ரூட்ஸ் (Roots) என்றோர் ஆங்கில நாவல். உலகிலேயே அதிகமாக விற்ற நாவல்களில் இதுவும் ஒன்று. ரூட்ஸ் என்ற ஆங்கிலப் பதத்திற்கு வேர்கள் என்று பொருள். இதனை எழுதியவர் அலெக்ஸ் ஹேலி என்ற அமெரிக்கக் கறுப்பர். இவர் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர். ரீடர்ஸ் டைஜஸ்ட் (Readers Digest) முதல் பிளேபாய் (Playboy) வரை அத்தனை பிரபலமான பத்திரிகைகளிலும் தன் முத்திரை பதித்தவர்.
மால்கம் X என்ற மாலிக் அல் ஷாபாஸ் என்பவரை நாமெல்லாம் அறிவோம் என்று நம்புகிறேன். அமெரிக்கக் கறுப்பராக இருந்து, இஸ்லாமை ஏற்று, அதனை அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்றவர். பல கறுப்பர்கள் புனித இஸ்லாமைத் தழுவ காரணமாக இருந்தவர்.
மால்கம் X ன் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி நியமிக்கப்படுகிறார். மால்கம் X கடுமையான இஸ்லாமியப் பிரச்சாரப் பணியை மேற்கொண்டு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்ததால் அவரால் ஓர் இடத்தில் அமர்ந்து அவரது வாழ்க்கை வரலாற்றை அலெக்ஸ் ஹேலியிடம் சொல்ல முடியவில்லை. ஆதலால் மால்கம் X தான் பிரச்சாரத்திற்காக செல்லுமிடமெல்லாம் அலெக்ஸ் ஹேலியையும் அழைத்துச் சென்றார். வாகனத்தில் பயணித்துக்கொண்டே அவர் சொல்லச் சொல்ல, அலெக்ஸ் ஹேலி அதனைப் பதிவு செய்துகொள்வார்.
இப்படி எழுதப்பட்ட நூல்தான் ''அலெக்ஸ் ஹேலியிடம் சொல்லப்பட்ட மால்கம் X ன் வாழ்க்கை வரலாறு'' (The Life History of Malcolm X as told to Alex Haley) என்ற நூல். இது 1965ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.
மால்கம் X பல பல்கலைக்கழகங்களுக்கும் சென்று இஸ்லாம் குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். அந்தச் சொற்பொழிவுகளில் தவறாமல் ஒரு செய்தியைக் குறிப்பிடுவார். அதாவது, ‘‘அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தப்பட்டு அடிமைகளாக அமெரிக்காவில் விற்கப்பட்டவர்கள்; அங்கே ஆப்பிரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள்” என்பதுதான் அந்தச் செய்தி.
சிறு வயதில் அறியாமல் செய்த தவறுகளுக்காக மால்கம் X சிறையில் இருந்தபொழுது சிறை நூலகத்தின் அத்தனை நூல்களையும் படித்து முடித்து விட்டார். அப்படி பலதரப்பட்ட நூல்களையும் படித்தபொழுதுதான் அவர் இந்த உண்மையைக் கண்டறிந்தார்.
மால்கம் X ஸுடன் கூடவே செல்லும் அலெக்ஸ் ஹேலி இந்தச் செய்தியைக் கேட்டார். மீண்டும் மீண்டும் கேட்டார். ஆச்சரியப்பட்டுப் போனார். தானும் ஒரு கறுப்பர்தானே... தன்னுடைய மூதாதையர்களும் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தப்பட்டு வந்தவர்கள்தானே... அவர்களெல்லாம் முஸ்லிம்களா... அப்படியென்றால் நான் முஸ்லிம்களின் வழி வந்தவனா... என்று சிந்திக்க ஆரம்பித்தார். இந்தக் கூற்று உண்மையானதுதானா என்று ஆராயவேண்டும் என்று அவரது துப்பறியும் பத்திரிகையாளர் மூளை தூண்டிற்று.
அப்பொழுதுதான் அவருக்கு அவர்களின் மூதாதையர்கள் பற்றி அவருடைய குடும்பத்தார் நாட்டுப்புறப் பாடல் போல் பாடுவது நினைவுக்கு வந்தது. அதிலேயே அவரின் மூதாதையர்களின் பெயர்களெல்லாம் வந்து விடும். தன் மூதாதையர்கள் பற்றி மேலும் பல விவரங்களை அறிந்திட அவர் தன் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை அடிக்கடி சந்தித்து பழைய வரலாறுகளையெல்லாம் கிளற ஆரம்பித்தார். நூலகத்தில் சென்று அன்றைய ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறுகளைத் தேடித் தேடிப் படித்தார். அன்றைய ஆப்ரிக்க - அமெரிக்க வாழ்விடங்கள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கம் என்று அத்தனையையும் ஆராய ஆரம்பித்தார். இப்படியே 12 வருடங்கள் அவர் கடும் ஆராய்ச்சி செய்தார்.
இறுதியில் அந்த உண்மையைக் கண்டுபிடித்தார்!
ஆம்! அவரது முந்தைய ஏழாவது தலைமுறை ஆப்பிரிக்காவில் காம்பியா என்ற நாட்டில் ஒரு மூலையிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில், ஒரு முஸ்லிம் குடும்பத்தில் சென்று முடிந்தது. ஆயிற்று... மால்கம் X சொன்னது உண்மை என்பது நிரூபணமாயிற்று.
ஆப்ரிக்காவிலிருந்து அந்த முஸ்லிம் அமெரிக்காவுக்குக் கடத்திக் கொண்டு வரப்பட்டு, அங்கே அடிமையாக விற்கப்படுகிறார். அவரது வழித்தோன்றல் அடிமைத் தலைமுறையாக, கிறிஸ்தவத் தலைமுறையாக மாற்றப்படுகிறது.
தன் நீண்ட நாள் ஆராய்ச்சியை ஒரு நாவலாக வடிக்க முடிவு செய்தார் அலெக்ஸ் ஹேலி. அதுதான் ''ரூட்ஸ்'' என்ற நாவல். 1976ல் வெளிவந்த அதி அற்புதமான வரலாற்று நாவல் அது! பின்னர் அது அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் திரைப்படமாகவும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திற்று.
நாவல் ஆப்ரிக்காவிலிருந்து ஆரம்பமாகும். கி.பி. 1750லிருந்து தொடங்கும் அந்த வரலாறு 1922ல் அமெரிக்காவில் முடிவடையும்.
இந்த வரலாற்றுப் புதினத்தைப் படித்துவிட்டு பல கறுப்பர்கள் தங்கள் மூல மார்க்கம் இஸ்லாம் என்று அறிந்து இஸ்லாமைத் தழுவினர். படிக்கத் தெரியாத கறுப்பர்கள் கூட தங்கள் முன்னோர்களின் வரலாறைத் தாங்கிய இந்த நூலை வாங்கி பைபிள் போல பட்டுத் துணியில் போர்த்திப் பாதுகாத்தனர்.
இதனைத் தமிழில் நான் மொழிபெயர்த்துள்ளேன். இது ''வேர்கள்'' என்ற பெயரில் (இலக்கியச்சோலை வெளியீடு) நூலாக வெளிவந்து இப்பொழுது விற்பனைக்குக் கிடைக்கிறது. தமிழில் வெளிவந்தது ஆங்கில மூலத்தின் சுருக்கமே.
இது இந்தக் கட்டுரையின் பீடிகைதான். இப்பொழுதுதான் விஷயத்திற்கு வருகிறேன்.
இதேபோல் காயல்பட்டணத்தின் வேர்களையும் கண்டுபிடிக்க எனக்கு ஆசை. “ரூட்ஸ்” போல் ஒரு வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்று என்னுள் ஓர் எண்ணம் எழுந்துகொண்டே இருக்கிறது.
இது சாத்தியமாகுமா?
ஹிஜ்ரி 12ல், அதாவது கி.பி. 633ல் ஹஸ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் காலத்தில் மக்கா-மதீனாவிலிருந்து சிலர் காயல் நகரம் வந்து குடியேறியுள்ளனர். அப்படியானால் நமதூரில் வாழும் சில குடும்பங்கள் அவர்களின் வாரிசுகளாக கண்டிப்பாக இருப்பார்கள். இவர்களில் யாராவது ஒருவர் தன் பாட்டன், முப்பாட்டன் வழி தெரிந்தவர்கள் இருந்தால் நாம் அவர்களின் வேர்களைக் கண்டுபிடிக்க சாத்தியம் உண்டு. அது ஒருவேளை அண்ணலாரின் அருமைத் தோழர்களில் ஒருவரிடம் போய்ச் சேரலாம்.
அதேபோல் ஹிஜ்ரி 277ல், அதாவது கி.பி. 842ல் எகிப்திலிருந்து ஒரு குழுவினர் முஹம்மத் கல்ஜி என்பார் தலைமையில் காயல் வந்துள்ளதாக வரலாற்றில் படிக்கிறோம். இவர்களின் வாரிசுகள் நமதூரில் அதிகமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இவர்களின் வேர்களைத் தொடுவது முந்தைய மக்கா-மதீனா வேர்களைத் தேடுவதை விட எளிதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
கி.பி. 1284ல் மூன்றாவது குடியேற்றம் நடந்துள்ளதாக நமதூர் வரலாறு கூறுகிறது. அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் 21வது நேரடி வாரிசான ஸுல்தான் ஜமாலுத்தீன் அவர்களின் தலைமையில் இந்தக் குடியேற்றம் நடந்துள்ளது. இவர்களின் வாரிசுகளும் நமதூரில் அதிகம் இருப்பார்கள். இவர்கள் தங்கள் வேர்களைத் தேடுவது இன்னும் எளிதாக இருக்கும். ஏனெனில் கி.பி. 1284 என்பது நமக்கு மற்ற குடியேற்றங்களை ஒப்பிடும்போது குறைவான ஆண்டுகளே.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தினமணி ஒரு பெருநாள் மலரை வெளியிட்டது. அதில் நமதூர் வரலாற்றைப் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. மதீனாவில் புனித மஸ்ஜிதுந் நபவியில் பணியாற்றி வந்த பணியாட்களிடம் கொடுங்கோன்மை ஆட்சி புரிந்து வந்த அன்றைய கலீஃபா வரி விதித்ததாகவும், அதனைச் செலுத்தவியலாமல் தவித்த அந்தப் பணியாட்கள் மதீனாவை விட்டு அகல முடிவு செய்ததாகவும், அவர்கள் 4,5 கப்பல்களில் ஏறி இந்தியாவுக்கு வந்ததாகவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
அந்தக் கப்பல்கள் காயல் பட்டணம், கீழக்கரை, அதிராம்பட்டினம், சென்னை பழவேற்காடு, கேரளாவில் தலச்சேரி, கர்நாடகாவில் பட்கல் ஆகிய கடற்கரைப் பட்டினங்களை அடைந்ததாக அக் கட்டுரை கூறுகின்றது. அதற்கு ஆதாரமாக இந்தப் பட்டினங்களில் நிலவும் ஒரே மாதிரியான கலாச்சாரங்களை அந்தக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார்.
முதலாவது மேற்கண்ட பட்டினங்களுக்கு வந்த அனைவரும் ஷாஃபிஈ மத்ஹபைச் சார்ந்தவர்களாக இருந்துள்ளனர். அதனால்தான் மேற்கண்ட பட்டினங்களில் இன்றும் பெரும்பாலோர் ஷாஃபிஈ மத்ஹபைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். கர்நாடகாவில் மொத்த மாநிலத்திலும் பெரும்பாலானோர் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களாக இருந்தபொழுதிலும் பட்கலில் உள்ளவர்கள் ஷாஃபிஈ மத்ஹபைச் சார்ந்தவர்களாக இருக்கும் ஆச்சரியத்தை நாம் காண்கிறோம்.
நமதூரில் திருமணத்திற்குப் பிறகு பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை போவது போல் கீழக்கரை, அதிராம்பட்டினத்திலும் செல்வது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் கேரளாவில் தலச்சேரியில் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் இன்றும் பெண் வீட்டிற்குத்தான் போகிறார்கள் என்பது நமது புருவங்களை உயர்த்துகின்றது. அதேபோல் தலச்சேரிக்கு மிக அருகிலுள்ள கோழிக்கோட்டில் குட்டிச்சிரா என்ற பகுதியைச் சார்ந்த மக்களும் திருமணத்திற்குப் பிறகு பெண் வீட்டிற்கே செல்கின்றனர். ஒருவேளை அவர்கள் தலச்சேரியைச் சேர்ந்தவர்களின் ஒரு பிரிவினராக இருக்கலாம்.
நமது வேர்களைத் தேடும்பொழுது இடையில் சில தலைமுறைகள் விடுபடலாம். இப்படித்தான் “ரூட்ஸ்” வரலாற்று நாவலை எழுதிய அலெக்ஸ் ஹேலிக்கும் சில தலைமுறைகளின் தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் சோர்ந்து இருந்து விடவில்லை. தகவல் இடைவெளி உள்ள அந்தக் காலகட்டத்தை அவர் ஆராய்கிறார். அந்தக் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பகுதியில் நிலவி வந்த கலாச்சாரம், பண்பாடு, தொழில், உணவுமுறை, உடையலங்காரம், பழக்கவழக்கம் என்று அத்தனையையும் ஆராய்கிறார். அதற்காக பல நூலகங்களுக்கு ஏறி இறங்குகிறார்.
இறுதியில் கிடைத்த தகவல்களை வைத்து இப்படித்தான் நடந்திருக்கும் என்று கவனமாக யூகித்து கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்து அந்த இடைவெளிகளை நிரப்புகிறார். இப்படித்தான் ஒரு சரித்திர நாவலை எழுத முடியும். அதனால்தான் நாம் அதனை சரித்திரம் என்றழைக்காமல் சரித்திர நாவல் என்றழைக்கிறோம்.
இப்படித்தான் நாமும் செய்ய வேண்டியிருக்கும். தகவல் இடைவெளிகளை இப்படித்தான் நாம் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.
ஆகவே காயல்வாசிகளே, உங்களில் முன் தலமுறைகளை அறிந்தவர்கள் யாரும் இருந்தால் நீங்களே உங்கள் வேர்களைத் தேடிச் செல்லலாம். முடிந்தால் ஒரு சரித்திர நாவல் வடிக்கலாம். (அனைத்துத் தலைமுறைகளும் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.)
அல்லது என்னிடம் தெரிவித்தால் நான் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று விழைகிறேன்.
இப்படி நமது வேர்களைத் தேடுவதில் பல நன்மைகள் நமக்குண்டு. நாம் ஏன் திருமணத்திற்குப் பின் பெண் வீட்டிற்குச் செல்கிறோம், ஏன் நமது பேச்சு வழக்கில் அதிகம் சுத்தத் தமிழ் கலந்திருக்கிறது, எப்படி நமது பேச்சு வழக்கில் அரபுப் பதங்கள் அதிகம் சேர்ந்தது, நமது உணவுமுறைகள், உடையலங்காரம்,... என்று நமது இன்றைய நடைமுறைகள் பலவற்றிற்கு நல்ல பல விடைகள் கிடைக்கும்.
“தன் வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது” என்று சொன்னார் மால்கம் X.
நமது வேர்களைத் தேடிச் சென்று நாமும் வரலாறு படைக்கலாமா? |