இணையதள சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). நமதூர் மாணவ, மாணவியர்கள் இளம் வயதில் கல்வி கற்க, நிதிபற்றாக்குறை ஒரு காரணமாக இருக்கக் கூடாது. கற்கும் சிறுவயதில் கற்றால் எல்லா பாடங்களும் மனதில் பதியும். அத்துடன் நினைவை விட்டு மறையாது. அதற்காகத்தான் இளமையில் கல் என்றார்கள். அக்காலம் முதல் இக்காலம் வரை எல்லா ஜமாஅத்திலும் திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடிவரும் செல்வந்தர்கள் பலரும் வாழ்கிறார்கள். கல்வி என்பது மார்க்கக் கல்வி, உலகக் கல்வி இரண்டையும் குறிக்கும். குர்ஆனை மனனம் செய்ய வேண்டுமானால், 13 வயதுக்கும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கூற கேள்விப்பட்டுள்ளேன்.
பைத்துல்மால் :
ஊரிலே மொத்தமாக இரண்டு அல்லது மூன்று பைத்துல்மால் செயல்படுவதைக் காட்டிலும் அனைத்து ஜமாஅத்திலும் தனிதனி பைத்துல்மால் துவங்கி ஜமாத்தில் இணைந்திருக்கும் தெருக்களில் வாழும் முஸ்லிம் செல்வந்தர்கள், நடுத்தர மக்கள்களிடமிருந்து ஆண்டுதோறும் ஜகாத் (ஏழைவரி) வாங்கி, ஜமாத்துபைத்துல்மாலில் சேர்த்து வைக்கலாம். அதுபோல் ஸதகா (தர்மம்) மொத்தமாக வசூலித்து நம் தெருக்களுக்கு உட்பட்ட ஜமாத்தில் சேர்த்து விடலாம்.
இதனால் நமது பகுதி தெருக்களில் வாழும் ஏழை ஆண், பெண்களின் வருமானக் குறைவு ஜமாஅத்து பைத்துல்மால் நிர்வாகிகள், ரகசியமாக அறிந்து வைத்து அவர்களுக்கு கல்விநிதி, வைத்தியநிதி, தொழிலில் நலிவடைந்தால் கைகொடுத்து உதவும் நோக்கில் அவசர நிதி அளிக்க முடியும். இதுமட்டுமல்ல திடீரென கணவர் இறந்துவிட்ட நிலையில் இத்தாகாலம் முடியும் வரை வெளியே வராது இருக்கும் பெண்களை தேடிச்சென்று, ஜமாத்துபைத்துல்மால் உதவினால் ஏழைபெண்கள், விதவைப் பெண்கள் மனநிம்மதி கொள்வார்கள். இயற்கைச் சீற்றத்தால் பொருளாதார வீழ்ச்சி, தீவிபத்து போன்ற காரணத்தால் ஏழைப்பெண்களும், விதவை மற்றும் ஊனமுற்ற பெண்களுக்கும் தெரு ஜமாஅத்துபைத்துல்மால் மூலம் உடனடி நிதி அளிக்கப்பட வேண்டும்.
கடும் குளிர்காலத்தில் வயோதிகர்களுக்கு போர்வை, குழந்தைகளுக்கு பனிசட்டைகள் வழங்க வேண்டும். நம் பகுதி ஜமாஅத்து பைத்துல்மாலில் அப்பள்ளி முஹல்லாவிற்கு உட்பட்ட இரண்டு, மூன்று தெருக்கள் சேர்ந்திருக்கும். குறைந்தது 400 வீடுகள் வரை அல்லது அதற்கு மேலும் இருந்தாலும் ஜமாஅத்து பைத்துல்மால் நிதி எந்த பாகுபாடின்றி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஜமாஅத்து பைத்துல்மால் என்பது ஜகாஅத்-ஸதகா நிதிகளை முறைப்படி வாங்கி சேகரிக்கப்பட்டது என்பதை உணர வேண்டும். ஆண்டுதோறும் ஹஜ்பெருநாள் நோன்புப் பெருநாளைக்கு ஜமாஅத்து பைத்துல்மால் மூலம் ஏழைகளுக்கு உணவுக்கான ஒருநாள் பொருட்களும் அவர்கள் குடும்பத்தில் அனைவர்களுக்கு பெருநாள் ஆடைகள் தரமான துணி ரகங்களில் வழங்கப்பட வேண்டும்.
(குறிப்பு : ஜமாஅத்து தோறும் பைத்துல்மால் வைக்கலாமா என்ற எனது கருத்து – மார்க்க அடிப்படைக்கு முரணானதாக இருப்பின், நான் ஆலிம் அல்லாத காரணத்தால் அதை வாபஸ் வாங்கியும் கொள்வேன் எண்ணத்தில் பட்டதை எழுதினேன். அப்படியே விட்டுவிடவுமில்லை. இதற்கான பதிலை ஓர் ஆலிம் இடம் கேட்டுக்கொள்ள நேரமில்லை).
நம் ஊரின் படிப்பின் தகுதி எப்படி உள்ளது? :
நம் ஊரிலுள்ள பள்ளிக்கூடங்கள் நிறைய இருந்தாலும் இங்கெல்லாம் கல்வி கற்றுத்தரும் முறை சரியில்லை. ஆங்கில உச்சரிப்பும் சரியில்லை என்று உப்பில்லாதக் காரணத்தை சிலர் ஜோடித்துக் கொண்டு வெளியூரில் சென்று படிக்க வைக்கிறார்கள். அங்கு நமது ஆண்பிள்ளைகளுக்கு ஜூம்ஆ தொழ அனுப்புவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. நமதூர் ஜூம்ஆ பிரசங்கத்திலும் உலமாக்கள் இதுபற்றி கூறிக்கண்டித்தும் வருகிறார்கள். (தினமும் ஐந்து நேர தொழுகை எல்லோருக்கும் முக்கியம். வாரம் ஜூம்ஆ ஆண்பிள்ளைகளுக்கு முக்கியம் என்று மார்க்கத்தில் இருக்கும்போது) வெளியூர் பள்ளியில் நமது மார்க்க அமைப்புக்கு எதிராக நமது மாணவர்களை வெள்ளிக்கிழமை தொழ அனுப்புவதில்லை என்ற நிலையிருந்தும் உலக கல்வி முக்கியமில்லை நமக்கு மார்க்கமே முக்கியம் என்று எப்போது உணரப்போகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள்? நமதூர் பள்ளியில் கல்வி சரியில்லையா? யார் சொன்னது. கீழே கண்ட சம்பவத்தை படித்த பின்னராவது சிந்தியுங்கள் சகோதரிகளே உண்மை புரியும்.
காயல்பட்டணத்தில் படித்த மாணவனின் உயர்நிலைகளைப் பாரீர் :
காயல்பட்டணத்திலுள்ள பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலர் டாக்டராக இன்ஜினியர்களாக, பிஆர்க் (கட்டிட வரைகலை), கம்ப்யூட்டர் படிப்பிலும் சிறந்து விளங்குவதையும் உலகில் பல்வேறு நாடுகளில் போய் கைநிறைய மனநிறைவுடன் சம்பாதிப்பதை பெரிய பட்டியல் போட்டு தரமுடியும். அதுமட்டுமல்ல நமதூர் சென்ட்ரல் பள்ளியில் 1992-ல் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற நெய்னார் தெருவைச் சார்ந்த எம். முஹம்மது இபுராஹீம் M.E. பட்டம் பெற்ற இவர் 20 கண்டுபிடிப்புகளும் 6 அறிவியில் ஆங்கில நுலையும் எழுதி உள்ளது தெரிய வருகிறது. இவர்களின் சாதனையைக் குறித்து 26.10.2012 எல்.கே. மேனிலைப்பள்ளியில் கௌரவிக்கப்பட்டனர். நமதூரில் படித்துவரும் மாணவ மாணவியர்கள் பள்ளிப்படிப்பின் இறுதியில் அதிக மதிப்பெண் எடுத்து கௌரவிக்கப்படுவது இக்ரா கல்விச் சங்கத்தின் மூலம் அறிகிறோம். இன்று ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளிலும் சென்று உயர்பதவியில் பார்க்கிறவர்கள் அதிகமானோர் நமதூர் பள்ளியில் இறுதியாண்டான +2 படித்த மாணவர்கள் என்பதை மறந்து விடாதீர் சகோதரிகளே! பெற்றோர்களே!!.
கல்விக்காக உதவிக்கரம் நீட்டும் இக்ரா கல்விச்சங்கம் :
நமதூர் மாணவ மாணவியர்கள் +2 படித்துவிட்டு அதிக மார்க்கு எடுத்த போதிலும் கல்லூரியில் சென்று படிக்க பணம் வசதி இல்லாவிட்டால் அதற்கு உதவிக்கரம் நீட்டுகிறது. உலக காயல்நல மன்றங்களின் கூட்டமைப்பின் ஓர் அங்கமே இக்ரா கல்விச்சங்கம் இதுவரை இக்கல்வி சங்கத்தின் மூலம் - கல்வி உதவி பெற்ற மாணவ மாணவியர்கள் மொத்தம் 416 - இவர்களுக்காக வழங்கப்பட்ட தொகை ரூபாய் 51 இலட்சம் வரை என்ற தகவலை இதன் நிர்வாக அமைப்பாளர் ஏ. தர்வேஷ் முஹம்மது அவர்களிடம் பெற்றேன். (அவருக்கு நன்றி).
மார்க்கக் கல்வியில் நம் நிலை எப்படி உள்ளது?
நமதூரில் இரண்டு ஆடவர் அரபிக்கல்லூரியும் மூன்று மகளிர் அரபிக் கல்லூரியும் (மூன்று கொள்கை அடிப்படையில் நடைபெறுகிறது). ஆண்கள் அரபிக் கல்லூரியான மஹ்லரா – ஜாவியா உள்ளது. அதில் நமதூர் மாணவர்களை காட்டிலும் வெளியூர் மாணவர்கள் குறிப்பாக உள்நாடு- வெளிநாட்டு மாணவர்கள் ஆலிம்களாக உருவாகிறார்கள். நமதூர் மாணவர்க்ள உலக கல்வியில் பட்டம் பெறவே அவர்களின் பெற்றோர் விரும்புவது தெரிய வருகிறது. நமதூர் பிள்ளைகள் ஆலிமாக்கப்பட்டால் அரபுலகத்திலும், அமீரகத்தில் நிறைய மதிப்பும் கைநிறைய வருவாயும் உள்ளதை அவர்களின் பெற்றோர்கள் ஏன் உணர்வதில்லை.
நமதூரில் பெண் ஆலிமாக்கள் அதிகம் :
நமதூரில் பெண் ஆலிமாக்கள் மூன்று மத்ரஸாக்களிலும் உருவாக்கப்படுகிறார்கள். அத்துடன் பெண்கள் ஹாபிழாக்கள் முதர்ரிஸாக்களாகவும் வளர்ந்து வருவது ஆரோக்கியமாக உள்ளது. ஆண்களில் சிலர் மட்டுமே ஹாபிழ்களாக வளர்ந்து வருவதும் தெரிய வருகிறது. நமக்கு மார்க்க அறிவு போதிக்கும் மத்ரஸா அரபிக்கல்லூரி தான் முதலில் முக்கியம். இரண்டாவதுதான் உலகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நமதூர் முஸ்லிம் பெண்கள் அரபிக்கல்லூhயிpல் ஆலிமா பட்டம் பெற்றதுடன், உலகக் கல்விப்பட்டங்களையும் பெற்று சிறப்பு பெற்று வருகிறார்கள். (திருமண அழைப்பிதழில் மணமகளின் கல்வித் தகுதி மூலம் இதை குறிப்பிடுகின்றேன்). முஸ்லிம் பெண்கள் பட்டதாரிகளாக இருப்பதாலும் மார்க்க வழியிலும் ஆலிமா பட்டமும் பெற்று திகழ்வதால் அவர்களின் வாரிசுகளை, மார்க்க –உலக கல்வி இரண்டையும் சிறந்த முறையில் போதிக்க முடியும். இக்காலத்தில் ஆரோக்கியமான கல்வி முறையில் பெண் கல்வி சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் டியூசன் செல்லும் மாணவியர்கள் ஆசிரியரிடம் எந்தக் காரணத்தை கொண்டும் படிக்கச் செல்லக்கூடாது. இதை அந்தந்த ஜமாஅத்து கண்காணிக்க வேண்டும். படித்த பெண் பட்டதாரிகளிடமே வயது வந்த பெண்கள் டியூசன் படிக்க செல்ல வேண்டும். ஆண்களிடம் போய் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. நமதூரில் அதிகமான டியூசன் சென்டர் இரவில் இயங்கி வருவது தெரிகிறது.
பொழுதுபோக்கு கல்வி :
+2 படித்து விட்டு வீட்டில் இருக்க நினைக்கும் பெண்களுக்காக சமுதாயக் கல்லூரி நமதூரில் சொளுக்கார் தெருவில் இயங்கி வருகிறது. டைலரிங், எம்ராய்டரி, பேஷன்டிசைன், டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தமான அனைத்து கலைகளையும் பெண்கள் கற்று டிப்ளமோ பெற்று செல்லலாம். உடனடி வருவாய் பெற வழியுண்டு. +2 வரை படித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க வேண்டாம் பெண்கள் -ஹாபிழாக ஆகவும் மத்ரஸா செல்லலாம்.
கல்விக்கு உதவிய சங்கத்தை மறக்காதீர்! :
படிக்க வசதியற்று இருந்த நிலையில் படிக்க உதவிக்கரமாக திகழ்ந்த இக்ராஃ கல்விச் சங்கத்தினரை ஒருபோதும் மறக்காதீர். நீங்கள் பட்டம் பெற்றீர். ஆதனால் வேலையும் கிடைத்து கைநிறைய வருமானமும் பெற்று சந்தோஷமாக வாழும் நாளில் இக்ராஃ கல்விச்சங்கத்தில் இணைந்து ஏழை மாணவ மாணவியர்கள் படிக்க உங்களால் இயன்ற உதவியை ஆலோசனைகளை வழங்க வேண்டும். நன்றியை மறக்காமல்- நன்றியுடன் வாழ்ந்தால் எப்போதும் நல்லதுதானே?
இன்ஷாஅல்லாஹ் அடுத்த மாத எனது கட்டுரை அமைதியும், பாதுகாப்பும் வெளிவர உள்ளது.
|