ஒரு மாணவருக்கு சுகவீனம் ஏற்பட்டால் (இறைவன் காப்பாற்ற வேண்டும்) அந்த மாணவரால் எங்ஙனம் பாடங்களை படிக்க முடியும்? ஆகையால் முன்னதாகவே பாடங்களை நன்கு படித்து , பயிற்சிகள் எடுத்து கொண்டால் தேர்வு நேரத்தில் சுகவீனம் ஏற்பட்டால்கூட , தைரியமாக சென்று தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் , ஓரளவு நல்ல மார்க்கும் வாங்கலாம்.
போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் தேர்ச்சி மட்டும் பெற்றால் போதாது நல்ல மார்க்குகள் வாங்க வேண்டும், அப்போதுதான் எதையும் நாம் சாதிக்க முடியும். அதனால் எல்லா மாணவர்களும் படிப்பிலே அக்கறை கொள்ள வேண்டும். மெத்தனமில்லாது நேரத்தை வீணாக்காமல் கிடைக்கின்ற ஒவ்வொரு நிமிடத்தையும் படிப்பதற்கு பயன் படுத்திக்கொள்ளுங்கள்.
இரவில் அதிகம் நேரம் கண் விழித்து படிப்பதைவிட சீக்கிரமாக உறங்கி விடியற்காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து படியுங்கள். இப்படி செய்வதால் உடலுக்கும் நல்லது , படித்தவைகள் மனதில் பதியும் , நினைவுக்கும் வரும் .
வீட்டில் அமைதி சூழ்ந்த , வெளிச்சமான , காற்றோட்டமுள்ள இடத்தில் இருந்து படியுங்கள். அளவுக்கு அதிகமான உணவை
சாப்பிடாதீர்கள் அது உறக்கத்தை ஏற்படுத்தும். குடிப்பதற்கு தேவையான குடிநீரை அருகிலேயே வைத்துக் கொண்டால் இடையில் வெளியே போய் கவனத்தை சிதற விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் பாடங்களை பலமுறை படித்தாலும் ஓரிருமுறை அவைகளை எழுதி பார்த்துக்கொள்வது சிறந்தது , ஞாபகமும் இருக்கும் பரீட்சையில் எழுதுவதற்கும் சுலபமாக வரும். ஒவ்வொரு பாடத்தையும் மிகவும் கவனமாக , ஆர்வத்துடன் படித்தால் அவை மறக்காது எனவே அமைதியான சூழலில் படியுங்கள் - அமைதியின்மையை தவிர்த்திடுங்கள்.
எந்தெந்த பாடங்களை படித்தால் சுலபமாக மார்க்குகளை பெற முடியும் , என்னென்ன வினாக்களுக்கு முதலில் விடை எழுத வேண்டும் என்பதை எல்லாம் ஆசிரியர்கள் விளக்கமாக சொல்லித் தருகிறார்கள். அவைகளை கவனமாக கேட்டறிந்து அதன்படி நடந்தால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.
நீங்கள் தேர்வை நன்றாக எழுதி அதிக மார்க்குகள் பெற்று, வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இக்ராஃ கல்விச்சங்கம் ஒவ்வொரு வருடமும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு தேர்வு வழிமுறைகளை ஊரில் உள்ள கேபிள் டிவி மூலமாக சொல்லித் தருகிறார்கள்.
இன்ஷா அல்லாஹ்! இவ்வருடமும் ஓளி பரப்ப இருக்கிறார்கள் , அவைகள் மூலமும் தாங்கள் அனைவரும் பயன் பெற்று , உங்கள் தேர்வுகளை சுலபமாக ஆக்கிக் கொள்ளலாம்.
இப்படியான சேவைகள் எல்லா ஊர்களிலும் கிடைப்பதில்லை, நம்ம ஊர் மக்களுக்கு கிடைத்திருக்கும் இந்த சிறந்த வாய்ப்பை நம் மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது.
மாணவர்களே! ஆர்வத்துடனும் , விருப்பத்துடனும் படியுங்கள் , பொருளாதார வசதி இல்லையே பிளஸ் 2 க்கு பிறகு எங்கே படிக்கப் போகிறோம் என்றோ ?, படிப்பு நம் மண்டையில் ஏறவில்லையே நாம் எங்கே மேற்கொண்டு படிக்க முடியும் என்றோ ? நினைத்து மன தைரியத்தை இழக்க வேண்டாம்.
பொருளாதார வசதியற்ற மிகவும் பின் தங்கிய மாணவர்கள், மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக இக்ராஃ கல்விச் சங்கம் பல உதவிகளை, உலக காயல்பட்டணம் நல மன்றங்கள் மற்றும் நம் ஊரைச்சார்ந்த நல்லுள்ளம் படைத்தவர்களின் அனுசரணையின் மூலமாக செய்து வருகிறது. அதனால் உற்சாகமாக படித்து கிடைக்கக் கூடிய வாய்ப்புக்களை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுங்கள்.
மாணவர்கள் அவரவர்களுடைய படிப்புக்கு தகுந்தபடி என்ன துறையை தேர்ந்தெடுத்து படிப்பது மற்றும் எந்தெந்த வேலைகளில் சேர்ந்து பணி புரியலாம் என்பதற்கு வழிகாட்டுவதற்காக நமது ஊர் மக்களால் " காயல்பட்டணம் - சென்னை வழிகாட்டு மையம் " (KCGC) என்ற ஓர் அமைப்பு சென்னையில் துவக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நமது மாணவர்களுக்கு வழிகாட்ட காத்திருக்கிறார்கள் , பயிற்சிகளும் வழங்கி கொண்டிருக்கிறார்கள். ஆகவே மாணவர்கள் முழுமனதுடன் , நம்பிக்கையுடன் நன்றாக படித்து தேர்வுகளை எழுதுங்கள், இறைவனருளால் நல்ல எதிர் காலத்தை பெற்றுக்கொள்வீர்கள்.
மாணவ மணிகளே! பெற்றோர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் உரிய மரியாதையை , கண்ணியத்தை குறைவின்றி கொடுங்கள் உங்கள் வாழ்வு சிறப்படையும். இன்றைய மாணவர்கள் - நாளைய ஆசிரியர்கள்! நாளைய பெற்றோர்களும் நீங்களே!! என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
தேர்வு காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் படிப்புக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான சத்தான உணவு கொடுப்பதுடன் , உடை விசயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
முக்கியமாக தொலைக் காட்சி பெட்டியின் இடையூறுகளில்லாமல் பார்த்துக்கொண்டால் உங்கள் பிள்ளைகள் தேர்வுகளை நன்றாக எழுதி தேர்ச்சிப் பெறுவார்கள் மறக்காதீர்கள் - இது தேர்வு காலம்.
|