அப்போது எனக்கு அஞ்சு வயசு. விசித்திரமான உலகை வியப்போடு பார்க்கும் மழலை பருவம். காலையிலிருந்தே என் தாய் சுறுசுறுப்போடு பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தாள். என்னை எழுப்பி விட்டு முகம் கை கால் கழுவி ஆடை நீக்கிய பசும்பால் தந்து உச்சியில் முகர்ந்து குளியலறைக்கு அழைத்துச் சென்று லைஃப் பாய் சோப்பு போட்டு நீராட்டி விட்டாள். வழக்கத்திற்கு மாறான அவளது அவசரமும், பாசமும் என்னை அவள் எதற்காகவோ தயார் படுத்துகின்றாள் என மட்டும் புரிந்தது.
பட்டு ஜரிகை(போலி) வேலைப்பாடுடன் கூடிய வேஷ்ட்டி முதன் முறையாக எனக்கு உடுத்தப்பட்டேன். இடுப்பிலிருந்த அரைஞான் கயிற்றில் ஒட்டிக் கொண்டிருந்த துவாக்கூடு வெளியில் தெரிய சுருட்டப்பட்ட வேஷ்ட்டிக்கு அதுவே பெல்ட்டாக மாறியது. மெல்லிய வலை பனியனும், கழுத்து முகம் என பாண்ட்ஸ் பவுடர் பூச்சும், புத்தம் புது சட்டையும், முத்து காக்கா கடையில் எப்பவோ வாங்கிய புது பின்னல் தொப்பியும் அணிவித்து ஒரு மஞ்சள் நிறப் பையில் அலிஃப், பே என தமிழ் மற்றும் அரபியில் எழுதியிருந்த பிளாஸ்டிக் அட்டை அத்துடன் ஆசாரி செய்து தந்த புது குட்டிப் பலகை மூன்று சாக்லேட்டுகள், இவற்றுடன் ஒரு தட்டில் மிக்க்சர், வேறொன்றில் மைசூர் பாகு, ஜாங்கிரி, வெற்றிலை களிப்பாக்கு, அசோகா பாக்கு ஒரு குலை கதளி வாழைப்பழம், சின்ன சில்வர் குடம் நிறைய பசும் பால், என சிலர் தயாராகி தலைவாசலில் நின்று கொண்டிருக்க, உம்மம்மா முதலில் முகர்ந்து ஏதோ முனுமுனுத்துக் கொண்டு உச்சி முதல் இடுப்பு வரை வருடி விட்டாள். அதன் பின் பெருமா, லாத்தா, சாச்சி ஆகியோர் அதே மாதிரி செய்ய “எங்கே உம்மாக்காரியெ? கூப்பிடுமா...புள்ளையெ மோக்கச் சொல்லு” என அவசரப்படுத்த ஏதோ ஒருவித பயம் என்னைக் கவ்விக் கொண்டது. உம்மா கண்ணீர் மல்க ஏதோ புலம்பிக் கொண்டு என் கண் காது நெற்றி என ஒரு வரைமுறையில்லாமல் முகர்ந்து “வாப்பா போய்ட்டு வாம்மா! அங்கெ பிரளி பண்ணக்கூடாது! நல்லா சொல் கேக்கணும்! நீ அழுவக்கூடாது! என் கண்ணுல்லெ,முத்துல்லெ, சீக்கரமா வாப்பா வந்து கூப்பிட்டு வந்துருவாங்க என்னா?” என ஏதேதோ அடுக்கிக் கொண்டே போனாள்.
நேற்று மாலையில் வாங்கியிருந்த மல்லிகைப்பூச்சரம் பால் குடத்தின் கழுத்தில் சுற்றப்பட்டு வாடிப்போய் இருந்தது. வாப்பாவின் கையில் அது சற்று கனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். காரணம் கையை மாற்றி மாற்றி நடந்து வந்தார்கள். குத்து மதிப்பாக ஏழெட்டு பேர் வந்திருப்பார்கள். தெருவில் ஒரு குட்டி ஊர்வலம் போல் நடந்து ஜாவியாவுக்குள் புகுந்தோம். மூங்கில் பட்டிகளால் அடைக்கப்பட்ட ஜன்னல்கள், வாசலில் நிறைய குட்டி குட்டி செருப்புக்கள், இன்னது தான் எனக் கேட்க முடியாத பல குரல்களின் கலவை அது ஒலியாகவோ? ஓசையாகவோ? தோன்றவில்லை! ஏதோ ஓதுகின்றனர் என மட்டும் தெரிந்து. நாங்கள் சலாம் சொல்லி உள்ளே புகுந்ததும் கப்சிப். சில நிமிடங்கள் மயான அமைதி நிலவியது. பரபரப்போடு கண்களை அகல விரித்துப்பார்க்கும் பார்வைகள். இன்னைக்கு நமக்கு ஜாலிதான் என குதுகலிக்கும் புன்னகை, கொஞ்சம் குசு குசுப்பு பின்னர் கலபில சத்தம் துவங்கவே டேய்...எனும் ஒரு சிங்கத்தின் கர்ஜனை! நடுநடுங்கிப் போனேன். குரல் வந்த திசையில் கலக்கத்தோடு என் பார்வையை செலுத்திய போது அந்தோ! வீற்றிருந்தது ஒரு சிம்மம். அடர்ந்த வெண்தாடி, அஜானுபாகுவான உடல் தோற்றம், விரிந்த மார்பு, உருண்டு திரண்ட புஜங்கள், கூரிய நேர் பார்வை, கவனி ஜுப்பா, உள்ளே கை பனியன், இடுப்பில் பச்சை பெல்ட், இளஞ்சிவப்பு வேஷ்ட்டி, தலையில் குஞ்சம் வைத்த துருக்கி தொப்பி, இத்தனைக்கும் சொந்தக்காரர் தாம் மண்மறைந்த மர்ஹூம் ஜெய்லாணி லெப்பை அவர்கள். அவரது வலக்கை பக்கத்தில் நீளம், குட்டை, தடிமன், ஒல்லி எனப் பல்வேறு வடிவங்களில் கம்புகள் இருந்தன. அதில் மெல்லிய வளையக்கூடிய பிரம்பு ஒன்று என் கண்ணை உருத்திக் கொண்டேயிருந்தது.
அரபி எழுத்துக்களின் அரிச்சுவரியை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருந்த காலம். பள்ளி என்றதும் பயமும் அதே நேரத்தில் நேரந்தவறாமையும், பயிலும் கட்டாயமும் பெற்றோர்களால் எனக்குச் சுமத்தப்பட்ட ஓர் பெரும் சுமையாகவே சில காலம் வரை எண்ணியிருந்தேன். நாட்கள் உருண்டோட அதுவே சராசரி வாழ்க்கை போல் பழகி விட்டது. இனி பள்ளித்தோழர்கள், பாடம் கொடுக்க வேண்டும் என்கிற அக்கறை, பல்வேறு நிகழ்வுகள், புதியவர் வருகை, இப்படி சுவரஸ்யமான நாட்களாகத் தான் பின்னர் உள்ள காலம் கழிந்தது. மறக்க முடியாத காலம் மனதில் இன்றளவும் பசுமை மாறாத காட்சியாகவே இருந்து வருகின்றது. பிள்ளைகள் ஓதும் பள்ளிகளில் ஒரு கட்டுப்பாடும் கண்ணியமும், பெற்றொர்களின் பேராதரவும் இருந்து வந்த காலம்! திருமறையின் தூய வசனங்களை துளிர்கள் உள் வாங்கி அதை ஒப்பிக்கும் போது ஏற்படும் தப்புத் தவறுகள் திருத்தப்பட்டு புதிய பாடம் எனத் துவங்கும் செயல் வழக்கம். வஷ்ஷம்ஷு துவங்கி விட்டால் அதற்கும் ஒரு பாராட்டு விழா பள்ளியில் நடக்கும். அதன் பின் முதலாம் ஜுசு அம்மயத்து அதற்கும் வட்டா எனப்படும் பண்ட பலகார உபசாரம். இனி யாசீன், ஐந்து, பத்து, பதினைந்து என முப்பது அத்தியாயத்தையும் ஒரு மாணவன் ஓதி முடித்து விட்டால் அம் மாணவனுக்கும், கற்பித்த ஆசானுக்கும் தனி மரியாதை தான். அவனை பள்ளியில் சேர்க்கும் போது செலுத்திய சீர் சினத்தியை விட பலமடங்கு அதிகமாக தம் பிள்ளை ஓதி முடித்து விட்டான் என பணமுடிப்பும், பலகாரங்களும், ஆடை அணிகலன்களும் அப் பள்ளிக்கு சமர்ப்பிக்கும் பெற்றோர்கள் நிறையவே இருந்தனர். சிலர் அதையும் தாண்டி பெட்டி சோறு, தாலஞ்சோறு என பகிர்ந்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
பள்ளிகளில் திருமறையை மட்டும் ஓதிக்கொடுக்காமல் ஒழுக்கம், நீதி, நன்னடத்தை, பெற்றோரைப் பேணுதல், கலிமா, தொழுகை அதன் சட்ட திட்டம், செயல்வடிவங்கள் என மார்க்க போதனைகளை பிஞ்சு மனதில் பதிய வைக்கும் தூய சேவையை லெப்பை என்பவரால் நடத்தப்பட்டு வரும். புதன் கிழமை மாலையில் பள்ளி முடியும் போது வரிசையாக வந்து நின்று கையை நீட்டி லெப்பையிடம் செல்ல அடியை வாங்கிச் சொல்வோம். காரணம் வியாழன் காலை கம்ச துட்டு (கமீஸ் துட்டு) அஞ்சு பைசா பத்து பைசா என லெப்பைக்கு அன்பளிப்பு அளித்தல் வழக்கம். அன்று மாலை முதல் மறுநாள் வெள்ளிக் கிழமை வரை விடுமுறை. இனி சனிக் கிழமை வழக்கம் போல் மீண்டும் பள்ளி துவங்கும். ஓதிக் கொடுக்கும் உஸ்தாதுகளுக்கு கொடுக்கும் மாத ரூபாய் மிகச் சொற்பமானதே! இரண்டு முதல் ஐந்து ரூபாய் தான். கனிசமான பிள்ளைகள் இருப்பதால் மாதக் கடைசியில் மொத்த வருமானம் நூறுக்குள் தான் இருக்கும். அதுவே அப்போது பெரிய தொகை.
வீட்டில் பெற்றொர் சொல் கேளாத, பிரளி மண்ணக்கூடிய, யாருக்கும் அடங்காத அத்தனை வாண்டுகளுக்கும் பள்ளி தான் நீதிமன்றமும், சிறைச்சாலையும். நீதிஅரசர் லெப்பை மட்டுமே! இதில் மேல் கோர்ட்டு கீழ் கோர்ட்டு என்பதோ வழக்கு பரிந்துரை என்பதோ கிடையாது. முழு அதிகாரமும் பெற்றோர்கள் ஆசானுக்கே வழங்கியிருந்தனர். தண்டனைகளுக்கும் குறைவில்லை. செயலுக்கேற்ப சிறிய பெரிய அளவிலான தண்டனைகள் உண்டு. பிட்டத்திலும் கைகளிலும் பிரம்படி வாங்குதல், தோப்புக்கரணம் போடுதல், கைகளை உயர்த்தி முட்டு போட்டு நிற்பது, குனிந்து கால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டிருப்பது, நின்ற நிலையில் ஒரு காலை தூக்கி வைத்து சரியாமல் நிற்பது, நின்று பாடத்தை மனப்பாடம் செய்வது, சுவரில் சாய்ந்து கொண்டு நாற்காலியில் அமர்வதைப் போன்று குறுகி முட்டுக்களை மடக்கி நிற்பது, மதியம் சாப்பாடு கொடுத்து விட வேண்டாம் என சொல்லி ஒரு வேளை பட்டினி போடுவது, (இதை பெற்றோர்களும் ஆமோதிப்பது அப்போது கொடுமையாகத் தெரியும்), அதையும் தாண்டி குட்டை போடுவது அதாவது தடித்த கனமான மரத்தடியில் கிளாம்பு அடித்து அதில் சங்கிலி பூட்டப்பட்டிருக்கும் அதை மாணவனின் கால்களில் பூட்டி மணிக்கணக்கில் சில வேளை நாள் முழுவதும் வைத்தல், பையன் பாத்ரூமுக்கு போனால் கூட அவிழ்த்து விட மாட்டார்கள். அதை செல்லும் இடமெல்லாம் சுமந்து கொண்டு திரியும் மாணவன் இனி தவறு என்பதை தவறிக்கூட செய்ய மாட்டான்.
சில நேரங்களில் கூட்டாக தவறுகள் செய்து பிடிபட்டால் அந்த காட்சியை பார்க்க பள்ளிவாசலில் உள்ள அத்தனை பேரையும் அழைத்து அவர்களுக்கு முன்னால் கூட்டுத் தோப்புக்கரணம் போட வேண்டியிருக்கும். உன்னலெ நான் கெட்டேன் என்னாலெ நீ கெட்டாய் அண்ணாவி என்ன செய்வாரு...னு பாடிக் கொண்டே போடுவோம். அதுவே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தாண்டும் போது ஒப்பாரியாகவும், ஓலங்களாகவும் மாறி விடும். கால்கள் கடுக்க காதுகள் சிவக்க கண்ணில் வழியும் கண்ணீர் ஆசனின் கண்ணுக்குத் தெரியாதா? என ஏங்கித் தவிப்போம். இவ்வாறான தண்டனைகள் தாம் மாணவர்களுக்கு வெட்கத்தையும், இனி செய்யவே கூடாதெனும் அச்சத்தையும், திருந்த வேண்டும் எனும் ஆவலையும் அன்று அளித்தது. இன்றைய நவீன காலங்களில் கூறப்படும் மணவியல் உளவியல், போன்ற அவியல்களெல்லாம் அப்போது கிடையாது. பெற்றோர்கள் தன் பிள்ளைகளை கண்டிக்கும் போது கூட “இரு நான் லெப்பை கிட்டெ சொல்லிக் கொடுக்கிறேன் பார்!” என்று தான் மிரட்டுவது வழக்கம். இது இக் காலத்தை சாத்தியப் படாமல் போனது ஏன்? மாணவர்களை தண்டிக்க கூடாது எனும் சட்டமும், பிள்ளையே தவறு செய்திருந்த போதிலும் அவனுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு வாத்தியார் மேல் கேஸ் போடும் பெற்றோர்களும் இருக்கின்றனர். தனக்கு சாதகமான இந்த சட்ட ஓட்டைகளைப் பயன் படுத்திக் கொண்டு மாணவன் தன்னை தட்டிக் கேட்க யாரும் இல்லை எனும் தைரியத்தில் ஆசிரியரைக் கொலை செய்யும் அளவிற்கு துனிந்து விடுகின்றான்.
ஒரு பிள்ளைக்கு பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் கடமை, கல்வி, கட்டுப்பாடு இவைகளை போதிக்க இயலும். அவன் வெளி உலகை தெரிந்து கொண்டு தனது தன்நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள பால வாடிகள், அங்கன் வாடிகள், ஆரம்பப் பள்ளிகள், இவைகளால் மட்டுமே இயலும். எனவே தாம் பண்டைய காலத்தில் அரசர் தமது அன்பிற்குரிய அரச குமாரனை பஞ்சணையில் வைத்து பாலும் தேனும் பருப்பும் கொடுத்து போற்றி வளர்த்த போதிலும் மகன் நாடாள வேண்டுமே? உலக நடப்புக்கள், சூட்சமம், சோதனை, திறமை, பொறுமை, படை, பலம், கொடை, களம் என அனைத்தையும் கற்றறிந்து நாடுபோற்ற நல்லாட்சி தர வேண்டுமே? தந்தை பெயர் சொல்லும் தனையனாக வேண்டுமே? எனும் நோக்கில், எங்கோ ஒரு காட்டில் குடில்களில் வசித்து, கடும் குளிர், வெயில் மழை, புயல், பசி, பட்டினி, என பக்குவப்பட குருகுலங்களுக்கு அனுப்பி வைக்கின்றான். அத்தனையும் கற்று தேர்ந்து மகா புஷனாக மன்னன் மகன் முடி சூட்டிக் கொள்வான்.
இன்று நம்தூரில் இது போன்ற (மக்த்தபுகள்) ஓதிக் கொடுக்கும் பள்ளிகள் எறும்பும் ஊர கல்லும் தேயும் எனும் கதையாக தேய்ந்து மறைந்து போயிற்று. வறுமையின் காரணமாக ஒரு சிலர் மட்டுமே பள்ளி எனும் பெயரில் ஏதோ கடமைக்கு நடத்தி வருகின்றனர். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. ஆயிரம் கண்டிஷன்களோடு தான் பிள்ளையைச் சேர்க்கின்றனர். தனிச் சலுகைகள், ஸ்கூலுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு வரக்கூடாது, பேண்ட் போட்டுக் கொண்டு தான் பள்ளிக்கு வருவான். அடித்தாலோ? அல்லது அதட்டினலோ? போதும் உடனே லெப்பைக்கு போன் போட்டு, “அவன் வர மாட்டேங்கிறான். இன்னைலேர்ந்து சாச்சிகிட்டெ அவன் ஓதிக்கிடுவான். நீங்க தப்பா நினைக்காதீங்க” என சப்பைக்கட்டும் தாய்க்குலங்கள் தாராளமாகவே இருக்கின்றனர். நாங்கள் அன்று பயின்ற காலங்களில் எங்கள் லெப்பைக்கு நாங்கள் செய்த சேவைகள் ஊழியங்கள் சொல்லி மாளாது. லெப்பை எச்சில் துப்பும் படிக்கன் அல்லது மண்சிட்டியை சுத்தம் செய்வது, பலகை அழித்து கொடுப்பது. தலா இரைத்து கவுளுக்குள் தண்ணீர் விடுவது, மாடு வளர்க்கும் லெப்பைக்காக மாங்கொட்டைகளைத் தேடி அலைந்து பொறுக்கி வர அவர் அதனை உடைத்து அதன் பருப்பை தோல் நீக்கி ஆடு, மாடுகளுக்கு தீனி போடுவார்கள். இனி எங்காவது மரம் ஒடிந்து விழுந்து கிடந்தால் அதன் கிளைகளை அள்ளி வந்து இலைகள் பிரித்து இந்தாங்க என நீட்டுவோம்.
ஒருநாள் நான் பள்ளிக்கு கட்! மறுநாள் தயக்கத்தோடு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். தெருவோரத்தில் வெட்டி எறியப்பட்ட பப்பாளி மரம் எனது கண்ணில் படவே ஆர்வத்தோடு அதை இழுக்க முடியாமல் இழுத்து வந்தேன். லெப்பைக்கு இதை கொடுத்தால் நேற்று பள்ளிக்கு வராததை மறந்து விடுவார்கள் எனும் குருட்டு நம்பிக்கை. போனேன், கொடுத்தேன், இன்முகத்தோடு பெற்றுக் கொண்டார்கள். அப்பாடா! தப்பித்தோம் என நினைத்தேன். சற்று நேரத்திற்குப் பிறகு நான் பள்ளிக்கு வராத காரணத்தை லெப்பை கேட்கவே அசால்ட்டாக ஒரு நொண்டிச் சாக்கை கூறினேன். அவ்வளவு தான் அவர் எழுந்துச் சென்று அந்த பப்பாளி மரத்தண்டை இரண்டாக வெட்டி ஒரு துண்டை எடுத்து வந்து என் பின்னங் கழுத்தில் வைத்து விட்டு, “நான் வர்ற வரைக்கும் நீ இந்த இடத்தை விட்டு அசையக்கூடாது.” என எங்கேயோ ஒரு பெயர் சூட்டும் வைபவத்திற்குப் போய் விட்டார். “அடடா...! நாம தப்பு செஞ்சிட்டோமே? இந்த சனியத்தைக் கொண்டு வராமல் இருந்திருந்தால் ஒன்னு ரெண்டு அடியோடு தப்பித்திருப்போமே” என அழுது வடித்தேன். (அதை நான் சுமந்தேன? இல்லையா? என்பது வேறு விஷயம்) சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு லெப்பை வந்து என் கழுத்திலிருந்த மரத்தண்டை இறக்கி வைத்து போய் ஓது எனப் பனித்தார்கள். இது போன்ற சம்பங்கள் இப்போது நடந்தால் பெற்றோர்க்கும் லெப்பைக்கும் இடையில் ஒரு பிரளயமே நடந்து போகும்.
வருங்காலத்தில் நம் பிள்ளைகள் பெரும் சாதனைகள் புரிய சாகசம் செய்யாவிட்டலும், ஒரு சாதாரண மனிதனாக, நல்லொழுக்கம் உள்ளவனாக, பெற்றொர்களைப் பேணுபவனாக, மார்க்க நெறிகளின் அடிப்படையைத் தெரிந்தவனாக, சுருக்கமாகச் சொன்னால் ஒரு தர்த்தீபும், தர்பியத்தும் உள்ளவனாக வளர வேண்டுமெனில் முன்னொரு காலத்தில் பள்ளிவாயில்கள் தோறும் தனியிட வசதியில் நடைபெற்று வந்த ஓதிக் கொடுக்கும் பள்ளிகள் மீண்டும் உருவாக வேண்டும். உலக கல்விக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், முன்னுரிமையில் நேர் பாதி அளவேனும், இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடிய கல்வியை போதிக்கும் இது போன்ற பள்ளிகளுக்கு கொடுத்து நம் பிள்ளைகளின் தனிமனித ஒழுக்கம் தழைத்தோங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக நமதூர் சமூக நல அமைப்புக்கள், முஹல்லாக்கள், முத்தவல்லிகள் என அனைவரும் முழு மூச்சாக ஒத்துழைத்து ஓதும் பள்ளிகளை மீண்டும் ஆங்காங்கே உருவாக்க முன் வர வேண்டும். இது ஒரு கனவாகவே கலைந்து போகாமல் நிஜமாக நிகழ்காலத்திலும் நிலைத்திருக்க வல்ல அல்லாஹ் துணை புரிவானாக! ஆமீன்.
-ஹிஜாஸ் மைந்தன்.
|