வானம் அது எத்தனைக் கோடி ஆண்டுகளாயினும் தன் இயல்பை இழப்பதில்லையே.
பூமி அது சுற்றும் பாதையிலிருந்து விலகி என்றாவது பயனித்ததுண்டோ. ஒரு வேளை அது அப்படி நிகழ்ந்தால் பூமியில் உள்ளவர்களின் நிலை என்னவாகும்.
மல்லிகைப்பூக்கள், ஏன் என்றுமே அதே வெள்ளை நிரத்திலேயே பூக்கின்றன.
பறவைகள், அவற்றின் விதிக்கு மாற்றாய் யோசித்ததுண்டா.
கால் நடைகள் அவற்றின் வரம்பிலிருந்து ஏன் என்றுமே வெளியேறுவதில்லை.
பூமியில் நான்கில் மூன்று பங்கு உள்ள கடலில்தான் எத்தனை வினோதங்கள்.
அதில் வசிக்கும் திமிங்களங்கள் கூட எந்தக் கப்பலிலும் கடல் கொள்ளை செய்ததில்லையே.
காட்டில் வசிக்கும் எண்ணற்ற ஜீவராசிகள் இனி நாட்டில் தான் நாம் வாழ வேண்டும் எனத் தீர்மானித்தால் நாட்டில் உள்ளோர் கதி அதோ கதிதான்.
புலி பசித்தாலும் புள்ளைத் தின்பதில்லையே ஏன்.
ஆயினும் எல்லாமே இயற்கைதான்.
இயற்கைகள் எல்லாமே இறைவன் உண்டென்பதைப் பறை சாற்றுகின்றன.
இறைவனை அச்சம் கொள்கின்றன. அவனைத் துதிக்கின்றன. பணிந்து நடந்து அவன் உண்டென்பதற்கு சான்று பகற்கின்றன.
வானவர்கள் கூட அலாதியான ஆற்றலைப் பெற்றிருந்தும் அல்லாஹ்வின் விதிகளுக்கும் கட்டளைகளுக்கும் அடிபணிய மறுப்பதில்லையே.
மேலும் இடி அவன் புகழைக்கொண்டும், வானவர்கள் அவனை அஞ்சியும் துதிக்கின்றனர்……. (அல் குர்ஆன் 13:13)
வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் விரும்பியோ, விரும்பாமலோ, அல்லாஹ்வுக்கே பணிகின்றன; அவற்றின் நிழல்களும்- காலையிலும் மாலையிலும் (அவ்வாறே பணிகின்றன). (அல் குர்ஆன் 13:15)
எல்லாம் இவ்வாறிருக்க மனிதன் மற்றும் ஏன் இயற்கையை எதிர்த்துக் கொண்டே இருக்கின்றான். தன்னைப் படைத்தவனுக்கு அதிகம் மாறு செய்து அதையே சிறந்த கொள்கையென வாதிடுகிறான்.
அனைத்திலும் களப்படம் செய்கிறான்.
செயற்கையான சிந்தனை, செயற்கையான செயல்கள்.
உணவு, உடை, நடை, சுவாசம் என அனைத்திலும் செயற்கை.
இயற்கையான உணவிற்குப் பகரமாக செயற்கையையே மனிதன் விரும்பி உண்கிறான்.
உடனுக்குடன் தயாரிக்கப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டு தனது உடல் ஆரோக்கியத்தையே வீணாக்குகிறான்.
மறைப்பதற்கென அணிய வேண்டிய ஆடைகளைக்கொண்டே உடல் முழுவதையும் திறந்து காட்டுகின்றான்.
தனக்கே உரிய நடையை நடக்காமல் பிறரது நடையை பிரதி எடுத்தாற்போல் பின்பற்றுகின்றான்.
இயற்கை என்னும் மணவாழ்வை மதியாது செயற்கையாய் இணைவதை உரிமை என்கிறான்.
சுயமாக எதையும் சிந்திப்பதை விடுத்து அடுத்தவர் சிந்தனையூடே முழு வாழ்க்கையையும் கழிக்கின்றான்.
அவனது சுற்றுச் சூழல்கள் மாசு படிந்து கிடப்பதைப்போல் உள்ளமும் மாசு படிந்து கிடக்கின்றது.
நிஜங்களிலுள்ள சோகங்களுக்கு விடை தேடாமல் நாடகங்களையும் நடிப்புகளையுமே சோகங்களாக என்னி பொழுது பூராவும் அதிலேயே கழிக்கின்றான்.
இறுதியில் செயற்கையால் விழையும் விபரீதங்களை எதிர்கொள்வதில் விழிபிதுங்கி நிற்கின்றான்.
பிறகு தீர்வைத்தேடி அழையும் போது முழு வாழ்க்கையையுமே இழந்து விடுகிறான்.
“ஒவ்வொரு குழுந்தையும் இயற்கையிலேயே பிறக்கின்றன. அவர்களின் பெற்றோரே அவர்களை யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெறுப்பை வணங்குபவர்(மஜூசி)களாகவோ மாற்றிவிடுகின்றனர்” என்ற நபி மொழிக்கேற்ப,
மனிதனின் மனதில் இயற்கை என்னும் மென்பொருளையே இறைவன் வைத்துப் படைத்திருக்க அவனது செயற்கையான (வைரஸ்) செயல்களால் தடம் புரண்டு இறைவனால் கைவிடப்பட்டு இவ்வுலகையும் இழந்து ,மறுமை வாழ்விலும் தோல்வியுறுகிறான். பின்வரும் குர்ஆன் வசனமும் இக்கருத்தையே முன்வைக்கின்றது.
ஆகவே, நீர் உம் முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கம் முற்றிலும் திருப்பி நிலை நிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே, அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்;
அல்லாஹ்வின் படைத்தலில் எவ்வித மாற்றமும் இல்லை; அதுவே, நிலையான மார்க்கமாகும்; ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல் குர்ஆன் 30:30) |